தனக்கே உரித்த இயல்பின்படி மூத்த அண்ணன் மனப்பான்மையுடன் இந்தியாவைக் கண்டித்திருக்கிறது அமெரிக்கா. அந்நாட்டின் செனட்டர்கள் எனப்படும் 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கண்டனக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள் (பிப். 25).
மதம் சார்ந்த வன்முறை இந்தியாவில் நிலவுவதாகக் கூறி, அதைக் கண்டித்து நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேன்டும் என்று அதில் அறிவுரை கூறியுள்ளார்கள்.
ஆனால், பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தான் அடைக்கலம் அளித்து வருவதைக் கண்டித்து அந்நாட்டு அதிபருக்கு இவர்களில் எவரும் எந்தக் கண்டனக் கடிதமும் எழுதியதாகத் தெரியவில்லை.
"நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுவது போல் நடி' என்கிற பாணியில் எப்போதாவது அமெரிக்க அரசு பாகிஸ்தானை மென்மையாய்க் கண்டிப்பதோடு சரி. மென்மேலும், அந்நாட்டின் தீவிரவாதத்துக்குத் துணை போகும் முறையில் ஆயுதங்களை அந்நாட்டுக்கு அளித்து வருவதில் மட்டும் குறைச்சல் இல்லை.
சில நாள்களுக்கு முன்னர் பசுவைக் கொன்றதாகக் கூறி ஓர் அப்பாவியைச் சில வன்முறையாளர்கள் அடித்தே கொன்ற மோசமான தாத்ரி நிகழ்வுக்காக இந்தியா தலைகுனிந்துதான் ஆக வேண்டும். ஆனால், அதுபோன்ற ஓரிரு நிகழ்வுகளின் அடிப்படையில், ஒட்டுமொத்த இந்தியாவிலும் சகிப்புத்தன்மையற்று இந்துக்கள் நடந்து கொள்வது போல அமெரிக்கா அங்கலாய்ப்பது விந்தையாக உள்ளது.
127 கோடி மக்கள் வாழும் ஒரு நாட்டில் இப்படி ஓரிரு நிகழ்வுகள் நடப்பதை பூதக் கண்ணாடி கொண்டு பெரிதாய்க் காட்டி இந்தியப் பிரதமருக்குக் கண்டனக் கடிதம் எழுத முனைந்த அமெரிக்காவே உண்மையில் கண்டனத்துக்கு உரியது.
அனைத்து மதங்களிலும் இந்து மதமே அதிக அளவில் சகிப்புத்தன்மையும், பிற மதங்களுடன் வம்புக்குப் போகாத மனப்பான்மையும் படைத்த மதமாகும். இது வரலாற்று உண்மை. எம்மதமும் சம்மதமே என்பதே இந்துமதக் கோட்பாடுகளில் தலையாயது. வன்முறையாலோ, பிற மதத்து ஏழைகளுக்குப் பணம் கொடுத்தோ, ஆசை காட்டியோ அவர்களைத் தன் மதத்துக்கு இழுக்காத மதம் இந்து மதமே.
இந்து மதம் கிறிஸ்தவ மத போதகர்களால் முச்சந்திகளில் சாடப்பட்டது கண்டு, அது சரிதானா என்பதைக் கண்டறிய காந்தி அடிகள் தம் இள வயதில் அனைத்து மத நூல்களையும் படித்தார். இந்து மதத்தில் குறைகள் இருப்பின் அதை விட்டு நீங்கும் எண்ணமும் அவருக்கு இருந்தது. ஆனால், அவற்றையெல்லாம் நடுநிலையோடு படித்த பின்னர், இந்துவாகவே நீடிப்பது எனும் முடிவுக்கு அவர் வந்தார்.
அதற்கு அவர் கூறிய காரணம், இந்து மதமே அனைத்து மதங்களிடையே அதிக அளவில் சகிப்பும், பிற மதங்களைச் சாடாததோடு அவற்றின் மீது மதிப்பும், பிற மதத்தினரைத் தன்னுடையற்கு இழுக்காத பெரும்போக்கும் உள்ள மதம் என்பதாகும். அந்த நிலை இன்றளவும் நம் நாட்டில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
எனவே, ஓரிரு மோசமான நிகழ்வுகளின் அடிப்படையில் ஏதோ இந்துக்களில் பெரும்பாலோர் சகிப்பற்றவர்களாக இருப்பது போலவும், அவர்களை பிரதமர் மோடி கண்டிப்பதில்லை என்பது போலவும் அமெரிக்க செனட்டர்கள் குரல் கொடுப்பது அபத்தம்.
"2020-ஆம் ஆண்டுக்குள், ஆசிய மக்கள் அனைவரையும் கிறிஸ்தவர்களாக்குவதே வாடிகனின் குறிக்கோள்' என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ள போப்பாண்டவருக்கு இப்படி ஒரு கண்டனக் கடிதத்தை அனுப்ப அமெரிக்கா துணிந்ததுண்டா? இந்தியாவில் கிறிஸ்தவ அமைப்புகள் ஓசைப்படாமல் செய்துவரும் மதமாற்ற நடவடிக்கைகள் அமெரிக்கா அறியாதவையா?
பாகிஸ்தானை எடுத்துக்கொண்டால், அங்கே அமைச்சரவையிலோ, பிற உயர் பதவிகளிலோ உள்ள ஓர் இந்துவையாவது அமெரிக்காவால் காட்ட முடியுமா? அதேசமயம், இந்திய நாட்டில் எத்தனை முஸ்லிம்கள் உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள் என்பதை அமெரிக்கர்களால் எண்ண முடியுமா?
அமெரிக்காவில் ஆங்காங்கு இன்னமும் நிறவெறி நீடித்து வருகிறதே? அங்கே சில ஆண்டுகளுக்கு முன் "கத்ரீனா' புயல் வீசியபோது கறுப்பினத்தினர் வாழ்ந்த பகுதிகளை அமெரிக்க அரசு அலட்சியம் செய்ததே?
வெள்ளை இனத்தவருக்கான இழப்பீடுகளை விரைந்து கொடுத்து ஆவன செய்த அமெரிக்கா, கறுப்பினத்தவர் வாழ்ந்த பகுதிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்து, அவர்களின் கண்டனத்துக்கு ஆளாயிற்றே?
வலைத்தளம் சென்று பார்த்தால் இன்றும் கூட அங்கே உள்ள கறுப்பு இனத்தவர் புறக்கணிக்கப்படுவது பற்றிய, படித்த ஆப்பிரிக்க இனத்தினரின் கட்டுரைகளைக் காணலாமே?
அண்மையில், அமெரிக்காவின் நடுத்தெரு ஒன்றில் ஓர் அப்பாவி ஆப்பிரிக்கர், அமெரிக்க காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டாரே, அதன் அடிப்படையில், அமெரிக்கா முழுவதிலும் கறுப்பர் இனம் மீது அமெரிக்கா வெறுப்புக் காட்டுகிறது என்று நாம் குறை கூறினால் அந்நாடு அதை ஏற்குமா?
கண்ணாடி வீட்டில் வசிப்பவர்கள் பிறரின் வீடுகளின் மீது கல்லெறியலாமா? பிற நாட்டினரைக் கண்டிக்க முற்படுவதற்கு முன், அமெரிக்கா தன்னைத் தானே சோதித்துக் கொள்ளட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.