இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் போதைப் பொருள்களால் மிகப் பெரிய அளவில் இளைஞர்களும், நடுத்தர மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் இது மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
2010-ஆம் ஆண்டு ஸ்ரீமஹாராஜா ஹரிசிங் மருத்துவமனையில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும் போதைப் பொருள்களை உபயோகிப்பவர்களும் ஒரு தனிப் பகுதி ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீநகரில் 10 ஏக்கர் நிலத்தில் பசுமையான மரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது இந்த மருத்துவமனை.
மனிதர்களின் தரமான வாழ்க்கையும், கெளரவமும் காஷ்மீர் மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மாநிலத் தலைநகரில் இதுபோல் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு தனியான, தரமான சிகிச்சையை அளிக்க இதுபோன்ற ஒரு பெரிய மருத்துவமனையில் தனிப் பிரிவு தேவை.
இந்த தனிப் பகுதியை பார்வையிட்ட ஒரு மருத்துவர் அதை கட்டிக் கொண்டிருந்தவர்களிடம், 'நான் இந்த புதிய கட்டடப் பகுதியை பார்வையிட்டபோது, அங்கே உள்ள கழிப்பறையில் பெண்களுக்கான தனி பகுதி இல்லையே ஏன்' எனக் கேட்டுள்ளார்.
இந்தக் கேள்வியைக் கேட்டதில் அதிர்ந்து போன கட்டடக் கலைஞர்கள், 'பெண்களும் இந்தப் பகுதிக்கு மருத்துவம் பெற வருவார்களா?' எனக் கேட்டுள்ளனர். அதாவது, போதைப் பொருளை உண்ணும் பழக்கம் சமூகத்தில் பெண்களையும் பாதித்துள்ளது மிகுந்த ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. காஷ்மீரின் இளைஞர்களை வெகுவாக பாதித்துள்ள போதைப் பொருள் பழக்கத்தை மிக நன்றாக அறிந்தவர் டாக்டர் அர்ஷீத் உசேன்.
மருத்துவக் கல்லூரி மாணவராக இருந்தபோதே உசேன் மிக அதிக எண்ணிக்கையில் போதை பொருள்களை உண்பதால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அந்த பிரிவிற்கு வருவதைக் கண்டுள்ளார். முதன்முதலாக இதுபோன்ற நோயாளிகள் அவரை அணுகியதை நினைவுகூர்கிறார்.
ஒரு பெண் தலைசுற்றி கீழே விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு வந்தவர்கள் அவளது போதைப் பழக்கத்தைப் பற்றி விவரித்துள்ளனர். மருந்து விற்கும் கடையில் 'பென்டோதால்' எனும் மருந்தை வாங்கி அதை இஞ்செக்ஷனாக போட்டுக் கொள்வாராம். உடல் வலியைப் போக்க அளிக்கப்படும் இந்த மருந்தை அதிக அளவில் உடலில் செலுத்தி கொண்டு போதையை வரவழைத்துக் கொள்வது ஒரு முறை.
காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள பெரும்பாலான மருத்துவர்களின் கணிப்பின்படி அந்நகரில் இதுபோன்ற உடலின் வலியை போக்கும் மருந்தை உபயோகித்து போதை ஏற்றிக் கொள்ளும் பெண்கள் அதிகம் உள்ளனர். டாக்டர் உசேன் அந்தப் பெண்மணிக்கு மருத்துவம் செய்து சரிசெய்ய ஐந்து நாள்கள் ஆயின.
2012-ஆம் ஆண்டில், இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகத்தினர் நடத்திய ஓர் ஆய்வின்படி, காஷ்மீர் மாநிலத்தில் 26 முதல் 30 வயது நிரம்பிய 75 சதவீத பெண்களுக்கு போதைப் பொருள்கள் பற்றி தெரிந்துள்ளது. உதாரணமாக 'கேன்னபீஸ்' போதை மருந்து பற்றி இவர்களுக்கு தெரிந்திருந்தது.
அதே வயதுள்ள ஆண்களில் 22 சதவீதம் பேர்களுக்குத்தான் இதுபற்றி தெரிந்துள்ளது! இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது ஸ்ரீநகர், அனந்தனாங், பாரமுல்லா, புல்வாமா மற்றும் பட்ஃகாம் நகரங்களில்தான். எனினும் இவை காஷ்மீர் மக்களின் சமூக சீர்கேட்டை உணர்த்துவதாக கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பெண்கள் போதைப் பொருள்களை உண்கிறார்களா என்ற கேள்விக்கு, 70 சதவீத பெண்களும், 50 சதவீத ஆண்களும் 'ஆம்' என்ற பதிலை வழங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்களை குணப்படுத்தும் மருத்துவப் பகுதிக்கு 'சமூக பாதிப்பு' என்ற பெயர் ஸ்ரீநகர் மஹாராஜா ஹரிசிங் மருத்துவமனையில் சூட்டப்பட்டுள்ளது. காரணம், போதை மருந்துக்கான சிகிச்சைப் பிரிவு என்ற பெயரை குறிப்பிட்டு எழுதப்பட்டால் அந்தப் பகுதிக்கு பெண் நோயாளிகள் வராமல் தவிர்த்து விடுவார்களாம்.
போதை மருந்துகள் தென் மாநிலங்களிலும், மிக அதிக அளவில் ஊடுருவி இளம் ஆண்களையும் பெண்களையும் பாதித்துள்ளது தெரியவந்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில்மிக அதிக அளவில் குட்கா மற்றும் பான் மசாலாக்கள் கள்ளத்தனமாக விற்பனை ஆகின்றன. கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிக அதிக அளவில் இந்த கெட்ட பழக்கத்திற்கு அடிமைகளாகியுள்ளனர்.
மது அருந்துவதை விடவும் இந்த தீய பழக்கம் அதிகமாகியுள்ளது என கவலையுடன் எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
சமீப கால ஆய்வுகளின்படி, போதைப் பொருள்களை உண்ணும் இளைஞர்களுக்கு சைக்கோட்டிக் பாதிப்பு உருவாகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு எந்நேரமும் மாற்று எண்ணங்கள் உருவாகுமாம்.
அதாவது, தங்களது உடலில் ஏதோ ஒரு பொருள் வெளியிலிருந்து வந்து அடைத்துக் கொண்டுள்ளது என்ற எண்ணம் உருவாகுமாம். மேலும் இவர்களை மருத்துவர்களும், பெற்றோரும், நண்பர்களும் சரியாக நடத்துவதில்லை என்ற கோப உணர்ச்சியும் உருவாகுமாம்.
இது, 'மரிஜுவானா' எனும் போதைப் பொருளை தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கு ஏற்படும் சைக்கோட்டிக் எனும் மனநோய் என தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் எழுதியுள்ளார், ஜொசியேன் எனும் மாண்ட்ரியல் பல்கலைக்கழக மாணவர்.
போதைப் பொருள்களை உபயோகிப்பவர்களை கட்டுப்படுத்த, பல நல்ல யோசனைகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி வரும் பொதுநல இயக்கங்களின் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. 'திருந்தி வாழாமல், ஜெயிலுக்கோ மருத்துவமனைக்கோ செல்வது பரவாயில்லை' என பல பாதிக்கப்பட்டவர்கள் நினைக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.
தில்லி மாநகரின் பல பகுதிகளில் போதைக்கு அடிமையான இளைஞர்களை திருத்துவதற்கான நிலையங்கள் உள்ளன. இங்கே விஞ்ஞான முறையில் சீர்திருத்தங்கள் செய்யப்படாமல், பாதிக்கப்பட்டவர்களை அடித்து உதைத்து பயமுறுத்தி சரிசெய்யும் முயற்சிகளே உள்ளன எனக் கூறப்படுகிறது.
அதன் விளைவாக, இந்த நிலையங்களின் உள்நோயாளிகளாக இருந்து எந்த போதைப் பொருளையும் உண்ணாமல் வெளியே வந்து, தீவிர போதைப் பிரியர்களாகி சீரழிந்த இளைஞர்கள் பலர் என கூறப்படுகிறது.
இளம் வயதில், மன முதிர்ச்சியடையாத மாணவ - மாணவியர் இதுபோன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாகின்றனர் என நாம் எண்ணலாம். ஆனால், படித்து பட்டம் பெற்று பதவியிலிருப்பவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
மும்பையில் 31 வயது நிரம்பிய ஓர் இளம் அதிகாரி 4.5 கிராம் போதைப் பொருளை வைத்திருந்ததாக ஒரு நட்சத்திர ஓட்டலில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் மிக பிரபலமான ஒரு நிறுவனத்தில் உயர்மட்ட அதிகாரி. அவருடன் அவரது பாதுகாப்பு அதிகாரி மற்றும் பியூன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
போதைப் பொருள்களின் தடைச்சட்டம் (என்.டி.பி.எஸ். 1985), 28 மற்றும் 29-இன் விதிகளின்படி கைது செய்யப்பட்ட இவர்கள் பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர். காரணம், இந்தச் சட்டத்தின்படி, 2 கிராம் முதல் 100 கிராம் வரை போதை வஸ்து வைத்திருந்தால் ஜாமீன் உண்டு. அதற்கு மேல் இருந்தால்தான் ஜாமீன் கிடையாது.
பின்னர் நடந்த சோதனையில் இந்த உயரதிகாரியின் வீட்டில் நிறைய போதைப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஆக, படித்து உயர் பதவியில் இருக்கும் பலர்கூட இந்த போதைப் பொருள்களை உண்ணும் பழக்கம் கொண்டவர்கள் என்பது நிருபணமாகிறது.
2004-ஆம் ஆண்டு சர்வதேச அளவில் பொருள்கள் உபயோகிப்போர் குறித்த அட்டவணை தயாரிக்கப்பட்டது. அதில், இந்தியாவில் 7 கோடியே 32 லட்சம் பேர் மது மற்றும் போதை பொருள்
களை உபயோகிக்கின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.
இதில் 87 லட்சம் பேர் கேன்னபீஸ், மற்றும் 20 லட்சம் பேர் ஓப்பியம் ஆகிய போதைப் பொருள்களையும், 625 லட்சம் பேர் மதுவையும் அருந்தும் பழக்கம் உள்ளவர்கள். இதுபோன்ற கணக்கீடு அதற்குப்பின் நடத்தப்படவில்லை எனவும், நடத்தினால் போதைப் பொருள்களை உபயோகிப்போரின் எண்ணிக்கை மேலும் கூடியிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
சென்ற ஆண்டு, பஞ்சாப் மாநிலத்தில் ஓப்பியம் எனப்படும் போதைப் பயிரை ரகசியமாக விளைவிக்கும் விளைநிலங்களை கண்டறிந்து அவற்றை அழித்துள்ளனர் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகள். பல அரசுத் துறை ஊழியர்களுக்கு லஞ்சம் வழங்கி சட்டவிரோதமாக இவை பயிரிடப்பட்டுள்ளன என்பது விசாரணையில் தெரியவந்தது.
தென் மாநிலங்களில் போதைப் பொருள்கள் தயாரிக்கப்படாமல், வட மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்டு விற்கப்படுகின்றன. குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்களை கட்டுப்படுத்தும் எண்ணத்துடன் இரு கூடுதல் காவல் ஆணையர்களின் தலைமையில் 135-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் மூலம் போதைப் பொருள்களின் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டு, நம் மாநில இளைஞர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என பிரார்த்திப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.