கட்டுரைகள்

வாக்காளர்களும் வேட்பாளர்களும்

தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு 15-ஆவது பொதுத் தேர்தல் வந்துவிட்டது. 5.50 கோடி வாக்காளர்கள், 234 சட்டப் பேரவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.

சா.கந்தசாமி

தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு 15-ஆவது பொதுத் தேர்தல் வந்துவிட்டது. 5.50 கோடி வாக்காளர்கள், 234 சட்டப் பேரவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். அதில் பெரும்பான்மை கொண்ட கட்சித் தலைவரையோ - கூட்டணித் தலைவரையோ ஆளுநர் ஆட்சியமைக்க உரிமை வழங்குகிறார். அவர்தான் மாநில முதல்வர். அது ஒரு மரபாக நடைபெற்று வந்தது.
 ஆனால், பழையன கழிவதும் புதியன புகுவதும் எப்பொழுதும் நடைபெறுவது என்பதால், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பாகவே முதல்வர் வேட்பாளரை அறிவித்துக்கொண்டு விட்டன. அது மக்களிடம் பேராதரவு பெறவும், வெற்றி பெறவும் ஒரு காரணியாக அமையும் என்று நம்புகிறார்கள்.
 பாட்டாளி மக்கள் கட்சி அதன் இளைஞர் அணித் தலைவர், அன்புமணி ராமதாûஸ முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடுகிறது. மக்கள் நலக் கூட்டணியில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முதல்வர் வேட்பாளர் என்று கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ பிரகடனப்படுத்தி விட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி, ஆறாவது முறைக்காக முதல்வர் வேட்பாளர் என்று கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறிவிட்டார்.
 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் முதல்வர் வேட்பாளர் என்று இன்னொருவர் அறிவிக்க முடியாது. எனவே, அவரே மக்களுக்காகவே நான் முதல்வர் என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டு தேர்தல் பரப்புரைகள் செய்து வருகிறார்.
 நாம் தமிழர் கட்சி தேர்தலில் பெரும்பான்மை பெற்றால் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்வர். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக பிரதமரை அறிவித்துக்கொண்டு தேர்தல் களம் கண்ட பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டிற்கு முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே போட்டியிடுகிறது. ஆனாலும், அக்கட்சியில் சிலர் முதல்வர் கனவோடு களத்தில் இருக்கிறார்கள்.
 தமிழ்நாட்டில் ஒரே ஒரு முதல்வர் பதவிதான் இருக்கிறது. எனவே, கட்சிக்குள் இருந்தும், வெளியில் இருந்தும் இன்னொருவர் போட்டிக்கு வந்துவிடக்கூடாது என்ற கவனத்தோடு முதல்வர் வேட்பாளர் என்று சொல்லிக்கொண்டு போட்டியிடுகிறார்கள். அவர்கள் முதல்வரானால் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று இந்தியாவிலேயே முதல் மாநிலமாக்கிவிடுவோம். ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி பிரகாசமான வாழ்க்கையைக் கொடுத்து விடுவோம். நாங்கள் சொல்வதைத்தான் செய்வோம் என்பது இல்லை. சொல்லாததையும் செய்வோம் என்று சூளுரைக்கிறார்கள்.
 தமிழ்நாட்டை ஆண்ட முதல்வரும், ஆளும் முதல்வரும் சொன்னபடி இலவசமாக - விலையில்லாமல் அரிசி, புடவை, வேட்டி கொடுத்திருக்கிறார்கள். வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கி உள்ளார்கள். மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள், பாடப் புத்தகங்கள், காலணிகள், சீருடைகள் கொடுத்திருக்கிறார்கள்.
 ஜனநாயக நாட்டில் சமத்துவத்தை ஏற்படுத்த, வறிய மக்களுக்கு வாழ்வு கொடுக்க, அரசு பாடுபடுவது பாராட்ட வேண்டியது. சமூகநலத் திட்டங்கள் தேவைப்படுவோர்க்குக் கிடைக்கக் கூடியதாக இருக்கும் வரையில் அதன் மீது விமர்சனம் ஏதும் இருப்பதில்லை. பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவு வழங்கும் திட்டத்தை யாரும் குறை கூறவில்லை. சொல்லி செய்தவைகள் பாராட்டும்படியாகவே இருக்கின்றன.
 முதல்வர்கள் சொல்லாமல் செய்தவைகளை சொல்லியே ஆக வேண்டும். ஏனெனில், அவை மாநில மக்கள் வாழ்க்கையையும், மாநிலத்தையும் வெகுவாகவே பாதித்திருக்கின்றன.
 குறிப்பாக மதுபானக் கடைகளைத் திறந்து குடிக்கும் கொடிய பழக்கத்திற்கு மக்களை அடிமையாக்கியது; ஆற்று மணலை அடியோடு சுரண்டி நீர் ஆதாரத்தைக் குலைத்தது; கனிம வளத்தை வாணிபப் பொருளாக்கியது; அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகளைப் பாழ்படுத்தி தனியார் பள்ளிகள், மருத்துவமனைகள் பெருகவும் பணம் சம்பாதிக்கவும் வழிகாட்டியது; வேலை வாய்ப்புகளைப் பெருக்காமல் விட்டது; நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதில் இருந்து பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் வரையில் பணம் பார்த்தது; லஞ்சம், ஊழல் என்பது ஒரு பிரச்னையே இல்லை என்ற மனோநிலையை சமூகத்தில் ஏற்படுத்தியது; எளிமையான வாழ்க்கை முறையை நிந்திக்கவும் ஆடம்பரத்தைக் கொண்டாடவும் வழி செய்து கொடுத்தது என்று பட்டியல் இடலாம்.
 அரசியலுக்கு வருவது; அரசியல்வாதியாவது என்பது ஊழியமோ, சமூக சேவையோ இல்லை. அது கஷ்டப்படாமல் பணம் சம்பாதிக்கக் கூடியது. அதிகாரம் செலுத்த அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது என்பதற்காகவே பலரும் அரசியலுக்கு வருகிறார்கள்.
 அரசியல் தலைவர்களிடம் பணிந்து, ஜாதி, சமயத்தைச் சொல்லி, பணம் கொடுத்து, குடும்பப் பாரம்பரியத்தைக் காட்டி வேட்பாளராகிவிட்டவர்கள் மேடையேறி "வாக்காளப் பெருமக்களே' என்று விளித்து புகழ்ந்துரைக்கிறார்கள். அது பொய்யுரை ஆனாலும், தேர்தல் முடியும் வரையில் வாக்காளர்கள் பெருமக்கள்தான்.
 அவர்களிடம் இருக்கும் வாக்கு அதிகமான சக்தி பெற்றது. அதிகாரம் கொடுக்கக் கூடியது; அதனைப் பல வாக்காளர்கள் அறியவில்லை என்பதற்காக இல்லையென்றாகிவிடாது.
 வாக்காளப் பெருமக்களே! வெறும் புகழ்ச்சிக்கும் பாராட்டிற்கும் இரையாகி விடாதீர்கள். கைவசம் இருக்கும் வாக்கு தங்கத்திற்கு நிகரானது. அதனைத் தகுதியானவர்களுக்கே வழங்க வேண்டும். அதில் முதல் அம்சம் நோட்டு வாங்கிக்கொண்டு, பிரியாணி பொட்டலம் பெற்றுக்கொண்டு, பட்டுப்புடவை, தங்கக்காசு, மோதிரம், மூக்குத்தி, கொலுசு வாங்கிக்கொண்டு வாக்களித்து விடாதீர்கள். அப்படிச் செய்வது ஐந்தாண்டு காலத்திற்கான பாதிப்பு மட்டுமல்ல; பல ஆண்டுகளுக்கான பாதிப்பாகும்.
 தேர்தல் என்பது மகிழ்ச்சி தரும் திருவிழா இல்லை. அதில் கேளிக்கை, கொண்டாட்டம், ஆடல், பாடல் என்பனவற்றுக்கு இடம் கிடையாது. நன்றாக யோசித்து, தன்னலமும் சமூக நலமும் சார்ந்து செயல்படுவதாகும்.
 கட்சியால்தான் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். முதல்வரையும் அறிவித்துக்கொண்டு களம் காண்கிறார்கள். எனவே, வேட்பாளருக்குத் தேர்வு என்பது இல்லாமல் போய்விடுகிறது. இருப்பவர்களில் இருந்துதான் தேர்வு செய்ய வேண்டிய நிலைமை வந்து விடுகிறது.
 இதுதான் ஜனநாயகம். ஜனநாயகத்தில் பல நிறைகள் இருப்பதுபோல குறைகளும் இருக்கின்றன. ஒவ்வொரு படியாகத்தான் எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது. எனவே, முழு திருப்தி இல்லையென்றால் நோட்டாவில் வாக்களிக்கலாம்.
 நோட்டா எதிர்ப்பின் குரல். வாக்காளர்களின் மனசாட்சி. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில்கூட நோட்டா இருக்கிறது. நோட்டாவில் பதிவாகும் வாக்குகளில் இருந்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பாடம் கற்றுக் கொள்வார்கள்.
 உண்மையான தேர்தல் அறிக்கையை - செயல்படுத்தக்கூடிய அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள். வேட்பாளர்கள் குறைந்தபட்சமாக நேர்மையாக நடந்து கொள்வார்கள் என்று நோட்டா ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.
 நோட்டாவிற்குப் பலமான எதிர்ப்புக் குரல் இருக்கிறது. நோட்டாவில் போடப்படும் வாக்குக்கு மதிப்பு இல்லை. அது வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி பெற்றது கிடையாது. எனவே, நோட்டா பலனற்றது. தேவையே இல்லாதது என்று சொல்லப்படுகிறது.
 ஜனநாயகத்தில் தேர்தல் என்பதுதான் உச்சம். அரசியல் அதிகாரம் என்பதே தேர்தல் வழியாகவே வருகிறது. அது பொதுமக்கள் பங்களிப்பு பெற்று இருக்க வேண்டும். எத்தனைக்கு எத்தனை மக்கள் வாக்களிக்கிறார்களோ அந்த அளவிற்கு ஜனநாயகம் இருக்கிறது.
 எனவே, மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று பல நாடுகளில் பிரசாரம் செய்தார்கள். அரசு விடுமுறையை சம்பளத்துடன் அளித்தது. அதிகமான நேரம் வாக்களிக்கக் கொடுக்கப்பட்டது. வீட்டின் அருகில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. ஆனால், ஏராளமான மக்கள் வாக்களிக்க முன்வரவில்லை.
 ஜனநாயக ஆதரவாளர்கள், ஆட்சியாளர்கள் வாக்களிப்பதை கட்டாயமாக்கலாம்; வாக்களிக்காதவர்களுக்குத் தண்டனை கொடுக்கலாம் என்றார்கள். சில நாடுகளில் கட்டாய வாக்களிப்பு இருக்கிறது. ஆனால், பெரிய அளவில் தண்டனை கொடுப்பது இல்லை.
 ஏனெனில், வாக்களிப்பது அரசியல் கடமை இல்லை. அரசு வழங்கிய உரிமை. பயன்படுத்துவதும், பயன்படுத்தாமல் இருப்பதும் வாக்காளர்களின் உரிமை. அவர்கள் சுதந்திரத்தைப் பறிக்க, தண்டிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. ஆனால், பிரசாரம் செய்து வாக்களிக்க வைப்பதுதான் சரியான வழி என்று பெருமளவில் பிரசாரம் நடைபெறுகிறது.
 உண்மையான அரசியல் கட்சிகள், நேர்மையான வேட்பாளர்கள் என்று வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் வாக்களிக்கப் போகிறார்கள். தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தொகுதியில் தலை காட்டும் வேட்பாளர், வெளிப்படைத் தன்மையற்ற நிர்வாகம், லஞ்சம் ஊழலில் சிக்கியிருக்கும் அரசு மீது வாக்காளர்கள் நம்பிக்கை இழப்பதும் - வாக்களிக்காமல் இருப்பதும் புரிந்துகொள்ளக்கூடியதுதான்.
 வாக்களிக்காத மக்கள் மீது குறை சொல்லும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் முதலில் தங்களை ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பேரணிகள், மாநாடுகள் வெற்று அறிக்கைகள் கொண்டு மக்கள் மனம் கவர்ந்துவிட முடியாது என்பதையே தேர்தல் சொல்லிக் கொண்டிருக்கிறது.
 
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

கொடைக்கானலில் கபடிப் போட்டி

பெங்களூரு - நாா்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா!

SCROLL FOR NEXT