ஆங்கிலேயர் வகுத்த அரசியல் சாசனத்தின் மொழியாக்கப் பதிப்புகளுக்கு நம் பாமர மக்களைப் பொறுப்பு ஆக்கக் கூடாது.
நாட்டுப்பற்று தேசப்பற்று-இரண்டும் ஒன்று அல்ல. நாடு என்பது வரைபடம். தேசம் என்பது உறைவிடம். இந்திய நாடு எல்லைகள் கொண்டது. பாரத தேசம் பரந்துபட்டது.
ஒருவரை நாட்டை விட்டுத் துரத்துவது எளிது. அதற்கு வெறும் சட்டம் அல்லது அதிகாரம் போதும். ஆனால், தேசத்தை விட்டு விரட்டுவது இயலாது. அன்னிய தேசத்தின் அடையாளங்களோடு இங்கே ஒட்டிக்கொண்டு இருப்பவர்களும் அன்னியர்களே. நாட்டின் எல்லைப் பாதுகாப்பிற்கு,ராணுவம் போதும். தேசத்தைக் காப்பதற்கு உள்ளத்தின் பாதுகாப்பு முக்கியம்.
தேசியக் கொடியை வெறுமனே நாட்டுக்கொடி என்று சொல்வது கிடையாது. வானில், விண்வெளியில் பறக்கும்போது தேசியக்கொடி ஒரு முக்கிய அடையாளம். டாக்டர் கலாம் ஆலோசனைப்படி "சந்திரயான்' சுமந்து சென்ற "நிலா மோதுகலன்' நம் தேசியக் கொடிச் சின்னத்துடன் நிலாவில் இறங்கியது.
யூரி ககாரின் தொடங்கிய மனித விண்வெளிப் பயணத்தின் 55-ஆம் ஆண்டு விழாவை (12-4-2016) ஒட்டி ஒரு செய்தி.
18-9-2006 அன்று ரஷிய நாட்டு சோயுஸ் விண்கலனில், அமெரிக்காவின் "சர்வதேச விண்சுற்று நிலைய'த்திற்குச் சென்ற உலகின் முதல் சுற்றுலாப் பெண் பயணி அனுஷேஹ் அன்சாரி. அமெரிக்காவில் குடியேறிய ஈரானிய வீராங்கனை. ஆங்கிலம் பேச வராது.
அவர்தம் விண்வெளி உடையில் அமெரிக்க தேசியக் கொடியுடன், ஈரானியக் கொடியையும் தரித்துக்கொள்ள விழைந்தார். அது 1979-ஆம் ஆண்டின், இசுலாமியப் புரட்சிக் கொடியினை ஒத்திருப்பதாக, சில அமெரிக்க ஊடகங்கள் அரசியலாக்கி விட்டனவாம். தம் செயல்பாட்டில் எந்தவித உலக அரசியலும் இல்லை என்று அன்சாரியுடன் அவரது கணவரும் வாக்குமூலம் அளித்தனர். "விண்வெளியில் இருந்து, இந்தப் பூமியைக் காணும்போது எழும் உலகளாவிய மானிடக் கண்ணோட்டமே எனது பயணக் குறிக்கோள்' என்றார் அன்சாரி.
ஏதாயினும் அமெரிக்க, ரஷிய அதிகாரிகளின் வற்புறுத்தலால் பயணத்தின்போது, ஈரானிய தேசியச் சின்னம் இடம்பெறாத, வெறும் "மூவர்ண'க் கொடியை அணிந்தார் என்பதே உண்மை.
பாருங்களேன், எல்லைகள் அற்ற விண்வெளியில் கூட வேற்று நாட்டுக் கொடிகள் அங்கீகரிக்கப்படுவது இல்லை. ஆனால், நம் நாட்டிலோ அன்னியக் கொடிகளுடன் வீதி உலா வரலாம், ஆதரவு ஊர்வலம் நடத்தலாம். அத்தனை சகிப்புத்தன்மை கொண்டது பாரத தேசம்.
ஆங்கிலத்தில் "நாட்டுப்பற்று' ("பாட்ரியாட்டிசம்') என்பது தந்தை சார்ந்தது. நம் நாட்டில் அது தாய் சார்ந்தது.
கல்வி, பொருளாதாரம் சமூக அந்தஸ்து ஆகிய நிலைகளில் நேர்மையே மேல். குடிப்பிறப்பு எதுவானாலும்,
இத்துறைகளில் உயர்ந்த பிறகு, எந்தத் தனிமனிதனும் தன்னைத்தான் கீழானவன் என்றும், தன்சாதி
கீழ்சாதி என்றும், தன் தாய் தாழ்ந்தவள் என்றும் இழிப்பது ஏன்?
சுய தாழ்ச்சி சொல்லல் பாவம்
அல்லவா?
கடவுச்சீட்டு, "நாட்டின்' எல்லையைக் கடக்க உதவும். "தேச'த்தின் எல்லையை மீற அது அனுமதிக்காது. இன்றைக்கு இந்திய நாட்டை விட்டு வெளிநாட்டில் குடியேறியவர்களில் பலரும் இத்தகைய மீறலில்
ஈடுபட்டு வருகிறார்கள் என்று கருதத் தோன்றுகிறது.
இந்த மண்ணில் விளைந்த தானியங்களை உண்டு வளர்ந்தவர்கள்; அதையே தாய்ப்பால் ஆகவும் உறிஞ்சியவர்கள்; உயிர் மட்டுமல்ல, உடைமைகளும் தந்து கஷ்டப்பட்ட பெற்றோர் செலவில் படித்தவர்கள் செயல் என்ன? அன்னிய தேசத்தில் அமர்ந்துகொண்டு, "எங்கள் தாய் அசுத்தம் ஆனவள், எங்கள் நாடு அசிங்கம்' என்று சொன்னால் அதுவும் தேசத் துரோகம்.
அரசு வரிப் பணத்தில் படித்தவர்கள் இன்று அன்னிய நாடுகளில் அடிமைகளாகப் பணியாற்றுவானேன்? அவர்கள் தம் வருமானத்தில் பாதியையேனும் இந்தியப் பெற்றோர்க்கும், தாம் படித்த இந்தியக் கல்விக்கூடங்களுக்கும் திருப்பி வழங்க முன்வர வேண்டும். இல்லை என்றால் அதுவே நாட்டைச் சுரண்டியதற்குச் சமம் தானே? இந்திய அரசு இத்தகைய தேசத் துரோகிகளுக்கும் தனிச்சட்டம் கொண்டு வரலாம்.
மார்ச் 21 அன்று இனக் காழ்ப்புணர்ச்சி அகற்றும் சர்வதேச தினமாக அறிவிப்பாகி உள்ளது. 1960-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ஷார்ப்வில்லி எனும் இடத்தில் 69 கறுப்பர்கள் கொல்லப்பட்ட தினம் இது. 2001-ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் மேயி ஜெமிசன்,
12-9-1992 அன்று "எண்டவர்' விண்வெளி ஓடத்தில் விண்வெளி சென்ற முதல் கறுப்பினப் பெண்மணி. வேதிப் பொறியியலில் இளநிலைப் பட்டம் பெற்றவர். ""ஒரு கறுப்பர் இனப் பெண் பொறியியலில் படித்துப் பட்டம் பெறுவது என்பது அமெரிக்காவில் பெரிய விஷயம். இனப் பிரச்னை இருக்கவே செய்யும். ஆனால், அப்படி எல்லாம் இல்லை என்கிற மாதிரி சில பேராசிரியர்கள் பாசாங்கு செய்வார்கள். நான் ஒரு கேள்வி கேட்டால், மலை மாதிரி வாயடைத்து நிற்பார்கள். அதுவே ஓர் அமெரிக்க மாணவர் கேட்டால் "ஓ, நன்கு கூர்ந்து கவனித்திருக்கிறாய்' என்று பாராட்டுவானேன்?'' என்கிறார்.
விண்பயணத்திற்கு ஜெமிசனின் முதல் விண்ணப்பம் நாசாவினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மீண்டும் 1987-ஆம் ஆண்டு அனுப்பிய அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டதாம். 1992 செப்டம்பர் 12 அன்று "எண்டவர்' விண்வெளிப் பயணத்தின்போது, முதன்முதலாகப் பூமியில் கண்டது, தாம் பிறந்த சிக்காகோ நகரைத்தான் என்கிறார் ஜெமிசன். ""சிறுமியாய் இருந்தபோது விண்ணில் பறந்துசெல்வேன்'' என்று கண்ட கனா பலித்ததாகவும் மகிழ்ச்சித் தெரிவித்தார்.
ஜெமிசன் தமது அன்னையின் பெயரில் "தோரத்தி ஜெமிசன் சாதனை அறக்கட்டளை'யை நிறுவினார். ""நான் அறிந்தவரை, பெற்றோர்கள் தாம் சிறந்த விஞ்ஞானிகள், அவர்கள் தாம் குழந்தைகளிடம் அதிகமான கேள்விகள் கேட்டு கற்பிக்கிறார்கள்'' என்கிறார் ஜெமிசன். அந்த அறக்கட்டளையின் ஒரு முக்கியத் திட்டம்-"நாம் பங்கிடும் பூமி'. அதில் பங்கெடுக்கும் 12-16 வயதுக்கு உள்பட்ட சர்வதேச மாணவர்களிடம் உலகளாவிய பிரச்னைகள் குறித்த சவால்களுக்குத் தீர்வு தேடும் முகாம்கள் அமைப்பதுதான் நோக்கம்.
அமெரிக்காவில் பல்வேறு கல்லூரிகளில், ""இந்தப் பூமியை எத்தனை பேர்
சேர்ந்தால் சுற்றி வளைத்துக் கட்டிப் பிடிக்க முடியும்?'' ""2030-ஆம் ஆண்டு பொது மக்களிடையே பரபரப்பான தகவல்கள் எவையாக இருக்கும்?'' என்றெல்லாம் வாரக் கணக்கில் விவாத அரங்குகள் நடந்தேறின.
தொழில்நுட்பங்களுக்கும், சமூக அறிவியல் துறைகளுக்கும் இடையிலான உறவு குறித்து அதிகம் சிந்திப்பவர் ஜெமிசன். ""தொழில்நுட்பம் என்றால் அதில் சிலிக்கான் இடம்பெற வேண்டும் என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். பென்சிலும் தொழில்நுட்பம்தான். ஒரு மொழியுமே ஒரு தொழில்நுட்பம்தான். ஒவ்வொரு தொழில்நுட்பமும் ஒவ்வொரு குறிப்பிட்ட தொழிலுக்காகக் கையாளப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட தொழில் என்பது நெருப்பில் தொடங்கி சூரிய மின்சாரம் வரை அனைத்தும்தான்'' என்கிறார்.
1999-ஆம் ஆண்டு "உயிரி உணர்வி நிலையம்' என்ற அமைப்பினை உருவாக்கினார். மனிதர்களுக்கு அவ்வப்போது "அதீத எதிர்பார்ப்பு', ஒற்றைத் தலைவலி, கூட்டணித் தலைவலி மற்றும் மன அழுத்தக் கோளாறுகள் எழுவது இயற்கை. இது குறித்த உடலியல் ரீதியிலான அவஸ்தைகளுக்குத் தன்னிச்சையாகச் சிகிச்சை வழங்கும் உத்தியை இவர் கண்டுபிடித்தார். (இன்று அதனைத் தேர்தலுக்கு முன்னதாகவே தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் இலவசமாக வினியோகம் செய்யலாம் என்கிறீர்களா?)
1996-ஆம் ஆண்டு இவரது வாழ்விலும் ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தது.
இனக் காழ்ப்புணர்வால் நாசௌ வளைகுடா எனும் இடத்தில் ஹென்றி ஹியுஜஸ் என்னும் டெக்சாஸ் காவல்துறை அதிகாரி, ஜெமிசனிடம் உடல் ரீதியாகவும், மன
ரீதியாகவும் தகாத முறையில் நடந்து கொண்டாராம். சாலையில் வாகனத்தை வரம்பு மீறிய வேகத்தில் ஓட்டி, சட்ட
விரோதமாகத் திருப்பினார் என்பது குற்றச்சாட்டு. வழக்கம்போல, முறையான விசாரணை இன்றியே தரையில் படுக்கவைத்து கையில் விலங்கு மாட்டினார் அந்த அதிகாரி.
அமெரிக்காவில் நம் நாட்டின் இந்தியத் தூதரக அதிகாரிகள், தம் பெயரன்-
பெயர்த்திக் குழந்தைகளைக் காணச் சென்ற மூத்த குடிமக்கள், தலைப்பாகை வைத்ததாலேயே தாக்கப்படும் இந்தியர்கள் என்று பலருக்கு எத்தனையோ அசம்பாவிதங்கள் நடந்தாலும் நமக்குத் தேவை "டாலர்' எனும் கடன் பத்திரம் மட்டும்தானோ?
ஒரு நூற்றாண்டிற்கு முன்னால், அமெரிக்காவில் 1908-ஆம் ஆண்டு ஏறத்தாழ 15,000 பெண்கள் அணி திரண்டு நியூயார்க் நகரில் ஊர்வலமாகச் சென்றனர். குறைந்த காலப் பணிநேரம், போதிய சம்பளம், தேர்தல் வாக்குரிமைகள் வேண்டிப் போராடினர். முதலாவது உலகப் போருக்கு எதிராக, உலக சமாதானத்திற்காக, 1913-ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதி ஞாயிறன்று, பெண்கள் பன்னாட்டு மகளிர் தினம் கொண்டாடினர். அரசியல், பொருளாதாரம், சமூக அந்தஸ்து ஆகியவற்றில் சம உரிமை கோரும் போராட்டம்.
1914 மார்ச் 8 அன்று லண்டன் நகரில் த்ராஃபல்கர் சதுக்கத்தில் பெண்ணுரிமை மாநாடு நடத்தக் கிளம்பிய போது மகளிர் பேரணித் தலைவி சில்வியா பாங்க்ரஷ்ட் கைது ஆனார். ஏதாயினும், 1975-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மார்ச் 8}ஆம் தேதியினை உலக மகளிர் தினமாக அறிவித்தது. இந்த ஆண்டின் மையக்கரு: "2030-ஆம் ஆண்டிற்குள் உலகம் 50-50: பாலின சமத்துவம் நோக்கி' என்பது.
ஆண் ஆகட்டும், பெண் ஆகட்டும். ஆலயம் தொழுவது சாலவும் நன்று. விக்கிரகத்தைத் தொட்டால்தான் வாழ்வில் விக்கினம் தீரும் என்று சாலையில் புரண்டு ஒரு போராட்டம். மனதாரத் தொழுதால் வாராத தெய்வம் உண்டோ? "பக்தி-புத்தி' முற்றியதை என்ன சொல்ல? எந்த மதத்திலும் கோயிலுக்குள் நுழையத் தடை இல்லை. தொழத் தடையா, தொடத் தடையா என்பதில்தான் சித்திரைப் பட்டிமன்றம் சூடுபிடிக்கிறது.
அன்பு ஒன்றே வாழ்வின் அடிநாதம் என்றால் பாலினம், ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, சித்தாந்தம் என்ற அனைத்தையும் கலைத்துவிட்டு ஒன்றாய் வாழ நாம் ஏன் தயாராகவில்லை?
எப்படியோ, பொருளாதாரம் சார்ந்து முன்னேறிய நாடுகள் சில இருக்கலாம். ஆனால், சகிப்புத்தன்மையுடன் அருளாதாரம் சார்ந்த உலகில் ஒரே தேசம் பாரதம் என்று பெயர் சொல்லுவோம்.
இன்று இனக் காழ்ப்புணர்ச்சி அகற்றும் சர்வதேச தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.