இது யார் செய்த குற்றம்?
கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்த ஆண்டுக்குரிய பருவமழை தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் கொட்டித் தீர்த்துவிட்டது
கட்டுரைகள்இது யார் செய்த குற்றம்?
கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்த ஆண்டுக்குரிய பருவமழை தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் கொட்டித் தீர்த்துவிட்டது
கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்த ஆண்டுக்குரிய பருவமழை தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் கொட்டித் தீர்த்துவிட்டது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் தீபாவளிக்குப் பின் பல ஊர்களில் ஒரே நாளில் 25 முதல் 40 செ.மீ. என்ற அளவில் மழை பெய்து வெள்ளக் காடாயின. மனித உயிர்களும் கால்நடைகளும் பறிபோயின. வெள்ளச் சேதத்தைக் கணக்கிடும் பணி அவ்வளவு எளிதல்ல.
விவசாயத்தைப் பொருத்தவரை மழை மகிழ்ச்சியான விஷயம். வறட்சியால் ஏற்படும் துயரங்களைவிட மழையால் ஏற்படும் துயரங்கள் குறைவு. கடலூரைப் பொருத்தவரை வெள்ளநீர் கடலுக்குள் கடத்த முடிந்ததைப்போல் சென்னை நகரில் கடத்த முடியவில்லை. இது ஓரளவுக்கு மட்டுமே சாத்தியம்.
ஏனென்றால், சென்னை நகரம் ஒரு ஃப்ளேட் சிட்டி (Flat City). சென்னையும் சென்னைப் புறநகர்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் சுமார் 200 சதுர கி.மீ. நிலப்பரப்புடையது. கடல் மட்டத்திலிருந்து 5 முதல் 10 மீட்டர் உயரமே. அதாவது தாழ்வான நிலம். சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் புழலேரி, பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகியவை புறநகர்ப் பகுதிகளில் உள்ளன. கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய ஆறுகள் வழியே மழைநீர் கடலில் விழ வேண்டும்.
இந்திய விடுதலைக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் சென்னை உண்மையில் அழகுள்ள நகரமாயிருந்தது. கூவம் நதியிலும் அடையாறிலும் குளித்துக் களித்தவர்கள் உண்டு. பழைய நகரப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பாசன ஏரிகள் இருந்தன. தெற்கே சைதாப்பேட்டையிலிருந்து செங்கல்பட்டு வரை நெல் வயல்கள். மற்றொரு திசையில் பரங்கிமலையிலிருந்து பூந்தமல்லி வரை நெல் வயல்கள். வடக்கில் கும்மிடிப்பூண்டி வரையிலும், மேற்கில் திருவள்ளூர் வரையிலும் பசுமைக் காட்சி.
சென்னையில் சங்கமமாகும் கூவத்தின் தோற்றம் திருவள்ளூர் அருகே தொடங்கி மழைநீரை ஒவ்வொரு ஏரிக்கும் வழங்கி சென்னை - சென்னைப் புறநகர்களில் அமைந்துள்ள ஏரிச் சங்கிலிகளாக இணைத்த வண்ணம் ஓடியது. கூவத்தைவிட அற்புதம் அடையாறு. இங்கு எப்போதும் படகு சவாரி உண்டு. இன்று போட் கிளப் தெரு மட்டுமே எஞ்சியுள்ளது.
மாங்குரோவ் என்று சொல்லப்படும் அலையாத்தி மரங்களும் பசுமைத் தாவரங்களும் அடையாறின் இரு கரைகளிலும் மனத்தைக் கொள்ளை கொள்ளும். அநேகமாக இப்படிப்பட்ட இயற்கைச் சூழலில் மனத்தைப் பறிகொடுத்த அன்னிபெசன்ட் அம்மையார் அடையாறில் உள்ள அற்புதமான வனப் பகுதியைத் தனக்கு சொந்தமாக்கிக் கொண்டு ஆழ்நிலை தியானத்திற்குரிய தியசாஃபிகல் சொசைட்டியை உருவாக்கியுள்ளனர்.
எந்த ஆக்கிரமிப்புக்கும் ஆளாகாமல் சென்னையில் ஓர் அற்புத வனமாக இன்றும் எஞ்சியுள்ளது. அதுபோல் ஆளுநர் மாளிகை, ஐ.ஐ.டி. வளாகம், கிண்டி உயிரியல் பூங்காவிலும் வனப்பகுதி எஞ்சியுள்ளது. வட சென்னைப் பகுதியில் உள்ள அம்பத்தூர் ஏரி, கொடுங்கையூர், ஆதம்பாக்கம், மதுரவாயல் ஏரிகள் இன்று காணாமல் போய்விட்டன.
அவ்வாறே தென் சென்னைப் பகுதியில் நுங்கம்பாக்கம் ஏரி, கோடம்பாக்கம் ஏரி, மாம்பலம் ஏரி, பழவந்தாங்கல் ஏரி, பல்லாவரம் ஏரி, தாம்பரம் ஏரியும் காணாமல் போய்விட்டன. 1950-இல் நான் பார்த்த சென்னைக்கும் 2015-இல் நான் பார்க்கும் சென்னைக்கும் எவ்வளவு மாற்றங்கள்? சுருக்கமாகச் சொல்வதானால், திருவள்ளூரில் தொடங்கி சென்னை வரை இடையில் உள்ள ஆயிரக்கணக்கான ஏரிகளின் வடிநீர் கூவம் வழியே சென்னையில் கலக்கிறது. அதாவது, ஒட்டுமொத்த சென்னை நகரமே தாழ்வான நிலப் பகுதி என்பதுதான்.
சென்னை நகரைச் சுற்றியுள்ள வயல்களில் கிச்சலிச் சம்பா நெல்லும், நெல்லூர் சம்பா, வையக்குண்டான், பெருங்கார் விளைந்தபோது வேகமாக வெள்ளம் வடிந்தது. மேற்கிலுள்ள மேட்டுப் பகுதியிலிருந்து கிழக்கில் உள்ள தாழ்வான பகுதிக்கு ஓடும் நீர் தங்கு தடையில்லாமல் ஓட வேண்டுமே. அப்படி ஓடினால்தானே நீர் வடியும்.
ஒரு காலத்தில் ஏரியாகவும், நெல் வயலாகவும் விளங்கிய சென்னை பொன் விளையும் பூமியில் வீடுகளும், கட்டடங்களும், விமான நிலையங்களும், தேசிய நெடுஞ்சாலைகளும், புதிய புதிய நகர்களில் உயர உயரப் பல்லடுக்கு மாளிகைகளும் எழும்பிவிட்டதால், நீரோட்டம் நின்று வயல்களில் மிதக்க வேண்டிய நீர், மாளிகைகளில் மிதந்து, வயல்வெளிகளில் உள்ள எலி, தவளைகளைத் தின்னும் பாம்புகள் மனிதர்களைத் தீண்ட மாளிகைக்குள் பிரவேசிப்பது யார் குற்றம்?
பத்தாண்டுகளுக்கு ஒரு முறை சென்னையில் கனமழை பெய்வது இயற்கையே. சென்னை வானிலை நிலையம் வழங்கும் தகவல் அடிப்படையில் 1976-இல் பெய்த கனமழையைவிட 2015-இல் சென்னை கனமழை குறைவுதான்.
1976-இல் அம்பத்தூர் பகுதியில் ஒரே நாளில் 52 செ.மீ. மழை பெய்துள்ளது. சராசரி அளவு 45 செ.மீ. 2015-இல் அதாவது ஒரு நாள் மழை 24 செ.மீ.தான். 1969, 1976, 1985, 1996, 1998, 2005 பின் 2015 ஆகியவை சென்னை கனமழை ஆண்டுகள். எனினும், இன்றைய சென்னை 24 செ.மீ. மழையைக் கூட தாங்க இயலாமல் போனதின் காரணம், புதிய நெடுஞ்சாலைகளும் மெட்ரோ ரயில் தடங்களும் நீர்வடிப் பகுதிகளை ஆங்காங்கே தடுத்துவிட்டன. வெள்ளநீர் வடியாமல் சென்னை நகர் நரக வேதனையையும் நாராச வேதனையையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. அவை தொடர்கின்றன.
ஒரு காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். முதல்வராயிருந்தபோது தமிழ்நாட்டின் தலைநகராக இருக்கும் தகுதி சென்னைக்கு இல்லை என்று கருதி தலைநகரைத் திருச்சிக்கும் தஞ்சைக்கும் நடுவில் மாற்ற வேண்டுமென்று திட்டமிட்டார். அதற்குக் காரணம் வெள்ளத்தின் தாக்கமே. செங்கிப்பட்டியிலிருந்து சிறிது தூரத்தில் இடம் தேர்வானது. இப்படிப்பட்ட யோசனைக்கு ஏராளமான எதிர்ப்புகள் வந்தன.
மழை, தாழ்வான பகுதி என்ற காரணத்திற்கு மேல், மாநிலத் தலைநகர் வடகோடி எல்லை என்பதால் தென்கோடியில் உள்ள குமரி, நெல்லை, மதுரை; மேற்கில் கோவை, ஈரோடு போன்ற மாவட்ட மக்களுக்குப் புதிய தலைநகர் தூரம் குறைவாக இருக்கும். தலைநகர் மாற்ற விஷயத்தில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்தும்கூட எதிர்க்கட்சியினர் அவரை "துக்ளக்' என்று ஏசினர். அப்போது தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்த மேல்மட்ட அதிகாரிகளும் போர்க்கொடி தூக்கியதால் ஒரு நல்ல திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இது யார் செய்த குற்றம்?
அடையாறைத் தாண்டி மாமல்லபுரம் வரை, தாம்பரத்தைத் தாண்டி செங்கல்பட்டு வரை, ஆவடியைத் தாண்டி திருவள்ளூர் வரை, எண்ணூரைத் தாண்டி பொன்னேரி வரை விவசாயம் செய்தவர்கள் ரியல் எஸ்டேட் மாஃபியாக்களிடம் அற்பப் பணத்திற்கு நிலத்தை விற்று சென்னை நகரில் பிழைக்க வந்துவிட்டனர். நெல் வயல்களை மனைக் கட்டுகளாகப் பிளாட் போட்டு விற்றவர்கள் கரை வேட்டிகளுடன் திரியலாம்.
ஒரு கால கட்டத்தில் வயல்களாயிருந்த இடங்கள் பட்டா நிலங்களாயிருக்கலாம். பல கை மாறி, மனை நிலங்களாகியிருக்கலாம். நத்தம், புறம்போக்கு, ஏரி, வாய்மடை, நீர்வரத்து, மறுகால் நிலங்கள் சட்டப்படி அரசுக்குத்தானே சொந்தம்? அப்படியிருக்க, அந்த நிலங்களில் கட்டடங்கள் வந்த கதை என்ன?
நில வரி, ரயத்துவாரி, செட்டில்மெண்ட் தொடர்பான வருவாய்த் துறை சட்டங்களில் உள்ள ஓட்டைகள்தாம் காரணம். அந்த ஓட்டைகளை சாமர்த்தியமாகப் பயன்படுத்திய ரியல் எஸ்டேட் தரகர்கள் நத்தம் புறம்போக்கு நிலங்களுக்குப் பட்டா பெற்றுள்ளனர்.
ஆங்கிலேயர் ஆட்சியில் அரசு வருமானம் நிலவரி என்பதால் அரசு நிலத்தை ஆக்கிரமித்துப் பின் அனுபவப் பாத்தியதை கொண்டாடி நிலத்திற்கு வரி கட்டுவதாக ஒப்புக் கொண்டு பீமம் பெறுவார்கள். பீமம் ரசீதைக் காட்டிப் பின்னர் பட்டா பெறப் பத்தும் வேலை செய்யும். கணக்குப் பிள்ளையில் தொடங்கி வட்டாட்சியர் வரைப் பத்துப் பேரைப் பணம் கொடுத்து கவனித்தால் போதுமானது!
இப்படி அரசு நிலங்களை உடமையாக்கி அரசுக்கே விற்ற கெட்டிக்காரக் கேடிகளும் இந்தக் கதையில் உண்டு. "கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்' என்பது போல் புறநகர் வளர்ச்சியைப் பற்றி 50 ஆண்டுகளுக்கு முன்பே யோசிக்க மறந்துவிட்டு இன்று யோசித்து என்ன பயன்? எனினும், இதற்கெல்லாம் ஆளும் கட்சி மீது குற்றப் பத்திரிகை வாசிப்பது எதிர்க்கட்சிகளுக்கு இயல்பு.
ஏரிப் புறம்போக்கு ஆக்கிரமிப்பு போன்றவை பக்தவத்சலம் முதல்வராயிருந்த காலத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்டது. பின்னர், மாறி மாறி ஆண்ட கழக ஆட்சிகளில் புறநகர்ப் பகுதிக் கட்டுமானங்கள் நீர் நிலைகள் மீதும், தூர்ந்துவிட்ட நீர்வரத்துக் கால்வாய்கள் மீதும் கட்டப்பட்டு கூவம் நதியின் ஓட்டம் பல நூற்றுக்கணக்கான இடங்களில் தடையுற்றதால் கூவத்தின் வாசனையை (?) ஏறத்தாழ 70 ஆண்டுகளாக சென்னை மக்கள் அனுபவிக்கிறார்கள்.
சுற்றுச்சூழலையும் சுகாதாரத்தையும் புறக்கணித்துப் பொன் விளைந்த சென்னை பட்டினத்தைக் கட்டுமானங்கள் கொண்டு அழகு பார்த்தது யார் குற்றம்? வெளி மாவட்டங்களிலிருந்து வேலை தேடி வந்தவர்களும், வேலை பெற்று வந்தவர்களும் நடுத்தர வர்க்கத்தினர். இவர்கள் குறைந்த விலைக்கு வீடு வாங்க ஆசைப்பட்டது இயல்புதான்.
ஏரிகள் மீது கட்டப்பட்ட அடுக்கு மாளிகைகளில் சொந்த இடம் கிட்டியபோது, இப்படி எல்லாம் அவரவர் மாளிகைகளைச் சுற்றி மழைநீர் சேமிப்பு நிகழும் என்று எண்ணிப் பார்க்கவில்லை! இப்படி மழை வெள்ளம் வீடுகளைச் சுற்றி நின்றால் எப்போது சுவர் இடியும் என்று பயத்தில் வாழ்வோரும் உண்டு.
இப்படி மனம் நொறுங்கி வாழும் மக்களுக்குத் தேர்தல் நெருக்குவதால் வெள்ளச் சேத மீட்பு, நிவாரணப் பணிகளில் எல்லா அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு உணவுப் பொட்டலங்கள், ரொட்டி, பாய், போர்வை, வாளி, வேட்டி, சேலை, அரிசி, காய்கறி, வீட்டுக்கு வீடு பணம் என்று வழங்குவது ஓட்டுக்குத்தான் என்றாலும் வரவேற்க வேண்டிய விஷயமே. மழைக்காலம் முடிந்து விடும். நீர் வற்றி விடும். சித்திரை வந்துவிடும். வெயிலை வரவேற்று விரிந்த சுவர்களில் சிமெண்டுப் பூசிப் பின் வண்ணம் பூசி மக்கள் வாழலாம்.
அடுத்த பத்தாண்டிலோ, ஐந்தாண்டிலோ மீண்டும் சென்னைப் புறநகர்கள் மிதந்தால்? அது மழையின் குற்றமல்ல. வாழ்வின் குற்றமல்ல. மெட்ரோ நகர் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் மனிதர்களின் குற்றமே.