வாசிப்பதற்கு ஏது வரைமுறை?
சிலருக்கு எவ்வளவுதான் கல்வியறிவு பெற்றிருந்தாலும் வாசிப்புப் பழக்கம் என்பது எளிதில் பிடிபடாத விஷயம். சிலருக்கோ புத்தகம் எடுத்து கையில் வைத்தாலே தூக்கம் வந்துவிடும்.
சிலருக்கு எவ்வளவுதான் கல்வியறிவு பெற்றிருந்தாலும் வாசிப்புப் பழக்கம் என்பது எளிதில் பிடிபடாத விஷயம். சிலருக்கோ புத்தகம் எடுத்து கையில் வைத்தாலே தூக்கம் வந்துவிடும். இன்னும் சிலருக்கு இரண்டொரு பக்கம் படித்து முடித்து அடுத்தப் பக்கம் புரட்டும்போது அந்தப் புத்தகம் அவர்களைப் புரட்டிப்போட்டுவிடும்.
சில புத்தகங்கள் வாசிப்பவர்களை ஈர்த்து நூலின் பக்கத்தில் உள்ள செய்திகளோடு பயணிக்க வைத்துவிடும். அதிலிருந்து இறங்குவது என்பது எளிதில் இயலாத காரியம்.
அதனால்தான் சிலருக்கு படிக்கும்போது எதாவது இடையூறு ஏற்பட்டால் கடும்கோபம் கொள்வர். காரணம், அவ்வளவு அருமையாக அந்த நூலின் பக்கங்களில் பயணம் செய்து கொண்டிருப்பார்.
ஒரு நூல் வாசிப்பதற்கு முன் அந்த நூலை தேர்வு செய்வது என்பதே ஒரு கலைதான். முறைப்படி வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள், அவ்வளவு எளிதில் ஒரு நூலினை விலைகொடுத்து வாங்கிவிட மாட்டார்கள். அப்படி முடிவு செய்து வாங்கினால், அந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்காமல் அடுத்த நூல் வாங்க மாட்டார்கள். இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பிறர் தம்மைப் பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்காக புத்தக கண்காட்சியிலும், மக்கள் கூடும் புத்தக விற்பனை நிலையங்களிலும் நூல்கள் வாங்கும் சிலர், தங்கள் வீட்டு அலமாரிகளில் அடுக்கி வைப்பதோடு சரி.
எப்போதாவது நேரம் கிடைக்கும்போது எடுத்து ஒரு புரட்டு புரட்டிவிட்டு வைத்துவிடுவார்கள். அன்று படித்த அந்த நூலின் பெயர் மற்றும் அந்த நூலின் சில பக்கங்களில் உள்ள செய்திகளை விலாவாரியாக பலருடன் பகிர்ந்து கொண்டு தானும் ஒரு புத்தகப்பிரியன் எனக் காட்டிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.
நாம் இதைப் படித்தால் என்ன கிடைக்கும், அதைப் படித்தால் என்ன கிடைக்கும் என ஒருவித எதிர்பார்ப்பிலேயே இருப்பதும், யாராவது தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கும் இப்படி எதாவது கிடைக்கும் என நினைப்பவர்களும் உண்டு.
கண்டதைப் படித்தவன் பண்டிதன் ஆவான் என்பார்கள். அதுபோல தனக்கு எந்த மாதிரியான புத்தகம் கிடைத்தாலும் அதைப் படித்து அதிலுள்ள செய்திகளை உள்வாங்கிக் கொள்வது என்பது ஒரு கலை.
ஒரு சிலருக்கு கவிதை இலக்கியம், சிலருக்கு நாவல், சிலருக்கு படக்கதை, சிலருக்கு திகிலூட்டும் கதைகள், இன்னும் சிலருக்கு தன்னம்பிக்கை வெளியீடுகள் என அவரவர்க்கு என சில விருப்பங்கள் இருக்கலாம். ஆனால், சூழ்நிலை காரணமாக கிடைக்கும் இலக்கியத்தைப் படித்து அதன் கூறுகளை ஏற்றுக் கொள்வது என்பதும் ஒருரகம்.
எதைப் படிப்பது என தேர்வு செய்வது எப்படி ஒரு கலையோ, அப்படியே எதைப் படிக்கக்கூடாது என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.
பணம் கொடுத்து வாங்கித்தான் படிக்க வேண்டும், என்றில்லாமல் முடிதிருத்தும் நிலையத்திலும், தேநீர் கடையிலும்கூட செய்தித்தாள் மூலமாக சிலவகை வாசிப்பினைத் தொடரலாம். அதில் நமக்கு ஓரளவு பலன் மட்டுமே கிடைக்கும்.
நூலகம் சென்று வாசிப்பது என்பது நமக்கு ஒரு தொடர்கதை படிப்பதற்கு ஒப்பானது. நிரந்தரமான நன்மையும் திருப்தியும் தரும் இடமும் கூட.
ஒருவேளை அங்கே அந்தநாள் படிக்க இயலாத ஒன்றை மறுநாள் சென்றும் தொடர்ந்து படிக்க இயலும். இம்மாதிரி படிப்பகங்கள் எவ்வித ஏற்றத்தாழ்வையும் கொண்டிராமல் அனைவரும் படிப்பாளிகள் என்கிற ஒரு நேர்கோட்டில் இணைய முடிகிறது.
சுண்டல் வாங்கும் சிறுதாளில் கூட சிலநேரம் சாப்பிட்டு முடித்துவிட்டு அதிலுள்ள விஷயத்தை நாம் படிக்க முற்படுகிறோம். சில சமயம் அதில் உள்ள குறிப்பு அல்லது ஒரு சிறு பகுதி, அடடா இந்தத் தாள் உள்ள புத்தகம் கிடைத்தால் நன்றாக இருக்கும் மீதி என்ன என்பதையும் தெரிந்துகொள்ளலாமே என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும்.
அப்படி ஒருவேளை கிடைத்து அந்த செய்தியை முழுவதுமாக படிக்கும்போது ஏற்படும் நிம்மதிக்கு இணையேது. அடிப்ப கிடைக்காமல் நம் மனது படும்பாடு சொல்லிமாளாது.
அந்தத் தாளில் உள்ள ரகசியம் - திடீர் மின்னலாய் தோன்றும் கருத்துக்கள் - பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாழ்க்கைப் பாதையை மாற்றியமைக்கும். நூறு ரூபாய் பணம் கொடுத்து வாங்கிய புத்தகத்தில் கிடைக்காத ஒரு விசயம், ஐந்து ரூபாய் சுண்டல் வாங்கும் சிறுதாளில்கூடக் கிடைக்கலாம்.
இந்திய நூலக அறிவியலின் தந்தை என்றழைக்கப்படும் டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன் என்பவர் கூறிய கூற்றின்படி வெளிவந்துள்ள ஒவ்வொரு நூலிற்கும் அதற்கான வாசகன் இருப்பான் என்பதும், ஒவ்வொரு விதமான வாசகனுக்கும் உரிய புத்தகம் நிச்சயமாக இருக்கும் என்பதும்தான் இன்றைய நூலகங்களின் சிறப்பாக அமைந்துள்ளது.
நம் ஊரிலுள்ள நூலகங்கள் குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்? சந்திக்கும் பலரிடம் கேட்டதற்கு பெரும்பாலோர் சொன்ன பதில் 'தெரியாது' என்பதுதான்.
ஏதாவதொரு திரையரங்கு குறித்துக் கேட்டால், மிகச் சரியாக எங்கிருக்கிறது என்றும் அதற்குச் செல்லும் வழியும் சொல்வார்கள். இதுதான் இன்றைய உண்மை நிலை.
ஏன் எனில், நம்மில் பலருக்கும் வாசிப்பதன் அவசியம் மற்றும் அதன் ருசி தெரியாததுதான் காரணம். யாராவது எப்போதாவது வாசிப்பில் ஒரு சிறு சுவையான அனுபவம் பெற்றுவிட்டால், பின்னர் அவர் வாழ்நாள் முழுவதும் யாராலும் வாசிப்பின் அனுபவத்திலிருந்து மாற்ற இயலாது.
எனவே, வாசிப்பது என்கிற மிகப்பெரிய மற்றும் மிக அருமையான அனுபவத்திற்கு அனைவரும் உட்பட வேண்டும்.