நடுப்பக்கக் கட்டுரைகள்

புஞ்சை தானிய புதிய உணவுகள்

சோள மாவு தோசை, கேப்பை ரவா தோசை, கம்பு லட்டு, தினைப் பாயசம், வரகு அதிரசம், குதிரைவாலி முறுக்கு, சாமைச் சோறு, சிறு தானியங்களிலிருந்து வகை வகையான சித்ரான்னங்கள்

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

சோள மாவு தோசை, கேப்பை ரவா தோசை, கம்பு லட்டு, தினைப் பாயசம், வரகு அதிரசம், குதிரைவாலி முறுக்கு, சாமைச் சோறு, சிறு தானியங்களிலிருந்து வகை வகையான சித்ரான்னங்கள், மணமணக்கும் பொறித்த சத்துமாவு, வரகு தக்காளி சாதம், ராகி இட்லி, தினைப் புட்டு, தினை உப்புமா, கம்மாஞ்சோறு, கம்புப் புட்டு, சிறு தானிய இட்லி மாவு, குதிரைவாலி பொங்கல், வரகரிசி பிரியாணி, தினைப் புலவு... அப்பப்பா சொல்லி மாளாது.
2017-ஆம் ஆண்டை புஞ்சை தானியப் புது உணவு ஆண்டாக அறிவித்துவிடலாம் என்று சொல்லும் அளவுக்கு தமிழ்நாட்டு வார இதழ்களிலும், மாத இதழ்களிலும், முகநூலிலும் சிறுதானிய உணவுகள் பற்றிய விவரங்கள், செய்முறை பற்றி குறிப்புகள் குவிந்துவிட்டன. 
குக்கரில் சமைப்பது எப்படி, மண் சட்டியில் சமைப்பது எப்படி என்று முகநூலுக்குள் விடியோக்கள் வேறு.
புஞ்சை தானிய சாதத்திற்கு நான்கு பங்கு நீர் ஊற்றி இறக்க வேண்டுமாம். பொல பொல என்று புலவுக்கேற்ற பக்குவம் என்ன? கஞ்சிக்கு என்ன பக்குவம்? எல்லாம் தூள் பறக்கின்றன.
மருத்துவர்களின் சிபாரிசுகள் வேறு. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி போன்ற நகர்வாழ் நடுத்தர வர்க்க, மேல்நிலைப் பணக்காரர்களுக்கு நாளுக்கு நாள் சுவாசநோய், இதயநோய், சத்தின்மை, சுண்ணாம்புச் சத்துக்குறைவு, நோய் எதிர்க்கும் திறன் இன்மை எல்லாம் அதிகமானதால் மெல்ல மெல்ல அரிசி உணவைத் தவிர்த்து முழுமையாகவோ, ஒரு வேளை உணவாகவோ தானிய உணவுக்கு மாறிவருவது தெளிவு. 
இது ஒரு பக்கம். இப்படிப்பட்ட விழிப்புணர்வு ஒரு பக்கம். இருப்பினும், ஜங்க் உணவு வியாபாரம் ஒழிந்தபாடில்லை. 
சின்னதிரை மற்றும் திரைப்பட துறை, கணினியே கதியென வாழும் மனிதர்கள், சிறுவர், சிறுமியர், நவநாகரிக மக்கள் பீட்சா, பாஸ்தா, நூடுல்ஸ், பர்கர், ஐஸ்கிரீம், கோக், பெப்சி என்று அலைவதும் நின்றபாடில்லை. எனினும், தீயன மறையவும், நல்லன வாழவும் இறைவனை வேண்டுவோம்.
இப்படியெல்லாம் புஞ்சை தானிய உணவுக்கு விளம்பரங்கள் செய்யப்பட்டதால் புஞ்சை உணவு சாகுபடியாளர்களின் வாழ்வு வளமானதா? சாகுபடி நிலப்பரப்பு உயர்ந்ததா? இல்லையே. குறிப்பாக தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 
இயற்கை அங்காடிகளிலும் அடுக்குமாடி சூப்பர் அங்காடிகளிலும் சிறு தானியங்கள் கொள்ளை விலைகளில் விற்கப்படுகின்றன. ரூ.150 முதல் ரூ.200 வரை விலை போகின்றவாம். விதை மண்டிகளில்கூட இந்த விலை இல்லை.
"என்ன விலையென்றாலும் சிறுதானியம் உண்டு சுகம் பெறுவோம்' என்று நல்ல வருமானம் உள்ள நடுத்தர வர்க்கம் நினைக்கிறது. ஆனால் விவசாயிகள் பெறுவது நெல் விலைதான். 
கிலோ ரூ.20 முதல் ரூ.30 விலைக்குக் கொள்முதல் செய்து மண்டிகளில் கிலோ ரூ.50 முதல் ரூ.80 என்று விற்கப்படுகின்றன. பெரும்பான்மையான இயற்கை அல்லது சூப்பர் அங்காடிகள், மொத்த விலை அங்காடிகளில் வாங்கி மேலும் அதிக விலைக்கு விற்கிறார்கள். 
சரி, தமிழ்நாட்டில் உள்ள மொத்த அங்காடிகளுக்கு எங்கிருந்து சரக்குகள் வருகின்றன என்று கவனித்தால் தமிழ்நாட்டிற்குரிய பங்குகள் அற்ப சொற்பமே என்ற உண்மையும் புலப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய புஞ்சை தானிய அங்காடிகளில் சென்னையும் ஒன்று. அடுத்ததாக விழுப்பும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை, பொள்ளாட்சி, திண்டுக்கல், திருச்சி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். 
அங்குள்ள உள்ளூர் வரத்து போது
மானவை அல்ல. பின்னர், தமிழ்நாட்டின் தேவையை எந்த மாநிலங்கள் நிறை
வேற்றுகின்றன? இக்கேள்விக்கு விடை 
கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களே.
கேழ்வரகு பெரும்பாலும் கர்நாடக வரத்து. வெள்ளைச் சோளம் ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம். கம்பு அதிகபட்சம் ராஜஸ்தான் விளைச்சல். பலவகை சிறுதானியங்களை மகாராஷ்டிரமும், தெலங்கானாவும் விளைவிக்கின்றன.
சங்ககாலத் தமிழ் இலக்கியங்களில் போற்றப்பட்டுள்ள சாமை, வரகு, தினை போன்றவை தமிழ்மொழியின் எல்லைதாண்டி வடதிசை மொழிகளால் ஆட்கொள்ளப்பட்டனவா? 
நுகர்வோர் ஆதரவு இருந்தும் சிறுதானிய சாகுபடி தமிழ் மண்ணில் வேரறுந்து போனது எவ்வாறு? திண்டுக்கல்லை எடுத்துக்கொண்டால் தினை, சாமை விளைந்த நிலங்கள் எல்லாம் திடீர் நகர்களாக மாறி, வீடுகள் கட்டப்பட்டுக் குடியும் குடித்தனமுமாக மக்கள் வாழ்கிறார்கள். 
தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மானாவாரி நிலங்களை ஆக்கிரமித்துவிட்டன. சிறுதானிய ஆதரவைவிட மனைவணிக ஆதரவு பெருகிவிட்டதால் கர்நாடகமும், தெலங்கானாவும், மகாராஷ்டிரமும் கைகொடுக்கின்றனவோ.
இருப்பினும் திருவண்ணாமலை, தர்மபுரி, திருச்சி, திண்டுக்கல், மதுரை போன்ற மாவட்டங்களில் உள்ள கரட்டு மலைப் பிரதேசங்களில் மானாவாரியாக சாகுபடியாகும் சிறுதானியங்களின் வழங்கல் நமது தேவைக்குப் போதுமானவை அல்ல. 
புஞ்சை தானியங்களில் சோளம், கம்பு, கேழ்வரகு ஆகிய மூன்று மட்டுமே தமிழ்நாட்டு பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். மற்றபடி சாமை, வரகு, தினை, பனிவரகு போன்றவை அதிகபட்சம் மலைப்பகுதி மானாவாரி என்றே கூறலாம். தற்போது குதிரைவாலி என்ற சிறுதானியம் பிரபலமாகி வருகிறது.
ஒரு காலத்தில் சிறுதானியங்களை சென்னை வாசிகள் கண்ணால்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். பணிநிமித்தம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு கொத்தவால் சாவடி சென்று உணவு தானியம், பருப்பு வகை விலை விசாரிக்கும் பணி செய்த அனுபவத்தை வைத்து, அன்றும்கூட சோளம், கம்பு, கேழ்வரகு மட்டுமே சென்னை அங்காடிக்கு வந்தன. 
இவற்றை யார் வாங்குகிறார்கள் என்று விசாரித்தால் கால்நடைத் தீவனப் பயன்பாட்டுக்கு என்று பதில் வரும். இன்று 
பல இயற்கை அங்காடிகளிலும் சூப்பர் அங்காடிகளிலும் எல்லா வகையான புஞ்சை தானியங்களும் கிடைப்பதாகக் கூறுகிறார்கள். 
மருத்துவர்கள் அரிசிக்கு பதிலாக புஞ்சை தானியங்களை உண்ணும்படி சிபாரிசு செய்கிறார்கள். மாவுச் சத்து குறைவாகவும், நார்ச்சத்து, தாதுப்புக்கள், கால்சியம், பாஸ்பரம், இரும்பு போன்ற உலோகச் சத்தும் உள்ளதால், மருத்துவர்களின் சிபாரிசுகள் போற்றப்படுகிறது. அப்படியும் நாம் இழந்த பலவகையான நம்மால் மீட்க முடியுமா என்பது ஐயமே. 
சோளம் என்று எடுத்துக்கொண்டால் வெள்ளை, சிகப்பு, மஞ்சள் என்று நிறவேற்றுமை உள்ளது. இவை பெரும்பாலும் வீரியரகக் குறுகியகாலப் பயிர்கள். ஆனால், வெள்ளை நீரோட்டம் இருங்கு, கருஞ்
சோலம் என்ற பாரம்பரிய வகை அரிதாகியதா அல்லது அற்றுப்போனதா தெரியவில்லை.
கம்பு என்று எடுத்துக்கொண்டால் அங்காடிகளில் கிடைப்பது எல்லாம் வீரியக் கம்புதான். பொட்டுக்கம்பு என்ற பாரம்பரிய ரகம் அற்றுப்போனது. சற்று உமி அதிகம் என்றாலும் சுவை அதிகம். கேழ்வரகில் கருப்பு, கருஞ்சிவப்பு, கருநீலம் என்று நுண்ணிய நிறவேற்றுமை உண்டு. எல்லாமே சிறப்புதான்.
சாமையில் புல்சாமை, பெருஞ்சாமை, சிறு சாமை, செஞ்சாமை என்று ரக வேற்றுமை இருப்பினும் செஞ்சாமை அற்றுப்போய்விட்டது. பெருஞ்சாமையே இப்போது எஞ்சியுள்ளது.
வரகுப் பயிரில் சிறுவரகு, பெருவரகு என்று இரண்டு ரகம் உண்டு. சிறுவரகு அற்றுவிட்டது. பெருவரகு எஞ்சியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி வட்டாரத்தில் உள்ள சில அறக்கட்டளை நிறுவனங்கள் வரகுடன் குதிரைவாலி, தினை சாகுபடிக்கு ஊக்கம் அளித்து வருகின்றன.
தினையிலும் அரிதினை, செந்தினை, பெருந்தினை என்று பல ரகங்கள் இருப்பினும் பெருந்தினையே ஊக்குவிக்கப்படுகிறது. பழனி ஆண்டவர் கோயிலில் தினைமாவு பிரசாதம் என்பதால் தினை சாகுபடி நீடிக்கிறது. 
வரகில், பனிவரகு என்பது வேறு வகையினம் (நடஉஇஐஉந). பனிவரகு காடைக்கண்ணி என்ற பெயரிலும் உலவுகிறது. காடைக்கண்ணி அபார ருசி. அங்காடியில் அரிது.
இவ்வாறு அரிதாகிவரும் சிறு தானியங்களை மலரும் நினைவுகளாக எண்ணாமல் தமிழ்நாட்டு வேளாண்மைத்துறை சிறுதானிய சாகுபடியை மீண்டும் மலரச் செய்ய புதிய திட்டங்களை வகுக்குமா? 
தமிழ்நாடு உணவு வழங்கல் துறை சிறுதானியங்கள் உள்பட நல்ல விலைக்குக் கொள்முதல் செய்து ஏழைகளுக்கு வழங்குமா? 
உணவு உற்பத்தியில் உலகில் இந்தியா முதலிடம் என்று பெருமையுற்றாலும், ஊட்டக் குறைபாட்டிலும் முதலிடம் என்ற அவப்பெயரைப் போக்கப் புஞ்சை தானிய உணவுகளே கை கொடுக்கும்.

கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron

அரசனில் இணைந்த டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை!

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT