பயன்களைப் பெறவிடாமல் தடுப்பது நியாயமா?
மத்திய அரசும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனமும் (இ.பி.எஃப்.) தொழிலாளர்கள் அதிகச் செலவாளிகள் என
மத்திய அரசும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனமும் (இ.பி.எஃப்.) தொழிலாளர்கள் அதிகச் செலவாளிகள் என நினைக்கின்றன போலத் தெரிகிறது. எனவேதான், ஏதாவது ஒரு வழியில் அவர்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள்.
தொழிலாளர்கள் தங்கள் வருங்கால வைப்புநிதிக் கணக்கிலிருந்து முன்யோசனையில்லாமல் பணத்தை முன்கூட்டியே எடுத்துச் செலவிடுவதால், வாழ்க்கையின் இறுதியில் தங்கள் குழந்தைகளையோ பிறரையோ சார்ந்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும் என்று இ.பி.எஃப். நிறுவனம் கருதுகிறதா? அல்லது அவர்கள் தங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க சுதந்திரம் கொடுக்கப்பட்டால், அந்தப் பணத்தை வீண் செலவு செய்து விடுவார்கள் என்று நினைக்கிறதா?
சில குறிப்பிட்ட சூழல்களில் முதிர்வு பெறாமல் முழுத் தொகைகளைத் திரும்பப் பெற, இ.பி.எஃப். நெறிமுறைகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கின்றன. இ.பி.எஃப். திட்டம் 1952-இன் எட்டாவது அத்தியாயத்தில், இத்தகைய முதிர்வு பெறாத வைப்பு நிதியைத் திரும்பப் பெறுவதற்கான விதிகள் உள்ளன.
அதன்படி, இ.பி.எஃப். அங்கத்தினராக உள்ள ஒரு தொழிலாளி, தனது நிறுவனத்திலிருந்து விலகிய பின் இரண்டு மாதங்களுக்கு வேலை கிடைக்காமல் இருந்தாலோ, வீடு கட்டுவதற்காக மனை வாங்குவதாக இருந்தாலோ, கட்டிய வீட்டை வாங்குவதாக இருந்தாலோ, தனது வைப்பு நிதிக் கணக்கிலுள்ள பணத்தைத் திரும்பப் பெறலாம்.
இந்த விதிமுறையில்தான் மாற்றம் செய்ய இ.பி.எஃப். விரும்புகிறது. அதாவது, தொழிலாளரின் இ.பி.எஃப். கணக்கிலுள்ள ஒட்டுமொத்தத் தொகையில் 75 சதவீதத்தை மட்டுமே அவர் திரும்பப் பெற முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ள இ.பி.எஃப். நிறுவனம், அதற்கான பரிந்துரையை தொழிலாளர் நல அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளது.
இதில் மீதமாகும் 25 சதவீதத் தொகையை, தொழிலாளர் பணி ஓய்வு பெறும் வரை பெற முடியாது. இந்தப் பரிந்துரையை மத்திய அரசு விரைவில் ஏற்கும் என்பதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன.
இத்துடன் இ.பி.எஃப். நிறுவனம் நின்றுவிடுவதாகத் தெரியவில்லை. தனது அங்கத்தினர் திரும்பப் பெற விரும்பும் தொகையை 50 சதவீதமாகக் குறைக்கவும் அது யோசிப்பதாகத் தகவல். தற்போதைய பரிந்துரை, சிறு முதலடியே.
இந்த நடவடிக்கையானது இ.பி.எஃப். அங்கத்தினர்களை தங்கள் சொந்தப் பணத்தையே பயன்படுத்த முடியாத நிலைமைக்கு உள்ளாக்குகிறது.
அவர்கள் வேலையிழந்து வாடும்போதோ, வசிப்பிடம் வாங்க அவசரமாக பணம் தேவைப்படும்போதோ, அவர்களது முழுப் பணமும் அவர்களுக்குக் கிடைக்காது. இதற்கான தந்திரமான நடவடிக்கையை மத்திய அரசு 2015 ஜூன் மாதம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது.
இந்த நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையின்போது நிறைவேற்றப்பட்ட நிதிச் சட்டம் 2015-இன் படி, 1961-ஆம் வருடத்திய வருமான வரிச் சட்டத்தில் 192-ஏ என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஐந்தாண்டுகள் பணியாற்றிய தொழிலாளி ஒருவர் ரூ. 30,000 மற்றும் அதற்கு மேற்பட்ட இ.பி.எஃப். தொகையைத் திரும்பப் பெறும்போது, அதில் ஒரு பகுதி முன்கூட்டியே வருமான வரிப் பிடித்தமாக (டி.டி.எஸ்.) கழிக்கப்படும்.
தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்தக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அரசும் இ.பி.எஃப். நிறுவனமும் கூறுகின்றன.
இந்த நிலையில்தான் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சீரமைப்பு குறித்துப் பேசப்படுகிறது. தொழிலாளர் நலனில் இதயபூர்வமான அக்கறையுடன் சீர்திருத்தம் கொண்டு வர எண்ணினால், பணி ஓய்வுக்குப் பிறகு அவர்கள் பெறும் ஓய்வூதியத்தின் அளவை அதிகப்படுத்துவதாகவும், அவர்களுக்கு உரிமையான தொகையைப் பெறுவதில் உள்ள தடைகளைக் களைவதாகவும் இது அமைய வேண்டும். ஆனால் அது நிகழவில்லை.
முதிர்வற்ற வைப்பு நிதியைத் திரும்பப் பெறுவதைக் கட்டுப்படுத்த முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையால், செயலற்று முடங்கியுள்ள இ.பி.எஃப். கணக்குகளின் தொகை தான் அதிகமாகும். ஏற்கெனவே, இ.பி.எஃப். நிறுவனத்தில் கோரப்படாது முடங்கியுள்ள அங்கத்தினர் கணக்குகளின் ஒட்டுமொத்தத் தொகை ரூ.32,000 கோடிக்கு மேல் உள்ளது.
இ.பி.எஃப். திட்டத்தின் பிரிவு 72(6)-இல், செயலற்ற கணக்குகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அ) ஒரு தொழிலாளி பெற வேண்டிய பணப் பயன்களில் தீர்வு (செட்டில்மென்ட்) கண்டுவிட்ட பிறகு, அவரது நிறுவனம் பி.எஃப். நிலுவைத்தொகையைச் செலுத்தினாலும், சரியான முகவரியின்றி தொழிலாளிக்கு அதைச் சேர்க்க முடியாத நிலை ஏற்படும்போது அது செயலற்ற கணக்காகிறது.
ஆ) ஒரு தொழிலாளி பணி ஓய்வு பெற்ற பிறகோ அல்லது இறந்த பிறகோ, அவருக்குச் சேர வேண்டிய தொகை 36 மாதங்களுக்குள் கோரப்படாமல் இருந்தால் அது செயலற்ற கணக்காகிறது.
அதாவது, உரிமையாளர்களால் கோரப்படாத கணக்குகள் செயலற்றவை. உண்மையில், மனமிருந்தால் மார்க்கமுண்டு. எந்த ஒரு நிறுவன உரிமையாளரும் தொழிலாளியின் முழு விவரத்தை அறியாமல் அவரைப் பணியில் சேர்ப்பதில்லை.
அவரது தொடர்பு முகவரியைக் கொண்டே இ.பி.எஃப். கணக்கு தொடங்கப்பட்டு, அதில் தொகை செலுத்தப்படுகிறது. வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மட்டுமல்ல, எந்த அரசு நிறுவனமும் வர வேண்டிய நிலுவைத் தொகைகள் குறித்து மெüனமாக இருப்பதில்லை. சிலநேரங்களில் கடனாளிகளைக் கண்டறிந்து பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், முகவரி அறிய முடியாத கடனாளிகளின் நிலுவைத் தொகைகளை அரசு தள்ளுபடி செய்வதில்லை.
துரதிருஷ்டவசமாக, இவ்வாறு முடங்கியுள்ள நிதியின் உரிமையாளர்களைக் கண்டறிவதற்குப் பதிலாக, இந்தத் தொகையை அரசின் பிற திட்டங்களுக்குத் திருப்பிவிட அரசு திட்டமிடுகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது 2015-16 ஆண்டு நிதிநிலை அறிக்கையில், இந்த நிதியின் சிறு பங்கு அரசின் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
"நிதி மசோதாவில், மூத்த குடிமக்கள் நல நிதியைத் தொடங்க நான் திட்டமிட்டுள்ளேன். இந்த நிதி (முடங்கிக் கிடக்கும் இ.பி.எஃப். தொகை) நல நிதியில் சேர்க்கப்பட்டு, ஓய்வூதியம் பெறும் முதியோர், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வோர், குறு விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படும்' என்று அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.
தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய தொகையை வழங்குவதில் தீவிரமின்மை, செயலற்ற கணக்குகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றைக் காணும்போது, இ.பி.எஃப். அங்கத்தினர்களுக்கு ஓய்வூதியமும் பிற பயன்களும் கிடைக்கும் வழிமுறைகளை மேம்படுத்தும் உத்தேசம் அரசுக்கு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
தற்போது இ.பி.எஃப். திட்டத்தில் வழங்கப்படும் ஓய்வூதியம் மதிப்பான வாழ்க்கைக்கு உதவக் கூடிய அளவில் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. 1995-இல் அமலாக்கப்பட்ட இத்திட்டத்தின்படி, பணி ஓய்வு பெறும் தொழிலாளிக்கு ஓய்வூதியமாகக் கிடைப்பது ரூ.1,600
மட்டுமே.
அதாவது, லட்சம் ரூபாய் ஊதியம் பெற்றவராயினும், ஓய்வுக்குப் பிறகு அவருக்கு இ.பி.எஃப். மூலம் கிடைக்கும் ஓய்வூதியம் மிகக் குறைவாகவே உள்ளது. அவரும் வாழப் போராடுபவராக, வறுமைக் கோட்டுக்குக் கீழ் சென்றாக வேண்டும்.
இ.பி.எஃப்.பில் உண்மையான சீர்திருத்தம் என்பது, ஓய்வு பெறுபவர் தனது ஊதியத்தில் சரிபாதியை ஓய்வூதியமாகப் பெறுவதாகத்தான் இருக்கும்.
நமது நாட்டில் இ.பி.எஃப். விதிமுறைப்படி உறுதிப்படுத்தப்பட்ட ஊதியம் ரூ.6,500 மட்டுமே; இது தொழிலாளியின் உண்மையான ஊதியமாக இருப்பதில்லை. எனவே, தொழிலாளி ஒருவர் நியாயமான ஓய்வூதியம் பெற வேண்டுமானால், அவர் கடைசியாகப் பெற்ற ஊதியத்தையே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், அந்தத் திசையில் இ.பி.எஃப். நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.
இந்த நிலையில்தான், அத்தியாவசியத் தேவைகளுக்காக தனது பி.எஃப். சேமிப்புக் கணக்கிலிருந்து பணத்தைத் திரும்பப் பெற தொழிலாளி விரும்புகையில் அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. வேலையிழந்த தொழிலாளர்களுக்கு உடனடியான நிதியுதவி தேவைப்படுகிறது. அத்தகைய தருணத்தில் அவர்களது பணத்தை முழுமையாகப் பெறுவதைத் தடுப்பது இதயமற்ற செயலாகவே இருக்கும்.
ஓய்வூதியத்தில் வீடு வாங்க நினைக்கும் ஒரு தொழிலாளி தனது வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதில் உள்ள கட்டுப்பாடுகளால் தனது முடிவை ஒத்திவைப்பாரானால், அவரது கனவு நனவாகாமலே போகக் கூடிய சாத்தியங்கள் உண்டு.
இவை அனைத்தையும்விட ஆபத்தானது, இ.பி.எஃப். நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் முடிவாகும். அடிக்கடி சரிவடையும் பங்குச் சந்தையில் தொழிலாளர்களின் சேமிப்புப் பணத்தை முதலீடு செய்வது முறையல்ல.
மேற்கண்ட அனைத்து அம்சங்களையும் பரிசீலிக்கும்போது, ஓய்வுக்குப் பிறகு இரண்டாவது கட்டமாக வாழும் முதியோரின் கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்த சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. அதற்கேற்ற சீர்திருத்தங்களே தேவை.
அதற்கு மாறாக, தொழிலாளர்கள் தங்களுக்குரிய வருங்கால வைப்பு நிதியைத் திரும்பப் பெறுவதில் தடைக்கற்களை உருவாக்குவது நேரெதிர் நடவடிக்கையாகவே இருக்கும்.
தங்களுக்குச் சொந்தமான பி.எஃப். சேமிப்புப் பணத்தை தொழிலாளர்கள் முறையற்ற வழியில் பறித்துக் கொள்ள முடியாது; ஆனால், அவர்களுக்குச் சேர வேண்டிய பயன்களை அரசு தர மறுப்பதுதான், உண்மையில் அதைக் களவாடுவதற்கு ஒப்பாகும்.
ஓய்வூதியத்தில் வீடு வாங்க நினைக்கும் தொழிலாளி, வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணத்தைத் திரும்ப பெறுவதில் உள்ள கட்டுப்பாடுகளால் தனது முடிவை ஒத்திவைத்தால், அவரது கனவு நனவாகாமலே போகும்.