முகப்பு
கட்டுரைகள்

செம்மையாகட்டும் செம்மொழி நிறுவனம்

"எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்' என்பது அரசின் நிலைப்பாடாக உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி,

Updated On : 29 அக்டோபர், 2015 at 1:26 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:35 PM

"எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்' என்பது அரசின் நிலைப்பாடாக உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் "தமிழ் வாழ்க' என்னும் சொற்கள் ஒளிர்கின்றன.
 அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் வளர்ச்சித் துறை செயல்பட்டு வருகிறது. தமிழுக்காக தனிப் பல்கலைக்கழகம் உள்ளது. தமிழ்மொழி செம்மொழியாக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டுவிட்டன. மாத, வார, தினசரி எனப் பத்திரிகைகள் பல வெளிவருகின்றன.
 இத்தனை இருந்தும் தமிழ் வளர்ச்சி அடைந்துள்ளதா? தமிழ் மொழி மக்களிடம் பரவலாகச் சென்றடைந்துள்ளதா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
 எந்த மாநிலத்திலும் இல்லாத ஆங்கில மோகம் தமிழகத்தில்தான் உள்ளது எனக் கூறலாம். ஆங்கிலம் வேலைவாய்ப்புக்கு மட்டுமே பெரிதும் பயன்படக்கூடும் என்பதை, ஆங்கிலம் படிப்போர் எப்போதுதான் புரிந்து கொள்வார்களோ?
 இந்தி பேசும் மாநிலங்களில், உயர் பதவியிலிருக்கும் அதிகாரிகளிடம் ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே அவர்களும் ஆங்கிலத்தில் பேசுவார்கள். இல்லையெனில், இந்தியில்தான் பேசுவார்கள். ஆனால், தமிழகத்தில் ஆங்கிலத்தில் பேசினால்தான் மதிப்பு, மரியாதை என நினைக்கிறார்கள்.
 பல கல்லூரிப் பேராசிரியர்கள் "என்னால் தமிழில் சரி வரப் பேச இயலாது' எனக் கூறுவதைக் காண முடிகிறது. இதை அவர்கள் ஒரு தகுதியாக, பெருமையாகவே கருதுகின்றனர்.
 தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ஆங்கிலம் கலந்து பேசினால்தான் நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும் என எண்ணுகிறார்கள். குறிப்பாக, சமையல் செய்முறை நிகழ்ச்சியை பாமரரும் காண்பார்கள் என எண்ணாமல், பல ஆங்கிலச் சொற்களையே உபயோகிக்கின்றனர். அது ஒரு புறம் இருக்கட்டும்.
 செம்மொழியாகிவிட்டால் தமிழ் வளர்ச்சி பெறும் எனக் கூறி வந்தவர்கள் இப்போது யாரும் இதுகுறித்துப் பேசுவதுகூட இல்லை. செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனம் 2004-ஆம் ஆண்டு மைசூரில் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வந்தது.
 பின்னர், 2008-ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் அலுவலகம் சென்னைக்கு மாற்றப்பட்டது. பல கோடி ரூபாய் மத்திய அரசு இதற்கு ஒதுக்கீடு செய்தும்கூட, செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்துக்கு என சொந்த அலுவலகக் கட்டடம் இதுவரை கிடையாது. நிரந்தர இயக்குநர் மற்றும் பணியாளர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை.
 நிலையான இயக்குநரும், பணியாளர்களும் இல்லாததால், 2015-ஆம் ஆண்டுக்கான கருத்தரங்கம், மாநாடு என எதுவும் நடத்தப்படவில்லை. மொத்தத்தில் இந்நிறுவனம் மூலம் 2015-ஆம் ஆண்டுக்கான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
 செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனம், இதுவரை 41 இலக்கியங்களை மட்டுமே ஆய்வுக்கும், மொழி மாற்றத்துக்கும் எடுத்துக் கொண்டுள்ளது.
 எட்டுத் தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட சங்க இலக்கியங்கள், பதினென்மேல்கணக்கு என 18 இலக்கியங்கள், பதினென்கீழ்க்கணக்கு என 18 நீதி இலக்கியங்கள், தொல்காப்பியம், முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய 41 இலக்கியங்களின் பணிகளை மட்டுமே செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
 நவீன இலக்கியங்களான புதுக்கவிதை, சிறுகதைகள், நாவல்கள் உள்ளிட்டவற்றை செம்மொழி தமிழாய்வு நிறுவனம் கவனத்தில் கொள்ளவில்லை.
 இதுவரை இந்நிறுவனம் பல பயிலரங்கம், கருத்தரங்கம், மாநாடு ஆகியவற்றை நடத்தியுள்ளது. பெண்ணியம், நவீனத்துவ இலக்கியக் கோட்பாடுகள், மேலைநாட்டு இலக்கிய ஒப்பீட்டாய்வு, தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, கலாசாரம் குறித்த பதிவுகளைக் குறும்படமாக தயாரித்தல், குறுந்திட்ட ஆய்வு, பிற மொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்நிறுவனம் செய்திருப்பது பாராட்டுக்குரியதுதான்.
 ஆனால், 2015-ஆம் ஆண்டில் எந்தவிதமான செயல்பாடும் இல்லாமல் ஏனோதானோ என்று இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, செம்மொழியான தமிழ் மொழி செம்மைப்படுமா என்ற ஐயம் எழுகிறது.
 சாகித்ய அகாதெமி விருது பெறும் நூல்கள், இந்தியாவில் உள்ள 24 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுகின்றன. அதற்கு அந்தந்த மொழிப் புலமை பெற்றவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆனால், தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களை இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பதற்குப் போதிய அளவு தகுதியான நபர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 இக்குறையைப் போக்க வேண்டுமானால், தமிழகத்தில் 12-ஆம் வகுப்பில் தமிழில் சிறப்பாகப் படிக்கும் சுமார் 100 மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்குத் தமிழ் மற்றும் பிற மொழிப் பயிற்சியும் அளிக்கலாம்.
 ஒரு மாணவருக்கு தமிழ் மொழியும், கன்னட மொழியும் கற்றுத்தர வேண்டும். அப்படிக் கற்றுத் தேர்ந்த மாணவர்கள் தமிழ் இலக்கியங்களை கன்னட மொழியில் மொழிப் பெயர்க்க இயலும். இப்படி, இந்திய மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்தால் மட்டுமே தமிழ் மொழி செம்மொழியாக்கப்பட்டதன் உண்மையான பயன் கிடைக்கும்.
 நிதி உள்ளது; இலக்கியம் உள்ளது;அதனை வெளியுலகுக்குக் காட்டுவதற்குப் போதிய நபர்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம். கூடவே, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மேலும் செம்மையாக்கப்படுவதும் மிகவும் அவசியம்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.