கட்டுரைகள்

தேவை முழு மதுவிலக்கு

முழு மது விலக்கு என்பது ஒருபோதும் சாத்தியமாகாது என்பதே பல பெரிய மனிதர்கள், அரசியல்வாதிகள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோரின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு திரைப்படத்தில் "மதுவை ஒழிப்போம், மதியை வளர்ப்போம்' எனும் கோஷத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

ஜோதிர்லதா கிரிஜா

முழு மது விலக்கு என்பது ஒருபோதும் சாத்தியமாகாது என்பதே பல பெரிய மனிதர்கள், அரசியல்வாதிகள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோரின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு திரைப்படத்தில் "மதுவை ஒழிப்போம், மதியை வளர்ப்போம்' எனும் கோஷத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அமரர் ராஜாஜி 1930-களின் இறுதியில் (சென்னை ராஜதானியின் முதன்மை அமைச்சராக இருந்தபோது) மது விலக்கை அமல்படுத்தினார். அதனால் வரக்கூடிய வருமான இழப்பைச் சரிக்கட்ட விற்பனை வரியையும் அமலுக்குக் கொண்டுவந்தார். இன்றைய நிலை என்ன? மது விலக்கு போய்விட்டது, ஆனால் விற்பனை வரி மட்டும் நிற்கிறது.

ராஜாஜியின் பூரண மதுவிலக்கு வெறும் பகல் கனவு என்று அன்றும் கூடப் பலரும் கூறினார்கள். இதன் விளைவு கள்ளச் சாராயத்தில் தான் முடியும் என்றார்கள். அதைக் குடித்துவிட்டுக் குடிகாரர்கள் இறப்பார்கள் என்று சொன்னர்கள்.

அதற்கு ராஜாஜி "கள்ளச் சாராயத்தைக் குடித்துவிட்டுச் செத்தாலும் சாவேனே தவிர, சாராயம் குடிப்பதை ஒருபோதும் நிறுத்த மாட்டேன் என்று சொல்லும் சிலருக்காக நாம் மதுவிலக்கை அமல் படுத்தாமல் இருக்கக் கூடாது' என்றார்.

ராஜாஜி இன்னொன்றும் சொன்னார். சாராயத்தில் நல்ல சாராயம், கெட்ட சாராயம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. அது தீமை பயப்பது. எனவே அதை ஒழித்தே ஆக வேண்டும் என்றார்.

தொடக்கத்தில் கொஞ்சமாய்க் குடிக்க முற்படுபவர்களும் கூட நாளடைவில் மொடாக் குடியர்களாக ஆகிவிடுவார்கள் என்பதே அவரது இந்தக் கூற்றுக்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும். குடிப்பது தனி மனித உரிமை என்றும் சில பிரபலங்கள் வாதாடியதுண்டு.

தனிமனித உரிமை என்கிற பெயரில் தன் பலவீனங்களுக்குத் தீனி போடும் எதையும் மனிதர்கள் கொண்டுவருவார்கள்தான். ஒரு தனி மனிதனின் பலவீனங்களை மற்றவர் மறுதலித்தல் பண்பாடு ஆகாது என்பது அவர்களது வாதமாக இருந்து வருகிறது. இருக்கட்டும். ஆனால் இந்த தனிமனிதனின் பலவீனங்கள் என்பது எது வரையில்? அவனது பலவீனங்கள் அவனோடு நிற்கிற வரையில்தான்.

குடும்பச் செலவுக்குப் பணம் கொடுத்த பின் குடித்து விட்டு, யாருக்கும் தொந்தரவு தராமல் ஒரு மூலையில் அவன் விழுந்து கிடந்தால் விட்டு விடலாம். ஆனால், குடித்துத் தன் உடம்பைத் தானே கெடுத்துக்கொண்டு வீட்டில் உள்ள மனைவிக்கும் அல்லவா தொல்லை தருகிறான்.

அது மட்டுமா? தன் வருவாய் முழுவதையும் குடியில் தீர்த்து விட்டு, மனைவியின் வருவாயையும் பிடுங்கிச் சென்று அன்றோ டாஸ்மாக் கடையில் பாழாக்குகிறான். நல்ல சாராயம் பருகுகிறவர்கள் சிறுகச் சிறுக நோயுற்றுச் சாகிறார்கள். கள்ளச் சாராயம் பருகுகிறவர்களோ உடனுக்குடனேயே சாகிறார்கள்.

"அப்படியாச்சும் செத்துத் தொலையட்டுமேங்க, நெதமும் அடிக்கிறானேங்க, அவனால எம்மாந் தொந்தரவு? அவனும் ஒரு சல்லிக் காசு கூடத் தர்றது கெடையாது. நான் சம்பாரிக்கிறதையும் சாராயக் கடையிலே வுடுறான். நானும் பசங்களும் சோறு தின்ன வாணாவா? பசங்க படிக்க வாணாவா? அவனைப் பாத்துப் பசங்க கெட்டுப் போயிருவாங்களோன்னு கவலையாயிருக்குது' என்கிறார் ஒரு பணிப்பெண்.

இதே மனப்பான்மைதான் அனைத்துக் குடிகாரர்களின் மனைவிமார்களிடமும் நிலவுகிறது. ஒரு மனிதன் கள்ளச் சாராயத்தைக் குடித்து விட்டு, அற்பாயுசில் சாவதற்கும், அவன் நல்ல சாராயத்தைத் தொடர்ந்து குடித்துத் தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் நீண்டகாலம் தொல்லை கொடுப்பதற்குமிடையே வித்தியாசம் இருக்கிறதல்லவா?

எந்தப் பகுதியில் கள்ளச் சாராயம் காய்சசப்பட்டுப் புழக்கத்திலும் விடப்படுகிறதோ, அந்தப் பகுதியின் காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் இன்ன பிற அதிகாரிகள் ஓர் ஆண்டுக்குப் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று சட்டம் இயற்றப்பட்டால் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவது தொண்ணூறு விழுக்காடு நின்றுவிடும்.

காவல் துறை அறியாத கள்ளச் சாராயமோ போதை மருந்து விற்பனையோ இல்லை. பணியிட மாற்றம் ஒரு தண்டனையா? பணியிடை நீக்கமோ, பணி நீக்கமோதான் தண்டனையாக இருக்க வேண்டும். அப்படி ஒரு சட்டம் வந்தால்தான் அச்சம் வரும்.

சங்கிலிப் பறிப்புகள் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் நடப்பதற்கும், பறிப்போரில் பலரும் இளைஞர்களாக - அதிலும், இவர்களில் பெரும்பாலோர் கல்லூரி மாணவர்களாக இருப்பதற்கும் - இவர்கள் குடிகாரர்கள் என்பதே காரணம்.

நடுத்தர வயதில் உள்ள ஆண்கள், ஒன்று தாங்களே சம்பாதிப்பவர்களாக இருக்கிறார்கள். இன்றேல், சம்பாதிக்கிற மனைவியிட மிருந்து பணம் பிடுங்குகிறவர்களாக இருக்கிறார்கள்.

எனவே இவ்விளைஞர்கள் குடிப்பதன் பொருட்டே இத்தகைய திருட்டுகளிலும், சங்கிலிப் பறிப்புகளிலும் ஈடுபடுகிறார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது. இவர்களை திருத்தாவிட்டால் நாளடைவில் இவர்கள் பெரும் கொள்ளையர்களாக மாறக்கூடும்.

காப்பி, தேநீர் குடிப்பது போல் சாராய வகைகளைக் குடிப்பது என்பது இத்தலைமுறை இளைஞர்களிடம் பழக்கமாகிவிட்டது. வரப்போகும் தலைமுறையினரையேனும் காக்க நினைக்கும் பொறுப்பு இருந்தால் முழு மதுவிலக்கை நாம் அமல்படுத்துவோம்.

எந்த ஒரு தீங்கையும் முற்றாக ஒழிக்க இயலாதுதான். அப்படி ஒழிக்க முடியவில்லை என்பதற்காக அதை மேலும் மேலும் வளர விடுவது அறிவுடைமையாகுமா? சமுதாயத்தை ஒட்டு மொத்தமாய்க் கெடுக்கும் தீமைகளைக் கட்டுப்பாட்டிலேனும் வைக்க வேண்டாமா?

ஜோதிர்லதா கிரிஜா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

கொடைக்கானலில் கபடிப் போட்டி

பெங்களூரு - நாா்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா!

SCROLL FOR NEXT