கட்டுரைகள்

தொடரும் போராட்டம்...

ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் பொத்தல்களை எப்படி அடைப்பது என்று வளர்ச்சியடைந்த நாடுகளில் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தி. இராசகோபாலன்

ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் பொத்தல்களை எப்படி அடைப்பது என்று வளர்ச்சியடைந்த நாடுகளில் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். கடலுக்கு அடியில் இருந்து பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிற தகடுகள், ஒன்றோடு ஒன்று உராயாமல் எப்படிப் பாதுகாப்பது என்று வளரும் நாட்டினர் கலங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
 வறண்ட தமிழகத்திலோ மதுக் கடைகளை மூடுவதிலும், திறப்பதிலும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். படித்து "பாஸ் மார்க்' வாங்க வேண்டியவர்கள், "டாஸ்மாக்'கில் தள்ளுமுள்ளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றனர். ஒரு தீய பழக்கத்தை மக்கள் மத்தியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய பொதுநலவாதிகள், வாக்கு எண்ணும் இயந்திரத்தில் எரியும் விளக்குகளைக் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
 சங்க காலத்தில் இருந்து மது இருந்திருக்கிறது. அதியமான் - ஒளவையினுடைய நட்பே மதுக் கிண்ணத்தில்தான் பொங்கி வழிகிறது. அக்காலத்தில் கள்ளுண்டு களித்தல் வாழ்க்கையின் ஒரு போக்காகவே கருதப்பட்டிருக்கிறது.
 ஆனால், திருவள்ளுவர் அந்த மதுவை ஆணிவேரிலிருந்து அகற்றி எறிய முயன்றிருக்கிறார். மது எவ்வாறு ஒரு தனிமனிதனையும், அதேநேரத்தில் சமுதாயத்தையும் சீரழிக்கிறது என்பதை ஒன்பது காரணங்களைக் காட்டி எச்சரிக்கிறார்.
 என்றாலும், அவருக்கே ஒரு நேரத்தில் நம்பிக்கையில்லாமல் போய், கள்ளுண்டு மயங்கி இருக்கிறவனைச் சீர்திருத்த நியாயங்களை எடுத்துச் சொல்லுவது, ஆழமான தண்ணீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது (குறள் 929) என்று சலிப்படைகிறார்.
 சங்கப் புலவர்களைப்போல, அர்த்த சாஸ்திரம் எழுதிய கெüடில்யரும் மதுப் பழக்கத்தைக் கண்டிக்கவில்லை. அவர் வகுத்த லட்சிய நாட்டில் மது உற்பத்தி - விற்பனைக்காக ஒரு வாரியத்தையே நியமித்து, அதற்கு ஒரு கண்காணிப்பாளரையும் நியமனம் செய்கிறார். மது விற்பனைக்கு அங்கீகரிக்கப்பட்டவர்களைத் தவிர, வேறு யாராவது தனியாகத் தயாரித்துக் கள்ளத்தனமாக விற்றால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
 பொதுமக்களில், குடிகாரர்கள் கடைகளிலே மட்டும்தான் குடிக்க அனுமதிக்கப்படுவார்கள். வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது. ஆனால், சமூகத்தில் உயர்ந்த நன்னடத்தை உடையவர்கள் குடும்பாவில் (அளவு பாத்திரம்) கால் பகுதி அல்லது அரைப் பங்கு வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம் என்று இயல் 25-இல் வரையறை செய்திருக்கிறார். கெüடில்யர் மதுவை ஆறாக ஓடவிடாமல், அதேசமயத்தில் அதனை முற்றாக ஒழிக்காமலேயும், கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயன்றிருக்கிறார்.
 சிலப்பதிகாரத்தில்கூட, கோவலனைக் கொன்ற கொலையாளி கள்ளுண்ணாமல் இருந்திருப்பானேயானால், அவ்வளவு அவசரப்பட்டிருக்க மாட்டான். கல்லாக் களிமகன் ஒருவன், கையில் வெள்வாள் எறிந்தனன் என்பார் இளங்கோவடிகள்.
 காப்பியத்தின் முடிவிலே இதனால் தெரியவருவது என்னவென்றால், "என்று சொல்வதுபோல் கள்ளும் களவும், காமமும்... ஒழிமின்' என்று நீதிபோதனை செய்கிறார். அதனை அடுத்து வந்த மணிமேகலைக் காப்பியத்தில், சாத்தனார் கள்ளுண்ணலைக் கடுமையாகக் கண்டிக்கிறார்.
 ஒரு மதம் பிடித்த யானையின் முன்னாலே சென்று அதன் கூர்மையான தந்தத்தால் குத்துண்டு ஒருவன் சாவது, அவன் ஏற்கெனவே குடித்திருந்த கள்ளினால் ஆகும் (சிறை விடு காதை: அடிகள் 120 - 123 வரை) என மதுவின் அபாயத்தை எடுத்துரைக்கிறார் சீத்தலைச் சாத்தனார்.
 கம்பராமாயணத்தில் மதுப் பழக்கம் எதிர்மறைப் பாத்திரமான வாலி மூலம் கண்டிக்கப்படுகிறது. வாலி மோட்சம் அடைவதற்கு முன் என் தம்பி, சுக்ரீவன் அடிக்கடி மது அருந்துபவன்.
 அப்படி அருந்திவிட்டு புத்தி மாறி ஏதேனும் தவறு செய்தால், என்மேல் விட்ட அம்பை அவன்மேல் ஏவிவிடாதே என்று இராமனிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறான். இதன் மூலம் மதுப் பழக்கம் மனித இனத்தை மட்டுமன்றி, விலங்குகளையும் வீழ்த்தவல்லது என்பது தெரிய வருகிறது (சான்று: வாலி வதைப்படலம்,
 பாடல் 134).
 மகாபாரதத்திலும் மதுவின் கொடுமை வெகு நேர்த்தியாக விளக்கப்பட்டிருக்கிறது. சூதாடுவதற்குத் தருமனைத் துரியோதனன் அழைக்கிறான். அப்பொழுது கள்ளுண்ணுதலைக் காட்டிலும் சூது கொடுமையானது என்பதை, கழகம் ஆடவும் பெறுவரோ இதனின்னும் கள்ளுண்ணல் இனிதன்றே என்பதன் மூலம் உணர்த்துகின்றான் தருமன் (சபா பருவம் - சூது சருக்கம்: பாடல் 68).
 சூதும் மதுவும் ஏன் இரட்டைச் சகோதரர்களாக சொல்லப்படுகின்றன என்பதற்குப் பரிமேலழகர் ஒத்த குற்றத்தன ஆதலின் சூதும் கள்ளும் உடன் கூறப்பட்டன என்பார்.
 மூல ஆசிரியரை வழிமொழிந்து எழுதிய பாரதியும், துச்சாதனனின் கயமையைச் சொல்லும்போது, இவன் தீமையில் அண்ணனை வென்றவன் - கள்ளும் ஈரக்கறியும் விரும்புவான் என்று ஓரிடத்திலும், தொடர்ந்து இவன் கள்ளின் சார்பின்றியே வெறி சான்றவன் என்று மற்றோரிடத்திலும் நவில்கின்றார் (பாஞ்சாலி சபதம்: 62-வது தலைப்பு).
 மதுவின் கொடுமை, மற்றபிற சமயவாதிகளாலும் அழுத்தமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. விவிலியத்தில், ஆதியாகமத்தில், 19-ஆவது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு செய்தியைப் படித்தால் நெஞ்சு சுடும். ஆண்டவனால் ஒரு நகரம் அழிக்கப்படுகிறது. அந்நகரத்தில் லோத்து என்பவனுக்கு இரண்டு மகள்கள் மட்டுமேயுள்ளனர். வேறு ஆடவர்களே கிடையாது.
 அதனால், அப்பெண்கள் தங்களுக்கு மக்கட்பேறு வேண்டும் என்பதற்காகத் தங்களுடைய தந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்துக் கொடுத்து மயக்கத்தில் தள்ளுகின்றனர். பின்னர், அத்தந்தையோடு தொடர்பு கொண்டு, இரண்டு குழந்தைகளைப் பெறுகின்றனர். மது, மனித நாகரிகத்தின் மரபுகளைக்கூட உடைத்து எறிந்திருக்கிறது.
 மதுவின் தீமைகளை எடுத்துச் சொல்வதற்கு இசுலாத்தில் ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. ஆள்கள் நடமாட்டமில்லாத பகுதியில் ஓர் பக்திமான் நடந்து செல்கிறார். அங்கு குழந்தையை வைத்துக் கொண்டிருந்த ஒரு வேசி, அந்தப் பக்திமானைப் பாலியலுக்கு அழைக்கிறாள்.
 ஐயோ பாவம், என்னால் அது முடியாது என்கிறார். உடனே அவள் மூன்று செயல்களைச் சொல்லி, அதில் ஏதாவதொன்றை நீ செய்யாவிட்டால், நீ என்னை மானபங்கப்படுத்திவிட்டாய் என்று சொல்லி ஊரைக் கூட்டுவதாக அச்சுறுத்துகிறாள்.
 மூன்று என்னவென்று நடுக்கத்தோடு அவர் கேட்கிறார். என்னோடு பாலியல் உறவு கொள்ள வேண்டும். அது முடியாதென்றால், இந்தக் குழந்தையைக் கொல்ல வேண்டும். அதுவும் முடியாது என்றால் இந்தக் கோப்பையிலே இருக்கிற மதுவை நீ குடித்து முடிக்க வேண்டும் என்றாள்.
 மூன்று பாவங்களில், மென்மையானது மதுவைக் குடித்தல் என்று அவர் முடிவு செய்து, அந்த மதுவை எடுத்துக் கடகடவென்று குடித்து முடித்தார். மது போதையில், அவளைப் பாலியல் வன்முறை செய்வதற்காக நெருங்கினார். அப்பொழுது குழந்தை வீறிட்டு அழத் தொடங்கியது.
 தன் செயலுக்கு அது தடையாக இருக்குமென்று கருதி அவர், மது போதையில் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றார். பின்பு, மூன்றாவது பாவத்தையும் செய்தார்.
 மகேந்திரவர்மப் பல்லவன் மதுக் கொடுமையை விவரிப்பதற்கென்றே மத்த விலாசப் பிரகசனம் என்ற நூலை எழுதுகிறார். அதில் வருகிற சமணர்களும், சாக்கியர்களும், காபாலியரும், பாசுபதர்களும் மது அருந்திவிட்டு ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்வர். மத குருமார்களைக்கூட மது விட்டுவைக்கவில்லை என்பதற்காகவே மகேந்திரவர்மன் இந்நூலை எழுதியிருக்கிறார் போலும்.
 மகாத்மா காந்தி ஒருமுறை சொன்னது இங்குக் குறிப்பிடத்தக்கது. என்னை இந்த நாட்டின் சர்வாதிகாரியாக ஒரு மணி நேரத்துக்கு யாரேனும் நியமித்தால், முதல் செயலாக எந்தவித நஷ்டஈடும் தராமல், எல்லா மதுக் கடைகளையும் மூடிவிடுவேன். கள் இறக்கும் அத்தனை தோப்புகளையும் அழித்துவிடுவேன். இந்த இரண்டும் அப்பாவி மக்களைக் கொன்று கொண்டிருக்கின்றன என்றார்.
 டாக்டர் இராபர்ட்சன் என்ற புகழ்பெற்ற மருத்துவர், சரிபாதி அளவுக்கு மது பரிமாறப்படும் விடுதிகளையும், மதுக் கடைகளையும் மூடிவிட்டால், இந்த நாட்டில் சரிபாதி மருத்துவமனைகளையும், மறு பாதிக்குச் சிறைச்சாலைகளையும் நிரந்தரமாக மூடிவிடலாம் என்றார்.
 நேற்று, இன்றல்ல, பல்லாண்டு காலமாக மது என்ற அரக்கனை அடிப்பதற்குப் பலப்பல பெரியோர்கள், கோடரிகளைத் தூக்கியிருக்கின்றனர். என்றாலும், பலன் என்னவென்றால், அவர்கள் கையைக் காயப்படுத்திக் கொண்டதுதான் மிச்சம்.
 1921இல் இருந்து 1931 வரை நம் நாட்டில் கள்ளுக்கடை மறியல் தீவிரமாகவே நடந்தது. ஈ.வெ.ரா. தமது தோட்டத்திலிருந்த கள்ளிறக்குவதற்குப் பயன்பட்ட 500 தென்னை மரங்களை வெட்டி எறியச் சொன்னார். கள்ளுக்கடை மறியலில் அமரர் கல்கி நேரடியாக ஈடுபட்டதோடு, அப்போராட்டத்தை மையமாக வைத்து, தியாக பூமி என்றும் குறுநாவலையும், பாஸ்கர விநாய ராவ், தெய்வயானி என இரண்டு சிறுகதைகளையும் எழுதினார்.
 மேலும், சுதந்திரப் போராட்ட வீரர், தருமபுரியைச் சேர்ந்த தீர்த்தகிரி முதலியார், தொண்டர் படையைத் திரட்டிக் கொண்டு, காலை 10 மணியிலிருந்து 3 மணி வரை, கள்ளுக்கடைகளுக்கு எதிரே மறியல் நடத்துவார்.
 மூன்று மணிக்கு மேலே குடித்துவிட்டு வருபவர்களைப் பிடித்து அவர்களை உடுத்திய துணியோடு குளிப்பாட்டி, அவர்கள் ஒவ்வொருவருடைய கையிலும் ஒவ்வொரு தேங்காயைக் கொடுத்துக் கும்பிடு தெண்டனிட்டு, ஊரைச் சுற்றிவரச் செய்வார். இப்படி நேற்று, இன்றல்ல, பலகாலமாக மதுவோடு போராடி வருகிறோம்.
 எல்லா நாடுகளிலும் குடிப் பழக்கம் இருக்கிறது. ஆனால், அந்நாடுகளில் குடலும், கல்லீரலும் அழுகிப் போகின்ற அளவுக்கு யாரும் குடிப்பதில்லை. மனைவியின் தாலியை அடகு வைத்துக் குடிப்பவர்கள் அந்நாடுகளில் இல்லை.
 குழந்தைகளின் கல்விக்கும், குடும்பங்களின் வளர்ச்சிக்கும் தேவையான பணத்தை எடுத்துக் குடிப்பவர்கள் யாரும் இல்லை. சாலை ஓரத்தில் விழுந்து கிடக்கும் அளவுக்குக் குடிப்பவர்களும் இல்லை.
 காமராசர், அண்ணா காலம்வரை இந்நாட்டு இளைஞர்களுக்கு மது என்றால் என்னவென்று தெரியாது. பழக்கமில்லாத ஒரு பரம்பரையைப் பழகும்படியாகச் செய்துவிட்டோம். திடீரென்று ஒரே நாளில் இக்கொடுமையை ஒழித்துவிட முடியாது.
 கர்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களிலும் மது கொழுந்துவிட்டு எரிகிறது. நான்கு பக்கங்களிலும் தீப்பற்றி எரிகிறபோது, நடுவிலே இருக்கும் கற்பூரத்தை மட்டும் தீப்பற்றாமல் காப்பாற்ற முடியாது.
 ஆடிக் கொண்டேயிருக்கும் ஊஞ்சலைச் சடார் என்று தடுத்து நிறுத்திவிட முடியாது. நிறுத்தினால் தடுப்பவர்களின் முட்டியை ஊஞ்சல் முறித்துவிடும். ஊஞ்சலின் வேகம் ஓய்கிறவரையில் காத்திருக்க வேண்டும்.
 தீண்டாமையையும், வரதட்சிணைக் கொடுமையையும் அகில இந்திய அளவில் சட்டம் போட்டுத் தடுத்ததுபோல், மதுவையும் தடை செய்ய வேண்டும்.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT