நடுப்பக்கக் கட்டுரைகள்

பற்றாக்குறை மக்களாட்சி!

சட்டப்பேரவைக்கு 1952-லிருந்து 2016-ஆம் ஆண்டுவரை நடந்த 15 பொதுத்தேர்தல்கள் பெருமளவில் பொதுமக்களை அரசியல்களத்திற்குக் கொண்டுவந்து அவர்களுக்கு ஒரு மக்களாட்சிக் கல்வியை தந்துள்ளன.

க. பழனித்துரை

சட்டப்பேரவைக்கு 1952-லிருந்து 2016-ஆம் ஆண்டுவரை நடந்த 15 பொதுத்தேர்தல்கள் பெருமளவில் பொதுமக்களை அரசியல்களத்திற்குக் கொண்டுவந்து அவர்களுக்கு ஒரு மக்களாட்சிக் கல்வியை தந்துள்ளன. தேர்தல்கால அரசியல் என்பது தேர்தல் காலத்திற்கு
மட்டும் பொருந்தக் கூடியது. அரசியல் கட்சிகளும், அரசாங்கமும் தேர்தல் காலத்தில் மக்களாட்சிக்கான ஒரு கல்வியைத் தருகின்றன. ஆனால், உண்மையிலேயே அது மக்களாட்சிக்கான முறையான கல்வியா என்பதுதான் இன்று நம் முன் எழும் கேள்வி.
ஏனென்றால் மக்களாட்சியின் உண்மையான விழுமியங்களை இன்றைய தேர்தல் அரசியலில் பார்க்க இயலாத நிலையில் மக்களாட்சியையே இது கேள்விக்குறியாக்கிவிட்டது. அது மட்டுமல்ல, இந்த மக்களாட்சிக்கு மாற்றுக் கிடையாதா என்ற கேள்வியையும் கேட்க வைத்துவிட்டது தேர்தல் அரசியல்.
உண்மை என்னவென்றால் நம் அரசியல்வாதிகள் மக்களாட்சியைப் பற்றி படித்து புரிந்துகொண்டு அரசியலுக்கு வந்து அரசியலும் நடத்தவில்லை. நம் நாட்டில் சுதந்திரத்திற்காகப் போராடிய வரலாறு உண்டு. மக்களாட்சிக்காகப் போராடிய வரலாறு கிடையாது. சுதந்திரம் கிடைத்தவுடன் மக்களாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானித்து நம் அரசியல் சாசனத்தை உருவாக்கிவிட்டனர்.
மக்களாட்சி நமக்குப் போராடாமல் கிடைத்த பரிசு. அதில் ஆட்சி அமைக்க தேர்தல் தேவைப்பட்டதால், அதுதான் முதல் ஜனநாயகச் செயல்பாடாக இருந்தது. அதுவே இன்று அரசியலில்
மையச் செயல்பாடாக மாறிவிட்ட காரணத்தால் தேர்தலில் வெற்றிபெறுவதும் ஆட்சியைப் பிடிப்பதும் இலக்காக மாறிவிட்டது. இன்று எது தேர்தலில் வெற்றிபெற உதவுமோ அதன் அடிப்படையில் தேர்தலை அணுகுவதும், பங்குபெறுவதும், நடைபெறுகின்றதேயன்றி கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் அனைத்தும் புறந்தள்ளப்பட்டுவிட்டன.
சுதந்திரம் அடைந்து மூன்று பத்தாண்டுகள் வரை கொள்கைகள் கோட்பாடுகள் அரசியலில் விவாதப் பொருள்களாக இருந்தன. என்றைக்கு உலகமயமான பொருளாதாரம் செயல்பட ஆரம்பித்ததோ அன்று தொடங்கியது இந்தப் பணம் செய்யும் புது அரசியல். கோட்பாடுகளை, கொள்கைகளைப் பேசி அரசியல் நடத்தும் காலம் முடிந்துவிட்டது. இன்று மக்கள் கொள்கைக்காகவும், தத்துவத்திற்காகவும் வாக்களிப்பது கிடையாது. எனக்கு என்ன கிடைக்கும் என்பதுதான் அடிப்படை.
இது ஏதோ சாதாரண மக்களின் பார்வை மட்டுமல்ல; படித்தவர்களும் உயர்நிலையிலுள்ள மக்களின் சிந்தனையும் இதுதான். அரசியல் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு தேர்தலில் தொடங்கி மறுதேர்தலை நோக்கி நடைபெற்று வரும் ஒரு தொடர் நிகழ்வு. இதன் விளைவு மக்களாட்சி அரசியலை தேர்தலுக்குள் புகுத்தி தேர்தல்தான் மக்களாட்சி என மக்களை நம்ப வைத்துவிட்டனர். இதுதான் இன்று மக்களாட்சியைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
நாங்கள் ஆளும்கட்சியாக வந்தால் எப்படிப்பட்ட ஆட்சியைத் தருவோம், என்னென்ன திட்டங்களை மக்களின் முன்னேற்றத்திற்காக கொண்டு வருவோம் போன்ற பல்வேறு செய்திகளைப் புகட்டுகின்றன நம்
அரசியல்கட்சிகள். தேர்தல் நேரத்தில் குறைந்தபட்சம் ஒரு மாதகாலம் பொதுமக்களை நம் அரசியல்கட்சிகள் தங்களின் பரப்புரைகளின்மூலம் தயார்செய்து அவர்களிடமிருந்து வாக்குகளைப் பெறுகின்றன.
இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. மிகப்பெரிய மக்கள் திரட்சி. தேர்தல் முடிந்தவுடன் இந்த நிகழ்வு முடிவடைந்து விடுவது அல்ல. வெற்றிபெற்ற கட்சி ஆட்சியில் அமர்கிறது. வெற்றிபெற்ற வேட்பாளர்கள் ஆளும்கட்சியிலிருந்தும் எதிர்க்கட்சியிலிருந்தும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொள்கின்றார்கள். ஆளுகின்ற கட்சி சட்டப்பேரவைகளில் மக்களுடைய மேம்பாட்டிற்காக சட்டங்கள் இயற்றுகின்றன; முடிவுகள் எடுக்கின்றன; கொள்கைகளை உருவாக்குகின்றன; நிதிநிலை அறிக்கை ஆண்டுதோறும் சமர்ப்பித்துச் சட்டப்பேரவையில் ஒப்புதல் பெற்று திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன.
தத்தம் தொகுதிகளின் மக்கள் பிரச்னைகளை எந்தெந்த முறைகளிளெல்லாம் சட்டப்பேரவைக்குள் கொண்டுசெல்ல முடியுமோ, அந்த வழிகளில் எல்லாம் கொண்டுசேர்த்து, பொதுமக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முயற்சிப்பதுதான் மக்கள் பிரதிநிதிகளின் வேலை.
சட்டப்பேரவையில் உருவாக்கிய சட்டங்கள், போடப்பட்ட திட்டங்கள்,
திட்டங்களை நிறைவேற்ற ஒதுக்கப்பட்ட நிதி போன்ற அனைத்துச் செய்திகளையும் தங்கள் தொகுதிகளில் உள்ள தொகுதி
மக்களுக்கு நேரடியாகவோ அல்லது
ஊடகங்கள் மூலமோ கொண்டு சேர்க்க வேண்டும்.
அப்படி பொதுமக்களிடம் சட்டப்பேரவை நடவடிக்கைகள் பற்றி கூறும்போது என்னென்ன புதிய சட்டங்கள் புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன, அதன் பலன்களை எப்படி பொதுமக்கள் அடையலாம் போன்ற தகவல்களை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக நடைபெறுகின்றபோது பொதுமக்கள் மக்கள் பிரதிநிதிகளிடம் தங்கள் பிரச்னைகளை எடுத்துக்கூறுவார்கள்.
அதன் அடிப்படையில் பிரச்னைகளை அலசி ஆராய்ந்து எவற்றை அதிகாரிகளிடம் எடுத்துச் சென்று தீர்வு காண்பது, எவையெல்லாம் சட்டப்பேரவைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதனைத் தீர்மானித்து அந்தந்த அமைப்புக்களுக்கு எடுத்துச் சென்று தீர்வுகாண வேண்டும்.
அடுத்து போடப்பட்ட திட்டங்களும், ஒதுக்கிய நிதியும், எடுக்கப்பட்ட முடிவுகளும், உருவாக்கிய சட்டங்களும் எப்படி நிறைவேற்றப்பட்டன என்பதைக் கண்காணித்து குறை நிறைகளைத் தொகுத்து
அரசிடம் கொண்டுசெல்வதும் மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும். இந்த செயல்பாடுகள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கு எடுத்துச்செல்ல வேண்டிய கடமை அரசியல் கட்சிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் உள்ளது.
அரசாங்கம் முறையாக தன் பணிகளை ஆற்றாதபோது அதனைத் தட்டிக்கேட்பதும் மற்றும் நெறிப்படுத்துவதும் எதிர்க்கட்சிகளின் கடமையாகும். இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் சட்டப்பேரவையில் நடைபெறவேண்டும். அங்கு செயல்பட முடியாதபோது பொதுமக்களைத் திரட்டிப் போராட வேண்டும்.
அது மட்டுமல்ல, சட்டப்பேரவை செய்ய வேண்டிய பணிகளைச் செய்யாதபோது அதே செயல்பாடுகளை வேறு இடங்களில் செய்ய முன்வர வேண்டும் சட்டப்பேரவை உறுப்பினர்கள்.
இந்தச் செயல்பாடுகளின் தன்மை, தரம், வேகம் அனைத்தும் அரசியல்கட்சிகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் திறன், அறிவு, பக்குவம், உத்தி இவற்றைப் பொருத்தது. பொதுமக்கள் நாட்டின் அரசியலை இவர்களின் செயல்பாட்டிலிருந்துதான் அறிந்துகொள்வார்கள். இவர்களின் தரமான, பக்குவமான செயல்பாடுகள்தான் ஒரு நாட்டின் அரசியல் கலாசாரத்தை மற்றும் அதன் தரத்தை நிர்ணயம் செய்கிறது.
தரம் உயர்ந்த அரசியலோ, தரம் தாழ்ந்த அரசியலோ மக்களால் உருவாக்கப்படுவதில்லை. அவற்றை உருவாக்குவது அந்த நாட்டில் இயங்கும் அரசியல்கட்சிகள் மற்றும் சட்டப்பேரவையின் செயல்பாடுகள்தான். ஒரு பக்குவமான அரசியலை, நாகரிகமான அரசியலை மக்களிடம் கொண்டுவருவது அரசியல்கட்சிகள்தான்.
தேர்தல் காலங்களிலும், சட்டப்பேரவை செயல்படுகின்றபோதும் அரசியல்கட்சிகளின் தலைவர்களும் உறுப்பினர்களும் எப்படி செயல்படுகின்றார்களோ, அந்த அளவிற்கு அரசியல் நாகரிகம் அந்த நாட்டில் வெளிப்படும்.
அதேபோல் சட்டப்பேரவையில் வருகின்ற சட்டங்கள், முடிவுகள், கொள்கைகள், திட்டங்கள், நிதிஒதுக்கீடு இவை அனைத்தையும் பற்றி விவாதம் செய்வதற்கு, பாசீலனை செய்வதற்கு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஆற்றல் இருக்கவேண்டும். இல்லையெனில் அந்த ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து, சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகளைக் கொண்டுவர என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து, அந்த வழிமுறைகள் அனைத்தையும் பயன்படுத்த முயல வேண்டும்.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என்றால், அந்த அறிக்கையைப் படித்துப் புரிந்துகொண்டு எங்கிருந்து அரசிற்கு வருமானம் வருகிறது, யாரிடமிருந்து வருமானம் ஈட்டப்படுகின்றது, இதில் பயன் யாருக்கு கிடைக்கிறது, யாருக்கு கிடைக்கவேண்டும் போன்ற விவரங்களை அந்த அறிக்கையிலிருந்து சேகரித்து, தங்கள் விவாதங்களை பேரவையில் உறுப்பினர்கள் வைக்கவேண்டும்.
அந்த விவரங்களை மக்களுக்கும் விளக்கவேண்டும். இந்தச் செயல்பாடுகளுக்குத் தேவையான தகுதி, திறன், ஆற்றல் இவை அனைத்தும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இருந்தாக வேண்டும்.
எனவே இந்தப் பிரதிநிதித்துவ ஜனநாயகமுறையில் மக்கள் பிரதிநிதிகளும் அரசியல்கட்சிகளும் தங்களின் தொடர் செயல்பாடுகளால், ஆட்சி, ஆளுகை, நிர்வாகம், முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றி விழிப்புணர்வு பெறுவார்கள். அதன்மூலம் மக்களை அரசியலில் பங்கேற்க வைப்பார்கள்.
இதுதான் உலகத்தில் நல்ல மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் நடக்கின்றன. இப்படித்தான் உலகத்தில் அரசியல் கல்வியை அரசியல் கட்சிகள் மக்களுக்குத் தருகின்றன. இந்த நிகழ்வுகள் நம் நாட்டில் நடைபெறுகின்றனவா என்றால் அதற்கு விடை இல்லை என்பதுதான். எனவேதான் ஆய்வாளர்கள் இந்தியா பற்றாக்குறை மக்களாட்சியாக விளங்குகின்றது என்று கூறுகின்றனர்.
இந்த மக்களாட்சி பற்றாக்குறைக்குத் தீர்வு காண முயற்சிப்பதுதான் இன்றைய மிக முக்கியமானத் தேவை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

SCROLL FOR NEXT