முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?

இன்றைய இந்தியர்களில் சிலரிடம் இந்தியா குறித்து தாழ்வு மனப்பான்மை நிலவுகிறது. இது நாளடைவில் வளர்வதற்குக் காரணம், பலர் எதிர்மறைச் சிந்தனையாளராக உள்ளதுதான்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

இன்றைய இந்தியர்களில் சிலரிடம் இந்தியா குறித்து தாழ்வு மனப்பான்மை நிலவுகிறது. இது நாளடைவில் வளர்வதற்குக் காரணம், பலர் எதிர்மறைச் சிந்தனையாளராக உள்ளதுதான். இவர்கள் எப்போதும் எதையாவது எதிர்த்துக்கொண்டே இருப்பதும், பிறரைக் குறைசொல்லிக்கொண்டே இருப்பதும் கடமையாகக் கொண்டிருப்பார்கள். இப்படியான எதிர்மறை மனிதர்களிடம் இருந்து நாம் சற்று விலகியிருந்தாலே போதும். 
எண்ணம்தான் வாழ்க்கையாகிறது. நமது எண்ணத்தில் எப்போதும் நேர்மறையான எண்ணங்கள் மற்றும் சந்திக்கும் நபர்களின் நேர்மையான போக்கு ஆகியவை தற்கால தேவைகள். இவ்வளவு மக்கள் தொகை இருக்கிறது நம்மால் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம்கூட வாங்க முடியவில்லை எனப் புலம்பிக் கொண்டிருந்தார்கள். 
அடுத்தடுத்து பதக்கங்கள் வாங்க ஆரம்பித்தவுடன், இவ்வளவு பெரிய நாட்டிலிருந்து இவ்வளவு வீரர்கள் பங்கேற்று சில பதக்கங்கள் மட்டுமே பெறமுடிந்தது எனக் கேலி பேசுவார்கள்.
ஒவ்வொரு மனிதனும் அவன் வாழும் நாட்டைப் பற்றி முழுமையாக முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். 
நாட்டின் பழைமை, பண்பாடு, நாகரிகம், வரலாறு மற்றும் பூகோள அமைப்பு ஆகியன குறித்தும், நாட்டின் வளங்கள் என்னென்ன என்றும் அறிந்திருக்க வேண்டும். இவற்றை எல்லாம் முறையாகப் புரிந்திருந்தால், நமக்கு வெளிநாடு மீதான மோகம் குறைந்திருக்கும். இதை விடுத்து ஏதாவது ஒரு வெளிநாட்டிற்குச் சென்று வந்து அந்த நாட்டைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? என்கிற கவிஞர் அ. மருதகாசியின் பாடல் வரி பலருக்கும் நினைவிருக்கலாம். பெரும்பாலோர் இந்தியாவிலிருந்து என்னென்ன பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பதும், வெளிநாட்டினர் செய்த முதலீடுகள் குறித்தும், வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டிபோட்டு இந்தியாவில் நிறுவனங்களைத் தொடங்குவதன் காரணத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும். 
தனிமனித வருமானம் என்பது பலமடங்கு உயர்ந்துள்ளது. விலைவாசி எனும் பொருள்களின் விலையும் அதிகரிக்கத்தான் செய்துள்ளது. மக்கள் தொகை அதிகமாவதால், அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளான உணவு, இருப்பிடம், ஆடை, கல்வி என பலவற்றையும் சமாளிக்க வேண்டியுள்ளது. 
இந்தியாவில் என்னென்ன பொருள்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளன; இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் எந்தெந்த மாநிலங்களில் சிறப்பாக நடைபெறுகிறது; வர்த்தகம் வளர அரசாங்கம் செய்கின்ற உதவிகள் என்னென்ன ஆகியன குறித்தும் இந்தியாவிற்கு எதிரான பெரும்பாலான விமர்சகர்களுக்குத் தெரிவதில்லை.
முற்போக்குவாதிகள் எனச் சிலர் வெளியிடும் அறிக்கை மற்றும் பிரசாரம் காரணமாகப் பொதுமக்களிடம் உண்மையானசெய்திகள், அறிவிப்புகள், வளர்ச்சி குறித்தான செய்திகள் சென்று சேர்வதில்லை. இதனால், இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை இதனால், தங்கள் கூட்டங்களில் பரப்பி வருகின்றனர். 
எந்தெந்தத் துறைகளில் இந்தியா அசுர வளர்ச்சி கண்டுள்ளது என்பதைப் பட்டியலிட்டால், பக்கங்கள் போதாது. எனவே, குறிப்பிடத்தக்க வளர்ச்சி குறித்து மேலோட்டமாகக் குறிப்பிட வேண்டுமெனில், தொழிற்சாலை தயாரிப்புகள், 
ஜவுளி பொருள்கள், மின் சாதனங்கள், பின்னலாடை பொருள்கள், இயந்திரங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளையும் பரவலாகக் கொண்டு செல்ல வேண்டும்.
இந்தியாவின் பெருமையை ஒவ்வோர் இந்தியனும் மனதில் கொள்ளவேண்டும். நம்மைப் போன்றதொரு நேர்மறை எண்ணம் கொண்ட நாட்டின் வளர்ச்சி என்பது நாட்டை எப்போதும் பிற நாடுகள் மத்தியில் மதிப்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ள உதவும். 
சுற்றியுள்ள எதிரி நாடுகள் இந்தியாவிற்கு எந்த விதத்தில் தொந்தரவு தரலாம் என்கிற தவறான சிந்தனையுடன் செயல்படுகின்றன. ஆனால், உண்மையான உழைப்பு என்றும் தோற்காது. நமக்கும் முன்பாக சுதந்திரம் பெற்ற பல நாடுகள் இன்னும்கூட சரியான வழிகாட்டுதலின்றி இருக்கின்றன. ஆனால், இந்தியா எத்தனையோ அந்நியப் படையெடுப்பு களையும் தாண்டி, நேர்மையான பாதையில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். அதற்குப் பலவிதமான தடைகள் இப்போது உள்ளன. அதைத் தகர்த்து நேர்மறை எண்ணங்களுடன் செயல்பட்டால் இயற்கையும் நமக்கு வழிவகுக்கும். பல நாடுகளுக்குப் பல விதங்களில் முன்னுதாரணமாக இந்தியா விளங்கி வருகிறது.
நமது கடமை என்னவென்றால், இந்திய நாட்டின் பெருமையை மனதில் கொண்டு இயன்றவரை உழைத்து வாழவேண்டும். நமது நாட்டின் ஏதாவது பொருள்கள் குறையாக இருக்கலாம். ஏதாவது உற்பத்திக் குறைவாக இருக்கலாம். அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அந்தக் குறையைக் களைவதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனிமேலாவது ஒவ்வோர் இந்தியனும் இந்தியா எனது தாய்நாடு என்கிற மரியாதையை மனதில் வைத்து செயல்பட்டால் நல்லது. நீர்வளம், கனிம வளம், மனித வளம், பிற இயற்கை வளங்கள், தொழில் வளங்கள், விவசாயம், கல்வி, மருத்துவம், கட்டுமானம் என பலவித சிறப்பான அம்சங்களுடன் இந்தியா தனக்கான முன்னேற்றத்தை உறுதிப்படுத்தி வருகிறது. 
வெளிநாட்டு மோகம் கொண்டு பயணிக்கிற மனிதர்களால் இந்தியாவிற்குப் பயன் ஏதுமில்லை. என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்; ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? என்கிற பாடல் வரிகளைப் போல இருக்கின்ற வளங்களை சிறப்பான திட்டங்களுடன் செயல்படுத்தி, இந்தியாவின் வளர்ச்சியை மேலும் உறுதி செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments