பணப் பரிவர்த்தனையில் புதுமை
சில ஆண்டுகள் முன்புவரை நினைத்துக்கூட பார்க்க முடியாத மாற்றங்கள் நம் நாட்டில் பணப் பரிவர்த்தனையில் நிகழ்ந்துள்ளன.
சில ஆண்டுகள் முன்புவரை நினைத்துக்கூட பார்க்க முடியாத மாற்றங்கள் நம் நாட்டில் பணப் பரிவர்த்தனையில் நிகழ்ந்துள்ளன. உதாரணத்துக்கு, ஐ.எம்.பி.எஸ். (IMPS - Immediate Payment Service) மூலம் குறைந்த செலவில், சில்லறை அளவில் (Retail) கிடைக்கும் உடனடி பணப் பரிவர்த்தனை சேவை.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு தனி நபருக்கோ, வர்த்தகருக்கோ, சிறிய தொகையோ, பெரிய தொகையோ, எந்த ஊருக்கு வேண்டுமானாலும், உடனடியாகப் போய்ச் சேரும் வகையில் பணம் அனுப்பலாம். ஆண்டு முழுவதும், விடுமுறை இல்லாமல், எல்லா நாள்களிலும், எந்த நேரத்திலும் இந்த சேவை கிடைக்கிறது.
÷இந்தப் புதுமையான சேவையை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 2010-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. நம் நாட்டில் சில்லறை அளவிலான பணப் பட்டுவாடா நடைமுறைகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் நோக்கில், பாரத ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் பேரில், இந்திய வங்கிகள் சங்கத்தால் (Indian Banks Association) நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்.பி.சி.ஐ.) நிறுவப்பட்டது.
÷உடனடி பணப் பரிவர்த்தனை சேவையை செல்லிடப்பேசி அல்லது வங்கிக் கணக்கு அல்லது ஆதார் எண் மூலம் எளிதாகப் பெற்றிட முடியும். செல்லிடப்பேசி, இணையதளம், தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரம் (ஏ.டி.எம்.) மூலம் பரிவர்த்தனையைத் தொடங்கலாம்.
÷எனவே, வங்கி வாடிக்கையாளர்கள் மட்டும் அல்லாமல், வங்கி அல்லாத நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும், அதாவது ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட பிரீபெய்டு சாதனங்கள் வழங்கும் நிறுவனங்கள் மூலம் ஐ.எம்.பி.எஸ். சேவையைப் பெறலாம். இந்த நடைமுறை முற்றிலும் பாதுகாப்பானதும் கூட.
கணக்கில் வைக்கப்படும் பற்று, வரவு உடனுக்குடன் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கப்படுகிறது.
÷நம் கணக்கிலிருந்து வெளியூருக்கு உடனே போய்ச் சேரும் வகையில் (Real time) பணம் மாற்றல், பயணச்சீட்டு வாங்குதல், பொருள்கள் வாங்குதல், கடன் அட்டையில் பட்டுவாடா, பள்ளி, கல்லூரி கட்டணம் செலுத்துதல், நன்கொடை வழங்குதல், கணினி மூலம் (ஆன் லைனில்) பொருள்கள் வாங்குதல் என நம் அன்றாட வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனைக்கு ஐ.எம்.பி.எஸ். கை கொடுக்கிறது என்றால் மிகை அல்ல.
÷ஐ.எம்.பி.எஸ். சேவையை சாதாரண மக்கள் பயன்படுத்துவது சாத்தியமா என்ற சந்தேகம் எழக் கூடும். பார்க்கப் போனால், இதற்கான நடைமுறை மிகவும் எளிதாகவே இருக்கிறது.
÷ஒருவர் செல்லிடப்பேசியைப் பயன்படுத்தி பணம் அனுப்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தனது செல்லிடப்பேசி எண்ணை வங்கியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். எம்.எம்.ஐ.டி., எம்.பி.ஐ.என். (M-Pin)ஐ பணம் அனுப்புபவருக்கு வங்கி வழங்குகிறது. இதர விவரங்களையும் வங்கி விளக்குகிறது.
÷M.M.I.D. எண் என்பது 7 இலக்கம் கொண்ட Mobile Money Identifier என்கிற அடையாள எண். இது பயனாளியின் விவரங்களை அறிந்து கொள்ள உதவுகிறது. பணம் பெறுபவர் வங்கியிலிருந்து MMID-ஐ பெற்றுக்கொண்டு, பணம் அனுப்புபவருக்கு அதைத் தெரிவிக்க வேண்டும். அல்லது பணம் பெறுபவர் தனது வங்கிக் கணக்கு எண், I.F.S. code (Indian Financial System) குறியீடு அல்லது ஆதார் எண்ணை பணம் அனுப்புபவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
÷பணம் அனுப்புபவர் ஸ்மார்ட் செல்லிடப்பேசி, சாதாரண செல்லிடப்பேசி, இணைய தளம், தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரம் என எந்த சாதனத்தை வேண்டுமானாலும் பரிவர்த்தனையைத் தொடங்குவதற்கு பயன்படுத்தலாம்.
÷பணம் அனுப்புபவர், யாருக்குப் பணம் அனுப்புகிறாரோ அவரது விவரங்களைப் பதிவு செய்கிறார். அதாவது M.M.I.D.,செல்லிடப்பேசி எண் அல்லது வங்கி கணக்கு எண், IFS code அல்லது ஆதார் எண், அனுப்ப வேண்டிய தொகை, அனுப்புபவரது M-Pin ஆகிய விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
÷பணம் அனுப்புபவர், பணம் பெறுபவர் ஆகிய இருவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
÷ஆதார் சார்ந்து பணம் அனுப்பும் சேவை Aadhaar Based Remittance Service (ABRS): யாருக்குப் பணம் அனுப்புகிறோமோ, அவரது ஆதார் எண் அவரது வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதைப் பயன்படுத்தி, IMPS மூலம் அவருக்குப் பணம் அனுப்ப முடியும். பணம் அனுப்புவதற்கு ஆதார் எண் மட்டுமே தேவைப்படுகிறது. இதனால், பணம் அனுப்புவது எளிதாக உள்ளது.
இதில் இன்னொரு முக்கிய நன்மை, அரசு வழங்குகிற மானியத் தொகை நேரடியாகப் பயனாளிகளுக்கு பட்டுவாடா செய்யப்படுகிறது. இதன் மூலம் எளிய மக்களை உள்ளடக்கிய
(Financial Inclusion) சேவை பரவலாகிறது.
÷இந்தியாவில் ரொக்கப் பணப் பரிவர்த்தனையை கணிசமாகக் குறைக்கும் வகையில், என்.பி.சி.ஐ. பாதுகாப்பான, எளிய, குறைந்த செலவில் பணப் பரிவர்த்தனை வழிமுறைகளை அறிமுகம் செய்வதில் முன்னணியில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக ரூபே டெபிட் அட்டை, ரூபே EMV அட்டை, ரூபே கிசான் அட்டை, ரூபே பிரீபெய்டு அட்டை, ரூபே பிளாட்டினம் டெபிட் அட்டை ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது.
÷ரூபே டெபிட் அட்டை மூலம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ரொக்கப் பணம் இல்லாமல் பரிவர்த்தனை செய்யலாம். ரூபே பிளாட்டினம் டெபிட் அட்டை மூலம் பல கூடுதல் சலுகைகளைப் பெற முடிகிறது.
÷என்.பி.சி.ஐ. கடந்த 5 ஆண்டுகளில் தன் செயல்பாடுகளை பன்மடங்கு பெருக்கியுள்ளது. தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பரிவர்த்தனைகளிலிருந்து, தற்போது நாளொன்றுக்கு 2 கோடி பரிவர்த்தனைகளை என்.பி.சி.ஐ. கையாளுகிறது. இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் இது இரண்டு மடங்காக, அதாவது, நாள் ஒன்றுக்கு 4 கோடி பரிவர்த்தனைகளைக் கையாளும் வகையில் கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என என்.பி.சி.ஐ. சேர்மன் எம்.பாலசந்திரன் அண்மையில் சென்னையில் தெவித்தார்.
÷ஆகஸ்ட் மாதம் 55.5 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் 80 சதவீதம் தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரம் வாயிலாக நடைபெற்ற பரிவர்த்தனைகள் ஆகும்.
தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரம் வாயிலாக நடைபெற்ற பரிவர்த்தனைகளில் 15 சதவீதம் ரூபே அட்டை பரிவர்த்தனை ஆகும். தனி நபரைப் பொருத்தவரை மின்னணு முறையில் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளும் போக்கு ஆண்டுக்கு 20 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்து வருகிறது என்கிறார் என்.பி.சி.ஐ. தலைவர் எம்.பாலசந்திரன்.
÷வங்கிகளுக்கு இடையேயான தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரப் பரிவர்த்தனைகளை மட்டுமே தொடக்கத்தில் கையாண்ட இந்த நிறுவனம், இப்போது காசோலை கிளியரிங், உடனடி பணப் பரிவர்த்தனை சேவை, (24ல7) தானியங்கி கிளியரிங் ஹவுஸ், மின்னணு அரசு மானிய பட்டுவாடா (Electronic Benefit Transfer) மற்றும் Rupay டெபிட் அட்டை என பலவகை சேவைகளை வழங்குகிறது.
÷சீன அரசு சார்ந்த சீனா யூனியன் Pay, ஜப்பான் நாட்டு JCB Co. உடன் என்.பி.சி.ஐ. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் பயனாக, ரூபே அட்டை மூலம் சீனா, ஜப்பான் கரன்சியில் பணம் எடுக்கும் வசதி கைகூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
÷கடன் அட்டைத் துறையைப் பொருத்தவரை, ஒரு கடன் அட்டையை வரும் ஆண்டில் என்.பி.சி.ஐ. அறிமுகம் செய்ய உள்ளது. இது ஒருபுறம் இருக்க, முத்ரா வங்கியுடன் இணைந்து, அந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்காக ஒரு சர்வதேச அட்டையையும் அறிமுகம் செய்ய இருப்பதாக பாலசந்திரன் கூறியுள்ளார்.
÷"உலக எழுத்தறிவு தினம்' செப்டம்பர் 8-ஆம் தேதி நாடெங்கிலும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, என்.பி.சி.ஐ. மின்னணு முறைப் பணப் பரிமாற்றம் பற்றி விழிப்புணர்வுப் பயிலரங்கம் நடத்தியது. நாடு முழுவதும் 120 மையங்களில், 56 பிராந்திய கிராமப்புற வங்கிகளிலும் (Regional Rural Banks) விழிப்புணர்வுப் பயிலரங்கு நடைபெற்றது.
÷தமிழகத்தில் என்.பி.சி.ஐ. தேசிய வேளாண்மை, கிராம மேம்பாட்டு வங்கி (NABARD) ஆகியன இணைந்து கிருஷ்ணகிரி, சேலம், திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய நகரங்களில் விழிப்புணர்வுப்
பயிலரங்கு நடைபெற்றது. இதில் நாடெங்கிலும் 24,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கலந்து கொண்டனர். பயிலரங்கில், தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரம் பற்றிய அனைத்து செயல்பாடு, நடைமுறை, வங்கியில் பணம் எடுத்தல், வங்கிக் கணக்கு இருப்பு விவரம் அறியும் முறை, ரகசியக் குறியீடு என பரிமாற்றம் தொடர்பான அனைத்து விவரங்களும் பயிலரங்கில் விளக்கப்பட்டன.
÷பிரதம மந்திரி மக்கள் நிதி (ஜன்தன்) திட்டம், பிரதம மந்திரி ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதம மந்திரி விபத்துக் காப்பீட்டுத் திட்டம், அடல் ஓய்வூதியத் திட்டம் ஆகியன மூலம் எளிய மக்களையும்
உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசு அடித்தளம் அமைத்துள்ளது. இதன் பயனாக, முதல் தலைமுறை வங்கிக் கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில் மேற்கூறிய மின்னணு பணப் பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்கள் எல்லா இந்திய மக்களையும், குறிப்பாக ஊரகப் பகுதி மக்களையும் சென்றடையும் வண்ணம் என்.பி.சி.ஐ. மேற்கொண்டுள்ள விழிப்புணர்வுப் பணி வரவேற்கத்தக்கது.