முகப்பு
கட்டுரைகள்

பனை மரத்து சிந்தனைகள்

பட்டுக்கோட்டை அருகே பனங்காடு மிகுந்த குக்கிராமத்தில் பனை ஓலையும் எழுத்தாணியும் கொண்டு அரிச்சுவடி படித்தேன்.

கட்டுரைகள்

பனை மரத்து சிந்தனைகள்

பட்டுக்கோட்டை அருகே பனங்காடு மிகுந்த குக்கிராமத்தில் பனை ஓலையும் எழுத்தாணியும் கொண்டு அரிச்சுவடி படித்தேன்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:55 AM
பகிர்:

பட்டுக்கோட்டை அருகே பனங்காடு மிகுந்த குக்கிராமத்தில் பனை ஓலையும் எழுத்தாணியும் கொண்டு அரிச்சுவடி படித்தேன். பின்னர், மன்னார்குடியில் படித்தபோது ஆசிரியர் கேள்வி கேட்பார். பதில் தயாராக வராது. வாத்தியார் பரிகாசமாகப் பாடுவார்: "பனை மரமே பனை மரமே ஏன் வளர்ந்தாய் பனை மரமே' என்று.
 அன்றே பனை மரம் கேலிப் பொருளானது. பதில் சொல்லத் தெரியாத பாமர மாணவரைவிட வாத்தியார் பனை மரத்தின் பலன் அறியாத பாமரனாக இருந்தார். காகிதங்கள் தோன்றாத காலத்தில், எழுத்தறிவைச் சுமந்த ஏடுகள் அறிவின் சின்னம். ஏடு என்ற சொல்லின் வேர் பனை ஓலை அல்லவா? அறிவுப் பசியைப் பன்னெடுங்காலமாகப் போக்கிய பனை மரங்களே ஏடுகளின் தாய். பனை மரங்களின் பலன்களை அறியாத மக்களே பாமரர்கள்.
 கடந்த தலைமுறையில் திருக்குடந்தை அருணாசலப் புலவர் எழுதியுள்ள "தால விலாசம்' பனையின் 801 பயன்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் உண்டு. "தால விலாசம்' என்றால், "பனையின் முகவரி' என்று பொருள்.
 இன்று தங்கத்தில் தாலி செய்கிறார்கள். மஞ்சள் நாணில் திருமாங்கல்யத்தைக் கோத்துக் கழுத்தில் அணிவது தாலி. பனங்காட்டுப் பண்பாட்டில் பழந்தமிழர்கள் பனை ஓலையில் மணமகள் பெயரை எழுதி, சுருட்டி துவாரமிட்ட மணமகள் காதில் அணிவார்களாம். அதுதான் தாலி. காதணி விழாவும் கல்யாணமும் ஒன்றாக நிகழ்ந்தன.
 "தால' என்றால் "இலை' என்று பொருள். பனை ஓலையும் இலைதானே! ஆகவே, பனை மரம் தால மரமாயிற்று! தாலி வழங்கிய மங்கல மரமும் அதுவே. பழந்தமிழ் மன்னர்களின் குலச் சின்னம் பனை மரம்.
 பழந்தமிழர் வாழ்வில் பனை மரமே பணம் தரும் மரம். அன்று கரும்புச் சர்க்கரை தோன்றவில்லை. இனிப்புக்கு இலுப்பைப் பூவும், பனங் கருப்பட்டியுமே பயனாயிற்று. போதைக்கு அன்று டாஸ்மாக் இல்லை. பனங் கள் மட்டுமே பயனாயிற்று. படை வீரர்களுக்கு மன்னர்கள் பனங் கள் வழங்கியதைப் புறநானூறு தெரிவிக்கிறது.
 "கலங்கல்' என்பது பனங் கள். மன்னர்கள் கலங்கல் வழங்கினராம். மற்றொரு பாடல், "கள்ளின் வாழ்த்தி கள்ளின் வாழ்த்தி காட்டொடு மிடைத்த சியாமுற்றில்' (புறநானூறு 316) மன்னன் வழங்கிய கலங்கலைக் குடித்துவிட்டுப் படை வீரர்கள் கள்ளை வாழ்த்தினர்.
 பனங் கள் மிகவும் அரிய சித்த - ஆயுர்வேத மருந்து என்பதை அறியாத பாமரர்கள் நாம். என்ன சாப்பிட்டாலும் எடை ஏறாமல் பலம் குன்றியவர்கள் கள்ளைக் குடித்து நல்லுணவு உண்டால் பலசாலியாவார்கள். வயதுக்கு ஏற்ற எடை ஏறும். சுவாச கோசம், நீரிழிவு நோய்களுக்கு மருந்து. போதைக்கான ரசாயனம் கலக்காமல் சுத்தமான கள் மருந்து. சுத்தமான கள்ளில் போதை குறைவு. பீர் போல்தான் கள்.
 டாஸ்மாக்கில் விற்கப்படும் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் எல்லாம் சுத்தமானவை அல்ல. மொலாசஸ்ஸிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஆல்கஹாலின் அடர்த்தியைக் குறைத்து விஸ்கி, பிராந்தி, ரம் ஆகியவற்றின் நிறம் "கெராமல்' என்ற சாயத்தினால் பெறப்படுகிறதாம்.
 பிராந்தியை திராட்சை ரசத்திலிருந்தும், பார்லி மால்ட்டிலிருந்து விஸ்கி, ஜின்னும் பெற வேண்டும். இப்போது மக்காச் சோள மால்ட் பயனாகிறது. ரம் மட்டும் கரும்புச் சாறிலிருந்து பெற வேண்டும். மேலை நாடுகளில் சுத்தமான சரக்கு பெற வாய்ப்புண்டு. ஆனால், டாஸ்மாக் சரக்குகள் - பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் எல்லாமே - மொலாசஸ் + கெராமல் கலப்புதான்.
 இலுப்பைப் பூக்களிலிருந்து பழங்குடி மக்கள் தயாரிக்கும் சாராயம்கூட தீமையளிக்காது. டாஸ்மாக் சரக்குகள் எல்லாம் நின்று கொல்லும் விஷம். டாஸ்மாக் சரக்கைவிடப் பனங் கள் நூறு மடங்கு உயர்ந்த பானம். சங்க காலத் தமிழர்கள் பனங் கள் பருகி திடமுடன் வாழ்ந்ததால், மனித நல வாழ்வுக்குப் பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்று புறநானூறில் 323-ஆவது பாடல் கூறுகிறது.
 சங்க காலத் தமிழ் மன்னர்கள் பனை மரங்களை வளர்த்தனர். பனை மர வளர்ப்புக்கு இன்றைய அரசு திட்டமிடவில்லை. பன்னாட்டு நிறுவனங்களை அழைத்துத் தொழில் முதலீடு செய்யும்படி வற்புறுத்தும் அரசுகள், பனை மரம் வளர்த்தல் போன்ற பல்வேறு குடிசைத் தொழில்கள் வழங்கும் வேலைவாய்ப்புகள் பற்றி கவனம் செலுத்தாதது ஏன்?
 விஷத் தன்மையுள்ள பெப்சி, கோக் போன்ற பானங்களின் மாற்றான பதநீர், "நீரா' என்ற பெயரில் சில ஊர்களில் கிடைக்கிறது. கரும்பு வெல்லம் கிலோ ரூ.50, பனங்கருப்பட்டி கிலோ ரூ.170, பனங்கற்கண்டு கிலோ ரூ.400. பனை நார்களில் முடையப்படும் தட்டுமுட்டுச் சாமான்கள் நல்ல விலை பெறும். கோடை காலத்தில் நுங்கு விற்பனையை விரிவுபடுத்தலாம்.
 பனை நுங்கு அமெரிக்க - ஐரோப்பிய சந்தைகளைக் கவரக் கூடியது. பனை நுங்கு ஜாமை லண்டனில் உண்டதாகக் கூறும் குமரி அனந்தன், லண்டனில் பனை நுங்கு 123 ரூபாய்க்கு விற்பதாகத் தெரிவித்தார். தாய்லாந்திலிருந்து பனம் பழச்சாறு, நுங்கு, நுங்கு ஜாம் ஆகியவை ஐரோப்பியச் சந்தையைப் பிடித்துள்ளதாம்.
 அப்படிப்பட்ட ஐரோப்பியச் சந்தையை நாம் பிடித்துவிட்டால் பனை மரம் பண மரமாகுமே! உள்நாட்டிலும் பனை சார்ந்த தொழில்களை வளர்க்கலாமே. பனை வளர்த்துக் கோடையில் மக்களுக்கு நுங்குகளை வழங்கினால், உள்ளம் குளிர்ந்து பனை வளர்த்த தலைவர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பார்களே!
 பனை தரும் பொருள்களில் ஏழைக்கேற்ற சத்துணவும் உண்டு. அதுவே பனங் கிழங்கு. கிராமங்களில் பெண்கள் பனங்கொட்டைகளைச் சேகரித்து மண்ணில் நெருக்கமாக நடவு செய்வார்கள். பனங்கொட்டை நட்ட 100-ஆவது நாளிலிருந்து அறுவடை செய்யலாம்.
 ஒரு பனம் பழத்தில் ஒன்று முதல் மூன்று விதைகள் இருக்கும். ஒரு பழத்திலிருந்து ஒன்று முதல் மூன்று கிழங்குகள் கிட்டும். இப் பனங் கிழங்குகளைச் சுட்டுத் தின்னலாம். வேக வைத்தும் உண்ணலாம். பனங் கிழங்கில் புரதச் சத்துடன் நிறைய கால்சியமும், பாஸ்பரஸும் உண்டு. இயற்கையான சத்துணவு. 75 சதவீதம் மாவுச் சத்தும் உள்ளதால் நல்ல சக்தியை அளிக்கும்.
 தால விலாசம் எழுதிய அருணாசலப் புலவர் பனையை ஓர் அற்புத மூலிகை என்றும், கற்பக விருட்சம் என்றும் வர்ணித்துள்ளார். பனை ஓலை, பனம் பூ, பூந்தண்டு, பதநீர், கள், கருப்பட்டி, பனங் கற்கண்டு, நுங்கு, பழம், பனங் கிழங்கு, பனை வேர் எல்லாமே நாட்டு மருந்துச் சரக்குகள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான குணம் உண்டு. சங்க காலத் தமிழர்களுக்குக் காசநோய் வந்தால், பனங் கள் கொடுத்து குணப்படுத்துவார்களாம். அன்று பனங் கள்ளே "ஸ்ட்ரப்டோ மைசின்'.
 நூறாண்டு வைரம் பாய்ந்த பனை மரம் கருந் தேக்கு. அந்தக் காலத்தில் கான்கிரீட் வீடுகள் ஏது? வளைவு ஓடுகள் கொண்ட ஓட்டு வீடுகளுக்கு வைரம் பாய்ந்த பனங் கைகள், உத்திரம், தூண்களாகப் பயனாயிற்று. பனை மரம் கனம் நிரம்பிய உறுதியான மரம். பனை மரங்களை நெருக்கமாக நட்டு உயிர்வேலி எழுப்பிவிட்டால் யானைகூட உள்ளே நுழையாது. காட்டுப் பகுதிகளில் விவசாயம் செய்வோர் பனை மர உயிர்வேலி அமைப்பது நன்று.
 பனை மரங்களுக்கு இவ்வளவு பயன்பாடு இருந்தும் நாம் பெற்ற நாகரிகம் பனை மரங்களுக்கு உதவுவதாயில்லை. இது கான்கிரீட் யுகம். பனை ஓலை வேயப்பட்ட குடிசைகள், ஓட்டு வீடுகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. பனங் கள் இறக்குவது சட்டப்படி குற்றமாகிவிட்டது. டாஸ்மாக் உற்சாக பானங்களில் பனங் கள் இடம் பெறவில்லை.
 இன்று பனையின் பயன் செங்கல் சூளைக்கு மட்டுமே என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. ஏழை மக்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடிய பனை மரம், அன்று தமிழர்களின் குலச் சின்னமாயிருந்தும்கூட, இன்று பாழ்பட்டது ஏன்?
 இன்று தமிழர்களின் கோபம் வேலிக்காத்தானாக விளங்கும் சீமைக் கருவை மீது பாய்ந்துள்ளது. சீமைக் கருவையின் விதை நல்லுணவாகும். அந்த அளவில் புரதச் சத்து மிகுந்தது. ஓர் ஏக்கரில் மண்டி வளர்ந்துள்ள சீமைக் கருவை விதைகளில் 1,600 கிலோ மாட்டிறைச்சிக்கு இணையான புரதம் உள்ளது.
 சீமைக் கருவை விதைகளைப் பயன்படுத்தாமல் உள்ளதால் விதை விழுந்து காடாக மண்டுகிறது. விதைப் பரப்பில் 30 சதவீதம் புரதமும், 57 சதவீதம் மாவுப் பொருளும் உள்ளது. இது இனிப்பு ருசியுள்ளதால் ஆரிசோனா, கொலரோடா வாழ் செவ்விந்தியர்கள் சீமைக் கருவை விதைகளிலிருந்து மிகவும் சுவையான ரொட்டி செய்து உண்பார்கள்.
 தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்தியாவிலும் இலவச எரிபொருள். விறகு, அடுப்புக்கரித் தேவையை நிறைவேற்றி வருகிறது. மூங்கில் பற்றாக்குறையை ஈடுசெய்து முள்வேலி அமைத்திட உதவுகிறது. இதை விஷமென்றும் நீருறிஞ்சி என்றும் கூறுவதற்கு ஆதாரம் இல்லை.
 நீர் நிலைகளில் கரையில் வளரும்போது, மண்ணரிப்பு ஏற்பட்டுக் கரை உடையாமல் (வெள்ளம் வரும்போது) காப்பாற்றுகிறது. செவ்விந்தியர்கள் சீமைக் கருவை இலையைச் சாறெடுத்துக் கண்ணுக்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். கண் வலிக்கு ஏற்ற "ஆன்டிபயாட்டிக்'. நட்டுவாக்களி கடித்த இடத்தில் இந்த இலைச் சாற்றுடன் சர்க்கரை கலந்து பிளாஸ்டர் செய்தால் விஷம் இறங்குமாம்.
 இருப்பினும், சீமைக் கருவையை அழிக்க வேண்டும் என்பது மதுரை நீதிமன்றத் தீர்ப்பு. ஒரு மரத்தை அழித்தால் ஒரு மரம் நட வேண்டும். பாலை, நெய்தல் நிலங்களுக்கு உகந்த பனை மரங்களைச் சீமைக் கருவேல மரம் வெட்டப்பட்ட இடங்களில் நட வேண்டும் என்று மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தால் நியாயமான தீர்ப்பு என்று ஏற்கலாம்.
 அப்படிப்பட்ட தீர்ப்பு இல்லையென்றாலும் அரசும் மக்களும் சேர்ந்து பொது நிலங்களிலும் தனியார் நிலங்களிலும் பனை வளர்த்து தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேன்மையுறச் செய்ய வேண்டும். வாழ்க பனை.
 தாய்லாந்திலிருந்து பனம் பழச்சாறு, நுங்கு, நுங்கு ஜாம் ஆகியவை ஐரோப்பியச் சந்தையைப் பிடித்துள்ளதாம். அப்படிப்பட்ட ஐரோப்பியச் சந்தையை நாம் பிடித்துவிட்டால் பனை மரம் பண மரமாகுமே!
 

முழு கட்டுரையைப் படிக்க →