விவசாயிகளின் பிரச்னைகள்...
நாட்டின் விவசாயிகள் எதிர்கொள்ளும் அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் ஒரே மாதிரியான தீர்வுகளை கணக்கின்றி அள்ளி வழங்கும் போலி நிபுணர்கள் அதிகரித்துவிட்டார்கள்
நாட்டின் விவசாயிகள் எதிர்கொள்ளும் அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் ஒரே மாதிரியான தீர்வுகளை கணக்கின்றி அள்ளி வழங்கும் போலி நிபுணர்கள் அதிகரித்துவிட்டார்கள். அவர்கள் அடிக்கடி கூறும் தீர்வுகள், விளைபொருள்களுக்கு அதிகபட்ச ஆதரவு விலை, அதிகக் கடன் வசதி, கடன் தள்ளுபடி, இடுபொருள்கள் விலைக் குறைப்பு ஆகியவையே.
ஆனால், அவர்கள் யாரும் விவசாயிகளின் பிரச்னைகளின் அடிப்படைக் காரணங்களை உணரவில்லை. நல்லவேளையாக, இந்தப் போலி நிபுணர்களின் போதனைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இவ்விஷயத்தில் ஆழ்ந்த கவனம் இதுவரை செலுத்தப்படவில்லை.
பல்வேறு ஆய்வறிக்கைகளும் ஒட்டுமொத்தமாகக் சுட்டிக்காட்டுவது, விவசாயிகளின் கவலைக்குரிய சூழலே. உதாரணமாக, 2013, ஜனவரி - டிசம்பர் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேசிய மாதிரிக் கணக்கெடுப்பின் 70-ஆவது சுற்றில் பெற்ற நிதர்சனமான புள்ளிவிவரங்களைக் குறிப்பிடலாம்.
அந்தக் கணக்கெடுப்பில் கிடைத்த புள்ளிவிவரங்களிலிருந்து பல முக்கியமான, வெளிப்படையான முடிவுகள் தெரியவருகின்றன. இந்த முடிவுகளை எதிர்கொள்ள வலுவான நடவடிக்கைகள் தேவையாகின்றன.
• நாட்டின் ஊரகப் பகுதிகளில் 57.8 சதவீதம், அதாவது 9.02 கோடி குடும்பங்கள் விவசாயக் குடும்பங்களாக உள்ளன.
• விவசாயக் குடும்பங்களுக்கு உரிமையாக உள்ள நிலங்களின் பரப்பளவு
2002-03இல் 10.72 கோடி ஹெக்டேராக இருந்தது, 2012-13இல் 9.24 கோடி ஹெக்டராகக் குறைந்துவிட்டது. அதாவது பத்தாண்டுகளில், 1.48 கோடி ஹெக்டேர் நிலங்கள் கைமாறிவிட்டன.
• விவசாயிகளின் சராசரி நில உரிமைப் பரப்பளவு 0.725 ஹெக்டேரிலிருந்து 0.592 ஹெக்டேராக இந்தப் பத்தாண்டுகளில் குறைந்துவிட்டது.
• விவசாயிகளின் நில உரிமையைக் கருத்தில் கொண்டு அவர்கள் கீழ்க்கண்டபடி பிரிக்கப்படுகிறார்கள்: நிலமற்ற விவசாயிகள் (0.002 ஹெக்டேருக்கு கீழ் நிலம் வைத்திருப்பவர்களும் இதில் சேர்வர்), குறு விவசாயிகள் (0.002 ஹெக்டேர் முதல் 1 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருப்பவர்கள்), சிறு விவசாயிகள் (1 ஹெக்டேர் முதல் 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருப்பவர்கள்), இடை } நடுத்தர விவசாயிகள் (2 ஹெக்டேர் முதல் 4 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருப்பவர்கள்) - இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்த விவசாயக் குடும்பங்களில் 2012-13இல் 97.84 சதவீதம் பங்கு வகித்தனர்.
• விவசாயக் குடும்பங்களில் பெரும்பாலானவர்கள் (63.4 %) பயிர்ச் சாகுபடியே தங்கள் மூல வருவாயினமாகக் கொண்டுள்ளனர். இதர விவசாயக் குடும்பங்களின் வருவாய் ஆதாரமாக, கால்நடை வளர்ப்பு (3.7 %), பிற விவசாய நடவடிக்கைகள் (1.1 %), விவசாயமல்லாத தொழில்கள் (4.7 %), கூலித் தொழில் (22 %), ஓய்வூதியம் (5.1 %) ஆகியவை உள்ளன.
• 2012 ஜூலை முதல் 2013 ஜூன் வரையிலான ஓராண்டு காலகட்டத்தில், விவசாயிகளின் சராசரி வருவாய் ரூ.6,426-ஆக இருந்தது. இதில், விவசாய சாகுபடி வருவாய் 60 சதவீதமாகவும், பிற வகை வருவாய் 32 சதவீதமாகவும் இருந்தது. அதேசமயம், விவசாயிகளின் மாதாந்திர செலவினம் ரூ.6,223-ஆக இருந்தது. அடித்தட்டிலுள்ள 3.11 கோடி விவசாயிகளின் (மொத்த விவசாயிகளில் 34.5 %) மாதாந்திர செலவினத்தைவிட வருவாய் குறைவாக இருந்தது.
• விவசாயக் குடும்பங்களில் 52 சதவீதத்தினர் கடனில் மூழ்கித் தவிக்கின்றனர். விவசாயக் குடும்பங்களின் சராசரி கடன் நிலுவை ரூ.47,000. இதில் 40 சதவீதத்துக்கு மேல் வங்கிகள் அல்லாத பிற தனியார் கந்துவட்டிக்காரர்களிடம் விவசாயிகள் பெற்ற கடனாகும்.
• வங்கியல்லாதவர்களிடம் கடன் பெறும்போது, அதில் 68.6 சதவீதம் பேர் 20 சதவீதத்துக்கு மேல் வட்டி வசூலிக்கின்றனர். சரிபாதி கந்துவட்டிக்காரர்கள் 30 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றனர்.
• பெரும்பாலான விவசாயிகள் விளைபொருள் கொள்முதல் நிறுவனங்களைப் பற்றியோ, குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.) பற்றியோ அறியாமல் உள்ளனர். இவர்களில் 18.7% (நெல்), 34.5% (கோதுமை) விவசாயிகள் மட்டுமே கொள்முதல் நிறுவனங்கள் பற்றி அறிந்திருந்தனர். இவர்களிலும் 10 % (நெல்), 16 % (கோதுமை) விவசாயிகள் மட்டுமே அரசு சார்பு கொள்முதல் நிலையங்களை அணுகினர்.
• பெரும்பாலான விவசாயிகள் தங்கள் பயிர்களுக்குக் காப்பீடு செய்வதில்லை. உதாரணமாக, 5 சதவீதத்துக்கும் குறைவான நெல், கோதுமை சாகுபடி விவசாயிகள் மட்டுமே 2012-13இல் தங்கள் பயிருக்கு காப்பீடு செய்திருந்தனர்.
• நாட்டில் பயிர் சாகுபடியாகும் நிலப்பரப்பில் 50 சதவீதத்துக்கு மேல் முறையான பாசன வசதி செய்யப்படவில்லை. இவற்றில் 71 சதவீதத்துக்கு மேல் கிணறு போன்ற நிலத்தடி நீர் ஆதாரங்களையே விவசாயிகள் நம்பி இருக்கின்றனர்.
- மேற்கண்ட புள்ளிவிவரங்களிலிருந்து தெரிவது என்னவென்றால், 95 சதவீதத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் குறைந்த பரப்பளவு கொண்ட நிலங்களில்தான் விவசாயம் செய்கின்றனர். அவர்களது செலவினம் குறைவு; அதையும் கூட அவர்களின் வருவாய் தருவதில்லை. எனவே, சாகுபடிக்கு மிகக் குறைந்த அளவே அவர்களால் முதலீடு செய்ய முடிகிறது.
அவர்களால் பிற தொழிலில் உள்ள மக்களைப்போல தரமான சுகாதார வசதிகளையோ, கல்வியையோ பெற முடிவதில்லை. அவர்களுக்கு உதவும் சந்தை அமைப்பு, விரிவாக்கப் பணிகள், காப்பீடு ஆகியவையும் போதிய அளவில் செயல்படுவதில்லை. இவை அனைத்தும் விவசாயத் துறையில் ஈடுபடுவோரை ஊக்கமிழக்கச் செய்கின்றன.
அவர்களுக்கு வங்கிக் கடனுதவிகள் கிடைப்பதில்லை; கந்துவட்டிக்காரர்கள் தயவில் அவர்கள் வாழ நேரிடுகிறது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நமது நாட்டு விவசாயிகளின் உற்பத்தித் திறனும் குறைவாகவே உள்ளது.
முக்கியமான கேள்விகள்: விவசாயிகளின் வருவாய் மிகவும் குறைவாக, சில சமயங்களில் இடுபொருள் செலவைவிடக் குறைவாக இருக்கும் நிலையில், அவர்கள் தங்களுக்குக் கடனுதவி அளித்தவர்களை எப்படி எதிர்கொள்வார்கள்?
விவசாயிகளின் பிற சிக்கல்களைத் தீர்க்காமல் அவர்களுக்கு கடனுதவி மட்டும் அளிப்பதால் அவர்களின் பிரச்னைகளை எப்படித் தீர்க்க முடியும்?
விவசாயிகளின் வருவாயில் பற்றாக்குறை உள்ளபோது, அவர்களின் செலவினத்துக்கு கடனுதவி அளிப்பது அவர்களை மேலும் கடன்காரர்கள் ஆக்குவதாகாதா? இவை, விவசாயிகளுக்கு அதிக அளவில் கடனுதவி அளிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் இதுவரை அறிந்திராத கேள்விகளாக உள்ளன.
இதிலிருந்து புலப்படுவது, கடனுதவி மட்டுமே முக்கியமானதல்ல; விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கைகளுடன் இணைந்து கடனுதவி அளிக்கப்பட வேண்டும் என்பதே.
மேலும், விவசாயிகளுக்கு கடனுதவி அளிக்கும் அரசு சார்பு வங்கிகளின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். மாபெரும் வங்கிக் கட்டமைப்பு நாட்டில் இருந்தும்கூட, வங்கியல்லாத கடன் நிறுவனங்களின் விவசாயக் கடனுதவி 40 சதவீதத்துக்கு மேல் இருப்பது வருத்தமளிக்கிறது. மத்திய ரிசர்வ் வங்கி விவசாயக் கடனுதவிக்கு விதித்திருக்கும் வரையறையான 18 சதவீதம் இதுவரை எட்டப்படவில்லை. ஒட்டுமொத்த வங்கிகளின் விவசாயக் கடனுதவி அளவு 12 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
வங்கிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் தோல்வியால்தான் தனியாரிடம் கந்துவட்டிக்கு விவசாயிகள் அடைக்கலம் புக நேரிடுகிறது. வங்கிக் கடன்கள் விவசாயிகளின் துயரங்களை முழுமையாகத் துடைக்க முடியாமல் இருக்கலாம்; ஆனால், அவர்களின் சிரமத்தின் சுமையைச் சிறிது குறைக்க முடியும். அதிக வட்டிக்குக்கு தனியாரிடம் கடன் பெறும் விவசாயிகள், தங்களுக்குச் சாதகமாக இல்லாத சுற்றுச்சூழல்களால், மன அழுத்தத்தால் திணறுகின்றனர்.
விவசாயக் கடனுதவியின் சிக்கல், விவசாயம் மூலமாக அதை அடைக்க முடியாது போவதுதான். விவசாயிகள் போதிய வருவாய் பெறாத வரை, விவசாயம் நிலைபெற முடியாது.
எனவே, விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை நீக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதே சரியான தீர்வு. அதைவிடுத்து, அரைமனதுடன் தள்ளுபடி செய்யப்படும் விவசாயக் கடன்களாலோ, தற்போதைய வடிவில் செயல்படுத்தப்படும் பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களாலோ விவசாயிகளுக்கு பலன் விளையாது; மாறாக அவர்களின் சுமைகள் கூடவே செய்யும். எனவே, விவசாயப் பெருமக்களின் பிரச்னைகளுக்கான நிரந்தரத் தீர்வுகள் குறித்து ஆழமான, விரிவான ஆய்வுகள் தேவையாகின்றன.
இதில் அரசுக் கருவூலத்தின் கூடுதல் உதவியையும் கருத்தில் கொள்ளலாம். விவசாயக் கடனுதவியை வீணான செலவினமாகக் கருதாமல், நேர்த்தியான சமூகச் செலவினமாக மாற்றலாம். ஏனெனில், உணவின்றி சமுதாயம் வாழ முடியாது. அதேபோல, விளைவிக்கும் விவசாயி இல்லாமல் உணவையும் பெற முடியாது.
விவசாயிகளின் பிற சிக்கல்களைத் தீர்க்காமல் கடனுதவி மட்டும் அளிப்பதால் அவர்களின் பிரச்னைகளை எப்படித் தீர்க்க முடியும்? விவசாயிகளின் வருவாயில் பற்றாக்குறை உள்ளபோது, அவர்களின் செலவினத்துக்கு கடனுதவி அளிப்பது மேலும் கடன்காரர்கள் ஆக்குவதாகாதா?