நடுப்பக்கக் கட்டுரைகள்

சிற்றூர்கள் சேர்ந்து உருவான நகரம்!

சென்னை! இது தமிழ்நாட்டின் தலைநகர் மட்டுமல்ல, உலகத் தமிழர்களின் பண்பாட்டு மையம்; உலக அளவில் 35-ஆவது பெரிய நகரம்;

பாரதிபாலன்

சென்னை! இது தமிழ்நாட்டின் தலைநகர் மட்டுமல்ல, உலகத் தமிழர்களின் பண்பாட்டு மையம்; உலக அளவில் 35-ஆவது பெரிய நகரம்; இந்தியாவில் நான்காவது பெரிய நகரம்; யுனெஸ்கோவின் பாரம்பரிய இசையைப் பாதுகாக்கும் நகரங்களின் பட்டியலில் இடம் பெற்ற நகரம் - இப்படிப் பல்வேறு சிறப்புகளையும் பெற்றுள்ளது நம் சென்னை. 
விஜயநகரப் பேரசின் வழிவந்த சந்திரகிரி இரண்டாம் வெங்கட்டாவின் தளபதியாக இருந்தவர், தாமல் சென்னப்ப நாயக்கர். இவர் வந்தவாசியைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு சிற்றரசராகச் செயல்பட்டு வந்தார். இவருக்குக் கீழே தாமல் ஐயப்ப நாயக்கர், பூந்தமல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தார் (இவர் பெயரில் அமைந்தது தான் போரூருக்கு அருகில் உள்ள ஐயப்பன்தாங்கல்). 
தாமல் சென்னப்ப நாயக்கருக்குப் பின்னர் அவரது மகன் வெங்கடப்ப நாயக்கர் பாளையக்காரராக இருந்துள்ளார். அவரிடம் இருந்துதான் பிரான்சிஸ் டே என்பவர் தற்போது தலைமைச் செயலகம் அமைந்துள்ள பகுதியை 1639 ஆகஸ்ட் 22 அன்று பத்திரம் எழுதிப் பெற்றுள்ளார்.
அந்தப் பகுதியில்தான் பிரிட்டிஷ்கார்கள், செயின்ட் ஜார்ஜ் கோட்டையை 1640-இல் கட்டினர். அதுவே மெட்ராஸ் நகரம் உருவாக அடித்தளமாக அமைந்தது. இதன் அடிப்படையில், பிரான்சிஸ் டே அந்த நிலத்தைப் பத்திரம் எழுதிப் பெற்ற ஆகஸ்ட் 22-ஆம் தேதியை ஒவ்வோர் ஆண்டும் சென்னை தின'மாகக் கொண்டாடுகின்றனர். அப்படிப் பார்த்தால், தற்போது சென்னை நகருக்கு வயது 379. 
பிரான்சிஸ் டே அந்த நிலத்தை வாங்க வெங்கடப்ப நாயக்கரிடம் பேரம் பேசியபோது, அவர் தன் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை, புதிதாக அமைய உள்ள குடியிருப்பிற்குச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நிலத்தை, பட்டா எழுதிக் கொடுத்ததனால் சென்னப் பட்டணம்' என பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. 
பிரான்சிஸ் டே புதிய குடியிருப்புப் பகுதியை உருவாக்கிய காலத்தில் அப்பகுதியைத் தவிர, அதாவது தற்போது தலைமைச் செயலகம் அமைந்துள்ள பகுதியைத் தவிர, மற்ற பகுதிகள் பெரும்பாலும் வனப் பகுதிகளாகவும், வேளாண்மை நிலங்களாகவும் இருந்துள்ளன. எழும்பூர் (ஏழு சிற்றூர்களைக் கொண்ட பகுதி - எழுப்பூர்), சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், திருவொற்றியூர், திருவல்லிக்கேணி (திரு-அல்லி-கேணி), சாந்தோம், மயிலாப்பூர், திருவான்மியூர், போன்றவை 19-ஆம் நூற்றாண்டிற்கு முன்னதாகவே சிறு சிறு குடியிருப்புகளாக இருந்துள்ளன. தற்போதைய அண்ணா சாலை (மவுன்ட் ரோடு') மலைப்பாதையாக (செயின்ட் தாமஸ் மவுன்டுக்குச் செல்லும் பாதையாக) இருந்துள்ளது. 1726-இல் தான் இது போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மதராஸ், பல சிற்றூர்களைத் தன்னோடு இணைத்துக் கொண்டு வளர்ச்சி அடைந்துள்ளது. தெற்கே அடையாற்றில் இருந்து வடக்கே திருவொற்றியூர் கிராமத்திற்கு ஒரு மைல் தூரம் வரை - அதாவது 27 சதுர மைல் மெட்ராஸ் விரிவடைந்து இருந்ததாக 1939 -இன் நகராட்சி ஆவணம் குறிப்பிடுகிறது. தொடக்கத்தில் மதராஸ் நீதிமன்றத்தின் அதிகார வரம்பு பத்து மைல் தொலைவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது நெல், வாழை, கரும்பு, காய்கறிகள் விளைந்து கொண்டிருந்த வயல்வெளியில் ( இன்றைய தேனாம்பேட்டை) ரிச்சர்ட் எல்டாம் என்னும் வணிகர், அரை ஏக்கர் நிலம் வாங்கி லஸ் இல்லம்' என்று ஒரு வீட்டைக் கட்டினார். தற்போது உள்ள எல்டாம் சாலை' இவர் பெயரைத்தான் தாங்கியுள்ளது. 1801-இல் இவர் மதராஸ் மேயராகவும் இருந்தார்.
நந்தவனம் (இன்றைய நந்தனம்) பகுதியில் தாடு(TODD) என்ற வேட்டைக்கார் வன இல்லம் அமைத்து இருந்ததாகத் தெரிகிறது. தற்போது சைதாப்பேட்டையில் உள்ள தாடண்ட நகர்' (Todd Hunter) இவரின் பெயரைக் கொண்டது தான். புதுப்பாக்கத்தில் வந்த முதல் குடியிருப்பு மெக்கே தோட்டம்'. இதை உருவாக்கியவர் ஜார்ஜ் மெக்கே. இவர் 1738-இல் புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்து சேர்ந்த வணிகர். இவர் 1756-இல் மதராசின் மேயரானார். ஜேம்ஸ் டெய்லர் என்ற அரசு ஊழியர், அரசு வேலையை விட்டு விட்டு முழுநேர வணிகர் ஆனவர். 1764-இல் கீழ்ப்பாக்கம் பகுதியில் அரசிடம் 99 வருடத்திற்கு ஒரு தோட்டத்தை குத்தைக்கு எடுத்துப் பெரிய தோட்ட இல்லம் அமைத்துக் குடியிருந்தார். தற்போது உள்ள டெய்லர்ஸ் சாலை' இவருடைய பெயரில் அமைந்தது தான்.
1820-இல் வில்லியம் மான்டியத் என்ற புகழ்பெற்ற பொறியாளரின் தோட்ட இல்லம் அமைந்த பகுதிதான் தற்போது மான்டியத் சாலை' என வழங்கப்படுகிறது. வாலாஜா நவாபுக்கு மதராசில் 37 தோட்ட இல்லங்கள் இருந்தன.
1651-ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி முகவர் கீன்கில் என்பவர் பரங்கிமலை' பகுதியை வேட்டைப் பறவைகளைப் பழக்கப் பயன்படுத்தினார். 1685-இல் உடல்நலம் குன்றியவர்களைத் தேற்றுவதற்காக கும்பெனியர் இப்பகுதியைப் பயன்படுத்தினர். 17-ஆம் நூற்றாண்டில்தான் இப்பகுதியில் வீட்டுமனைகள் உருவாகின.
அரசு ஊழியர்களான ஜான் பின்னி, கேப்டன் பட்டுலோ, ஜேம்ஸ் பிராடி, ஜான் ஒயிட், எட்வார்ட் உட் பொறியாளர் வில்லியம் ஜெனரரால் ஹோமில்ட்டன் ஹால், கோசா மேஜர் போன்றவர்கள் தனித்தனியே தாங்கள் விரும்பிய இடங்களில் தோட்ட இல்லங்களை உருவாக்கி தங்கியிருந்தனர். பின்னாளில் இவற்றை ஒட்டியே மக்கள் குடியிருப்புகள் உருவாயின.
ஆங்கிலேயர்கள் மதராசில் குடியேறி 79 ஆண்டுகளுக்குப் பின்பு இங்கு வந்த அலெக்சாண்டர் ஹேமில்ட்டன் என்ற கிழக்கிந்திய வணிகர் 1718-இல் சென்னப்பட்டணம் நான் பார்த்த ஊர்களிலேயே இடவசதியற்ற இடத்தில் அமைந்துள்ளது. இவ்விடத்தின் முன்புறம் கட்டுக்கடங்கா வேகத்தில் அலைவீசும் கடற்கரை உள்ளது. புனித ஜார்ஜ் கோட்டைக்குப் பின்னால் உப்பு நீர் ஓடும் ஆறு உள்ளது. இந்த ஆறு கோட்டைப் பகுதிக்குச் சுவையான நீர் வரும் ஊற்றுகளைத் தடுத்துவிடுகிறது. எனவே கோட்டையைச் சுற்றி குடிநீர் என்பதே இல்லை' என்று குறிப்பிட்டுள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அப்போது, இந்தக் குடிநீர் பிரச்சனை தீர கேப்டன் பேகர் என்ற ஆங்கிலப் பொறியாளரின் ஆலோசனைப்படி, இன்றைய மின்ட் பகுதியில் பத்து கிணறுகள் தோண்டப்பட்டன. அதில் ஏழு கிணறுகளில் ஊற்றுகள் நன்றாக இருந்தன. இதன் காரணமாக அப்பகுதிக்கு ஏழு கிணறு' என்ற பெயர் நிலைத்தது. 
தற்போது மாம்பலம் அமைந்துள்ள பகுதி மிகப் பெரிய குளமாக இருந்த இடம். கூவம் ஆற்றின் நீர் தெற்கே இதன் வழியாக வழிந்தோடி அமைந்தகரை அருகே அடையாற்றில் கலக்கும். 18-ஆம் நூற்றாண்டில் பீட்ரஸ் உஸ்ச்சன் என்ற ஆர்மேனிய வணிகர், தன்னுடைய சொந்தச் செலவில் அடையாற்றின் குறுக்கே, சைதாப்பேட்டை - கிண்டி இரு இடங்களையும் இணைக்க ஒரு பாலம் கட்டினார். அதை மர்மலாங் பாலம்' என்பர். 1898-இல் மன்றோ பாலத்தில் இருந்து நுங்கம்பாக்கம் செல்லும் ஒத்தையடிப் பாதை விரிவாக்கப்பட்டு நுங்கம்பாக்கம் சாலை அமைக்கப்பட்டது.
மதராசின் முதல் வரைபடத்தை 1710-இல் கவர்னர் பிட் வெளியிட்டார். அந்த வரைபடத்தில் முட்புதர்கள் அடர்ந்த தீவு ஒன்று காணப்படுகிறது (இன்றைய தீவுத்திடல்). 1775 வரைபடத்தில்தான் மதராசின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. 
1871-இல்தான் மதராஸ் நகரில் அறிவியல்பூர்வமான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி அன்றைய மக்கள்தொகை 3 லட்சத்து 97 ஆயிரத்து 552. (தற்போது சென்னையின் மக்கள்தொகை சுமார் ஒரு கோடியே 16 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.) 
மதராஸ் நகரின் போக்குவரத்து வசதிகளைப் பொருத்தவரை, மாட்டு வண்டி, குதிரை வண்டிகளுடன், 1895 முதல் 1953 வரை ட்ராம்' வண்டிகளும் பயன்பாட்டில் இருந்தன (1895-இல் லண்டன் நகரத்தில் கூட டிராம் வண்டிகள் இல்லை). தங்கச்சாலை, கடற்கரைச்சாலை, மவுன்ட்ரோடு, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட டிராம்' வண்டிகள் இயங்கின. இவை மணிக்கு ஏழு கிலோமீட்டர் வேகத்தில் சென்றன. மெட்ராஸ் எலக்ட்ரிசிடி சிஸ்டம்' என்ற நிறுவனம் தான் இதனை இயக்கியது. இன்றைய வேப்பேரி பகுதியில் டிராம் வண்டிகளின் ஷெட்' இருந்தது (அந்த இடம் இன்றைய பெரியார் திடல்).
1832-இல் பிரித்தானிய நிர்வாகம் ரயில் வண்டிக்கான தடத்தை, மதராசில் நிறுவியது. இதன் அடுத்த கட்டமாக சென்னையின் முதல் ரயில் நிலையம் (இந்தியாவில் இரண்டாவது) ராயபுரத்தில் 1853-இல் அமைக்கப்பட்டது. இதனை அடுத்தது பார்க் டவுன்' ரயில் நிலையம் அமைந்தது. தற்போது உள்ள எழும்பூர் ரயில் நிலையம் எழும்பூர் ரெடோ' என்ற பெயரில் வெடி பொருட்கள் பதுக்கி வைக்கும் இடமாக இருந்தது. இது 2.5 ஏக்கர் பரப்பளவு, இதில் 1.7 ஏக்கர் நிலம் டாக்டர் பால் ஆன்டி என்பவரிடம் இருந்து ஒரு லட்ச ரூபாய் கொடுத்துப் பெறப்பட்டது. சென்ரல் இரயில் நிலையம் 1873-லும் எழும்பூர் ரயில் நிலையம் 1908-லும் திறக்கப்பட்டன.
சென்னையில் உள்ள உயர்நீதிமன்றம், சட்டக் கல்லூரி, எழும்பூர் கவின் கலைக் கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்ற பல புகழ்பெற்ற கட்டடங்களை உருவாக்கிய பொறியாளர், தாட்டிக்கொண்ட நம்பெருமாள் செட்டியார் என்பவர். இவர், தனது சொந்தப் பயன்பாட்டிற்காக நாலு பெட்டிகள் கொண்ட ஒரு தனி ரயிலே வைத்திருந்தார். 
பேருந்துப் போக்குவரத்தை 1925 முதல் 1928 வரை The Madras Tramway Corporation என்ற நிறுவனம் ஏற்படுத்தித் தந்தது. பின்னர் 1939 சட்டப்படி தனியார் பேருந்துகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன. 1895 -இல் மதராசில் முதல் மின்சார ரயில் இயக்கப்பட்டது.
மதராஸ் நகரமைப்பு திட்டமிடலுக்கு மூலகாரணமாக இருந்தவர் 1912-இல் மதராஸ் கவர்னராக இருந்த லார்ட் பென்ட் லான்ட், இவர் பாட்ரிக் கெட்டெஸ் என்ற பிரபல ஆங்கிலேயே நகர வடிவமைப்பு நிபுணரை அழைத்துவந்து, மதராசின் சுற்றுப்புறத்தில் உள்ள வரன்முறையற்ற நகரமைப்பை சீர் செய்ய முயன்றார். 1915 ஆம் ஆண்டில் எச்.வி.லான்செஸ்டர் என்பவர் நகரமைப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 
அவர் ஐரோப்பிய நகரங்களை மாதிரியாகக் கொண்டு சில திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். பின்னர் 1920-இல் பிரபல நகர வடிவமைப்புப் பொறியாளர் கெட்டெஸ் மற்றும் லான் செஸ்டரின் அயராத முயற்சியால் மதராஸ் நகரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள்தொகைப் பெருக்கமும், கட்டுப்பாடு இல்லாத வாகனப் பெருக்கமும், முறைப்படுத்தப்படாத நகர விரிவாக்கமும் சென்னை நகரின் சீரான வளர்ச்சிக்கு சிக்கலாக உள்ளன. 
சென்னை நகர் அபரிமிதமாக வளர்ந்துள்ளது. ஆனால் மக்கள் வளமாகவும் நலமாகவும் வாழுவதற்கு ஏற்ப அது சீராக அமைந்துள்ளதா என்பது சிந்தனைக்குரியது.

இன்று (ஆக. 22) சென்னை நாள்.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநாட்டுத் திடலில் குவிய ஆரம்பித்த தவெக தொண்டர்கள்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Vijay | Madurai

"நீ அரியணை ஏறும் நாள் வரும்": ஷோபா சந்திரசேகர் வாழ்த்து!

இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும்: ரஷியா அறிவிப்பு

தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!

தங்கம் விலை அதிரடியாக உயர்வு! எவ்வளவு?

SCROLL FOR NEXT