தமிழை, தமிழ்ச் சுவடிகளைக் கரையான்களும் செல்லுப் பூச்சிகளும் அரித்துத் தின்றதுண்டு. அதே நேரத்தில், தமிழும் சில தமிழறிஞர்களை அரித்துத் தின்றதுண்டு. அப்படித் தின்னப்பட்டவர்களில் ஒருவர், சென்னைக் கிறித்தவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் ச.த. சற்குணர்.
"சாகும்போது தமிழ்ப் படித்துச் சாக வேண்டும், என் சாம்பல் தமிழ் மணத்து வேக வேண்டும்' எனக் கனவு கண்டார், கரை கடந்து வாழ்ந்த தமிழ்ப்புலவர் ஒருவர்; அவர் ஈழத்துக் கவிஞர் சச்சிதானந்தம். ஆனால், பன்மொழிப் புலவர் ச.த. சற்குணர் சாகும்போது "புறநானூறு படித்துச் சாக வேண்டும் தன்னுடலைப் புறநானூறு புத்தகத்தோடு அடக்கம் செய்ய வேண்டும்' எனச் செப்பினார்.
திருநெல்வேலிச் சீமை தமிழுக்குக் காலங்கள் தோறும் செய்து வருகின்ற சீர்வரிசை, தாமிரபரணி தண்ணீரைக் காட்டிலும் சுவையானது. சிவஞானமுனிவர் எஸ். வையாபுரிப்பிள்ளை, எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை, கா. சுப்பிரமணியப்பிள்ளை, இரா.பி. சேதுப்பிள்ளை போன்றோரின் வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியவர், ச.த. சற்குணர். திருநெல்வேலி மாவட்டம், முதலூரில் சாமுவேல் சற்குணருக்கும் - ஞானப்பூ அம்மையாருக்கும் 25.05.1877-இல் மகனாகப் பிறந்தவர் ச. தருமராஜா சற்குணர்.
சா.த. சற்குணர் எனப் போட வேண்டியவர், சா என்பதில் ஓர் அமங்கலத் தொனி தொக்கி நிற்பதால், ச.த. சற்குணர் எனத் தம் பெயரை மாற்றி அமைத்துக் கொண்டார்.
சற்குணருக்குப் பின்னர் வாழ்ந்த இலக்கணப் பேரறிஞர் பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியும் முதலில் பி.சா.சு. எனச் சுருக்கிப் போட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு நெருக்கமான வாகீச கலாநிதி கி.வா. ஜெகந்நாதன், "பி.சா.சு. என்பதை யாராவது பிசாசு என அழைக்கக்கூடும், அதனை மாற்றிக் கொள்' எனச் சொல்லவே, பின்னர் சாஸ்திரி, தம் பெயரைப் பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி என மாற்றி அமைத்துக் கொண்டார்.
ச.த. சற்குணர் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தை முதற்பாடமாக எடுத்துக்கொண்டு இளங்கலை (பி.ஏ.) வகுப்பில் சேர்ந்தார். என்றாலும், கல்லூரியில் தமிழில் முதல் மாணவனாகத் தேறியதற்காகச் சேதுபதி பொற்பதக்கத்தைப் பெற்றார். அதே நேரத்தில், மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய தேர்விலும் முதற்பரிசைப் பெற்றார்.
கிறித்தவக் கல்லூரியில் படிக்கும்பொழுதே, தெலுங்கு, கன்னடம், மலையாளம், வடமொழியிலும் பாண்டித்தியம் பெற்றார். இவருக்குத் தமிழ்ப் பேராசிரியர்களாகத் திகழ்ந்தவர்கள் மறைமலையடிகள், பரிதிமாற் கலைஞர், கோபாலய்யர் போன்றவர்கள். சற்குணருடைய தந்தையார் சாமுவேல் சற்குணர், சங்க இலக்கியங்களையும், ஐம்பெரும் காப்பியங்களையும், லத்தீன், கிரேக்க மொழிகளையும் கற்ற பன்மொழிப் புலவர்.
சற்குணரின் தமிழறிவைக் கண்ட பிராட்டஸ்டண்ட் கிறித்தவர்கள், அவரை வேப்பேரி புனித பவுல் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக நியமித்தனர். தமிழ்ப் பாடங்களைக் கற்பிக்கும்போதே ஆழ்ந்த தமிழுணர்வையும் கவிதை எழுதும் ஆற்றலையும் மாணவர்கள் மத்தியில் உருவாக்கினார். தமிழாசிரியராக இருந்தாலும், தெலுங்கு, மலையாளம், வடமொழி, ஆங்கிலம் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் வராதபோது, அவ்வகுப்புகளையும் எடுக்கின்ற ஆற்றல் பெற்றவர் சற்குணர்.
ஞாயிற்றுக்கிழமைதோறும் புரசைவாக்கம் நகராண்மைப் பள்ளியில் வித்வான், மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டிதர் பட்டங்களுக்குத் தனிப்பட்ட (பிரைவேட்) முறையில், படிப்பவர்களுக்கு வகுப்புகளை நடத்தினார். ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயத்திற்குச் செல்வதைக் காட்டிலும், தமிழ்த்தொண்டு செய்வதையே, இறைவழிபாடாகக் கருதினார்.
Work is worship என்பது அவருடைய கொள்கை. 1925-இல் புரசைவாக்கத்தில் தென்னிந்தியத் தமிழ்க் கல்விச் சங்கத்தைத் தம் சொந்த செலவில் நிறுவி, விரும்பி வந்தோர்க்கெல்லாம் புறநானூற்றையும், கலித்தொகையையும், சீவக சிந்தாமணியையும் ஆய்ந்து தோய்ந்து கற்பிப்பார். இவருடைய தமிழ்ப் பேரறிவைக் கண்ட சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் அதிபர் மெஸ்டன், தம் கல்லூரியில் விரிவுரையாளராக ஆக்கினார்.
குடுமி வைத்து, அதற்குமேல் தலையில் வெள்ளிச்சரிகை இழைக்கப்பட்ட டர்பன் அணிந்து, பஞ்சகச்சத்தோடு வகுப்புக்கு வருவார். அதனைக் கண்ட பாதிரிமார்கள், நீவீர் ஏன் குடுமியை எடுக்கக்கூடாது என்று கேட்டனர். அதற்குச் சற்குணர், பரம்பரை பரம்பரையாக என் முன்னோர்கள் குடுமியோடுதான் திகழ்ந்தார்கள். அதனை நான் எடுக்கமாட்டேன் என்று வீராவேசத்தோடு சொன்னார். ÷தாம்பரத்தில் தம்முடைய வீட்டிற்குத் தமிழகம் எனப் பெயர் வைத்திருந்தார். சற்குணருடைய வாரிசுகள் இன்னும் அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். இவருடைய மாணாக்கர்களாகத் திகழ்ந்தவர்கள் மயிலை சீனி வேங்கடசாமி, அ.கி. பரந்தாமனார், நடேச நாயக்கர், அ.கு. ஆதித்தன், பண்டிட் நடேசனார், பிற்காலத்தில் அறநிலையத்துறை ஆணையராகத் திகழ்ந்த நரசிம்மன் போன்றோர்.
1906-ஆம் ஆண்டு சென்னைக் கிறித்தவக் கல்லூரி தமிழ்ப் பேரவைக்குச் சொற்பொழிவாற்ற வந்த பாண்டித்துரைத் தேவர், "நான் சற்குணரின் விடைத்தாளைத் திருத்துகின்ற பேறு பெற்றேன். அவருடைய இலக்கண அறிவைக் கண்டு வியந்தேன்' எனக் குறிப்பிட்டார்.
தமிழ் சொல்லிக் கொடுப்பதற்கு அவர் யாரிடத்திலும் ஒரு ரூபாய் கூடப் பெற்றதில்லை. பலர், குருகாணிக்கை செலுத்த வந்தபோதெல்லாம் தமிழை விற்கக்கூடாது என்று மறுதலித்திருக்கிறார். புறநானூற்றையும், கலித்தொகையையும், சீவக சிந்தாமணியையும் தம்முடைய கவசமாக அணிந்தவர். தமிழ்க்கடலில் பூத்த வலம்புரிச் சங்கல்லவோ சீவக சிந்தாமணி என்று அடிக்கடி சொல்லுவார்.
ச.த. சற்குணரின் மணிவிழா நிமித்தமாகத் தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா., நவசக்தியில் (18.09.36) ஒரு கட்டுரை எழுதினார். மகோமகோபாத்தியாய உ.வே.சா., ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் "சற்குணர் ஒரு நற்குணர்' எனும் தலைப்பில் பேசிய பேச்சுதான், நவசக்தியில் கட்டுரையாக வெளிவந்தது.
நான் சற்குணருடைய தந்தையார் சாமுவேல் சற்குணரையும் நன்கறிவேன். அவர் ஒரு பெரிய தமிழன்பர். நான் 45 ஆண்டுகளுக்கு முன் சீவக சிந்தாமணியை அச்சிட முயன்று கொண்டிருந்தபொழுது, எனக்குத் தோன்றாத் துணையாய் ஊக்கமளித்தவர். வாராவாரம் கடிதம் எழுதி எனக்கு அவ்வேலையில் உற்சாகம் உண்டாக்கினார். குலவிச்சைக் கல்லாமற் பாகம் படும் (பெற்றோர்களுடைய அறிவு பிள்ளைகளுக்குக் கற்பதற்கு முன்பேயே பாதியளவு வந்துவிடும்) என்பதற்கேற்ப சாமுவேலின் தமிழறிவு, சற்குணரிடத்தில் அமைந்து கிடக்கிறது.
பல பெரிய புலவர்கள் சங்க நூல்களின் பெயரையே அறிந்திருப்பர். சற்குணரோ சங்க நூல்களைப் பிழிந்து மாணவர்கள் மனத்தில் மறையாவண்ணம் பொழியும் ஆற்றலுடையவர். தாய்ப் பசுவைக் கண்ட கன்றுகள்போல் மாணவர்கள் அவரிடத்தில் ஓடுகின்றனர்.
இக்குணம் என் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடமும் இருந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரியில் என் தலைமையில் பேராசிரியர் சற்குணர் பேசினார். நான் புறநானூற்றில் என்னென்ன விஷயங்களைப் பற்றிப் பேசவேண்டுமென்று குறிப்பு எழுதி வைத்திருந்தேனோ, அக்குறிப்புகளையும் கடந்து அரிய பல விஷயங்களையும் அவர்கள் வெகு அழகாகவும், விரிவாகவும் பேசிவிட்டார்கள்.
இவர் பரம்பரையாகப் படித்த பெருங்குடியில் தோன்றியவர். சற்குணர் நிலத்தைப் போல பொறையும், மலையைப் போலக் கல்வி வளப்பமும், துலாக்கோல் போன்ற நடுவுநிலையையும் உடையவர் என்று தீர்ப்புரைபோல் டாக்டர் உ.வே.சா. தீட்டியிருக்கிறார்.
சற்குணர், சென்னை அரசின் பள்ளிப் பாடநூல் தேர்வுக்குழுத் தலைவராகவும், சென்னைப் பல்கலைக் கழகப் பாடத்திட்டக் குழு மற்றும் தமிழ்க்குழு உறுப்பினராகவும் திறம்படச் செயலாற்றியதைப் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை ஒரு சான்றின் மூலம் நிறுவுகிறார்.
"ஒருமுறை சற்குணரும் நானும் வேறு சில நண்பர்களும் பாடப் புத்தகத்தைத் தேர்வு செய்வதற்காகப் பரிசீலித்துக் கொண்டிருந்தோம். அக்குழுவிலிருந்து ஒரு தமிழறிஞர் தம்முடைய புத்தகத்தை முன்மொழிந்தார். உடனே சற்குணர் எழுந்து அப்புத்தகம் ஏற்கெனவே பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. அதனை மாணவர்கள் எல்லாரும் வெறுக்கிறார்கள் எனக் கண்டிப்பாகப் பேசிவிட்டார்.
மாணவர்களின் நலனிலும், கல்வியின் தரத்திலும் அவர் கொண்டிருந்த நம்பிக்கை, அந்நூலாசிரியரின் எதிரிலேயே அப்படிப் பேச வைத்ததைக் கண்டு நான் வியந்தேன்' எனப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை குறிப்பிட்டிருப்பது, சற்குணரின் மணிமகுடத்தில் பதித்த வைரமாக ஜொலிக்கின்றது.
வைணவ உரையாசிரியர் வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார், யான் இரண்டுமுறை சற்குணருடைய பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன். "இவர்கள் மாம்பழ உண்ணிப்போலப் பேரினால் மாத்திரம் சற்குணராகாமல் உள்ளும்புறமும் ஒத்த தூய்மை உடையவராய்த் தம்முடைய நாமதேயத்துக்கு ஏற்றவாறு ஒழுக்கம் வாய்ந்தவரென்று அறிந்துள்ளேன்' என மங்களாசாசனம் செய்ததுபோல் பல்லாண்டுப் பாடியிருக்கிறார்.
அறிவியல் அறிஞர் பெ.நா. அப்புசுவாமி, சற்குணரின் பேச்சுகளைக் கேட்டு, "சற்குணருடைய பிரசங்கத்தில் பேச்சு வெள்ளம் நம்மை அடித்துக்கொண்டு போய்விடாது. அகன்று விரிந்து மெதுவாய்ச் செல்லும் நதியின் போக்கைப் போலிருக்கும் அவருடைய பிரசங்கம். கரையிலிருந்து சாவகாசமாக அனுபவிக்கலாம். ஆழமும் உண்டு, அதனால் ஒதுங்கிக் கரையிலே நிற்போருக்கு நஷ்டமில்லை அல்லவா? நீந்தத் தெரிந்தால் இறங்கலாம். இறங்கி அனுபவிக்கலாம்' எனத் திறனாய்வு செய்வதுபோல் விமர்சித்திருக்கிறார்.
பன்மொழிப் புலவர் தெ.பொ.மீ., சற்குணரை நோக்கி, "ஐயா, தாங்கள் தமிழ் இலக்கியம் மட்டுமே தங்கள் மாணாக்கர்களுக்குக் கற்பிக்கிறீர்கள் என்று நினைத்திருந்தேன். இன்றுதான் தாங்கள் தேசிய இலக்கியத்தையும் குழைத்து ஊட்டுகிறீர்கள் என்பதை உணர்ந்தேன்,' என்றொரு பட்டயம் வழங்கியிருக்கிறார்.
சற்குணருடைய மணிவிழா 25.10.1937 அன்று சென்னை கோகலே அரங்கில் தமிழ்த் தாத்தா உ.வே.சா. தலைமையில் சீரோடும், சிறப்போடும் நடைபெற்றது. "சற்குணர் மலரும் சற்குணீயம்' எனும் பெயரில், தென்னிந்தியத் தமிழ்க் கல்விக் கழகம் ஒரு மலரையும் வெளியிட்டது. சற்குணர் தாமே "இலக்கண விளக்கம்' எனும் நூலையும், "தமிழ் இலக்கியத் தொகுதி' எனும் நூலையும் ஏற்கெனவே வெளியிட்டிருக்கிறார்கள்.
சற்குணர் மிகவும் இயல்பாகவும், எளிமையாகவும் இருப்பார். ஒருநாள் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, திரிதண்டம் என்பதற்குச் சரியான விளக்கம் அவருக்குத் தெரியவில்லை. உடனே தன்னுடைய சக பேராசிரியர் கோபாலய்யரை விரும்பிக் கேட்டு, அவரை அந்த வகுப்பிற்கு அனுப்பி விளக்கம் தரச் சொன்னாராம்.
சற்குணர் தம்முடைய 76-ஆவது வயதில் நோய்நொடியின்றி 23.12.1952 அன்று இயற்கை எய்தினார். அவர் தமது கடைசி மூச்சை விடுவதற்கு முன்பு கடைசியாக புறநானூறு கேட்க வேண்டும் என விரும்பினாராம். அப்போது அங்கு வந்த அவருடைய மாணவன், புறநானூற்றுப் பாடலைப் படிக்க அவருடைய ஆன்மா சாந்தி அடைந்ததாம். அவருடைய திருவுடல் பல்லாவரத்திலுள்ள புனித ஸ்டீபன் தேவாலயத்தில், அவர் விரும்பியவாறு புறநானூற்றுப் பிரதி ஒன்றை அவருடைய மார்பில் வைத்து அடக்கம் செய்யப்பெற்றது.
தருமராஜ சற்குணர்களால்தான் தமிழ் வாழ்கிறது. நாம் அதை உணரவில்லை. அவர்களையும் நினைவுகூர மறந்துவிட்டோம். சற்குணர் போன்ற நற்குணர்களை நாம் போற்ற மறந்ததால்தான், தமிழும் தளர்ந்து நலிந்து கொண்டிருக்கிறது.
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.