கட்டுரைகள்

தறிகெட்டு வளரும் தனி மனித வழிபாடு

அடக்கமும், பணிவும் மானுடத்தின் அணிகலன்கள்... இவை உள்ளம் என்னும் ஊற்றுக் கண்ணிலிருந்து உருவாக வேண்டும்.

அடக்கமும், பணிவும் மானுடத்தின் அணிகலன்கள்... இவை உள்ளம் என்னும் ஊற்றுக் கண்ணிலிருந்து உருவாக வேண்டும்.
 அதீதமாய் வெளிக்காட்டப்படும் அடக்கமும், பணிவும் சுயநலத்தையே தமது சுயமாய்க் கொண்டுவிட்ட சூழ்ச்சிக்காரர்களின் நடிப்பாக இருக்கும்போது, பண்படுத்தும் வரங்களே பாழ்படுத்தும் சாபங்களாய் மாறிவிடுவதைக் காண்கிறோம்.
 உளத் தூய்மையற்ற இறை வழிபாடும், ஊழல் மனங்கள் வளர்க்கும் தனி மனித வழிபாடும், இம்மண்ணில் பல்வேறு கேடுகளுக்குப் பதியமிட்டுள்ளன.
 அதிகார மையங்கள் தொடங்கி, சாதாரண அலுவலகங்கள் வரை தனி மனித வழிபாடுகள் தலைவிரித்தாடுகின்றன.
 புகழ்ச்சியும், சூழ்ச்சியும், போலித்தனங்களும் முத்திரைகளாய் பதிந்து இருக்கும் முகங்கள் பல, அதிகாரங்களின் முகவரிகளாய் மாறியிருப்பது வேதனைக்குரிய ஒன்று. சுவரொட்டிகளும், வண்ண விளம்பரங்களும், பார்வையை மிரள வைக்கும் பதாகைகளும் தாங்கி நிற்கின்ற தத்துவம்தான் என்ன?
 தலைவர்களையும், தமது மனங்கவர்ந்த நடிகர்களையும் துதி பாடுவதற்காகத் தொண்டர் கூட்டம் செய்கின்ற மாபெரும் பொருள் செலவை மக்கள் நலப் பணிகளில் செலவிட ஏன் இவர்களுக்கு மனம் வருவதில்லை?
 இத்தகைய மோசமான முகத் துதிகளும் ஏன் இந்தத் தலைவர்களை முகம் சுளிக்க வைப்பதில்லை?
 போலிப் புகழுரைகளில் தலைவர்கள் மயங்கிக் கிடப்பதும், புகழ்பாடித் திரிகின்ற போலிகளை பொறுப்புகளில் அமர்த்தி மகிழ்வதும் பொது வாழ்வைப் பொய்மையின் புகலிடமாக ஆக்கியுள்ளன.
 சுயமரியாதை இயக்கத்தில் சூல்கொண்டு, சமூக நீதியைத் தனது குருதியோட்டமாகக் கொண்டு இந்த மண்ணில் மலர்ந்த திராவிட இயக்கங்களிலும் சுயமரியாதை படும் பாடு, மிகவும் அவலகரமானது. சனாதன, சாதிய நம்பிக்கை கொண்ட, அவற்றைக் காப்பாற்ற இருக்கின்ற இயக்கங்கள் குறித்து கேட்கவே வேண்டாம்.
 கடவுளின் பெயரால் மனிதனின் சுயமரியாதை காவு கொடுக்கப்படுவதை எதிர்ப்பதற்காக, கடவுளே இல்லை என முழங்கினர். இந்த முழக்கத்தின் பரிணாம வளர்ச்சி மனிதனைக் கடவுளாக்குவதில் முடிவது எவ்வளவு கொடுமையானது.
 கர்ப்பக்கிரகத்தில் இருந்த தெய்வ வழிபாட்டை, கட்சித் தலைமைக்கு இடமாற்றியதுதான், பாடுபட்டு வளர்த்த தத்துவத்தின் பரிணாம வளர்ச்சியா...?
 இக்காலத்தில் எந்தக் கட்சியில்தான் தலைவர் இருக்கிறார். தலைவர் இருக்க வேண்டிய இருக்கையில், இதய தெய்வங்கள் அல்லவா இப்போது வீற்றிருக்கின்றன.
 ஏற்றுக் கொண்ட லட்சியத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுபவர் தொண்டர் என்ற நிலை மாறி, ஏற்றுக் கொண்ட தலைவரின் (சொத்து) வளர்ச்சிக்குப் பாடுபட்டு, அதன்மூலம் தானும் (ஊழலில்) வளர்பவர் தொண்டர் என்ற புத்திலக்கணம் அல்லவா, பொல்லாத அரசியலில் புகுத்தப்பட்டுள்ளது.
 இந்த சூழ்ச்சிகளுக்கு உதவும் கருவியாகத் தானே தனி மனித வழிபாடு உருமாறி இருக்கிறது. ஆரோக்கியமான விவாதங்களும், மாற்றுக் கருத்துகளும் ஜனநாயக வளர்ச்சியின் அடையாளங்கள் அல்லவா? தங்களின் சுயநலத்துக்காக மனிதரைத் தெய்வமாக்கிவிட்டவர்கள் எப்படி இருப்பார்கள்? காலில் விழுவதில் காட்டுகிற அக்கறையைக் கருத்துச் சொல்வதில் காட்டுவார்களா?
 பதிய வைக்கும் கருத்துகள் நமது அடையாளமல்ல, பதவிதான் நமது அடையாளம் என்பதில் அரசியல் தெய்வங்களின் குட்டிப் பூசாரிகள் மிகத் தெளிவாக இருக்கின்றனர். எனவே, சிந்திக்கத் தெரிந்தவர்களும் சிந்திக்க மறுக்கின்றனர்.
 இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
 கெடுப்பார் இலானுங் கெடும்
 - என்ற வள்ளுவனின் எச்சரிக்கை அரசியல் தெய்வங்களுக்கு அறவே தேவையில்லை போலும்.
 போலிப் புகழ் மோகத்தில் தடுமாறி, தடம் மாறுவோரை அறநெறியில் ஆற்றுப்படுத்த வேண்டிய அருங்கடமை ஊடகங்களுக்கு உண்டு. ஆனால், சில ஊடகங்களின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது கட்சி தெய்வங்களின் (?) குட்டிப் பூசாரிகளே பரவாயில்லை எனத் தோன்றுகிறது.
 உலகையே நடுங்கவைத்த ஹிட்லரையே தனது அங்கதம் செறிந்த அரசியல் விமர்சனங்களால் அதிரவைத்தார் சார்லி சாப்ளின். நம் காலத்து கனவு உலக நாயகர்களை நினைத்தால்... கவலையே மிஞ்சும்.
 தனி மனித வழிபாட்டை வளர்ப்பதில் திரையுலகம் பெரும் பங்கு வகிக்கிறது.
 நகுதல் பொருட்டன்று நட்டல்;
 மிகுதிக்கண்
 மேற்சென்று இடித்தல் பொருட்டு
 - என்ற குறளில் நண்பனின் தவறையும் இடித்துரைப்பதுதான் நட்பு என்கிறார் வள்ளுவர்.
 தலைமைக்கும் தொண்டருக்கும் நட்பு என்ற தோழமை இருப்பதற்குப் பதிலாக, பதவி மோகம் என்ற பக்தி வந்துவிட்டால்... இடித்துரைப்பது எப்படி சாத்தியமாகும்?
 நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என முழங்கிய திருநாவுக்கரசர்,
 சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து
 தரணியோடு வான் ஆளத் தருவரேனும்,
 மங்குவார் அவர் செல்வம்
 மதிப்போம் அல்லோம்
 - என்று அதிகார மையத்தை நோக்கிப் பாடினார்.
 கணிகண்ணன் போகின்றான் காமருப் பூங்கச்சி
 மணிவண்ணா நீகிடக்க வேண்டாம் - துணிவுடைய
 செந்நாப் புலவன் நான் செல்கின்றேன் நீயுமுந்தன்
 பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்.
 - என்ற பாடலில் அரசனோடு முரண்பட்ட ஒரு பக்தன், பெருமாளிடம், நான் இந்த ஊரை விட்டு வெளியேறுகிறேன். நீயும் இங்கிருந்து வெளியேறிவிடு என ஆணையிடுவதை பக்தி இலக்கியத்தில் படிக்க முடிகிறது.
 உங்களது முகத்துக்கு நேராக வரம்பு மீறிப் புகழ்பவர்களைக் கண்டால், அவர்கள் முகத்தில் மண்ணை வீசுங்கள் என்றார் முகம்மது நபிகள் நாயகம் அவர்கள்.
 அறப்போர்களிலேயே மிகப் பெரிய அறப்போர் அநியாயக்கார ஆட்சியாளர் முன், நியாயத்தை எடுத்துரைப்பது என்று நபி பெருமானார் நவின்றார்கள்.
 இன்று உலகத்தின் உச்சகட்ட அதிகாரங்களை உரிமை கொண்டிருப்பவர் அமெரிக்க அதிபர். அவருக்கே கூட, ஒரு மனிதரை நெருப்புக் குண்டத்தில் வீசச் சொல்வதற்கு சட்டப்படியான அதிகாரம் இல்லை. ஆனால், நம்ரூத் என்ற மன்னனுக்கு இறைத் தூதர் இப்ராஹிம் (அலை) அவர்களை நெருப்புக் குண்டத்தில் வீசுகிற அதிகாரம் இருந்தது.
 தன்னையே இறைவன் என்று பிரகடனம் செய்த எகிப்தின் அரசன் ஃபிர்அவ்னுக்கு, இறைத் தூதர் மூஸாவை ஏற்றுக் கொண்டவர்கள் மாறுகால், மாறுகை வாங்கி தண்டிக்கும் அதிகாரம் இருந்தது.
 அந்த அதிகாரங்கள் எல்லாம் என்னவாயின? எங்கே போயின? சிந்திக்க வேண்டும்.
 பூமியில், இறைவனுக்கு இணையாகத் தான் புகழப்படுவதை அனுமதித்த மனிதர்கள் யாவரும், இழிவுமிகு துயரங்களை இவ்வுலக வாழ்வில் கண்ட பிறகே இறந்தார்கள் என்பது இறவாத உண்மையாகும். அதிகாரப் பதவிகளில் அமர்பவர்கள் தமக்கு சரியான ஆலோசகர்களை அமைத்துக் கொள்வதற்குப் பதிலாக அத்தனைக்கும் ஆமாம் சாமி போடும் அடிமைக் கூட்டங்களை உருவாக்குவதில்தான் ஆர்வம் காட்டுகின்றனர்.
 இஸ்லாமியக் குடியரசின் இரண்டாவது தலைவராகப் பொறுப்பேற்ற கலீஃபா உமர் மக்கள் முன் உரையாற்றும்போது, நான் இறை நெறிகளுக்கு எதிராக ஆட்சி செய்தால், என்ன செய்வீர்கள் என்று வினா தொடுக்கிறார்கள். கூட்டத்தில் வீற்றிருந்த குடிமகன் ஒருவர், தனது உடைவாளை உருவிக்காட்டி, இந்த வாளால் உம்மைத் திருத்துவோம் என்று துணிவாகக் கூறுகிறார்.
 இத்தகைய (தனி மனித வழிபாடற்ற) குடிமக்களைத் தந்தமைக்காக இறைவனுக்கு நன்றி நவில்கிறார் கலீஃபா உமர். ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை கூறுவதையே தன்னைப் பாதிக்கும் செயலாகப் பார்க்கிற மனோநிலை வளர்ந்தால், இடித்துரைக்கும் குணம் எப்படி இருக்கும்?
 கூழைக் கும்பிடைத் தமது குணமாகக் கொண்டிருக்கும், ஆறாவது அறிவற்ற அடிமைக் கூட்டம் தன் தகுதியைக் குறைத்துக் கொள்ளாமல் தன்மானத்தோடு, பணியாற்றும் ஒருவனைத் தவறானவனாகக் கருதி, துரோகப் பட்டம் கட்டுகின்றன. அவனைத் தொலைத்துக் கட்டுவதில் குறியாய் இருக்கின்றன.
 அரசியல் சதுரங்கத்தில் அழகாகக் காய் நகர்த்தி அதிகார மையங்களை அடைந்துவிட்ட தகுதியற்றவர்கள், தர்மத்தையும், தன்மானத்தையும் தமது பண்புகளாகக் கொண்டு பணியாற்றுபவர்களைப் பாடாய்ப்படுத்தி பல்வேறு உளைச்சல்களுக்கு உள்ளாக்குவதைப் பரவலாகக் காண முடிகிறது. பதவி வரும்போது பணிவு வர வேண்டும் என்ற நிலை மாறி, பலருக்குப் பதவி அளித்தோர் மீது பக்தியும், பதவிக்கு கீழ் இருப்போர் மீது ஆணவமும், ஏளனமும் வந்து விடுகிறது.
 மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை என்னும்போது, அற்பப் பதவிகளால், ஆணவம் கொண்டு அருங்குணங்களை இழப்பவர்களை என்னென்று சொல்வது...
 தறிகெட்டு வளரும் தனி மனித வழிபாட்டால், அறம் கெட்டு, தரம் கெட்டு, அறிவார்ந்த உரையாடல்கள் கெட்டு, அரசியலில் ஆரோக்கியம் கெட்டு, அழுகி வருகின்றன.. போலித்தனமற்ற வாழ்வை விழையும் புதிய தலைமுறைகள் எழுச்சி பெற வேண்டும்.
 
 கட்டுரையாளர் :
 பேராசிரியர்.
 ஏற்றுக் கொண்ட லட்சியத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுபவர் தொண்டர் என்ற நிலை மாறி, ஏற்றுக் கொண்ட
 தலைவரின் (சொத்து) வளர்ச்சிக்குப் பாடுபட்டு,
 அதன்மூலம் தானும் (ஊழலில்) வளர்பவர் தொண்டர்
 என்ற புத்திலக்கணம் அரசியலில் புகுத்தப்பட்டுள்ளது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

SCROLL FOR NEXT