முகப்பு
கட்டுரைகள்

அடிப்படையில் எங்கே கோளாறு?

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்? என்பது தமிழ்த் திரைப் படத்தில் ஒரு பாடல்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:34 PM
பகிர்:

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்? என்பது தமிழ்த் திரைப் படத்தில் ஒரு பாடல்.
 நமது நாட்டின் தட்ப வெப்ப சூழ்நிலைகளும் நிலவளம், நீர்வளம் ஆகியவையின் சிறப்புகளும் வேளாண்மைக்கு உகந்ததாக உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
 இதன் காரணமாகவே வள்ளுவப் பெருந்தகை "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்' என்றும், பயிரிடப்படாமல் தரிசாக நிலங்கள் விடப்பட்டால் "இலம்என்று அசை இருப்பாரைக் காணின் நிலம்என்னும் நல்லாள் நகும்' என்று இடித்தும் கூறியுள்ளார்.
 பிற நாடுகளை ஒப்பிடும்போது, குறிப்பாக ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் ஏற்படும் எரிமலை, நிலநடுக்கங்கள் போன்ற இயற்கை இடர்ப்பாடுகள் நமது நாட்டில் இல்லை. மாறாக பயிரிடப்படாமல் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாக இருப்பதைக் கண்கூடாகக் காணலாம்.
 உழவுத் தொழிலில் தேவையான அளவு வருவாய் ஈட்ட முடியாமல் அனேக இடங்கள் "ரியல் எஸ்டேட்' சுரண்டல்காரர்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவதை யாராலும் தடுக்க இயலவில்லை.
 விவசாயக் கடன், மானிய விலையில் உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள், இலவச மின்சாரம், வேளாண் காப்பீடு திட்டம் என்று மத்திய அரசும் மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு அவர்களைக் காப்பாற்ற முயன்றும் ஆண்டுதோறும் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பதைப் பார்க்கிறோம்.
 எனில், அடிப்படையில் எங்கே கோளாறு இருக்கிறது என்று அறியமுடியாமல் இருக்கின்றனர் ஆட்சியாளர்கள்.
 நாட்டின் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே போவதால் உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றின் தேவையும் கூடிக்கொண்டே போவதைத் தடுக்க இயலாது. ஒரு புறம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள், மற்றொரு புறம் உணவு தானியப் பற்றாக்குறை. ஏனிந்த முரண்பாடு?
 நமது பிரதமர் "இந்தியாவில் தயார் செய்' என்று முழக்கமிடுவதை ஆலைத் தயாரிப்புகளுக்கு மட்டுமே கூறுகிறார் என்று அமைச்சர் பெருமக்கள் தவறாகப் புரிந்து கொண்டனர் என்று எண்ணுகிறேன்.
 சமீபத்தில் வெளிவந்த செய்தியைப் படித்தவுடன் இதயத்தில் சுளீர் என்ற ஒரு வேதனையை உணர்ந்தேன். அது என்ன செய்தி? படித்துப் பாருங்கள்.
 "தானிய உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிரிக்காவில் முதலீடு செய்ய வேண்டும்' என்ற தலைப்பில் "தானியங்கள், எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் முன்வரவேண்டும்' என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன்சிங் அழைப்பு விடுத்தார்.
 "அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் உணவு தானியங்களின் உற்பத்தி குறைந்துள்ளதன் தாக்கம் அதிகம் உள்ளது. உணவு தானியங்களுக்கும் எண்ணெய் வித்துக்களுக்கும் பிற நாடுகளையே இந்தியா சார்ந்திருக்கிறது. ÷ஆண்டொன்றுக்கு சுமார் 50 லட்சம் டன் தானியங்களை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இதனால் அரசுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க, ஆப்பிரிக்க நாடுகளில் வேளாண் துறைகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.
 அவ்வாறு முதலீடு செய்யும் பட்சத்தில் அங்கு உணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து அவற்றை இந்தியாவுக்கு மலிவு விலையில் கொண்டு வர முடியும்'. இதுதான் அந்த செய்தி.
 இது பற்றி நாம் சற்று சிந்திப்போம். இந்தியாவில் தயாரிப்போம் என்ற நமது பிரதமரின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு இந்த யோசனை முற்றிலும் முரண்பாடாகத் தெரியவில்லையா?
 இந்த அறிவிப்பை சற்று மாற்றி, நேரடி அன்னிய முதலீட்டைக் கூவிக்கூவி அழைக்கும் நமது அரசு, விநியோக வணிகத்தில் நமது பாரம்பரிய வணிகர்களின் வாழ்வாதாரத்தை முடக்கவும் செய்வதை விடுத்து, எங்கள் நாட்டில் வேளாண்மை செய்திட முன்வாருங்கள் என்று அழைத்து நமது நாட்டில் தரிசாகக் கிடக்கும் நிலங்களில் உணவு தானியங்களையும் எண்ணெய் வித்துக்களையும் பயிரிடச் செய்யலாமே.
 அவ்வாறு செய்தால், நமது விவசாயிகளும் நவீன சாகுபடி யுக்தியைப் பயன்படுத்த முன்வருவர். நாட்டின் உற்பத்தி பல மடங்கு உயரும்.
 தற்போது நமது மக்களின் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் பாமாயில் இறக்குமதியை முழுமையாக நிறுத்த இயலும். வெளிநாடுகளிலிருந்து பருப்பை இறக்குமதி செய்யவேண்டும் என்ற நிலை உருவாகாது அல்லவா?
 பனைமரத்தின் பயன்களை இக்கால இளைஞர்கள் சரிவர அறிந்திடாவிடினும் முதியோர்கள் பலரும் இது குறித்து அறிவார்கள் என்று எண்ணுகிறேன்.
 சீனி அல்லது அஸ்கா என்று அழைக்கப்படும் சர்க்கரை எல்லா வகையிலும் நமது ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கக்கூடியது என்று பலமுறை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். எனினும், நாம் அதைப் பயன்படுத்திப் பழகி விட்டோம்.
 ஒரு காலத்தில் கிலோ சீனி ஒரு ரூபாய் விற்ற காலத்தில் அதைவிட மிகக்குறைவான விலையில் கருப்பட்டியும் வெல்லமும் கிடைத்தன. ஆனால், இன்று சீனியை விட பலமடங்கு விலையில் கூட தூய்மையான கருப்பட்டி கிடைப்பதில்லை.
 மிகவும் கொடுமை என்னவென்றால், சீனியை வாங்கி அதில் சாயத்தையும் வாசனைப் பொருளையும் கலந்து கருப்பட்டி என்று விற்பனை செய்யும் அவலம் நம் நாட்டில் உள்ளது.
 காரணம் இரண்டு. ஒன்று, நாகரிகம் கருதி கருப்பட்டி மற்றும் வெல்லம் பயன்பாட்டைக் குறைத்துவிட்டு சீனியை உபயோகிக்கப் பழகி விட்டோம். இரண்டாவது, கருப்பட்டி மற்றும் வெல்லம் உற்பத்திக்குத் தேவையான பனைமரங்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைந்து விட்டது.
 ஒரு சிறந்த யோசனை யாதெனில், தங்க நாற்கரச் சாலை போன்று நாடு முழுவதும் நான்கு மற்றும் ஆறு வழிச் சாலைகளுக்கு நடுவே உள்ள தடுப்புப் பகுதியில் ஒரு கிலோ மீட்டருக்கு நான்கு பனை மரங்கள் நடப்பட்டால், நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பனைமரங்கள் வளர்ந்து நமது வருங்காலச் சந்ததிகளுக்காவது பயன் தரும் என்பது திண்ணம்.
 

முழு கட்டுரையைப் படிக்க →