முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

கிராமிய மணம் எங்கே?

இந்தியா, கிராமங்களில் வாழ்கிறது என்றார் நம் தேசப்பிதா மகாத்மா காந்தி. ஆம், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை அவர் சொன்ன கருத்து முற்றிலும் உண்மையாகவே இருந்து வந்தது

Updated On : 6 மே, 2017 at 1:13 AM
பகிர்:

இந்தியா, கிராமங்களில் வாழ்கிறது என்றார் நம் தேசப்பிதா மகாத்மா காந்தி. ஆம், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை அவர் சொன்ன கருத்து முற்றிலும் உண்மையாகவே இருந்து வந்தது. மின்சாரம் முதற்கொண்டு இப்போதுள்ள எந்த நவீன சாதனங்களும் இல்லாத அந்தக்காலக்கட்டத்தில் கிராமங்களில் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை விரும்பியும், அவசியம் கருதியும் செய்து வந்தனர்.
நவீன கருவிகள் எவையுமின்றி உடல் உழைப்பாலும், கால்நடைகளைப் பயன்படுத்தியும், இயற்கை சார்ந்த முறையில் விவசாயம் செய்தனர். வீட்டில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விவசாயம் சார்ந்த பணிகளை அவரவருக்கு ஏற்றார்ப்போல் பங்கிட்டுச் செய்து நிறைவு கண்டனர்.
உழவனுக்கு மாடுகளே பெருஞ்செல்வமாகக் கருதப்பட்டன. காளை மாடுகள் உழுவதற்கும், வண்டி இழுப்பதற்கும், நீர் இறைப்பதற்கும், செக்கிழுப்பதற்கும், போக்குவரத்திற்கும் பயன்பட்டன.
நாட்டுப் பசுக்கள் தரும் பாலின் அளவு குறைவாக இருந்தாலும் அவை தரும்பால் அதிலிருந்து தயிர், மோர், நெய் என அத்தனையும் சக்தி தரும் சிறந்த சுவையான ஊட்டமிக்க உணவாக அவர்களுக்கு அமைந்தன. கால்நடைகள் மூலம் கிடைத்த தொழு உரம் நிலத்திற்கு மிகச்சிறந்த இயற்கை உரமாக அமைந்தது.
உழவர் திருநாளுக்கு அடுத்து வரும் மாட்டுப்பொங்கல் உழவனுக்கு உற்ற துணையாக இருந்த மாடுகளைப் போற்றும், அவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆண்டு தோறும் நிலத்தில் விதைப்பதற்கென விலை கொடுத்து விதையோ, உரமோ, பூச்சி மருந்தோ வாங்கும் வழக்கம் அவர்களுக்கு இருந்ததில்லை. முந்தைய ஆண்டு விளைந்தவற்றில் நல்லதரமான விதைகளை எடுத்துவைத்து நடப்பு ஆண்டில் விதைத்து நற்பலன் கண்டனர்.
தொழு உரத்தோடு கொழுஞ்சி, ஆவாரை, போன்ற நல்ல உரம் தரும் செடிகளைக்கொய்து உரமாக்கியும், நிலத்திலிருந்து விளைந்து வந்த கதிர்களை அடித்துத் தானியங்களைச் சேமித்தது போக மீதமுள்ள கழிவுகளைக் கால்நடைகளுக்குத் தீவனமாகவும், நிலத்திற்கு உரமாகவும் பயன்படுத்தியும் வந்துள்ளனர்.
ஆட்டுமந்தைகளை கிடை போட்டு (சில நாட்கள் குறிப்பிட்ட நிலத்தில் இருக்கச் செய்தல்) அதன் சிறுநீரும், பிழுக்கையும் நிலத்திற்கு நல்ல உரமாக அமைந்து அமோக விளைச்சலைத் தந்தன.
நல்ல விளைச்சல் கண்ட வருடத்தில் ஆபரணங்கள் வாங்குதல், வீடு விரிவாக்கம் செய்தல், விளை நிலங்களைப் பராமரித்தல் தேவைப்படின் புதிதாக வாங்குதல், வண்டி மாடு வாங்குதல், தம் பிள்ளைகளுக்குத் திருமண காரியங்கள் செய்தல் என அவரவருக்கேற்ற வகையில் ஆடம்பரமின்றி இயல்பாகச் செய்து பெருமிதம் கொண்டனர்.
தங்கள் நிலத்தில் விளையும் தானியங்களையும், பருப்பு வகைகளையும், எண்ணெய் வித்துகளையும், காய்கறிகளையும் பயன்படுத்தித்தன்னிறைவும் ஆரோக்கியமும் பெற்றனர்.
குறிப்பாகக் குறைந்த மழை நீரிலேயே குறைந்த காலத்தில் விளைந்திடும் ஊட்டமிக்க சிறுதானியங்களான கம்பு, கேப்பை, சோளம், வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்றவற்றைப் பயிரிட்டு அவற்றை உணவாகவும் உண்டு வந்தனர். அரிசி உணவை அப்போது கிராமங்களில் அரிதாகவே பயன்படுத்தி வந்தனர்.
கோதுமைப் பயன்பாடு என்பது தென்னிந்தியப்பகுதிகளில் குறிப்பாகத் தமிழகத்தில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பெல்லாம் இல்லை என்றே தெரிகிறது. ஏனெனில் கோதுமை இப்பகுதியில் விளைவிக்கப்படவுமில்லை, உண்ணப்படவுமில்லை. அந்தந்தப் பகுதியில் விளையும் உணவுப்பொருட்களே அப்பகுதி மக்களுக்கு ஏற்றதாக இருந்திருக்கிறது.
திருமணம், சடங்கு, கோவில் விழாக்கள் என அவ்வப்போது நடைபெறும் நிகழ்ச்சிகளில் சொந்த பந்தங்களை உபசரித்து உவகை கொண்டனர். அவர்களது உடல் உழைப்பும், சத்துமிக்க சிறுதானிய உணவுகளும் அவர்களுக்கு ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் தந்ததால் பெரும்பாலோரிடம் மருந்து மாத்திரை, சாப்பிடுகிற பழக்கமோ, மருத்துவமனைகளை நாடிச்செல்லும் வழக்கமோ இல்லை என்ற நிலையே காணப்பட்டது.
உள்ளூரில் வசிக்கும் மூலிகை மருத்துவம் தெரிந்த சில அனுபவம் வாய்ந்த வைத்தியர்களே நோயைக் கண்டறிந்து தகுந்த மருத்துவ ஆலோசனை வழங்கி மூலிகை மருந்துகளைக் கொடுத்து நோய்களைக் குணமாக்கி வந்துள்ளனர்.
காலத்திற்கேற்ற உணவைத் தங்கள் அனுபவத்தின் வாயிலாக அறிந்து உண்டுவந்தனர். கோடைகாலத்தில் நாட்டுக்கம்பு (சிறுதானியம்) இடித்துச் சோறாக்கியும், அதில் மோர் சேர்த்துக்கஞ்சியாக்கியும் உண்டு களித்துள்ளனர்.
பானக்காரம் (சிறிது புளியும் கருப்பட்டியும் சேர்ந்தது) தயாரித்துக் கடும் வெயில் நேரத்தில் பருகிச்சூட்டைத்தனித்தனர். குளிர்காலமென்றால் கேழ்வரகை (கேப்பை) மாவாக்கி களியாக, கூழாக, புட்டாக, தோசையாக, வடையாக பல வகைகளில் தயாரித்து உண்டு உடலுக்கு ஊட்டம் பெற்றனர்.
ஊடகங்களின் தாக்கமின்றி, தற்சார்புடைய கிராமிய வாழ்க்கையை பெரும்பகுதி மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். நகரங்கள் என்பவை வசதி படைத்தவர்களுக்கும், வியாபாரம் புரிவோருக்கும், தொழில்முனைவோருக்கும் புகலிடமாக இருந்துள்ளது.
எதார்த்தமான, இனிய கிராமியச்சூழல் மாறி நகரமோகம் ஏற்பட்டு உடல் உழைப்புச்செய்ய சோம்பலுற்று மதுவுக்கும், கடனுக்கும் அடிமைப்பட்டு மேற்கத்திய உணவுமுறையும், கலாச்சாரமும் மேலோங்கி அரசு கொடுக்கும் கடனுக்கும், சலுகைகளுக்கும், இலவசங்களுக்கும் கையேந்தும் தரித்திர நிலைதான் தற்போதைய கிராமங்களில் பரவலாகக் காணப்படுகிறது.
மீண்டும் இனிய கிராமியச்சூழலும் தற்சார்புடைய உழவுத்தொழிலையும் விரும்பிச் செய்திடும் காலம் வெகு விரைவில் வர வேண்டும். காந்திஜி கண்ட கிராம சுயராஜ்ஜியக் கனவு அப்போது நனவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.