அண்மையில் நடிகர் சங்கத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. ஓர் அணி வெற்றி பெற்றிருக்கிறது. ஓர் அணி தோல்வியடைந்திருக்கிறது. இந்திய தேசத்தின் வரலாற்றையே மாற்றப் போகிற தேர்தல் மாதிரி, ஒரு சிறு குழுவினரிடையே
நடந்த தேர்தலுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின.
காரணம்? மக்களைக் கவர்ந்த நடிகர்களும், நடிகைகளும் அந்தத் தேர்தலில் சம்பந்தப்பட்டிருந்ததும் மக்கள் அவர்களின் முகங்களைப் பார்க்கவும் அவர்களின் பேச்சுக்களைக் கேட்கவும் ஆவலாக இருந்ததும் தான்.
பிரபல நடிகையும் திரையுலகச் சாதனையாளருமான மனோரமாவின் இறுதி ஊர்வலத்திற்குப் பெரும் கூட்டம் கூடியது, ஏதோ நெகிழ்ச்சியுடன் ஆச்சிக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. குறைவான எண்ணிக்கையில் சிலர் அப்படியும் வந்திருக்கலாம். மற்றபடி அங்கு எண்ணற்ற நடிக, நடிகைகள் வருவார்கள், அவர்களைப் பார்க்கலாம் என்ற எண்ணமே ஆச்சியின் இறுதி ஊர்வலத்திற்கு அதிக மக்கள் வந்த காரணம்.
சவ ஊர்வலத்தில் ஒளிப்படக் கருவி தங்களை நோக்கித் திரும்பியதும் பல இளைஞர்களும் இளம்பெண்களும் உல்லாசமாகச் சிரித்தவாறே கையசைத்ததையெல்லாம் நாம் தொலைக்காட்சியில் பார்த்தோமே! யார் செத்தால் என்ன, எல்லாம் எங்களுக்கு வேடிக்கைதான் என்கிற பொறுப்பற்ற மனோபாவம்தான் அதில் தெரிந்தது.
இதெல்லாம் நமக்குத் தெரிவிக்கும் உண்மை என்ன? நடிகர்களுடைய எந்தச் செயலும் கூர்மையாகப் பலரால் விரும்பிப் பார்க்கப்படுகிறது, நடிகர்களின் எந்தப் பேச்சும் ஆவலோடு பலரால் ரசித்துக் கேட்கப்படுகிறது என்பதுதான். இது நிதர்சனம். இதை நாம் விரும்புகிறோமா, இல்லையா என்பதல்ல கேள்வி. இது இப்படி இருக்கிறது என்ற உண்மையை எல்லோரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.
ஆனால், திரையுலகத்தினர் அப்படிச் செயல்படுகிறார்களா? தங்களுக்கு மக்களிடையே உள்ள பெரும்புகழை உணர்ந்து, தங்கள் பேச்சுக்கு மக்களிடையே உள்ள பெரும் செல்வாக்கை உணர்ந்து அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்கிறார்களா?
பணம் வாங்கிக் கொண்டு விளம்பரப் படங்களில் சொல்லித்தந்த வசனத்தை ஒப்பித்து நடிப்பதல்ல சொந்தமாகப் பேசுவது.
இந்த நடிகர் சங்கத் தேர்தலில் நாசரும் போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது இந்தக் கட்டுரைக்கு அப்பாற்பட்ட விஷயம். அவர் வெல்லட்டும். அல்லது தோற்கட்டும். அவர் இந்தத் தேர்தலில் வென்றாலும், தோற்றாலும் அவர் மிகச் சிறந்த நடிகர் என்பது உலகறிந்த உண்மை. திரையுலகின் மிகச் சில சாதனையாளர்களில் அவரும் ஒருவர். எண்ணற்ற ரசிகர்களின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவர்.
அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பொறுத்து அவரின் ஆற்றல் தீர்மானிக்கப்படுவதில்லை. அவர் எப்படி நடிக்கிறார் என்பதே அவரது ஆற்றலுக்கான அளவுகோல். அந்த அளவுகோலை வைத்து அவரைக் காண்பதே முறை. நியாயம். ஆனால், இந்தத் தேர்தலில் சிலர் அவரை "பாய்' என நையாண்டியாகக் குறிப்பிட்டார்கள். ஒரு வளர்ந்த நடிகரை "பாய்' எனக் கிண்டலாகக் குறிப்பிடலாமா? அவர் முகமதிய மதத்தில் பிறந்தார். எனவே முகமதிய மதத்தைச் சார்ந்தவராக இருக்கிறார்.
இதில் அவர் செய்த தவறென்ன? ஒருவர் முகமதியராக இருப்பதே தவறா? அப்படியானால், இந்திய அரசமைப்புச் சட்டம் அவர்களுக்கும் இந்தியாவில் வாழ்கிற உரிமையைக் கொடுத்துள்ளதே, அது எப்படி நாசரின் அபாரமான நடிப்பாற்றலால் தமிழ்த் திரையுலகம் பெற்றிருக்கிற பெருமை, அவர்
முகமதியர் என்பதால் குறைத்து மதிப்பிடப்படுமா?
ஒருவரின் துறைசார்ந்த ஆற்றலுக்கும் அவரின் மதத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? நீதிபதி மு.மு. இஸ்மாயிலின் கம்ப ராமாயணப் புலமையை அவர் முகமதியர் என்பதால் ஒதுக்கி விட முடியுமா?
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அபாரமான நேர்மையை அவர் முகமதியர் என்பதால் நாம் பாராட்டாமல் இருக்கலாமா?
எத்தனையோ முஸ்லிம்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் இந்தியாவின் வளர்ச்சிக்கும் எத்தனையோ வகைகளில் பங்காற்றியுள்ளார்களே, அவர்களின் பங்களிப்பையெல்லாம் நாம் ரத்து செய்துவிட இயலுமா?
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அந்தணராகவும், முகமதியராகவும், கிறிஸ்துவராகவும், இன்னும் பற்பல வேடங்களில் நடித்துப் பெரும்புகழ் பெற்றாரே, அவர் எந்த ஜாதிக்குரியவர் அல்லது எந்த மதத்திற்கு உரியவர்? அனைவரும் அல்லவா அவரைக் கொண்டாடுகிறார்கள்? கலைஞர்கள் ஜாதி, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லவா?
நாசரை நையாண்டி செய்வது எத்தனை மட்டமான மனோபாவம்? சினிமாவால் கவரப்பட்டு இத்தகைய பேச்சை நடிகர்களின் வாயிலாகக் கேட்கும் இளைஞர்களெல்லாம் தங்களின் அன்பான முஸ்லிம் நண்பர்களை இப்படித்தானே இனிக் கிண்டல் செய்வார்கள்?
நாத்திகர் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் நடிகர் கமல்ஹாசனின் ஜாதியை மறைமுகமாகக் குறிப்பிட்டுத் தாக்கிப் பேசினார் ஒருவர். சொற்பொழிவுத் துறையிலும் சாதனை படைத்துவரும் நடிகர் சிவகுமாரின் ஜாதி கூடக் கிண்டலுக்குத் தப்பவில்லை.
ஜாதி உணர்வும் மத உணர்வும் தமிழக அரசியலில் பெரும் கேடுகளை உருவாக்கி வருகிறது என்பதை நடுநிலையாளர்கள் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களை மனிதர்கள் என்ற வகையில் ஒருங்கிணைக்க இந்த ஜாதியும், மதமும் தடையாக இருக்கிறதே என்பது பல காந்தியவாதிகளின் உள்ளார்ந்த கவலை.
கலையுலகும் அரசியல் உலகைப் போலவே மோசமாகத் தான் இருக்கிறது என்ற உண்மையை நடிகர் சங்கத் தேர்தல் வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. கலையுலகினருக்கு மக்களிடையே உள்ள புகழும் செல்வாக்கும் அரசியல்வாதிகளுக்கு உள்ளதை விடவும் அதிகம். அதனால்தான் கலையுலகக் கவர்ச்சியால் பலர் பொதுத் தேர்தல்களில் கூடக் கூடுதல் வாக்குகளைப் பெற முடிகிறது.
நம் கவலை இதுதான். கலைஞர்களே தங்கள் சக கலைஞர்களின் ஜாதியையும் மதத்தையும் பற்றிக் கிண்டலும் கேலியும் செய்து பேசுவார்களானால், கலையுலகத்தினரால் பெரும் தாக்கம்பெறும் நம் தமிழ்ச் சமூகத்திலிருந்து இத்தகைய உணர்வுகள் போவதற்கு இன்னும் எத்தனை காலம் ஆகுமோ?
திருப்பூர் கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.