கட்டுரைகள்

மத்திய பட்ஜெட்டும் நடுத்தர வர்க்கமும்

அடுத்த நிதி ஆண்டிற்கான அரசின் வரவு, செலவு கணக்கை திட்டமிட்டு, நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்படும்

எஸ். ராமன்

அடுத்த நிதி ஆண்டிற்கான அரசின் வரவு, செலவு கணக்கை திட்டமிட்டு, நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்படும் நிதிநிலை அறிக்கை "பட்ஜெட்', வருடா வருடம் நிகழும் சம்பிரதாயமான ஒரு நிகழ்வுதான். இந்த நிகழ்வில், அரசின் செலவுக்கும், வருவாய்க்கும் இடையே நிலவும் விரிசலை நிரப்ப கூடுதல் வரிகள் உள்பட, பல வழிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன.
 தேர்தல் தருணங்களில் மட்டும், சாதாரண குடிமகன்களை குறிவைத்து சில சலுகைகள் அறிவிக்கப்படும் அரசியல் தந்திரங்கள், நடைமுறை பழக்கமாகிவிட்டது. ஆகவே, நிதிநிலை அறிக்கையால் நமக்கு உடனடி பலன் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை என்று நடுத்தர மக்கள், மத்திய பட்ஜெட்டைப் பற்றி சலிப்புடன் நினைக்க ஆரம்பித்து பல காலங்கள் ஆகிவிட்டன.
 அதற்கேற்பவே, தொடர்ந்து ஆட்சி புரியும் அரசுகளின் போக்கும் அமைந்து வந்திருக்கின்றன. நிதிநிலை அறிக்கைக்குப் பிறகு, உடனடியாக விலை ஏற்றப்படும் பொருள்களின் பட்டியலில், நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் பொருள்கள்தான் பெரும்பாலும் இடம் பெறுகின்றன.
 சீரமைப்பு என்ற பெயரில், வணிகக்கூட்டாண்மை (கார்ப்பரேட்) வர்க்கத்தினரின் வரிச்சுமைகளை படிப்படியாகக் குறைத்து, அவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் அரசுகள், நடுத்தர வர்க்கத்திற்கு, வரிச்சலுகைகளை கிள்ளித்தான் போடுகின்றனர் என்ற எண்ணம் நடுத்தர மக்களிடையே வேரூன்றுவிட்டது.
 வணிகக்கூட்டாண்மை நிறுவனங்களுக்கான குறைக்கப்பட்ட வரிகளால் விளையும் பொருளாதார சேமிப்புகள், உற்பத்திப் பொருள்களின் விலை குறைப்பில் பிரதிபலிக்காமல், பெரும்பாலும் அவர்களின் சொந்த லாபத்துக்கும், முன்னேற்றத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுகின்றன என்பது நீண்ட கால குற்றச்சாட்டு.
 விரும்பிய சலுகைகளைப் பெறுவதற்கு, வணிகக்கூட்டாண்மை அமைப்புகளுக்கு அதிகார வர்க்கத்துடன் வலிமையான தொடர்புகள் (Corporate lobbies) உள்ளன. அந்த மாதிரி தொடர்புகள், நடுத்தர வர்க்கத்துக்குக் கிடையாது என்பது அந்த வர்க்கத்தினரின் ஒரு பலவீனமாகும்.
 நிதிநிலை அறிக்கைக்கு முன்பே வரிகளை உயர்த்தி, புதிய வரிகளே கிடையாது என்ற மாயையை தோற்றுவிக்கும் பழக்கமும் தொடர்ந்து பல அரசுகளால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு சிறந்த உதாரணம், எண்ணெய்ப் பொருள்களின் மீதான கலால் வரி தொடர்ந்து அதிகரிக்கப்படுவதைச் சொல்லலாம்.
 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடையும்போதெல்லாம், பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியை, மத்திய அரசும், கடந்த நவம்பர் 15 முதல் ஜனவரி16 வரை 5 தடவைகள் உயர்த்தி, 17,000 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. விலை வீழ்ச்சிக்கு முந்தைய காலங்களில், கச்சா எண்ணெய்யின் விலை உயரும்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையும் உடனடியாக உயர்த்தப்பட்டன. ஆனால், விலை வீழ்ச்சியின்போது, அந்த பலன் முழுவதும் மக்களைச் சென்றடையாமல், பெரும்பகுதி, கலால் வரியாக அரசாங்கத்தால் பறிக்கப்பட்டுவிடுகிறது.
 கச்சா எண்ணெய்யின் தற்போதைய சர்வதேச விலை நிலவர அடிப்படையில், நம் நாட்டில், பெட்ரோல் விலை லிட்டருக்கு அதிகபட்சமாக 40 ரூபாய் என்ற அளவில்தான் விற்கப்படவேண்டும். ஆனால், வசூலிக்கப்படுவதோ 60 ரூபாயாகும். வரியாக மாற்றப்படும் விலை வித்தியாசம், நாட்டின் வரவு-செலவு கணக்கின் விரிசலை ஈடுகட்டவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. விளக்கம் ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், இம்மாதிரி திட்டங்களின் பலன் சாதாரண குடிமகனை சென்றடைய நீண்ட காலம் ஆகும்.
 சர்வதேச சந்தையில், மூலப்பொருள்களின் விலை வீழ்ச்சியைக் காணும்போது, அதன் உடனடி பலன்களை மக்கள் அனுபவிக்க முடியாமல் தடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்ற குரல்கள் எழுகின்றன.
 மக்கள் பயன்படுத்தும் பெரும்பான்மையான உபயோகப் பொருள்களின் விலையில் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பது பெட்ரோல், டீசல் செலவுதான். கடந்த காலங்களில், விலைவாசி, வடக்கு நோக்கி செங்குத்தாக உயர்ந்ததற்கு முக்கியக் காரணம், ஒரு பீப்பாய்க்கு 140 டாலர் வரை உயர்ந்த கச்சா எண்ணெய் விலைதான். அதே கச்சாய் எண்ணெய் விலை தற்போது 30 டாலருக்கு கிடைக்கும்போது, உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலையை அதே சதவீதத்தில் குறைத்திருந்தால், விலைவாசி ஓரளவு குறைந்திருக்கும்.
 பணவீக்கம் குறைந்துவிட்டது என்று புள்ளிவிவரங்கள் பறை சாற்றினாலும், அதன் தாக்கம், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலையில் பிரதிபலிக்கவில்லை. ஒவ்வொரு குடிமகனும், தன் வருமானத்தில் அன்றாட தேவைகளுக்கான செலவுகள் மற்றும் பல கட்டங்களில் வசூலிக்கப்படும் வரிகள் நீங்கலாக, எஞ்சியவற்றை சேமிக்க முயல்கிறான். செலவுகளும், வரிகளும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவனுடைய சேமிப்பு பறிக்கப்பட்டு, அவன் கடனாளியாகிறான்.
 சமீப காலங்களில் நிகழ்ந்த விலைவாசி உயர்வு அளவுக்கு, சாதாரண குடிமக்களின் வருமானம் உயரவில்லை. இதனால், வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கும் சக்தியை அவர்கள் இழக்கின்றனர். அதன் நேரடி விளைவாக, பொருள்களின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு, நாட்டின் மொத்த தொழில் உற்பத்தி குறைகிறது. உற்பத்தி குறைந்தால், வேலை வாய்ப்புகள் குறைந்து, இளைஞர்களிடையே மன விரக்தி தலை தூக்குகிறது.
 வேலைவாய்ப்பில்லாத படித்த இளைஞர்கள், நாட்டுக்கு எதிரான சில தீவிரவாத இயக்கங்களுக்குள், விட்டில் பூச்சிகளாக சிக்குகின்றனர். நாட்டில், பல்வேறு தரப்பினருக்கு, வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் திட்டங்களை அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவித்து, அவைகளை செவ்வனே செயல்படுத்தும் வழிமுறைகளை வகுத்து, அதன் பலன்களைத் தொடர்ந்து கண்காணிக்கவேண்டும்.
 நிதிநிலை அறிக்கையில் அவ்வப்போது அறிவிக்கப்படும் பல திட்டங்கள் ஏட்டளவில் நின்றுவிடுகின்றன. சாதாரண குடிமகனின் அன்றாட வாழ்வின் தரத்தை மேம்படுத்த முயலாத எந்த திட்டமும், முழுமை பெறாத திட்டங்களாகவே கருதப்படும். ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும், முந்தைய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், செயல்பாட்டு விவரங்கள், வளர்ச்சி மற்றும் அந்த திட்டம் எந்த வகையில் அடித்தட்டு மக்களுக்குப் பயனளித்தன போன்ற விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
 வருமான வரியை முழுமையாக செலுத்துபவர்கள், மாதச் சம்பளக்காரர்கள்தான். அவர்களின் மாதச் சம்பளத்திலிருந்து நேரடியாக வரி பிடிக்கப்பட்டு விடுவதால், அதிக வசூல் செலவில்லாமல், அந்த வருமானம் அரசு கஜானாவை சென்றடைகிறது. இந்த வர்க்கத்தினரின் சந்தை செலவுகள்தான், பல உற்பத்திப் பொருள்களின் விற்பனைக்கு காரணமாகின்றன.
 சமீப காலங்களில் பொருளாதாரத்தைப் பீடித்த பண வீக்க நோயால், பணத்தின் மதிப்பு குறைந்து, மக்களிடம் தங்கும் உபரி பணம் வெகுவாகக் குறைந்து விட்டது. இந்த காரணங்களால், வருமான வரி விலக்குத் தொகையை சில ஆயிரங்களில் உயர்த்துவதற்கு பதிலாக, குறைந்த பட்சம் 4 லட்சம் ரூபாய் வரை உயர்த்துவதற்கான அவசியம் தற்போது நிச்சயம் ஏற்பட்டிருக்கிறது.
 மக்களின் வங்கி மற்றும் பிற அரசு சார்ந்த நிதி நிறுவனங்கள் மூலமான சேமிப்பு நாட்டு திட்டங்களுக்கு ஒரு நல்ல மூலதனமாகும். இந்த சேமிப்புகள், சேமிப்புக் கணக்கு மற்றும் வைப்பு நிதிகளில் மக்களால் முதலீடு செய்யப்படுகின்றன.
 வங்கி சேமிப்புக் கணக்குகளில் சேரும் வட்டி வருமானத்திற்கு தற்போது அளிக்கப்பட்டிருக்கும் 10,000 ரூபாய் விலக்கு, பண மதிப்பு குறைபாட்டின் அளவை கணக்கில் கொண்டு, கணிசமாக உயர்த்தப்படவேண்டும். வைப்பு நிதி முதலீடுகளுக்கு தற்போது, இந்த விலக்கு கிடையாது. இது தவறான அணுகுமுறையாகும். எனவே, வைப்பு நிதி மீது ஈட்டப்படும் வட்டிக்கும், கணிசமான அளவில் விலக்கு அளிக்கவேண்டும். இந்த செயல்பாடுகள், சேமிப்புப் பழக்கத்திற்கு ஒரு ஊக்க காரணியாக அமையும்.
 கடந்த நாலு வருடங்களில், கல்விச் செலவு, குறைந்த பட்சம் ஐந்து மடங்காக உயர்ந்து விட்டது. கல்விச் செலவுகளுக்கான விலக்கு வரம்பு 80 (c)-யோடு இணைக்கப்பட்டிருக்கிறது. மற்ற செலவுகளோடு சேர்க்கப்படாமல், தனிப் பிரிவின் கீழ், இது தொகுதிப்படுத்தப்படவேண்டும். இந்த பிரிவின் கீழ், பெண் குழந்தைகளுக்கான கல்விச் செலவு வரம்பு, மற்றவர்களைவிட இரு மடங்காக உயர்த்தப்பட வேண்டும்.
 இந்தச் சலுகைகள், பொதுவாக, நாட்டின் எதிர்கால வளங்களான குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், பிரத்யேகமாக பெண் குழந்தைகளின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் சாதனமாக பயன்படும். வெளிநாட்டு கல்விச் செலவுகளுக்கு தற்போது இந்த வரி விலக்கு கிடையாது. வெளிநாடுகளில் படித்துவிட்டு, தாயகம் திரும்பினால், அந்த செலவுகளின் ஒரு பகுதிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டால், அது இளைஞர்களின் திறமை நாட்டுக்கு பயன்படுவதை ஊக்குவிக்கும்.
 மருத்துவச் செலவுகளின் அளவீடுகள் பெரிதும் அதிகரித்துவிட்ட நிலையில், 60 வயது நிரம்பிய மூத்த குடிமகன்களின் வருமான வரி விலக்கு அளவீடும் 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்படவேண்டும். நடுத்தர மக்கள், சொந்த வீடு கட்டுவதற்கான செலவுகள் பல மடங்கு அதிகரித்துவிட்ட சூழ்நிலையில், வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படும் வீட்டுக்கடனுக்கான வட்டியின் அளவு, உயர்த்தப்படவேண்டும். இதனால், வீட்டுக் கட்டுமானத் துறையும் வளர்ச்சி அடையும்.
 தேர்தல் நெருங்கும் தருணங்களில் மட்டும், வாக்குகளைக் கவர, விவசாயக் கடன்களை ரத்து செய்வது போன்ற செயல்பாடுகளைத் தவிர்த்து, விவசாயிகளின் நலனில் எப்பொழுதும் அக்கறை செலுத்தும் திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும். விவசாயக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை வெகுவாக குறைத்தால், விவசாயிகளின் பொருளாதார சுமை குறைந்து, கடனை திருப்பிச் செலுத்துவது எளிதாகும்.
 வரி வசூலிப்பு வழிமுறைகள் பலப்படுத்தப்பட்டு, அந்த துறையில் ஊழலை அறவே ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். சமீபத்தில், நிதிநிலை அறிக்கை சம்பந்தமாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் கவனமாக பரிசீலிக்கப்பட்டு, அவைகளில் பொருத்தமான திட்டங்கள் உடனடியாக அமல் படுத்தப்படவேண்டும்.
 நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு, நாட்டின் சேமிப்பு மற்றும் கல்வி வளம், வேலை வாய்ப்புகள், விவசாயிகளின் நலன்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் திட்டங்களை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கைதான் இந்தியப் பொருளாதாரத்தை, சீராக முன்னிழுத்துச் செல்லும் வல்லமை படைத்தது ஆகும்.

சாதாரண குடிமகனின் அன்றாட வாழ்வின் தரத்தை மேம்படுத்த முயலாத எந்த திட்டமும், முழுமை பெறாத திட்டங்களாகவே கருதப்படும்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு

சிரி... சிரி...

அசத்தல்...

ஸ்டார்ட் அப்

கோலிவுட்

SCROLL FOR NEXT