இன்று சமூகத்தில் நிகழும் எந்தவொரு முக்கிய நிகழ்வையும் பற்றி விவாதிக்காத ஊடகம் தமிழகத்தில் இல்லை. நாட்டின் எந்தப்பகுதியில் நிலவும் எந்தப் பிரச்னைக்கும் பல அரசியல் கட்சி பிரமுகர்கள் வந்து அமர்ந்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பிரிந்து சரியா, தவறா என்று விவாதம் நடத்திவிட்டு, உண்மையின் ஆழத்திற்கு செல்ல முடியாமல் அரசியலே பேசி விட்டு விவாதத்தை முடித்துக் கொண்டு கலைந்து சென்றுவிடுவதுதான் வழக்கம். இந்த விவாதங்கள் சில நேரத்தில் பார்ப்பவர்களை எரிச்சலடைய வைத்துவிடும்.
நான் சிறுவனாக பள்ளியில் படித்தபோது என் ஆசிரியர் 'கல்வி என்பது உன் ஒருவனுக்கு மட்டும் பயன்படும் கருவியல்ல, அது சமூகம் முழுமைக்கும் பயன்படும் கருவி' என்று கூறினார்.
அத்துடன் சமூக சேவைக்கு நாம் நிறைய தியாகம் செய்ய வேண்டும் என்று காந்தியை, நேருவை, சாஸ்திரியை, காமராஜரை, ஜீவாவை அடையாளம் காட்டி அவர்களின் பண்புகளை விளக்கிக் கூறுவார். அப்பொழுதுதான் என்னைப் போன்ற பலருக்கும் கல்வி மானுடத்திற்கானது என்பது புரிந்தது.
இன்றைக்கு சமூக அவலங்களுக்கு படிப்பறிவு இல்லாமையே காரணம் என்றால் பள்ளிகளைத் திறக்கச் சொல்லி நாம் அரசைக் கேட்கலாம். ஆனால் நம் சமூக அவலங்களுக்குப் பெரிதும் உறுதுணையாக இருப்பவர்களே கல்வி கற்றவர்கள்தானே. இந்தக் கல்வியைப் பற்றி நாம் ஏன் கவலைப்படவில்லை?
74 விழுக்காடு கல்வியறிவு பெற்ற சமூகம், அதில் 33 விழுக்காடு உயர்கல்வி பெறும் சமூகம் ஏன் இவ்வளவு தாழ்நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது? நாம் இன்று இதைத்தான் உற்று நோக்க வேண்டும்.
சில நிகழ்வுகளில் தொடர்புடையோர் பல பெருஞ்செய்திகளை நமக்குத் தருகிறார்கள். அதை நாம் விவாதிக்க முயலவில்லை அல்லது மனமில்லை. பிரச்னையின் அடிப்படையே அங்குதான் உள்ளது என்பது நம்மில் பலர் புரிந்து கொள்வதே இல்லை.
உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்னார், 'கல்வி என்பது ஒரு தனிப்பாடம் அல்ல, அது ஒரு சமூகம் தொடர்பானது. ஒருவனுக்கு கல்வி புகட்டும்போது ஒரு சமூகம் பற்றிய ஒரு பார்வையை உருவாக்காமல் வெறும் துறைசார்ந்த அறிவை மட்டும் புகட்டினால் அது ஒரு தொழிலுக்காக பயிற்சி கொடுக்கப்பட்ட நாய் போன்றது' என்றார்.
ஆகையால்தான் ஐன்ஸ்டீன் எல்லா மாணவர்களுக்கும் சமூகவியல் சொல்லித்தர வேண்டும் என்று வலியுறுத்தினார். 'அறிவு என்பது மானுட மேம்பாட்டிற்கான கருவி. அது மானுடத்திற்கு பயன்பட்டால் மட்டுமே அதன் பெயர் அறிவு எனப்படும்' என்றார். ஒயிட்கேட் என்ற அறிஞன் கல்வியைப் பற்றி குறிப்பிடும்போது 'கல்வி என்றால் கலாசாரம் என்று பொருள். கல்வி கற்ற ஒருவனின் அறிவு என்பது அவனின் பண்பட்ட செயல்களால் விளங்கும்.
எனவே கல்வி ஒருவனை பக்குவப்படுத்துகின்றதா என்று பார்க்க வேண்டும்' என்று கூறினார். உலகில் நடந்த மிகப்பெரிய மாற்றங்களுக்கு உயர்கல்விச் சாலைகள்தான் மிகப்பெரிய பங்காற்றின என்பதை நம் வரலாறு காட்டுகின்றது.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் உயர்கல்வி பற்றி குறிப்பிடும்போது, 'நம் உயர்கல்வி நிறுவனங்கள் சமூக மாற்றங்களைக் கொண்டுவரும் அடிப்படை நோக்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை தன் அறிக்கையின் மூலம் மத்திய - மாநில அரசுகளுக்கு வைத்தார்.
ஏனென்றால் இந்திய விடுதலைக்கு வித்திட்ட பலர் வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்ட உயர் கல்விக்கூடங்களில் பயின்றவர்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதே உயர்கல்வி இன்று எதற்காக, எப்படிச் செயல்படுகிறது என்பதை சமூக விஞ்ஞானி ஆந்ரிபத்தேல் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடும்போது, 'அது ஒரு பணம் ஈட்டும் வழிமுறையை சொல்லித்தரும் பாடமாக மாற்றப்பட்டுவிட்டது' என்பதைப் பதிவு செய்துள்ளார்.
மானுடம் மேம்பட, மனிதத்துவம் மிளிர உருவாக்கப்பட்ட கல்வி இன்று மக்களைச் சுரண்டி சுகபோகமாக வாழ தனிமனிதர்களுக்கு வழிமுறை கற்றுத்தரும் ஒரு செயலாக மாறிவிட்டது என்பதை இந்திய உயர்கல்வி முறைகளைப் பற்றி ஆய்வுசெய்து கூறியுள்ளார்.
ஒரு மருத்துவரோ, ஒரு பொறியியல் வல்லுநரோ சமூகப் பார்வையற்ற ஒரு இயந்திரமாகச் செயல்படும் விதமாக நாம் கல்வியைக் கொண்டுவந்துவிட்டோம். அதுதான் நம் வாழ்க்கை முறையையே மாற்றியமைத்துவிட்டது.
அது நம் அரசியலை, அரசாங்கத்தை, ஆட்சியை அனைத்தையும் சூறையாடிவிட்டது என்பதை நாம் புரிந்து கொள்ளவில்லை. தனிமனித லாபத்திற்குச் செயல்படும் கருவியாகக் கல்வி மாற்றப்பட்டுவிட்டது. இது சமூகத்தில் இருந்த நல்ல ஒழுக்க நெறிகளை, பண்புகளை தகர்த்துவிட்டது.
அது மட்டுமல்ல இந்த தனிமனித லாப நோக்கோடு செயல்படும் கல்வியைப் பெற்று வாழ்க்கை நடத்தும் மனிதர்கள் அமைதியையோ, மகிழ்ச்சியையோ அடைந்தார்களா என்றால் அதுவும் கிடையாது என்பதுதான் யதார்த்தமான உண்மை.
தனிமனிதர்களுக்கும் சமூகத்திற்கும் உள்ள தொடர்பு என்பது ஒரு பிணைப்புச் சங்கிலி. சமூகம் அமைதியுடன் வாழாமல் தனிமனிதன் அமைதியுடன் வாழ முடியாது. இதைத்தான் அடிப்படையாக வைத்து ஐன்ஸ்டீன் கல்வியின் நோக்கத்தை வரையறை செய்கிறார்.
'கல்வி அடிப்படையில் தனிமனிதருக்கும் சமூகத்திற்கும் உள்ள உறவுமுறைகளை எடுத்துக் காண்பித்து சமூகத்தின் வளர்ச்சிக்கு கற்று வளர்ந்த மனிதன் என்ன பணி ஆற்றவேண்டும் என்பதைக் காண்பிக்க வேண்டும். அதை எந்தக் கல்வி செய்யும் என்றால் சமூக அறிவியல் கல்விதான் செய்யும், அதை அனைவருக்கும் போதிக்க வேண்டும்' என்றார்.
சமூக அறிவியல் கல்விதான் விவாதத்திற்கு இட்டுச் செல்லும். விவாதம்தான் உண்மையைக் கண்டறியும். உண்மைதான் தலை நிமிர்ந்து வாழ வழிவகுக்கும். அப்படிப்பட்ட கல்வி இன்று எங்கே இருக்கிறது என்று தேட வேண்டிய நிலை.
சமீபத்தில் ஒரு உறவினரின் வீட்டிற்குச் சென்றேன். அப்பொழுது அவர் வீட்டில் அவரது ஒரே மகனையும், மருமகளையும் காணவில்லை. எங்கே அவர்கள் என்று அவரிடம் வினவினேன்.
அதற்கு அவர் சொன்ன பதில் 'நான் ஒரு தொழில் நிறுவனம் வைத்து மிகப்பெரிய அளவில் செல்வம் ஈட்டினேன், எனக்கு வயதாகிவிட்டது. அந்தத் தொழிலைப் பார்த்துக் கொள் என்று என் மகனிடம் கூறினேன், அதற்கு அவன் மறுத்துவிட்டான். ஏனென்றால் நான் அவனை எம்.பி.ஏ. படிக்க வைத்துவிட்டேன்.
நான் செய்த மிகப்பெரிய தவறு அவனை அவ்வளவு பெரிய படிப்பு படிக்க வைத்ததுதான். பெரிய படிப்பு படித்தவுடன் அவன் பயந்துவிட்டான். தான் படித்த எம்.பி.ஏ. படிப்பை வைத்து எங்கேயாவது வேலை வாங்கி அடுத்தடுத்த இடங்ளில் அதிக மாத சம்பளத்திற்குச் சென்று, அடுத்தவரின் பாதுகாப்பில் இருக்க நினைத்துச் சென்றுவிட்டான்.
ஆனால் என்னிடமிருந்து எவ்வளவு பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறான். வயதான எனக்கு உதவிட வேண்டும், என்னிடம் அன்பு காட்ட வேண்டும் என்றுகூட அவனால் யோசிக்க முடியவில்லை. என்னிடமிருந்து ஒரு பெரும் தொகையை பெற்றுக் கொண்டு தனிக் குடித்தனம் சென்றுவிட்டான். நான் இன்று தனியாக தொழில் செய்து வருகிறேன்.
யாருக்காக இன்று நான் சம்பாதிக்கின்றேன் என்று தெரியவில்லை. நானே பெரும் தவறு செய்துவிட்டேன். அந்த பெரிய கல்வியை அவனுக்கு நான் கல்விச்சாலை மூலம் தந்தது என் தவறு' என்று கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, 'நான் அவனை பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொழிலில் ஈடுபடச்செய்து உயர்கல்விக்கு அனுப்பாமல் பயிற்சி கொடுத்திருந்தால் இன்று கடையை அவன் நடத்திக்கொண்டிருப்பான்' என்றார்.
இதுதான் இன்றைய உயர்கல்வியின் நிலை. இன்றைய உயர்கல்வி சமூகச் சிக்கலிலிருந்து விலகி, பணம் சம்பாதிப்பதற்கு கற்றுத்தருகிறது, அதைப் பெற்று பணம் செய்கிறார்கள் நம் உயர்கல்வி பெற்ற பட்டதாரிகள். ஆனால் அவர்கள் வாழ்க்கையை முழுமையாக வாழவில்லை; அப்படி வாழ அவர்கள் கற்ற உயர்கல்வி கற்றுத்தரவும் இல்லை.
பணத்தை சம்பாதிக்கவும் அதனைக் காப்பாற்றவும் அவர்கள் இழப்பது தங்கள் அமைதியையும் மகிழ்ச்சியையும். இதைத்தான் இந்த உயர்கல்வி தருகிறது என்றால், அது உயர்ந்த கல்வியா என்பதுதான் கேள்வி. இந்தக் கல்வி முறையை மாற்றாதவரை சமூகத்தை கல்வி மாற்றும் என்பதை ஒப்புக்கொள்ள இயலாது.
கல்வி முறையில் மிகப் பெரிய மாற்றம் தேவை. இன்றுள்ள கல்வியில் மருத்துவம் பயில்பராக இருந்தாலும்,பொறியியல் பயில்பவராக இருந்தாலும் அவர்கள் சமூகம் தொடர்பான பாடத்திட்டங்களைப் படிக்க வேண்டும். இது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
அது இல்லாதவரை அவர்கள் அனைவரும் எந்திரம் போன்று பாடங்களை சுமந்து சமூகத்தைச் சுரண்டக்கூடிய சுயநலக் கிருமிகளாகத்தான் வலம் வருவார்கள்.
இந்த சிந்தனை மனதில் கொண்டு நம் கல்வித்திட்டத்தை மாற்றியமைக்க கல்வித்துறை ஆவன செய்ய வேண்டும்.
கட்டுரையாளர்:
பேராசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.