நடுப்பக்கக் கட்டுரைகள்

தேவை தேர்தல் சீர்திருத்தம்!

இன்று (12.4.2017) நடைபெறுவதாக இருந்த சென்னை ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

சா.கந்தசாமி

இன்று (12.4.2017) நடைபெறுவதாக இருந்த சென்னை ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதற்குத் தேர்தல் ஆணையம் சொன்ன காரணம், தேர்தலை நடத்த உகந்த சூழல் இல்லை என்பதுதான். வெளியில் சொல்ல முடியாத பல காரணங்கள் தேர்தல் ரத்து செய்யப்பட்டதில் இருக்கின்றன.
அதில் முதல் காரணம் பணம் தாராளமாகப் புழங்கியது. வாக்காளர்களுக்குப் புத்தம் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் நான்கைந்து கொடுத்து வாக்குகளை வாங்க முற்பட்டார்கள். அதற்கு உரிய ஆவணங்கள் இருக்கின்றன என்று பத்திரிகைகளில் செய்தி கசியவிடப்பட்டது.
தேர்தல் நாள் நெருங்க நெருங்க ஆர்.கே. நகரில் பணம் மழையாகக் கொட்டி வெள்ளமாகப் பிரவாகமெடுத்து ஓடியது. இதனைஊடகங்கள் படம் பிடித்து வெளி
யிட்டன.
ஆர்.கே. நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் மற்ற இடைத்தேர்தல் போல நடக்க வேண்டிய ஒன்றுதான். அத்தொகுதியில் 2001 முதல் 2016 தொடர்ச்சியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று வந்தது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டு முறை ஆர்.கே. நகரில் வெற்றி பெற்று இருக்கிறார். ஆனாலும் அத்தொகுதி அப்படியொன்றும் வளர்ச்சி பெற்று விடவில்லை. தேர்தலின்போது கொடுக்கப்பட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதி எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
அங்கு மீனவர்கள், துறைமுகத் தொழிலாளர்கள், கூலி வேலை செய்கிறவர்கள் போன்றோர் போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத குறுகலான சாலைகளில் சுகாதார கேடுகள் நிறைந்த சின்னஞ்சிறிய வீடுகளில் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை சென்னை பெருநகர மக்களோடு சேர்ப்பதுகூட கிடையாது. வட சென்னை வாசிகள் என்று புறந்தள்ளி வைத்திருக்கிறார்கள்.
வட சென்னையின் அடையாளமாக இருந்து வந்த ஆர்.கே. நகர், இந்த இடைத்தேர்தலால் போராட்டக்களமாகிவிட்டது. அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பதவிச் சண்டையில் சசிகலா தலைமையில் அம்மா அணியென்றும், ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் புரட்சித்தலைவி அம்மா அணியென்றும் இரண்டு அணிகள் பிரிந்துவிட்டன.
ஆனாலும் இருவருக்கும் அம்மாதான் தலைவி. அம்மாவின் உண்மையான வாரிசுகள் நாங்கள்தான் என்று இரு தரப்பினரும் பிரகடனப்படுத்திக் கொண்டு
தேர்தல் பிரசாரத்தில் இருக்கிறார்கள்.
பன்னீர்செல்வம் தன்னை முதல்வர் நாற்காலியில் இருந்து மிரட்டி கீழே இறங்க வைத்த சசிகலா அணியைப் பழிவாங்காமல் விட மாட்டேன் என்று நகரத்தைச் சுற்றி வருகிறார்.
பெரும்பான்மையான சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், தொண்டர்கள் ஆதரவு பெற்ற நாங்கள்தான் அம்மாவின் முப்பத்திரண்டு ஆண்டுகால விசுவாசிகள் என்று எதிர்த்தரப்பினர் சூளுரைக்கிறார்கள்.
ஜெயலலிதா தலைமை இல்லாமல் கலகலத்துப் போய் இருக்கும் அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருக்கும் அதிகாரத்திற்கான போட்டியில் உள்ளே நுழைந்து இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் விரைவில் சட்டப்பேரவைக்குத் தேர்தலைக் கொண்டு வந்து ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் கருதுகிறார்.
மூத்த அரசியல்வாதியான கருணாநிதி தீவிர அரசியலில் செயல்படாமல் இருக்கும்போது, தேர்தல் வெற்றி தன்னை தலைவராக்கிவிடும் என்பது அவர் கணிப்பாக இருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சி, ஊசியில் நூல் நுழைய இடம் தேடுவது மாதிரி தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும், கணிசமான எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்றால், கட்சி வளர்ச்சிப் பாதையில் போய்க் கொண்டு இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளத்தக்கதாக இருக்குமென்று நினைத்தது.
எல்லா அரசியல் கட்சிகளின் அபிலாஷைகளையும் தேர்தல் ஆணையம் சில மாதங்களுக்குத் தள்ளி வைத்திருக்கிறது. இடைத்தேர்தல் ரத்து என்பது முடிவான ரத்து கிடையாது. ஒரு சட்டப்பேரவைத் தொகுதியை ஆறு மாதத்திற்கு மேல் உறுப்பினரில்லாமல் காலியாக வைத்திருக்க முடியாது.
பணம் மழையாகப் பொழிகிறது; கலவரம் வெடிக்கிறது என்று சொல்லிக் கொண்டு மெத்தனமாக இருக்க இயலாது. தேர்தலை எப்படியும் நடத்தி முடிக்க வேண்டும் என்பது சட்டம்.
ஜனநாயக ஆட்சி என்பது மக்களின் வாக்களிப்பால் தீர்மானிக்கப்படுகிறது. தேர்தல் நடக்க இருந்த ஆர்.கே. நகரில் 2.62 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். பெரிய கட்சிகள், சிறிய கட்சிகள், சுயேச்சைகள் என்று 62 பேர் தேர்தல் களத்தில் இருந்தார்கள்.
ஒவ்வொருவரும் தாங்கள் வெற்றிக் கனியைப் பறிக்க கூட்டங்கள், பேரணிகளை நடத்தினார்கள். பரிசுப் பொருள்கள் வழங்கினார்கள். ரகசியமாகப் பணமும் கொடுத்தார்கள். பெரிய கட்சிகள் அதிகமாகப் பணம் கொடுத்தார்கள்.
ஒரு வாக்காளர் தன் ஒரு வாக்கிற்காக பல கட்சிகளிடம் இருந்து பத்தாயிரம் ரூபாய் வரையில் பெற்றார் என்று ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டின.
இவற்றையெல்லாம் கண்டு தேர்தல் ஆணையம் மிரண்டு போய்விட்டது. ஜனநாயகம் பணநாயகமாறிவிட்டநிலை அதனை வேகமாக செயல்பட வைத்தது. ஒரு கட்சிக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார்கள் என்று புகார்க்கு ஆளான தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டார்கள். பாதுகாப்பும் கண்காணிப்பும் கூடியது. ஆனாலும் பணப் பட்டுவாடா தாராளமாக நடை
பெற்றது.
எனவே தில்லியில் இருந்து தேர்தலுக்காக நுண் பார்வையாளர்கள் என்று சிலரைக் கொண்டு வந்து இறக்கினார்கள். ஆனாலும் பணம் கொடுப்பதையும், பணம் வாங்குவதையும் தடுக்க முடியாமல் போனது. தேர்தல் அதிகாரிகள் தில்லிக்கு திரும்பி சென்றார்கள். தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
ஜனநாயக முறையில் தேர்தல் என்பது வித்தியாசமானது. அதனை நல்லதுபோல இருக்கும் கெட்டது என்றும் கெட்டது போல இருக்கும் நல்லது என்றும் குறிப்பிட வேண்டும். ஒரு குடிமகனுக்கு ஒரு வாக்கு என்பதுதான் ஜனநாயகத்தின் ஆணிவேர். ஆனால் அது அவ்வளவு சரியானதில்லை.
பிரதமராக இருந்தாலும் சரி, கழிப்பறையைச் சுத்தம் செய்யும் பணியாளராக இருந்தாலும் சரி ஒரு வாக்குதான். அது போலவே ஆண்டொன்றுக்கு பனிரெண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலும் சரி, ஆண்டொன்றுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்குக் கீழே பொருளீட்டினாலும் சரி, ஒரு வாக்குதான்.
ஜனநாயகத்தில் எல்லோரும் சமம். படிப்பு, வேலை, ஊதியம் என்ற ஏற்றத்தாழ்வுகள், ஆண், பெண், மூன்றாம் பாலினம் என்ற பாகுபாடுகள் எல்லாம் கிடையாது. எல்லோருக்கும் நல்வாய்ப்பை வழங்குவதுதான் ஜனநாயகம். ஆனால் பணந்தான் ஜனநாயகத்தைத் தீர்மானிக்கிறது.
அரசியல், தேர்தல் இவற்றைப்போல பொருளீட்டவும், அதிகாரம் செலுத்தவும் வாய்ப்பு கொண்ட வேறு தொழில் எதுவும் இல்லை. எனவேதான் பலரும் அரசியல் மற்றும் தேர்தலில் அதிகமாக முதலீடு செய்கிறார்கள்.
இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி "தேர்தலுக்கு செய்யப்படும் செலவை முதலீடாகக் கருதாதீர்கள்' என்று அறிவுரை வழங்கினார். ஆனால் எடுத்துக்கொள்ளத்தான் ஆளில்லை. ஆர்.கே. நகரில் ஐந்து வாக்காளர்கள் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரையில் கொடுக்கப்பட்டது என்பது ஊடகங்களின் கணக்கு. அது பொய்யாகவே போக வேண்டும் என்பதுதான் விருப்பம்.
அமைச்சர் வீடு, அலுவலகங்கள், அவர் உதவியாளர்கள் எல்லாம் பணம் பட்டுவாடா செய்தற்கு ஆவணங்கள் கிடைத்து இருக்கின்றன என்று உறுதி செய்யப்படாத செய்திகள் சொல்கின்றன.
அறத்தோடு வாழ்வது, உண்மையாக இருப்பது, ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுவது என்பதெல்லாம் எளிய, மத்திய தர மனிதர்களுக்கு மட்டும் உரியதில்லை. அவை மனிதர்களின் மாண்பு. எல்லோரிடமும் இருக்க வேண்டியது.
பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் வாக்குகளை இலவசமாகப் பெற்று சட்டப்பேரவை உறுப்பினராகி அமைச்சர், வாரியத் தலைவர், நிலைக்குழு உறுப்பினர் என்றெல்லாம் ஆகி, லஞ்சம் வாங்கியும், ஊழல் செய்தும் மாபெரும் மாளிகைகள் கட்டிக்கொண்டு, மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பெரிய வணிக வளாகங்கள் வைத்துக் கொண்டு இருக்கிறவர்களை என்ன செய்திருக்க முடிந்திருக்கிறது?
பணம் வாங்கிக் கொண்டு கட்சி சார்பாகத் தேர்தலில் நிற்க டிக்கெட் கொடுக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா?
தேர்தல் சரியாக நடைபெற வேண்டுமானால் அடிப்படையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு மேலும் அதிக அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். தேர்தலுக்குத் தனி வேட்பாளரோ, கட்சியோ செலவு செய்வதைத் தடுத்து அரசாங்கமே செலவு செய்ய வேண்டும்.
தனி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பு என்பதை நிறுத்திவிட்டு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். கட்சிகள் பெறும் வாக்கின் அடிப்படையில் உறுப்பினர்களைக் கட்சிகள் கொடுக்கும் முறை வேண்டும். அப்படிச் செய்தால் சட்டப்பேரவையில் எல்லா கட்சிகளுக்கும் இடமிருக்கும்.
இரண்டாவது சீர்திருத்தம், அமெரிக்காவில் இருப்பதுபோல, பிரதமர் மாநில முதல்வர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பது. அதனால் தலைவரின் பிடி தளர்ந்து போகும். கட்சி திறமையானவர்களை அமைச்சர்களாக்கிக் கொள்ளும். அது நல்ல யோசனை. அமெரிக்காவில் முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருக்கிறது.
இப்போது இங்கிருப்பது நல்ல தேர்தல் முறை இல்லை. பெரும்பான்மையான வாக்காளர்களின் வாக்குகளைப் புறந்தள்ளி தேர்தல் நோக்காளர்களின் வாக்கின்படி ஜனநாயகத்தைக் கேலி கூத்தாக்கி வருகிறார்கள்.
அதுபோல சர்வ அதிகாரம் படைத்த பிரதமர், மாநில அமைச்சர்கள் தங்களின் அடிமைகளையும், எடுபிடி ஆசாமிகளையும் அமைச்சர்களாக்கி விடுகிறார்கள்.
தேர்தல் சீர்திருத்தம் என்பது வெறும் தேர்தலுக்கான சீர்திருத்தமாக இருக்க முடியாது. சமத்துவம் இல்லாத சமூகத்தை சமத்துவப்படுத்துவதே வாக்களிப்பதின் அடிப்படை.
எல்லோருடைய வாழ்க்கையிலும் பொருளாதார, கல்வி, கலாசார சமத்துவம் ஏற்படும் போதுதான் தேர்தல் சீர்திருத்தம் செல்லுபடியாகும்.
அது வரையில் ஆர்.கே. நகரில் பண மழை பொழிந்தது போல எல்லா தேர்தல்களிலும் எல்லாத் தொகுதிகளிலும் பணமே மழையாகப் பொழிந்து கொண்டிருக்கும். அதுவே வெற்றியைத் தீர்மானிக்கும்!

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

கொடைக்கானலில் கபடிப் போட்டி

பெங்களூரு - நாா்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா!

SCROLL FOR NEXT