நடுப்பக்கக் கட்டுரைகள்

கிராமிய வங்கிகள்: பலமும் பலவீனமும்

எஸ். ராமன்

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு, கிராமப்புற பொருளாதார வளர்ச்சிதான். கிராமப்புற பொருளாதார வளர்ச்சி மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் தீட்டப்படும் எந்தவொரு திட்டத்தையும் முழுமையானதாகக் கருத முடியாது' என்று கூறினார் மகாத்மா காந்தி. 
இந்திய மக்கள்தொகையில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் சார்ந்திருக்கும் கிராமப்புற பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், அங்கு வசிக்கும் மக்களை கந்து வட்டிக்காரர்களிடமிருந்து மீட்டு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, கிராமப்புற வளர்ச்சி மேம்பாட்டு திட்டங்களில் முதலீடுகளை வழிநடத்தவும் இந்திய அரசால் தொடர்ந்து பல திட்டங்கள் தீட்டப்பட்டு, அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் அடிப்படையில் பல அரசு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், பொதுத்துறை வங்கிகளும், கிராமிய வங்கிகளும் முக்கிய அங்கங்களாகக் கருதப்படுகின்றன.
1969-இல் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கிளை விரிவாக்க கொள்கையில், கிராமப்புற விரிவாக்கம் ஒரு அங்கமாக இருந்தது. அதாவது, கிராம மக்களின் பொருளாதாரத் தேவைகளை கண்டறிந்து, விவசாயம் மற்றும் சிறு தொழில் சார்ந்த கடன்களை வழங்குவது.
வங்கி அதிகாரிகள், தங்கள் பணி காலத்தின் ஒரு பகுதியை கிராமப்புறங்களில் செலவிடவேண்டும் என்ற நியதி இன்றளவும் பொதுத்துறை வங்கிகளால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 
கிராமப்புறப் பணியை நிறைவு செய்தவர்களுக்குத்தான் பதவி உயர்வு என்ற விதிமுறையும் அமலில் உள்ளது. 
கிராமப்புற மேம்பாட்டு திட்டங்களை பொதுத்துறை வங்கிகள், தங்கள் தொடர் செயல்பாடுகள் மூலம் ஓரளவு பூர்த்தி செய்து வந்திருக்கின்றன. வங்கிகளின் இந்தக் கொள்கையினால்தான், குறைந்த வட்டியில் வழங்கப்படும் வங்கி நிதி சேவைகளுக்கு விவசாயிகள் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோர் அறிமுகப்படுத்தப்பட்டு பெருமளவு பயனடைந்து வருகின்றனர். கிராமவாசிகள் உள்பட நாட்டில் உள்ள அனைவரையும் உள்ளடக்கிய நிதி சேவையின் (Financial inclusion) அறிமுக கட்டமாக இந்த கொள்கை அமைந்தது எனலாம். 
இம்மாதிரி கொள்கைகளின் வெற்றி, அதை அமல்படுத்த முற்படும் அதிகார வர்க்கத்தையே சார்ந்திருக்கிறது. கிராமப்புற மேம்பாட்டில், அதற்காக நியமிக்கப்படும் ஒவ்வொரு அதிகாரியும் காட்டும் மனப்பூர்வமான ஈடுபாடு மட்டும்தான், இத்தகைய திட்டங்களுக்கு சிறந்த பலனை அளிக்கும் வல்லமை படைத்தது ஆகும். 
இதுபோன்ற திட்டங்கள் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நாட்டின் பல பகுதிகளில் செயல்பட்டு வந்தாலும், கிராமப்புற மேம்பாடு என்பது ஆமை வேகத்தில்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வேகத்திற்கு ஊட்டம் அளிக்கும் ஒரு திட்டமாகப் பிறந்ததுதான் கிராமிய வங்கிகள்'.
1975-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், உத்தரப் பிரதேசத்தில், சிண்டிகேட் வங்கியின் குடையின் கீழ் (Sponsoring bank) பிரதமா பாங்க்' என்ற முதல் கிராமிய வங்கி பிறந்தது. அதற்கு பிறகு, 60-க்கும் மேற்பட்ட பிராந்திய கிராமிய வங்கிகள் (Regional rural banks)பல்வேறு பொதுத்துறை வங்கிகளின் கீழ், நாட்டின் பல பகுதிகளில் தொடங்கப்பட்டன. அனைத்து கிராமிய வங்கிகளின் மூலதன நிதி ஆதாரம், மத்திய அரசு 50 சதவீதம், பொதுத்துறை வங்கி 35 சதவீதம், மாநில அரசு 15 சதவீதம் என்ற விகிதத்தில் அமைந்திருக்கும்.
விவசாய தொழிலாளர்கள், கைவினைக் கலைஞர்கள், குறு மற்றும் சிறு தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், சிறு விவசாயிகள் ஆகியோரின் நிதி ஆதாரத்திற்கு கடன் கொடுத்து உதவுதல், கிராமப்புற சேமிப்புகளை ஒன்று திரட்டுதல் ஆகிய செயல்பாடுகள் கிராமிய வங்கிகளின் பணிகளாகும். 
40 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கிராமிய வங்கிகள், அவை நிறுவப்பட்டதற்கான நோக்கத்தை எந்த அளவுக்கு நிறைவேற்றியிருக்கின்றன என்பதை இந்த கட்டத்தில் ஆராய்வது அவசியம் ஆகும். 
ஆரம்பக் கட்டத்தில், நாட்டில் வெவ்வேறு பிராந்தியங்களின் தேவைகளுக்காக, 196 கிராமிய வங்கிகள் துவங்கப்பட்டன. அதற்கு பிறகு, அவற்றின் தேய்மானமடைந்த நிதி நிலை மற்றும் நிர்வாக பிரச்னை ஆகிய காரணிகளை கருத்தில் கொண்டு, பல்வேறு கட்டங்களில், ஒரே பகுதியில் இயங்கிய பல்வேறு வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டதால், அவற்றின் எண்ணிக்கை தற்போது 56-ஆகக் குறைந்திருக்கிறது. 
நாட்டில், ஒவ்வொரு பிராந்தியத்திலும் கிராமப்புறங்களின் தேவைகளுக்கேற்ப செயல்பட்டு வரும் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட கிராமிய வங்கிக் கிளைகள், கிராமியப் பொருளாதார மேம்பாட்டில் பெரும்பங்கு வகித்து வருகின்றன. 98 சதவீத வங்கிக் கிளைகள், கிராமப்புறம் மற்றும் அதை ஒட்டிய நகர்ப்புறங்களில் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். ஆனால், அதே பகுதிகளில் இயங்கும், தாய் வங்கி உள்பட மற்ற பொதுத்துறை வங்கிகளோடு போட்டியிடும் வலிமை அவற்றுக்கு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். 
மூன்று லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்களை ஏழு சதவீத வட்டியில் கிராமிய வங்கிகள் வழங்கிக் கொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்ப செலுத்தப்படும் கடன்களுக்கு மூன்று சதவீத ஊக்கத்தொகையும் அளிக்கப்படுவதால், இக்கடன்கள், நான்கு சதவீத வட்டிக் கடன்களாகின்றன. சிறு விவசாயிகளுக்கு, குறைந்த வட்டி கடன் மிகவும் பயனுள்ளதாகும். 
கிராமிய வங்கிகள், பொதுத்துறை வங்கிகள்போல், தாமரை இலைத் தண்ணீராக, ஒட்டியும் ஒட்டாமலும் செயல்படுவதாகக் கருத்துகள் நிலவுகின்றன. கிராமப்புற மக்களின் ஆழ்ந்த நம்பிக்கையைப் பெற, தங்கள் வியாபார முறைகளை, அவர்களின் வாழ்க்கை முறைகளோடு அடையாளப்படுத்திக் கொண்டு செயல்படும் வழிமுறைகளை அவை தவற விட்டுவிட்டதுதான் அதற்குக் காரணமாக சொல்லப்படுகிறது. மேலும், தாய் வங்கியுடன் நீடிக்கும் தொப்புள் கொடி உறவு, அவற்றின் அணுகுமுறைகளை வெகுவாக பாதிக்கிறது என்றும் சொல்லலாம். இதில், கடன் வழங்குவதில் நிகழும் தாமதங்களும் அடக்கம்.
தாய் வங்கியில் பணிபுரியும் முதுநிலை அதிகாரிகள்தான், அதன் பிரதிநிதிகளாக கிராமிய வங்கிகளின் நிர்வாக பொறுப்புகளுக்கு, இடைக்கால ஏற்பாடாக(Temporary deputation)  அனுப்பி வைக்கப்படுகின்றனர். 
அம்மாதிரி அனுப்பி வைக்கப்படும் அதிகாரிகளுக்கு கிராமப்புற சேவைக்குத் தேவையான அனுபவம் உள்ளதா என்பது கேள்விக்குறிதான். அதற்குரிய அனுபவத்தைப் பெறுவதற்குள், அவர்களின் பிரதிநித்துவ பணிக்காலம் முடிந்துவிடும் என்பதுதான் உண்மை நிலவரமாகும். 
கிராமிய வங்கிகள் வழங்கும் கடனின் அளவு குறைவாக இருந்தாலும் (Small 
ticket loans)  பயனாளிகளின் எண்ணிக்கை மிக அதிகம். எனவே, கடன் மேற்பார்வை மற்றும் வசூல் நிர்வாகம் (Credit monitoring and recovery) சற்று கடினமானதுதான். அதற்குத் தேவையான பணியாளர்களும் போதிய அளவில் இல்லை என்பது ஒரு பலவீனமான அம்சமாகும். இதனால், அவற்றின் வாராக்கடன்கள் வளர்வதற்கான அபாயம் உள்ளது.
கிராமிய வங்கிகளுக்கு தேவையான பணியாளர்கள், வங்கி பணியாளர் தேர்வு மையத்தால் (Institute of banking personnel selection board)  தேர்வு செய்யப்பட்டு, பிராந்திய கிராமிய வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும் பணியாளர்களுக்கு மொழி ஒரு பிரச்னை ஆகிறது. எனவே, பணியாளர்கள், கிராமிய மக்களோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள இயலவில்லை. எனவே, குறிப்பிட்ட பிராந்தியத்தின் மொழி தெரிந்தவர்களே அந்த பிராந்தியத்தைச் சார்ந்த கிராமிய வங்கி பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்துவதுதான் இதற்குத் தீர்வு. 
மேலும், கவர்ந்திழுக்கும் ஊதிய அளவினால், பொறியியல் மற்றும் நிர்வாக இயல் பட்டதாரிகள் பலர் கிராமிய வங்கி பணியை நாடிச் செல்கிறார்கள். அவர்களுக்கு, கிராமிய வங்கிப் பணியில் முழு திருப்தி கிடைக்க வாய்ப்பில்லை. அந்த பணியை ஒரு படிக்கட்டாக வைத்துக் கொண்டு, புதிய பணிகளை தேடிச் செல்லும் நாட்டத்திலேயே அவர்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆகையால், விவசாயப் பட்டப்படிப்பு படித்தவர்களையே அதிக எண்ணிக்கையில் இம்மாதிரி பணிகளுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும். 
பொதுத்துறை வங்கிகள் போல் அல்லாமல், குறைந்த செலவில் இயங்கும் கிராமிய வங்கிகள், நாளடைவில் பெருத்த நஷ்ட கணக்குகளைக் காட்ட தொடங்கின. கிராமிய வங்கி ஊழியர்களின் சம்பள விகிதம் பொதுத்துறை வங்கிகளுக்கு இணையாக மாற்றி அமைக்கப்பட்டது அதற்கு ஒரு காரணம். ஆனால், பொதுத்துறை வங்கிகளின் அளவுக்கு அவற்றால் வணிகம் செய்ய முடியவில்லை என்பதால் அவற்றின் வரவுக்கும் செலவுக்குமான இடைவெளி தொடர்ந்து அதிகரித்தது எனலாம். 
குறைபாடுகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், கிராமப்புற வங்கிச் சேவைகளை மேம்படுத்த, கிராமிய வங்கிகளின் பங்கு இன்றியமையாததாகும். அவற்றின் செயல்பாடுகளில் காணப்படும் குறைகளைக் களைந்து, அவற்றை வலுவான கிராமப்புற நிதி அமைப்புகளாக மாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT