முகப்பு
கட்டுரைகள்

விதிகள் மீறுவதற்கல்ல!

பயணம் என்பது ஓர் இனிய அனுபவம். ஆனால், இங்கோ ஒருசாரார் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடப்பது, பயணிப்பது எனும் நிலை. மற்றொரு சாராருக்கு, எனக்கு மட்டுமே இந்தச் சாலை, பயணப்பாதை, வாழ்க்கை என்று குறுகிய நோயுற்ற மனம் கொண்ட அடம்பிடிக்கும் நிலை. இந்தப் பார்வை மாற வேண்டும்.

Updated On : 8 ஆகஸ்ட், 2016 at 3:01 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:38 PM

பயணம் என்பது ஓர் இனிய அனுபவம். ஆனால், இங்கோ ஒருசாரார் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடப்பது, பயணிப்பது எனும் நிலை. மற்றொரு சாராருக்கு, எனக்கு மட்டுமே இந்தச் சாலை, பயணப்பாதை, வாழ்க்கை என்று குறுகிய நோயுற்ற மனம் கொண்ட அடம்பிடிக்கும் நிலை. இந்தப் பார்வை மாற வேண்டும்.

சட்டம் என்பதும் சாலை விதிகள் என்பதும் நமது நன்மைக்கே எனும் புரிதல் அவசியம். காவலர்தான் இல்லையே, சிக்னல் விளக்குகள்தான் இல்லையே எனும் எண்ணத்தில் விதிகளை மீறும் உணர்வைக் கைவிடல் வேண்டும்.

ஹாரன் ஒலி மிரட்டல் தவிர்க்கப்பெறல் வேண்டும். பாதையை நடந்து கடக்கும் மனிதர்களுக்கும் இந்தச் சாலை சொந்தம். அவர்கள் இயல்பாகக் கடக்கும் உரிமை கொண்டவர்களே. இந்த வண்டி வருமுன்பே அவர்கள் இயல்பாய்க் கடந்து சென்றுவிட இயலும்.

Advertisement

ஆனால், தொலைவிலிருந்தே தமது வண்டியின் ஒலிப்பான் ஒலியைத் தொடர்ந்து ஒலித்து அந்த நடைவாசியை - எந்த வயதினராயிருந்தாலும் அவர்களை அப்படியே மிரட்டிச் சில நிமிடங்கள் நிற்க வைத்துத் தாம் கடந்த பின்பே அவர்களைக் கடக்கச் செய்யும் மன நிலை தவிர்க்கப் பெறல் வேண்டும்.

ஒவ்வோர் ஊடகத்திலும் தினசரிப் பகுதியாக விபத்து, பலி என்பது இன்று நித்திய விஷயமாகிப் போனது. சம்பந்தமே இல்லாது இங்கு சாமானியர்களின் உயிர் கொல்லப்படுகிறது விபத்து என்கிற பேரில். அனைத்துச் சமய மக்களின் எண்ணிக்கையையும் நம் அரசு போக்குவரத்து வாகனங்கள் அக்கறையுடன் மோதிக் குறைத்து வருகின்றன.

வாகனம் என்ன, தானாகவேவா போய் மோதுகிறது மக்களின் மீது? நின்றிருக்கும் மக்களை, நடைபாதையில் படுத்திருக்கும் மனிதர்களை, தேநீர்க் கடையில் நிற்கும் சாமானியர்களை, பள்ளி செல்லும் சின்னஞ் சிறுமியரை, பணிக்குச் செல்லும் பாவையரை, வயது முதிர்ந்த மனிதர்களை, நடந்து செல்வோரை, இரு, நான்கு சக்கர வாகன ஓட்டிகளை, பாதை கடப்போரை (யாவரும் இங்கு ஒன்றே - சோசலிசப் பார்வை) பேருந்து ஓட்டுனர்கள், தண்ணீர் மற்றும் சுமையுந்து ஓட்டுனர்கள் முட்டி மோதிக் கொல்கின்றனர்.

இவர்கள் மக்களின் உயிர் மீது மரியாதையோ, அக்கறையோ கொள்வதேயில்லை. தன் பணியின் பொறுப்பு குறித்து கவலை கொள்வதேயில்லை.

மா நகரம், நகரம், சிற்றூர், நெடுஞ்சாலை, சாலை, தெரு, குறுகலான தெரு என்று எங்கு வண்டி ஓட்டினாலும் தம் வண்டியில் பயணம் செய்யும் பயணிகளும் எதிரே வரும் வண்டியிலுள்ள பயணிகளும், நம்மைப் போலவே ஒரு மனிதரே, அவருக்கும் குடும்பம், உற்றம், சுற்றம் உண்டு, அவர் உயிரும் மதிப்பு மிக்கதே என்கிற மிகச் சாதாரண எண்ணம் இருந்தால் போதும், பாதி விபத்துக்கள் நேராது.

விதிகள் இங்கு பின்பற்ற அல்ல, மீறவே என்கிற பார்வை கொண்டவனாகவே மாறிவிட்டான் இன்றைய மனிதன். வாகன ஓட்டிகளும் அவ்வாறே. தான் காணும் அரசியல், அதிகார வர்க்கம் கொண்டுள்ள பொதுப் புத்தியை மட்டும் உடனே இவனும் உள்வாங்கிக் கொண்டுவிட்டான்.

அதனாலேயே இந்த அக்கறையின்மை மனம், உடல், உணர்வு எங்கும் பரவிவிடுகிறது. விளைவு - விபத்து விபரீதம்.

வாகனங்கள் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை. மாற்று ஏற்பாடுகள் சரிவரச் செய்யப்படுவதில்லை.

சாலைகள் சீராக இல்லை. போக்குவரத்து விதிகள் பெரும்பாலானவர்களால் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. சிக்னலில் தமக்கு சிவப்பு இருக்கும்போதே வாகனத்தை ஓட்டுவது (போக்குவரத்து சிக்னல் சில இடங்களில் சரியாகப் பயன்பாட்டில் இல்லை). குறுகலான நடைபாதையில் மக்கள் நடக்க இயலாத நிலை. அதனால் தெருவில் இறங்கி ஓரமாக நடக்கவேண்டிய சூழல்.

குழந்தைகளைத் தெருவின் பக்கமாக நடக்கச் செய்து, தாம் நடைபாதையோரம் அக் குழந்தையின் கரம் பற்றிச் செல்லும் பெரியோர்.

தவறான திசையில் - எதிர்த் திசையில் - தெருவின் வலது ஓரத்தில் வேகமாக இரு சக்கர வாகனம் வருதல்.

சென்னை போன்ற பெருநகரங்களின் பெரிய சாலைகளில் இரு திசையிலிருந்தும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தம் வாகனங்களை ஓட்டி வரும்போது நமது நெஞ்சு படபடக்கிறது.

இரு சக்கர வாகன ஓட்டிகள் காது கிழிபடும் ஒலியுடன் மிகக் கொடூரமாக இடது பக்கம் முந்திச்செல்வது (overtake).

எங்கிருந்து நுழைந்து வருகிறார்கள் என்பது தெரியாவண்ணம் வில்லில் இருந்து பாயும் அம்பெனப் பாய்ந்து வருவது.

சர்க்கஸ் கூண்டுக்குள் முன்பு மோட்டார் சைக்கிள் விடும் வித்தையைக் கண்டிருக்கிறோம். ஆனால், இன்று நடுத் தெருவில் நாம் அந்த சாகசக் காட்சிகளை நாள்தோறும் பதைபதைப்புடன் காண்கிறோம்.

பேருந்துகள் நிறுத்தத்தில் நிற்காமல் சற்று தூரம் தள்ளியே சாலையில் நிற்பது.

சாலைகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாத இடங்களில் நிறுத்துவது. சாலைகளில் நிறுத்திய வாகனங்களைக் கிளப்பும்போது எந்தவித முன்னறிவிப்புமின்றிக் கிளப்புவது. குறுகிய தெருவில்கூட தெருவின் பாதிப் பகுதியை அடைத்து வாகனங்களை நிறுத்திவைப்பது.

வீட்டில் இடமிருந்தும், உள்ளே நிறுத்தாமல் தெருவில் வாகனம் நிறுத்துவது போன்ற எண்ணிலடங்கா விதி மீறல்கள்.

சிற்றுண்டிச் சாலைகளில் வாகனம் நிறுத்த இடமில்லாவிடில் ஹோட்டல்களை மூடிவிடவேண்டும் என்பதுபோல, வீட்டில் வாகனம் நிறுத்த இயலாதவர்கள் வாகனம் வைத்திருக்கத் தடை விதிக்க வேண்டும்.

நடப்பதற்காக உள்ள தெருவில் தங்கள் வாகனங்களை தொடர்ந்து நிறுத்திவைக்கக் கூடாது. இது நிறைவேற்றப்பட்டால் இயல்பான விபத்துகளற்ற பயணத்திற்கு ஒரு வாசல் திறக்கும்.

மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட தெருக்களின் சீரான பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும்.

ஓரிரு வருடத்திற்கு முன் நுங்கம்பாக்கத்தில் முதியவர் ஒருவர் தன் மனைவியைப் பின்னிருக்கையில் அமர்த்தி தன் இரு சக்கர வாகனப் பயணத்தின்போது தெருவின் நடுவில் உள்ள பள்ளம் தெரியாது அதன் மீது ஓட்டி, கீழே விழுந்து தன் மனைவியைப் பறிகொடுத்தார்.

தெரு விளக்கு எரியாமையும் விபத்துக்கள் என்ற பெயரில் உயிர்க் கொலைக்குக் காரணமாகிறது.

வேகத் தடை என்பது மற்றோர் உயிர்கொல்லியாகிறது - மிக அதிக உயரமாக - மலையென உயர்ந்து நிற்கும் இவ் வேகத் தடைகள் உரிய வண்ணங்கள் பூசப்பெறாமல் - யானை முதுகெனக் கரிய நிறத்தில் சாலையின் நிறத்திலேயே இருந்து பல விபத்துகளுக்குக் காரணியாகின்றன.

தெரு நடுவே பாதாளச் சாக்கடை பணிகளால் ஏற்படும் திடீர் மேடும் திடீர்ப் பள்ளமும் பல நேரங்களில் விபத்துக்குக் காரணமாகின்றன.

சரி, இவற்றுக்கெல்லாம் தீர்வென்ன?

முதலில் மதுவிலக்கு வேண்டும். மது அரக்கன் ஒழிக்கப்பட்டாலே பல குற்றங்கள் - குறையும். விபத்துகளும் குறையும்.

சாலைகள் சீரமைக்கப்படல் வேண்டும். மேம்படுத்தப்பட வேண்டும்.

நடைபாதைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும். நடந்து செல்ல மனிதருக்கிங்கே நடைபாதை வேண்டும். அனைவராலுமே விதிகள் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்படல் வேண்டும். விதியை மீறுவோர் மீது பாரபட்சம் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்கப் பெறல் வேண்டும்.

காவல் துறையின் வசூல் வேட்டைக்காக இந்த விதிமீறல் மீது நடவடிக்கை என்பது களையப்பட்டு அனைவரின் நலனுக்குமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

பொது மக்களும் சட்டத்தை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். காவலர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இரவிலும் பகலிலும் போக்குவரத்து விதிகளை பின்பற்றவேண்டும்.

சாலை விதிகளைப் பாமரர் முதல் படித்தோர் வரை பின்பற்றச் செய்ய வேண்டும்.

பள்ளிகளில் போக்குவரத்து விதிகளைப் பற்றிய பாடங்கள், அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்.

நான் பள்ளியில் பயின்றபோது சாரணர் இயக்கத்தில் ஈடுபாடுகொண்டேன். அதில் வாரம் ஒருமுறை ஒவ்வொரு தொகுப்பாக மாணவர்களையே தெருவின் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் போக்குவரத்துக் காவலர்களுடன் இணைந்து ஈடுபடுத்தப்பட்டோம்.

பொது விழாக்களில், கோயில்களில் பொதுச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டோம். இவையெல்லாமே அனுபவப் பாடமே - இவைகள் எங்களுக்குள் ஒழுக்கத்தை, விதியை மதிக்கும் மனோபவத்தை விதைத்தன. இவை மீண்டும் அரசு, தனியார் பள்ளிகளில் கட்டாயப் பாடத் திட்டத்தில் மறு அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

பொதுமக்களும் பாலின, வயது வேறுபாடின்றி போக்குவரத்து விதிகளை அறிந்து, பின்பற்றி வாகனங்களை ஓட்ட வேண்டும்.

மக்களின் நலனில் அக்கறையுடன் போக்குவரத்துத் துறையினர் - குறிப்பாக ஓட்டுனர், நடத்துனர், பணிமனை ஊழியர்கள், அரசுகள், அதிகாரிகள், காவல் துறையினர், மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சிகள் கவனம் கொண்டு செயலாற்ற வேண்டும். மக்களின் வரிப் பணத்தில்தான் நாம் சம்பளம் பெறுகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

விதிகளையும் சட்டத்தையும் தெரிந்து கொண்டு, அவற்றைக் கடைப்பிடித்து மேற்கொள்ளும் பயணம் முழு நிறைவைத் தரும்.

தமிழகம், சாலை விபத்துகளில் முதல் இடத்தைப் பெற முட்டி மோத வேண்டாமே.

நமக்குக் கிடைத்துள்ள இந்த வாழ்க்கையை முழுவதுமாக நலமாக, விபத்துக்கள், ஊனம் இன்றி வாழவும் பிறரும் அப்படியே வாழும் உரிமை பெற்றவர்கள் என்பதை உணர்ந்து, மதித்துச் செயல்பட்டால் அனைவருக்கும் நலம்தானே?

கட்டுரையாளர்: எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.