முகப்பு
கட்டுரைகள்

வாடகை வேட்பாளர்கள்

ஆங்கிலத்தில் 'Surrogate' என்ற வார்த்தைக்கு மாற்று அல்லது பதிலி என்று பொருள். ஆரம்பத்தில் இங்கிலாந்து நாட்டில் அமைச்சர்களாக

பகிர்:

ஆங்கிலத்தில் 'Surrogate' என்ற வார்த்தைக்கு மாற்று அல்லது பதிலி என்று பொருள். ஆரம்பத்தில் இங்கிலாந்து நாட்டில் அமைச்சர்களாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அவர்களின் மனைவிமார்கள் தொகுதியில் மாற்று அல்லது பிராக்ஸி அல்லது பதலி உறுப்பினர்களாக செயல்பட்டதால் தான் இச்சொல் உபயோகத்துக்கு வந்தது.
 தற்காலத்தில் "சரகேட் மதர்' என்ற சொல் வழக்கில் உள்ளது. அதாவது, பலனுக்காக அடுத்தவனுடைய குழந்தைக்கு தாய்மை அடைய ஒப்புக் கொள்ளும் பெண்ணை "சரகேட் மதர்' என்று அழைக்கின்றோம். இது தமிழில் வாடகைத் தாய் எனப்படுகிறது. இன்று அரசியலில் வாடகை வேட்பாளர்கள் வந்து விட்டார்கள்.
 ஒவ்வொரு கட்சியிலும் அதிகார மையத்துக்கு நெருக்கமானவர்கள் காசு வாங்கிக் கொண்டு அறிமுகமில்லாதவர்களை அறிமுகம் இல்லாத தொகுதியில் நிறுத்தும் கூத்து நடக்கிறது. அமெரிக்காவில் "பிரைமரி எலக்ஷன்' எனப்படும் முறையில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது உள்ளுர் கட்சிக்காரர்கள் தான். தலைமை அல்ல; இப்படி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கும் முறை வந்தால் மட்டுமே இது போன்ற கூத்துகள் முடிவுக்கு வரும்.
 படிப்பறிவில்லாத வாக்காளர்கள் நிறைந்த இந்தியாவில் கட்சிக்கு வாக்களிக்க மஞ்சள் பெட்டி, சிகப்புப் பெட்டி, நீலப் பெட்டி என ஆதியில் இருந்தது. பெட்டியில் ஓட்டு போடும் போது வாக்கின் ரகசியத் தன்மை காப்பாற்றப்படாததால் சின்னங்கள் முளைத்தன. கட்சி சின்னங்கள், கட்சிகளின் "டிரேட் மார்க்'-ஆக மாறின.
 ஆதியில் காங்கிரஸுக்கு நுகத்தடி பூட்டிய இரட்டை காளை சின்னம் இருந்தது. பின்னர், இந்திரா காந்தி காலத்தில் கட்சி உடைந்த பொழுது பசுவும் கன்றுமாக மாறி இன்று கை சின்னமாக பரிணாமம் அடைந்துள்ளது. தி.மு.க.வின் உதய சூரியனும் அ.தி.மு.க.வின் இரட்டை இலையும் தமிழக அரசியலில் அழியாச் சின்னங்கள்.
 சின்னங்கள் முக்கியம் என்றாலும் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜா, ஜெ அணி என்று கட்சி உடைந்த பொழுது இரட்டை இலையை ஞாபகப்படுத்தும் ஜா.வின் இரட்டை புறா ஒரு சீட்டுக்கூட ஜெயிக்கவில்லை. சம்பந்தம் இல்லாத ஜெ.யின் சேவல் சின்னம் காங்கிரஸின் கை சின்னத்தைவிட ஒரு சீட்டு கூடுதலாக 29 சீட்டுகளை அள்ளியது.
 தேர்தல் சின்னங்களை, தேர்தல் சின்னங்கள் பதிவு மற்றும் வழங்கல் ஆணை 1968 தீர்மானிக்கிறது. அதனால்தான் அ.தி.மு.க. விற்கு கேரளத்தில் இரட்டை இலை கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் அடையாளமே இல்லாத சமாஜ்வாதி போட்டியிட்டதால் த.மா.கா. சைக்கிளைப் பறிகொடுத்து மக்கள் நல கூட்டணியில் சேர்ந்து தென்னந்தோப்பானது.
 ஜி.கே.வாசன் ஜெயலலிதாவுடன் கூட்டணி பேசும் போது குறைந்த சீட்டுகளை ஒதுக்குவதாக சொன்னதாலும், இரட்டை இலையில் நிற்க வேண்டுமென்று நிபந்தனை விதித்ததாலும் ஜெயலலிதாவின் கூட்டணியிலிருந்து விலகி விஜயகாந்தின் கூட்டணியில் ஐக்கியமானார். வாசன், கூட்டணிக்காக தன்னுடைய சின்னத்தைத் தியாகம் செய்ய தயாராக இல்லாதபோது, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பலர் தங்களுடைய கட்சி மற்றும் சின்னம் அனைத்தையும் வேறு கட்சியிடம் வெற்றி ஒன்றே குறிக்கோளாக கொண்டு அடமானம் வைக்கிறார்கள். அவர்கள் தான் வாடகை வேட்பாளர்கள்.
 கருப்பை சரியாக உள்ள பெண்ணிற்கு கணவனின் ஆண் உயிரணுக்கள் சரியில்லாத போது, மாற்று ஆணின் உயிரணுக்களைப் பெற்று உடலுறவு இல்லாமல் கர்ப்பமுறச் செய்து குழந்தை பெறுவது ஒருவகை வாடகைத்தாய் முறை.
 இன்றைக்கு ஒரு கட்சியின் உறுப்பினராக இருந்து கட்சியின் தலைமையை நெருங்கி தேர்தல் டிக்கெட் வாங்குவது கடினமாகி விட்டது. ஒவ்வொரு கட்சி தலைமையைச் சுற்றியும் ஒரு உள் வட்டம் இருப்பதால் அதைத் தாண்டி தலைமையை நெருங்குவது மிகவும் கடினமாகி விட்டது. அரசியலில் ஜெயிக்க சினிமாவில் நடிப்பது குறுக்கு வழி என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே சோ எழுதினார்.
 அப்படியானால், தேர்தலில் கட்சி சீட்டு பெறுவது எப்படி? ஜெயிக்கும் கூட்டணியில் இடம் பெறுவது எப்படி? இதற்கு தமிழக அரசியல்வாதிகள் கண்டுபிடித்த மாற்று தான் வாடகை வேட்பாளர்கள்.
 செல்வாக்காண அரசியல் கட்சியில் சேர்ந்து சீட் வாங்குவதை விட அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து சீட் வாங்குவது எளிதாகி விட்டது. பெரிய அரசியல் கட்சிகளும் வெற்றி என்ற ஒற்றை குறிக்கோளுக்காக எதையும் செய்யத் தயாராய் இருக்கிறார்கள்.
 தேர்தல் இரண்டு வகைப்படும், ஒருவர் ஒரு ஓட்டு கூடுதல் வாங்கியும் ஜெயிக்கலாம். ஒரு ஓட்டு இல்லாமலும் தோற்கலாம். சில நாடுகளில் மொத்த ஓட்டு சதவீதத்தை வைத்து மொத்தமாக வெற்றி-தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவில் முதல் முறை, வழக்கில் உள்ளது. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மணமுண்டு என அண்ணா சொன்னதை தவறாக புரிந்து கொண்டனர் தமிழக அரசியல்வாதிகள். மாற்றுக் கட்சி சின்னத்தில் நிற்பது தி.மு.க.வில் ஆரம்பிக்கப்பட்டது.
 ம.பொ.சி உதயசூரியனில் நின்றார். 1980-இல் நான் தென்காசியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டபோது தமிழகத்தில் இல்லாத, அப்போதைய பிரதமர் சரண்சிங்கின் மக்கள் கட்சிக்காக பிரதமர் சரண்சிங் கேட்க எம்.ஜி.ஆர் சீட்டு ஒதுக்க, சட்ட நாத கரையாளர் இரட்டை இலை சின்னத்தில் தென்காசியில் களம் இறங்கினார்.
 காங்கிரஸ் நண்பர்கள் இருவரின் கட்சி விரோத செயலால் 600 வாக்கு வித்தியாசத்தில் நான் தோற்றுப் போனேன். ஒரு கட்சி உறுப்பினர் மாற்றுக் கட்சி சின்னத்தில் நிற்பது சட்ட விரோதம் என தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் அப்போதே இருந்தது.
 தேர்தலில் தன்னை அ.தி.மு.க. வேட்பாளர் என்று வேட்பு மனு தாக்கல் செய்த கரையாளர் சட்டப் பேரவையில் தன்னை மக்கள் கட்சி உறுப்பினர் என்று பதிவு செய்து கொண்டார். இதை தான் என் தேர்தல் வழக்கில் கேள்வி ஆக்கினேன். கரையாளரின் தேர்தல் வெற்றி சட்டத்துக்குப் புறம்பானது என்று நான் வழக்குத் தொடர்ந்தேன். வேட்பாளர் படிவத்தில் பெயர், ஜாதி, நாடு, வயது, கட்சி மற்றும் வாக்காளர் விவரம் என ஐந்து தகவல்கள் சொல்ல வேண்டும்.
 மாநிலங்களவை உறுப்பினராக 30 வயது முடிந்திருக்க வேண்டும் என அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது. மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க.வின் சார்பாக வலம்புரி ஜான் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று மாநிலங்களவை சென்றார். அவருக்கு 30 வயது முடியவில்லை. அவர் தேர்தல் செல்லாது எனறு தொடரப்பட்ட வழக்கில் அவர் பதவி இழந்தார்.
 இந்தியர்கள் அனைவருக்கும் ஓட்டுரிமை வழங்குகிறது சட்டம். யார் வேண்டுமானாலும் ஓட்டு போடலாம் என்று சட்டம் இருந்தால், கூட்டத்திற்கு ஆள் கூட்டி வருவது போல் ஆளை கூட்டி வந்து ஜெயித்து விடலாம். ஆகவே, ஓட்டுரிமை உள்ளவர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திருக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று கூட சரி பார்க்காமல் காங்கிரஸ் கட்சியில் சீட்டு பெற்ற லால்குடியில் வெற்றி பெற்ற வெங்கடாசலம் உட்கட்சியின் பூசல் காரணமாக சந்தித்தது தேர்தல் வழக்கல்ல.
 வெங்கடாசலம் சட்டப் பேரவை உறுப்பினராக இருப்பதை எதிர்த்து, அரசியல் நிர்ணய சட்டப் பிரிவு 226-இன் கீழ் கோ - வாரண்டோ (என்ன அடிப்படையில் பதவியில் இருக்கிறீர்கள்) என ரிட் தாக்கல் செய்யப்பட்டு உயர்நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டது. பதவி இழந்த லால்குடி சட்டப் பேரவை உறுப்பினர் உச்சநீதிமன்றத்தை அணுகினார்.
 உச்சநீதிமன்றம் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக பொய் உரைத்து வேட்பு மனு தாக்கல் செய்த நபர் பதவியை இழக்க வேண்டும் என உத்தரவிட்டு சட்டப் பேரவையில் கலந்து கொண்ட ஒவ்வொரு நாளும் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இவ்வாறு வேட்பு மனுவில் சொல்லப்பட்ட பொய்கள் அம்பலப்படுத்தப்பட்டு தேர்தல் வெற்றிகள் ரத்து ஆகிவிட்டன.
 1980-இல் நான் தேர்தல் வழக்கு போட்டபோது, வெங்கடாசலத்தின் வழக்கைத் தவிர (அவ்வழக்கு 1985-இல் வந்தது), பிற அனைத்து வழக்குகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். மக்கள் கட்சி உறுப்பினர் என சட்டப் பேரவையில் பதிவு செய்து கொண்ட கரையாளர், தேர்தலில் அ.தி.மு.க. எனச் சொன்னது தவறு, மோசடி, சட்டத்தை ஏமாற்றுவது என வாதிட்டேன். திருவிளையாடல் நாகேஷ் "மன்னருக்கே விளங்கி விட்டது. உங்களுக்கு என்ன?' என்று சொன்னது போல், சென்னை உயர்நீதிமன்றம் அண்ணா தி.மு.க.வே ஒத்துக் கொண்ட போது உனக்கு என்ன என்று என் வழக்கைத் தள்ளுபடி செய்தது. அதன்பிறகு, இதுபற்றி நான் தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு எழுதி வந்தேன்.
 வடநாட்டு அரசியல், கட்சி தாவல்களால் கட்சி தாவல் சட்டம் கொண்டு வரப்பட்டது. இரட்டை இலையில் வெற்றி பெறுபவர்களும், உதயசூரியன் சின்னத்தில் வென்றவர்களும் சட்டப் பேரவையில் அ.தி.மு.க., தி.மு.க. என்று மட்டுமே அறியப்படுவர். வெளியே சமத்துவ மக்கள் கட்சி, குடியரசு கட்சி, மக்கள் தே.மு.தி.க. என்றாலும் சட்டப் பேரவையின் உள்ளே அ.தி.மு.க. அல்லது தி.மு.க. என உள்ளே-வெளியே ஆட்டம் போடப்போகிறார்கள். இதனால், பெரிய கட்சிகளின் பிடி இறுகி கட்சி தாவல் தடை சட்டத்தால் வாடகை வேட்பாளர்கள் இப்பொழுது கிடுக்கிப்பிடியில் இருக்கிறார்கள். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!
 
 கட்டுரையாளர்:
 வழக்குரைஞர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.