நடுப்பக்கக் கட்டுரைகள்

அறிந்து கொள்ளும் அடிப்படை உரிமை!

கே.ஜெயக்குமார்

சில அடிப்படையான, தனி நபரின் கண்ணியத்தை நிலைநிறுத்துகின்ற, முக்கியமான உரிமைகளை இந்திய அரசியல் சாசனம் நமக்கு அளித்திருக்கிறது. அந்தரங்க உரிமை என்பது குடிமகனின் அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பின் மூலம், மாறி வரும் காலத்துக்கு உகந்த விதத்தில் நமது அரசியல் சாசனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதும், குடிமக்களின் உரிமைகளை வடிப்பதில் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதும் மீண்டும் ஒரு முறை நமக்குத் தெரிய வந்திருக்கிறது.
இந்தியக் குடியரசு உருவாகி கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலான கால அளவில் நமது பல அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் விதமாக ஏராளமான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
அந்த வகையிலான முக்கிய சட்டங்களில் தகவல் உரிமை சட்டம் என்பதும் ஒன்று. அரசிடமிருந்து தகவல்களைப் பெறும் உரிமையை குடிமக்களுக்கு வழங்குவதுடன், அதுபோன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் அரசின் கடமையையும் அது உறுதி செய்கிறது. தகவல் உரிமை சட்டம் நடைமுறைக்கு வந்து பத்தாண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில், இந்தச் சட்டத்தின் வழியாகத் "தகவல்' கிடைத்தாலும், அது அரசின் நிர்வாகத் திறமையை அதிகரிக்கவில்லை.
குடிமக்களின் கையில் "தகவல்' என்னும் ஆயுதம் இருப்பதன் மூலம், அரசுத் துறைகளைப் பொறுப்புணர்வுடனும் திறம்படவும் செயலாற்ற வைக்க முடியும் என்ற எண்ணம் பெரும்பாலும் பொய்த்துவிட்டது என்றே கூறவேண்டும். 
அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, கடந்த 2005-ஆம் ஆண்டு இந்தச் சட்டம் அமலானது முதல் தகவல்கள் கோரி 2.44 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிலளிக்கப்பட்டுள்ளன. அந்தச் சட்டத்தின் கீழ், ஊடகத்தைச் சேர்ந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் பெற்ற அரிய தகவல்கள் மூலம் பல ஊழல்கள் அம்பலமாகியுள்ளன. அந்தச் சட்டத்தால் சமூக நிலை சற்று மேம்பட்டுள்ளது உண்மைதான்; ஆனால் அரசு நிர்வாகத்தில் இது குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.
இதனை இயற்றியபோது இந்தச் சட்டம் சமூக மாற்றத்துக்கான கருவியாகத் திகழும் எனக் கருதப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, தனக்கு வேண்டாத சக ஊழியர் மீது பகை தீர்த்துக் கொள்ளவும், அரசியல் எதிரிகளைத் தாக்கவும் தகவல் உரிமை சட்டம் ஓர் ஆயுதமாகப் பயன்படுகிறது என்பதை மறுக்க முடியாது. இந்தச் சட்டம் குறித்துக் கூறப்பட்ட உயரிய லட்சியங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அதன் சாதனைகள் குறைவே. நமது எதிர்பார்ப்புகளுக்கு இணங்கியும் பொறுப்புணர்வுடனும் அரசுகள் செயல்படத் தொடங்கினவா என்றால் இல்லையென்பதுதான் பதில். வெளிப்படையான நிர்வாகமும் இல்லையென்பதையும் கூற வேண்டும். நடைமுறைகளில் கூடுதல் எச்சரிக்கையுடன் அரசு செயல்பட அது உதவியிருக்கிறதே தவிர, அரசை விரைவாகவும் நியாயமாகவும் செயல்பட வைக்க இயலவில்லை.
தகவல் உரிமை சட்டத்தின் முக்கியக் குறைபாடு "எனக்குத் தகவல் தேவை' என்று ஒரு பிரஜை விண்ணப்பிக்க வேண்டும் என்பதுதான். தகவல் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், வேண்டுமென்றே தகவல் அளிக்கப்படாவிட்டால், மேல் முறையீடு செய்யவும் தகவலை மறு ஆய்வு செய்து அளிக்கக் கோரியும் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்பது உண்மை. இதில் அடிப்படை விஷயம் என்னவென்றால், நாம் தகவலைக் கேட்கவில்லையென்றால், அதைப் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை என்பதுதான். ஆனால், அரசியல் சாசனத்தின் லட்சிய நோக்கின் அடிப்படையில் இதை நாம் மெளனமாக ஏற்றுக் கொண்டுவிட முடியுமா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அந்த மக்களுக்காகவே செயல்படக் கடமைப்பட்டுள்ளது என்பதுதான் ஜனநாயகம். அந்தக் கடமையுணர்வும் பொறுப்புணர்வும், குடிமக்களுடைய லட்சிய விருப்பங்களின் அடையாளச் சின்னமான சட்டப் பேரவை-நாடாளுமன்றம் வழியாக செயல் வடிவம் பெறுகின்றன.
பேரவைகளுக்கும் நாடாளுமன்றத்துக்கும் கடமைப்பட்ட உணர்வுடன் அரசும் நிர்வாகமும் செயல்படுகின்றன என்றால், நாட்டின் பிரஜைகளுடன் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன என்று பொருள்.
இந்த வாதமும் விளக்கமும் கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், உண்மையில் பார்க்கப் போனால், ஒரு சாதாரண குடிமகனின் சுற்று வட்டாரத்தில் நடக்கும் மேம்பாட்டுத் திட்டங்களின் விவரங்கள், அல்லது பல்வேறு திட்டங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதைக் கூட அவர் தெரிந்து கொள்ள முடிவதில்லை என்பதுதான் உண்மை. 
ஓர் அரசு அலுவலகத்துக்குள் ஒரு சாதாரண குடிமகன் நுழைந்து ஒரு மேம்பாட்டுத் திட்டம், அல்லது நலத் திட்டம் குறித்துக் கூடுதல் தகவல்களை யாரிடமாவது கேட்டறிய முடியும் என்பதை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. மிகவும் அரிதாக, ஏதேனும் அரசு அலுவலகத்தில் உள்ள ஒரு புண்ணியாத்மா ஏதேனும் சிறு உதவி புரியக்கூடும். ஆனால் சாதாரணமாக அப்படி விவரம் சேகரிக்க யாராவது முயற்சி செய்தால் அது வீண் வேலையாகத்தான் இருக்கும்.
தற்காலத்தில் ஒரு சிறு மாறுதலாக, "தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் கொடுங்களேன்' என்று வேண்டுமானால் சொல்லலாம். ஏற்கெனவே குறிப்பிட்டது போல, தகவலை நாம் முறைப்படி கேட்டுதான் பெற வேண்டியிருக்கிறது.
ஒரு கிராமத்தில் சாலை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். பரபரப்பான தொடக்க விழாவுடன் திட்டம் செவ்வனே ஆரம்பிக்கப்பட்ட பிறகு, விரைவிலேயே மெத்தனமடைந்து, பின்னர் இயற்கையான காரணங்களால், அல்லது மர்மமான, இயற்கை அல்லாத காரணங்களால் முடங்கி, அதன் பின்னர் முற்றிலும் நின்றேவிடும். 
அந்தக் குக்கிராமத்தின் சிறிய சாலைத் திட்டம் ஏன் பாதியிலேயே முடங்கியது என்று யாருக்குமே தெரியாது. ஆனால் சிறிது காலத்துக்குப் பிறகு, சட்டப்பேரவை உறுப்பினரோ அல்லது உள்ளூர் பிரமுகரோ "தீவிரமாகத் தலையிட்டதால்' அந்த சிறிய கிராமத்தின் சாலைத் திட்டம் மீண்டும் எடுத்து நடத்தப்பட்டு, சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, முன்பு திட்டமிட்டதைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமான செலவு செய்த பிறகு நிறைவடையும். 
எத்தனை வலைதளங்கள், வசதிகள், விளம்பரங்கள், செய்தி ஊடகங்கள், தகவல் மையங்கள் இருந்தாலும் அரசு அதிகாரிகள் திறந்த மனதுடன், உருப்படியான தகவல்களை மக்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை. நல்ல வழவழப்பான காகிதத்தில் அரசுத் திட்டங்களை அச்சடித்து துண்டுப் பிரசுரங்களும், அழைப்பிதழ்
களும் வெளியிடுவது நல்ல விளம்பர உத்தியாக இருக்கலாம். ஆனால் ஒரு சாதாரண பிரஜைக்கு அதிகாரமளித்தல், அவசியமான தகவல் அளித்தல், வழி காட்டுதல் போன்றவற்றில் அரசுக்கு உள்ளூர உள்ள அலட்சிய மனப்பான்மை இருப்பது தெரிகிறது. மக்களின் "அறிந்து கொள்ளும் உரிமை' குறித்து ஓர் அலட்சியப் போக்கு வெளிப்படுகிறது.
நம் நாடு தகவல் அறிந்து கொள்ளும் உரிமையையும் தாண்டிச் செல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டது. இப்போது நமக்குத் தேவை "அறிந்து கொள்ளும் உரிமை'.
பல முன்னேறிய நாடுகளில் கட்டுமான இடங்களில், எல்லோருடைய பார்வையிலும் படும்படி பெரிய அறிவிப்புப் பலகையில் திட்டத்தின் தொழில்நுட்ப விவரம் முதற்கொண்டு, அதற்கான செலவு, எப்போது தொடங்கி எப்போது முடியும் என்ற விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
நமது நாட்டிலும் அதை செயல்படுத்த வேண்டும். சாலைப் பணி அல்லது மேம்பாலப் பணி போன்ற அரசு திட்டத்தின் விவரங்கள், அதன் ஒப்பந்ததாரர் பெயர், ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டிய காலம், தொழில்நுட்ப விவரங்கள், பல கட்டங்களில் உருவாகும் திட்டமாக இருந்தால், ஒவ்வொரு கட்டமும் நிறைவடைய வேண்டிய தேதி போன்ற விவரங்கள் மக்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் வெளிப்படையான பொதுத் தகவலாக அளிக்கப்பட்டிருக்க வேண்டும். திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது முதல், அளிக்கப்பட்ட, பெறப்பட்ட நிதி உதவிகள், திட்டத்தைப் பெற்றவரின் தகுதி உள்பட அனைத்து விவரங்களும் அனைவரின் பார்வைக்கும் பரிசீலனைக்கும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.
நமது நாட்டு இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு எப்போதும் அச்சுறுத்தலுக்கு ஆளானதுபோல அரசு செயல்பாடுகளில் ரகசியம் தேவையில்லை. 
நமது வரிப்பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்வதும் புரிந்து கொள்வதும் ஒவ்வொரு பிரஜையின் உரிமை. 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்னும் அருமருந்து மூலம் பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம், ஊழல் எல்லாம் முற்றிலும் ஒழிந்துவிடும் என்று கூற வரவில்லை. ஆனால், முழுத் தகவல்கள் வெளியாக அது போன்ற சட்டம் தூண்டுகோலாக அமையும், அதையொட்டி மக்கள் செயல்படுவதற்கான துணிவைத் தரும். மேலே குறிப்பிட்ட சாலைப் பணி போன்ற சந்தர்ப்பங்களில் குறைந்தபட்சம், அரசு அதிகாரிக்கும் பொறியாளருக்கும் ஒப்பந்ததாரருக்கும் தெரிந்த விவரங்கள் பொதுமக்களுக்கும் தெரிய வரும். இந்த வெளிப்படைத் தன்மையே பணி முடங்காதிருக்கச் செய்யும்.
நாடு சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், எந்த முக்கியஸ்தரையும் பிரபலஸ்தரையும் தெரியாத ஒரு சர்வ சாதாரணக் குடிமகன் ஓர் அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து குழப்பத்துடன் விழித்து நிற்பதை இன்றைக்கும் கூட காணலாம். இந்த நிலை மாற வேண்டும். ஒவ்வொரு பிரஜைக்கும் அரசு செயல்பாடு குறித்து அறியும் உரிமை உண்டு என்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதை செயல் வடிவில் கொண்டு வராவிட்டால், நாம் உண்மையான ஜனநாயக தேசமெனக் கூறிக் கொள்ள முடியாது.

கட்டுரையாளர்: முன்னாள் தலைமைச் செயலர், கேரள மாநிலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT