நடுப்பக்கக் கட்டுரைகள்

அருந்தமிழ் வளர்த்த அயல்நாட்டவர்

அற்புத காந்தம் இரும்புத் துண்டுகளை ஈர்க்கின்றது. மதுமலர், விரும்பிவரும் தேனீக்களை அன்புடன் அழைக்கிறது.

தினமணி

அற்புத காந்தம் இரும்புத் துண்டுகளை ஈர்க்கின்றது. மதுமலர், விரும்பிவரும் தேனீக்களை அன்புடன் அழைக்கிறது. நிமிர்ந்து நிற்கும் நெடுமலை, உலவும் மேகங்களை மகிழ்வுடன் வரவேற்கிறது. தொன்மைச் செந்தமிழும் பன்னாட்டு அறிஞர்களைத் தன்பால் இழுக்கின்றது. இது நேற்று நடந்தது; இன்றும் நடக்கின்றது; என்றும் நடக்கும். கடந்த பல நூற்றாண்டுகளாக அயல்மொழி அறிஞர்கள் பலரும் தமிழுக்குப் பயன்தரும் தொண்டாற்றியிருக்கிறார்கள்.
 சீகன்பால்கு, கால்டுவெல், ஜி.யூ. போப், வீரமாமுனிவர் முதலியோர் முன்பு தமிழுக்குப் பெருந்தொண்டு புரிந்தார்கள். அவர்கள் வழியில் தமிழுக்கு அயல்மொழித் தமிழரின் அருந்தொண்டுகள் இன்றும் தொடர்கின்றன. அவற்றைத் தமிழர் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்; மனத்தில் போற்றவும் வேண்டும். அமெரிக்காவின் ஜார்ஜ் ஹார்ட், ஷானன் சிஃபோர்டு, பிளேக் வெண்ட்வொர்த், பாலா ரிச்மன், டேவிட் சார்லஸ் பக் ஆகிய அறிஞர்கள் தமிழுக்கு ஆக்கம் சேர்த்திருக்கிறார்கள்.
 பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், தமிழ், வடமொழி இரண்டிலும் புலமை பெற்றவர். துளசிதாசர் முதல் மகாதேவி வர்மா வரை இந்தி மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களில் மனம் தோய்ந்தவர். தமிழ் தொன்மையான மொழி. இது செவ்வியல் மொழி (செம்மொழி) என்று அழுத்தமாக அறிவித்தவர். சங்க இலக்கியப் புதையலான புறநானூற்றுப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். இவருடைய துணைவியார் கெüசல்யா என்ற தமிழ் மங்கையாவார்.
 ஷானன் சிஃபோர்டு என்ற மாதரசி இசைத்துறை வல்லுநர். "நான் தமிழைக் காதலிக்கிறேன்' என்று அறிவித்த சாதனை நங்கை. இவர் எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை படைத்த "இரட்சண்ய யாத்ரிகம்' என்ற காப்பியத்தைப் படித்தார். அதன் சுவையில் மதி மயங்கினார். அத்துடன் நிற்கவில்லை. அந்நூலை ஆங்கிலத்தில் கொடுத்தார்.
 பிளேக் வெண்ட்வொர்த் என்ற அறிஞர் பிற்காலச் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் மாட்சிமையுடன் வாழ்ந்த புலவர்களை ஆங்கில உலகத்திற்கு அறிமுகம் செய்தார். புகழ்பெற்ற இரட்டைப் புலவர்கள், அந்தகக்கவி வீரராகவ முதலியார் முதலிய புலவர்களைப் பற்றி ஆய்வு செய்தார். ஒட்டக்கூத்தரின் பெருமையைத் தன் மண்ணில் நட்டார். தமிழகத்துச் சைவம் பற்றிய சிறப்பை, மொழிபெயர்ப்பு வானத்தில் பறக்க விட்டார்.
 பாலா ரிச்மன் என்பவர் பெண்பால் அறிஞர். இவருக்கு அருந்தமிழ் வல்லுநரான ஏ.கே. இராமாநுஜமே வழிகாட்டி. இவர் சங்கப் பாடல்களில் முங்கித் திளைத்தார். அவற்றைப் பொங்கல் புதுச்சோறு போல ஆங்கிலேயருக்கு அள்ளி அளித்தார். முந்நூறு வகையான இராமாயண நூல்கள் இருப்பதாக ஏ.கே. இராமாநுஜம் இவருக்குச் சொன்னார். அதைக் கேட்டு வியப்படைந்த இவர், இராமாயணத்தின் மேல் விருப்பம் கொண்டார். சிறப்புக்குரிய இராமாயண நாட்டுப்புறப் பாடல்களைத் தேடித் தொகுத்தார். அவற்றை வாடா மலர்மாலை ஆக்கினார். வாழ்க்கையில் ஏராளமான சோதனைகளை எதிர்கொண்டு, சிறப்பேந்திய இராமாயண நாயகி சீதையின் மேல் ரிச்மன் பேரார்வம் கொண்டார்.
 டேவிட் சார்லஸ் பக் என்பார் இசையின் பக்கம் சென்றவர். காரைக்குடி வீணை லட்சுமி அம்மாள் என்பவரிடம் வீணை இசை பயின்றார். இவர் "நற்றிணை'யைக் கற்றார். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். திரிகூட ராசப்பக் கவிராயரின் ஓங்கு புகழ் "குற்றாலக் குறவஞ்சி' நூலின் உயர்வை உணர்ந்தார். அதை மொழியாக்கம் செய்தார். "இறையனார் களவிய'லின் பெருமையை அறிந்தார். அதைத் தன் மொழியினர் தெரிந்துணரச் செய்தார். "மயில் நடனமாடியபோது' என்ற இவருடைய கட்டுரை தமிழரின் நடனக்கலை பற்றி விரிவாகவும் சிறப்பாகவும் எடுத்துரைக்கிறது.
 கனடா நாட்டு பிரெண்டா பெக் என்ற பெண்மணி தமிழ் மண்ணின் கண்மணியாகவே காட்சியளிக்கிறார். தமிழ் மகளைப்போல் புடவையை உடுத்துகிறார். இவர் தன் பெயரை "பிரிந்தா' என்று தமிழ்ப்படுத்திக் கூறுகிறார். இவருக்குப் பிடித்தமான தமிழ்த்தொடர் "போய்ட்டு வாங்க' என்பது. தன்னைப் பிரிந்து செல்பவர் மறுபடியும் தன்னிடம் வர வேண்டும் என்று அறிவிக்கும் சிறந்த பண்பாட்டுத் தொடரை இவர் பெரிதும் பாராட்டுகிறார். மூன்று தலைமுறைக்குச் சான்றாக விளங்கும், கொங்கு மண்டலத்தின் புகழ்பெற்ற நாட்டுப்புறப்பாடல் கதையான "அண்ணன்மார் கதை'யை இவர் தேர்ந்தெடுத்தார். அது குறித்து ஆய்வு செய்தார். அந்தக் கதையை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்.
 ஆர்.இ. ஆஷரும், கிரிகோரி ஜேம்சும் இங்கிலாந்தின் தமிழ் அறிஞர்கள். ஆஷர் ஐரோப்பாவில் உள்ள 37 பல்கலைக்கழகங்களில் தமிழ் இலக்கியங்கள் பற்றிச் செற்பொழிவாற்றிய தலைமகன். அது மட்டுமல்ல, "தமிழ் உரைநடை வரலாற்றில் மைல் கற்கள்' என்ற நூலை எழுதியவர். ஆறுமுக நாவலர், "மனோன்மணீயம்' சுந்தரம் பிள்ளை, மு. வரதராசனார் முதலியவர்களை தன் நாட்டவருக்கு அறிமுகம் செயதவர்.
 கிரிகோரி ஜேம்ஸ், தமிழ் இலக்கணம் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டவர். கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் தமிழ் இலக்கணம் குறித்து கட்டுரை வாசித்தவர்.
 பிரான்சுவா குரோ என்பவர் ஃபிரான்சு நாட்டுத் தமிழர். இவர் பிற செம்மொழி இலக்கியங்களுடன் தமிழ் இலக்கியங்களை ஒப்பாய்வு செய்தார். "பரிபாட'லை பிரெஞ்சு மொழியில் பெயர்த்தார். "பண்ணாராய்ச்சி வித்தகர்' என்று அறியப்படும் குடந்தை ப.சுந்தரேசனார் மூலம் தமிழிசையின் பெருமையை அறிந்தார். காரைக்காலம்மையாரின் "அற்புதத் திருவந்தாதி' போன்ற பாடல்களை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தார். முதல் முதலில் குடவோலைத் தேர்தல் முறையை அறிவித்த உத்திரமேரூர் கல்வெட்டின் சிறப்பை உலகுக்கு வெளிப்படுத்தினார். பல தமிழ்ச் சிறுகதைகள் பற்றி மதிப்புரை வழங்கினார்.
 ஜெர்மனியின் தாமஸ் லோமன் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழாய்வு செய்து வருகிறார். ஏற்கெனவே, தமிழ்மொழியின் அமைப்பு, தற்காலத்தமிழ் இலக்கணம் முதலியவை பற்றி ஆய்வு செய்தார். இவர் தாமஸ் மால்டனுடன் இணைந்து சங்க இலக்கியச் சொல்லடைவை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. இவருடைய அன்புத் துணைவியார் ஷீலா என்ற தமிழ்மகளாவார். கே.ஜ. பெர்சா லுத்சி என்ற ஜெர்மானியப் பெண்மணி தூய தமிழில் பேசும் திறமை மிக்கவர். இவர் தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றி ஆய்வு செய்தவர். புதுமைப்பித்தன், லா.ச.ரா., ராஜம் கிருஷ்ணன் முதலியோரின் நூல்களை மதிப்புரை செய்தவர். தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு மிகுதி என்று உணர்ந்து அதைத் தனது நூலில் பதிவு செய்தவர். உல்ரிக் நிக்கோலஸ் என்ற மற்றொரு ஜெர்மானிய மங்கையும் தமிழ்த் தொண்டு புரிந்து வருகிறார். இவர் "யாப்பருங்கலக் காரிகை'யை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்துள்ளார். "தொல்காப்பிய'த்திலுள்ள அகப்பொருள், வாழ்வியல் பகுதிகள் போன்று வேறு எந்த மொழியிலும் எந்த நூலிலும் இல்லை என்று அறுதியிட்டுக் கூறயவர். ஒரு தமிழரைத் திருமணம் செய்து கொண்ட இவர் கோவை செம்மொழி மாநாட்டில் ""நான் தமிழ்நாட்டு மருமகள்' என்று பெருமையுடன் தெரிவித்தார். ஈவா வில்டன் என்ற இன்னொரு ஜெர்மானிய மாதரசியும் தமிழறிஞர்தான். இவர் சங்க இலக்கியங்கள்குறித்துஆய்வு மேற்கொண்டார். "குறுந்தொகை'யைப் பதிப்பித்தார். "நற்றிணை'க்கும் சிறந்த ஆய்வுரை ஒன்றை அளித்திருக்கிறார். மேலும், பிரான்சு நாட்டு தமிழறிஞரான செவியா என்பவருடன் இணைந்து "அகநானூ'ற்றையும் பதிப்பித்தார்.
 பின்லாந்து நாட்டு அஸ்கோ பர்ப்போலா, சிந்துவெளி நாகரிகம் குறித்த ஆய்வை மேற்கொண்டவர். அது தமிழருக்கே உரியது என்று ஆணித்தரமாக அறிவித்தார். சிந்துவெளி மக்களுக்கும் மெசபடோமிய (சுமேரிய) மக்களுக்கும் தொடர்பு இருந்தது என்று தெரிவித்தார். இவர் திருக்குறளை ஃபின்னிஷ் மொழியில் பெயர்த்தார். டென்மார்க்கைச் சேர்ந்த மைக்கேல் ஸ்டாம் சைவசித்தாந்தத்தின் மேல் ஆர்வம் கொண்டார். இவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் படித்தார். சைவசித்தாந்தம், நியாய மீமாம்சம் ஆகியவற்றை ஒப்பீடு செய்தார். பத்திரகிரியாரின் அறக்கொள்கைகளையும் போற்றினார்.
 மோனிக்கா டோர்னா என்ற நங்கை ஸ்லோவாக்கிய நாட்டின் தமிழறிஞர். இவர் கருநாடக இசையில் தோய்ந்தார். அத்துறையில் ஆய்வு செய்தார்; பட்டமும் பெற்றார். தமிழிலும் ஹங்கேரி மொழியிலும் உள்ள திருமணப் பாடல்களை ஒப்பாய்வு செய்தார். 2000 இந்திய நாட்டுப்புறப் பாடல்களை இவர் சேகரித்து, ஆய்வு மேற்கொண்டார்.
 நெதர்லாந்தின் ரூஸ்கெரிட் சென் தமிழரின் திருமண முறைபற்றி ஆய்வு நிகழ்த்தினார். இவர் பல கோயில்களுக்கும் சென்றார். இந்திய நகரமைப்பு, குறிப்பாக, தமிழ் நகரமைப்பு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்று அறிவித்தார்.
 இத்தாலியின் கிறிஸ்டியானா முர்ரே, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் தெளிவான இலக்கணம் பெற்றதனால் அது இனிமையான மொழியாக உள்ளது என்றார். அதே இத்தாலி நாட்டு இராபர்ட்டோ கலசோ வேத விற்பன்னர். வேத, புராண கதைகளைத் தமிழில் வெளியிட்டவர். இந்தியாவுக்குள்ளேயே தமிழ்ப் பண்பாடு பற்றிச் சரியான அறிமுக நிலை இல்லை என்று இவர் வருத்தப்பட்டார்.
 ரஷியாவின் மாபெரும் தமிழறிஞர் அலெக்சாண்டர் துபியான்ஸ்கி "உலகின் பழைமையான மொழிகளில் தமிழ் முதன்மையானது' என்று அறிவித்தார். இவர் அகத்துறைப் பாடல்களில் ஆய்வு செய்தார். பாரதியின் தேசபக்திப் பாடல்களைத் தன் நாட்டவருக்கு அறிமுகம் செய்தார். தன் மாணவர்களையும் அழைத்து வந்து தமிழர்களுடன் பேசிப் பழகச் செய்தார். இவர் "பனை ஓலையில் பாடல்கள்' என்ற நூலை எழுதினார். கொரியாவின் தமிழறிஞர் ஜங் நாம் கிம் "கொரியத் தமிழ்ச்சங்கம்' நடத்துகிறார். கொரிய மொழியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் உள்ளன என்கிறார்.
 தற்காலத்தில் பயன்தரும் தொண்டு புரியும் அயல்மொழித் தமிழறிஞர்களுடன் தமிழ் மண்ணின் அறிஞர்களும் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களின் எண்ணமும் உழைப்பும் பொன்முடி சூடுவதற்கு உதவ முன்வரவேண்டும்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT