நடுப்பக்கக் கட்டுரைகள்

அற்றம் காக்கும் கருவியா? அச்சமூட்டும் கருவியா?

'ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, இருக்கும் மலைக்குகைகளுக்குள் ஏதேனும் ஒன்றில் பதுக்கப்பட்டிருக்கும் ஓர் இரத்தினத்தை எடுத்துக் கொண்டு எவன் வருகிறானோ, அவனுக்குத் தன் மகளை மணமுடித்து,

கிருங்கை சேதுபதி

'ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, இருக்கும் மலைக்குகைகளுக்குள் ஏதேனும் ஒன்றில் பதுக்கப்பட்டிருக்கும் ஓர் இரத்தினத்தை எடுத்துக் கொண்டு எவன் வருகிறானோ, அவனுக்குத் தன் மகளை மணமுடித்து, அரச பதவியும் அளிப்பான் மன்னன்' என்று பழைய சிறார் கதைகளில் விவரிக்கப்படும் காட்சி கற்பனை என்றுதான் இதுவரை நம்பியிருந்தோம். ஆனால், அண்மையில் நடந்தேறிய 'நீட்' தேர்வு அதனை மெய்யாக்கிவிடும்போல் இருக்கிறது. (இதிலும் பாருங்கள், ஆடவருக்குத்தான் இடம். பெண்டிருக்கு இத்தகு அறைகூவல்கள் இல்லை. அதுமட்டுமல்ல. இந்தச் சோதனையில் இறங்கி உயிர்விட்டவர்களையும், இன்னல்பட்டவர்களையும் கண்டுகொள்ளாமலேயே கதை நீளப்போகும்.)
இத்தனைக்கும் இத்தகு சாகசங்களைப் புரிந்து வென்றால்கூட, பணியோ, பதவியோ கிடைக்கப் போவதில்லை. மேலே பயில்வதற்காகத் தெரிவு செய்யப்படுவதற்குத்தான் இத்தனை பெரும்பாடு.
இனி எந்தக்குழந்தையும் விளையாட்டுக்குக்கூட, 'நான் மருத்துவராகப் போகிறேன்' என்று சொல்வதற்கு மிகவும் தயங்கும். பொறியியல் துறையின் நிலை இன்னும் சிரமம். 'இனி என்னவாகப்போகிறோமோ?' என்ற கவலை இளம் வயதிலேயே வந்துவிட்டால், வருங்கால பாரதத்தை வலுவாக்கும் மன உறுதியுள்ள இளைய பாரதம் எங்ஙனம் எழுச்சிபெறும் என்கிற கவலையும் அக்கறையும் நாட்டுநலனில் அக்கறையுள்ள அத்தனை நல்லுள்ளங்களுக்குள்ளும் எழுந்து இம்சித்துக்கொண்டே இருக்கிறது.
இந்த நாட்டில் வாக்காளரின்மீது காட்டப்படுகிற கரிசனம்கூட, வாழவேண்டிய இளங்குருத்துகளாகிய மாணவர்களின்மீது காட்டப்படவில்லையே என்று கவலைப்படுகிற நிலைதான் உள்ளது. ஓரிடத்தில் ஒரு வாக்காளர் இருந்தால்கூட, அங்கு தனி வாக்குச்சாவடி அமைத்து வாக்களிக்க வாய்ப்பளிக்கும் நாட்டில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மாணவர்களை எல்லை கடந்து சென்று தேர்வு எழுதவைப்பது எப்படி நியாயமாகும் என்று கேட்கிறவர்களின் குரலுக்கு எவ்வித மதிப்புமில்லை.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், உலக அளவில் தகுதியாளர்களைத் தெரிவுசெய்யும் தேர்வுகள்கூட வீட்டில் இருந்தே விடையளிக்கும்விதத்தில் நடத்தப்படுகிறபோது, சொந்த நாட்டில், சொந்த ஊரில் இருந்து படிக்க முயல்பவர்களுக்கு இத்தனை சோதனைகள் ஏன் என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை.
இந்த நேரத்தில், இத்தகு அவசரச்சூழலில் யாருடைய தூண்டுதலும் இன்றி தாமே முன்வந்து உதவிக்கரம் நீட்டிய உள்ளங்கள், இயக்கங்கள், அமைப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை. நன்றியோடு போற்றுதற்குரியவை.
பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்குத் தாமே முன்வந்து உணவும் குடிநீரும் உதவிகளும் புரிகிற தொண்டுக்கும் மேம்பட்டதாய் இது விளங்குகிறது. ஆனால், பயணிக்கும் பக்தர்கள் பெறுகிற நம்பிக்கையையும் உறுதியையும் இந்தப் பிள்ளைகள் பெறுவார்களா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.
இந்த நேரத்தில் இன்னொன்றையும் இதனோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.
இந்தி படித்தால் எதிர்காலம் என்கிற எண்ணத்தை வலுப்படுத்தும் இந்நாட்டில்தான் இந்தி பேசும் இளைஞர்கள் பலர் தமிழகத்தின் பல பெருநகர்களிலும் சிறுநகர்களிலும் அன்றாடக்கூலிக்கு வந்து அல்லல்படுகிறார்கள். மொழிதெரியாது அவர்கள் படுகிற துயர்களும், வேறு வழிதெரியாது அவர்கள் எதிர்கொள்கிற வறுமையும் இந்த நாட்டு எதிர்காலத்தின்மீது நம்பிக்கை கொள்வதற்குப் பதிலாக அச்சம் தருகிற நிலைப்பாட்டில் கொண்டுவந்து நிறுத்துவதைப் பார்க்கிறோம்.
'சில ஆயிரக்கணக்கான இடங்களுக்குப் பல லட்சக்கணக்கானவர்கள் போட்டியிடும்போது, மிகத்தகுதியானவர்களைத் தெரிவுசெய்ய நடப்பதுதான் தேர்வு என்று நம்புவதுகூட சரியல்ல. இது பல லட்சக்கணக்கானவர்களுக்குத் தாங்களே தகுதிகுறைந்தவர்கள் என்று நம்ப வைப்பதற்காக நடத்தப்படுகிற ஒரு சூது' என்று நண்பர் ஒருவர் சொன்னதை மறுக்கிற உறுதி எனக்கு இப்போது இல்லை.
தன்னிறைவு பெற்ற ஒரு நாட்டைக் கனவு காணும் நாம், தன்னம்பிக்கை குன்றியவர்களாக வளரும் தலைமுறையினரை ஆக்குவதற்கு முயற்சிப்பது எந்த வகையில் நியாயம்?
தேர்வுத்தாள், தேர்வு மையம், தேர்வு நடைபெறுகிற இடம் இவற்றையெல்லாம் விட, தேர்வு எழுதப்புகுமுன் நடத்தப்பட்ட சோதனைகள், மறுக்கப்பட்ட அடிப்படை மரபுசார் அடையாளங்கள் ஆகியவை மாணவர்களுக்கு எத்தகு மன உளைச்சலைத் தந்திருக்கக்கூடும் என்பதைத் தொடர்புடையோர் எண்ணிப்பார்க்க வேண்டாமா?
துணிச்சலாகத் தேர்வு எழுதக் கிளம்பியவர்களையும், துணைக்குப் போனவர்களையும் அவர்களுக்குத் தூண்டுதல் தந்து உதவியவர்களையும் மிகுந்த நன்றியோடு தமிழகம் நினைவுகூரும் வேளையில், அவ்வாறு சென்றவர்கள் அனுபவித்த கொடுமைகளைச் சொல்லாமலே உணர்ந்து கொண்டு தமக்குள் குமைகிற அவலத்தை எதனைக்கொண்டு மாற்ற இயலும்?
இனி வருங்காலத்தில் இருக்கிற நம்பிக்கையும் குறைந்துவிடாதிருக்க ஏது செய்ய இயலும்?
மொழி ஒரு கருவி என்றால், அது 'அற்றம் காக்கும் கருவி' என்று வள்ளுவர் காட்டும் அறநெறியில் துணையாக வேண்டுமே அல்லாமல், உயிர் பறிக்கும் கொலைக்கருவியாக, அச்சுறுத்தும் அபாயக்கருவியாக அதனை ஆக்குவதால் யாருக்கு என்ன பயன்?
'போட்டிகள் பொறாமையைத் தூண்டுவதாக இருக்கக்கூடாது' என்று கவலைப்பட்டவர்கள் எல்லாம், 'தன்னம்பிக்கையைக் குலைத்து உயிருக்கு உலை வைப்பதாக இருந்துவிடக்கூடாது' என்று எண்ணிக் கவலை கொள்கிற அளவுக்கு இத்தகு போக்குகள் வளர்ந்திருப்பது வருத்தமளிக்கிறது. எதிர்காலம் குறித்து அதிகமாகக் கவலை கொள்ள வைக்கிறது.
இந்தியாவின் ஆகப்பெரிய பலமே இந்த இளைய சக்திதான். ஒளிபடைத்த கண்களையும் உறுதிகொண்ட நெஞ்சினையும் களி படைத்த மொழியினையும், கடுமை கொண்ட தோளினையும் உடையவர்களாக இவர்களை எதிர்கொண்டழைத்த பாரதியின் வாக்குப் பாரதநாட்டில் பொய்யாகிப்போனால், வேறு எதனைக் கொண்டு இந்நாடு உய்யும்?
தேச வளர்ச்சிக்குத் தேர்வு முறை துணைசெய்வதை விடுத்து ஊறு செய்கிறது என்றால் அதற்கான மாற்று எதுவென்று அடையாளம் கண்டு நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என்று ஏன் உரியவர்களுக்குத் தோன்றவில்லை? இதற்கு வேறு சில அரசியல் காரணங்கள் உள்ளன என்று ஐயுறுவாரைக் குறைசொல்வது எதில் சேர்த்தி?
தமிழகத்தில் இருந்து, இத்தேர்வுக்கு விண்ணப்பித்தபோதும் சுமார் 5,000 பேர் தேர்வு எழுதச் செல்லவில்லை என்றொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதைப் புள்ளிவிவரமாக மட்டுமா பார்ப்பது? பிள்ளைகளின் எதிர்காலம் என்று ஏன் பார்க்கத்தோன்றவில்லை? வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை விலையேற்றம்போல் உயருமே ஒழியக் குறையும் என்று நம்பிக்கை கொள்ள முடியாத அளவிற்குத் துயர் தருவதாகவே இருக்கிறது.
'குழந்தைகள் மீதுள்ள அன்பினால், நீங்கள் உங்கள் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மூலம் அவர்களுக்குக் கற்பித்து, அவர்களிடமிருந்து மிகச்சிறந்த ஆற்றல்களை வெளிக்கொணர முனையும் அதே வேளையில், இத்தகைய பயிற்சியைப் பெறுவது செல்வந்தர்களின் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பரம ஏழைகளின் குழந்தைகளுக்கும் சாத்தியமானதாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்' என்றார் அண்ணல் காந்தியடிகள் (யங் இண்டியா, 19.11.1931).
அவரைத் தேசப்பிதாவாகக் கொண்டு வளரும் இந்த நாட்டில் ஏழைக்குழந்தைகள் எதிர்கால மேற்படிப்புக்குப் படும் சிரமங்கள் ஏற்புடையதுதானா என்பதைப் பாரபட்சமின்றி எண்ணிப் பார்க்கவேண்டியது பொறுப்பாளர்களின் கடப்பாடு அல்லவா?
கடைக்கோடி மக்களுக்கும் மேற்படிப்புக்குரிய கல்வி சென்று சேர வாய்ப்பில்லாமல் போகுமானால், இந்த நாடு விடுதலை பெற்றது என்று சொல்வதற்கு என்னதான் அடையாளம்?
'நாம் இன்றுவரை குழந்தைகளின் மனதில் பலவிதமான அறிவுகளையும் திணிப்பதில்தான் நம்முடைய சக்தியை எல்லாம் பயன்படுத்தி வருகிறோம். அவர்களுடைய மனதிற்கு உற்சாகம் ஊட்டவோ, மகிழ்ச்சியைப் பெருக்கவோ வேண்டும் என்று நாம் ஒரு பொழுதும் நினைத்ததில்லை' என்று அண்ணல்காந்தி அப்போது பட்ட கவலை இப்போதுகூட முற்றாக நீங்கிவிட வழிவகைசெய்யாமல் அதை அதிகரிக்கச் செய்வதில்தான் நம் வளர்ச்சி இருந்துகொண்டு இருக்கிறது.
அதுமட்டுமா? பெற்றோர்-பிள்ளைகள் உறவுக்கும் மேம்பட்டதான குரு - சீட மரபில் தழைக்கவேண்டிய ஆசிரிய - மாணவ உறவு, திருடர்- காவலர் முறைமையில் அரங்கேற்றப்படுவது அதிகரித்து வருகிறது.
இணைந்து செல்லவேண்டிய ஆற்றல்சார் இயக்கங்களான இவ்விரண்டையும் எதிர் எதிராகப் பகைபட நிறுத்திப் பார்ப்பதும், இப்போக்கினை வளர்ப்பதும் எதிர்கால இந்தியாவை ஒளிமயமாக்குதற்குப் பதிலாக, பகைமயமாகவும் பாதுகாப்புணர்வும் தன்னம்பிக்கையும் குன்றிய மனநோயாளிகளை உருவாக்கும் கூடமாகவும் ஆக்கிவிடும் என்பதை மிகைபடு கற்பனை என்று புறந்தள்ளிவிட முடியாது.
'வறுமையைக் கண்டு பயந்துவிடாதே- திறமை இருக்கு மறந்துவிடாதே' என்று பாப்பாவுக்குக் கூறிய பட்டுக்கோட்டையாரின் நம்பிக்கை பொய்த்துவிடாமல் காப்பாற்றவேண்டியது கல்வித் துறையினரின் கடப்பாடு. பொய்யும் திருட்டும் போயகலவேண்டுமெனில் மெய்யான திறனுக்குரிய வாய்ப்புகளின் வாசற்கதவுகள் தடையேதுமின்றி, அகலத் திறந்திருக்க வேண்டும். கையூட்டு முறைகேடுகள் கண்டிப்பாக இல்லாதிருக்க வழிசெய்யவேண்டும்.
இவற்றையெல்லாம் விட முக்கியமான ஒன்று. கல்வி என்பது வேலை வாய்ப்புக்கான வாயில் என்பதைக் கடந்து எதிர்கால வாழ்விற்கான தன்னம்பிக்கையையும் தகுதியையும் வளர்த்துக்கொள்ளும் உயரிய சாதனம் என்பதை ஒவ்வொருவரும் மனங்கொள்ளவேண்டும்.
கல்வி என்பது பிழைப்புக்கு வருவாய் தேடும் ஒரு வழி முறையோ செல்வம் ஈட்டும் ஒரு சாதனமோ அல்லவே. அது மெய்யை தேடுவதற்கும் அறநெறியைப் பயில்வதற்கும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையல்லவா?
அந்த நிலைப்பாட்டில், தன்னை உணர்ந்து தன் காலச்சூழலை உணர்ந்து தன்னை ஈன்று புறந்தந்த தாய்க்கும் தந்தைக்கும் ஆசானுக்கும் தாய்நாட்டிற்கும் சீரிய தொண்டாற்றுகிற இளைய பாரதத்தை வென்றெடுப்பதுதான் நமது இன்றியமையாத நோக்கமாக இருக்கவேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT