நடுப்பக்கக் கட்டுரைகள்

உயிரோடு விளையாடாதீர்கள்

DIN

அறிவியல் வளர்ச்சி எத்தனையெத்தனையோ புதிய புதிய வாசல்களைத் திறந்துவிட்டிருக்கிறது. புதிய புதிய வசதிகளை நாம் அனுபவிப்பதற்குத் துணை நிற்கிறது என்பதெல்லாம் உண்மையே. ஆனால், அந்த அறிவியலே சிலர் வாழ்க்கையை முடிக்கும் காலனாய் மாறிவிட்டதை என்னென்று சொல்வது?
 செல்லிடப்பேசி அறிமுகம் ஆன காலத்தில், இனி தகவல் தொடர்புக்குத் தடையே இல்லை என்று மகிழ்ந்தோம்.
 செல்லிடப்பேசியில், பேசுதல் மற்றும் குறுஞ்செய்தி அனுப்புதல் ஆகிய இரண்டு வசதிகள் மட்டுமே இருந்தபோது எல்லாம் நன்றாகவே இருந்தது. ஆனால், அதிலேயே இணையதள வசதி, புகைப்படம் எடுக்கும் வசதி என்றெல்லாம் வளர்ந்து, தன்னைத்தானே தற்படம் எடுத்துக் கொள்ளும் (செல்ஃபி) வசதியும் சேர்ந்து கொள்ள நிலைமை விபரீதமாகப் போய்விட்டது.
 தன்னைத் தானே படம் எடுத்துக்கொண்டு அதனைப் பிறருடன் கட்செவி அஞ்சல் மற்றும் முகநூல் மூலம் (செல்லிடப்பேசியிலேயே) பகிர்ந்துகொள்ள முடியும் என்றான பிறகு சிலர் ஆடுகின்ற ஆட்டம் இந்த உலகம் இதுவரை காணாத ஒன்றாகும்.
 உயிருக்கே ஆபத்தான இடங்களில் நின்றுகொண்டு தற்படம் எடுத்துக்கொண்டு அதைப் பதிவேற்றுவதில் ஒருவருக்கொருவர் போட்டியே நடக்கிறது.
 அனால், அது ஒன்றும் ஒலிம்பிக் போட்டியில்லையே, பதக்கம் கிடைப்பதற்கு! உயிரை அல்லவா அது பறித்துக் கொள்கிறது?
 உயர்ந்த அணைகளின் மீது நின்று கொண்டும், மலைச் சிகரங்களின் விளிம்பில் தொற்றிக்கொண்டும், கடல் மீது கட்டிய பாலங்களில் ஒட்டிக்கொண்டும், ஓடும் ரயில் வண்டியிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டும் தற்படம் எடுக்கும் பழக்கம் நூற்றுக் கணக்கான உயிர்களைப் பறிப்பதை அவ்வப்போது ஊடகங்களில் கண்டும்கூட, இந்த தற்படப் பைத்தியம் போகவில்லை.
 பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற "தசரா' விழாவில் நடைபெற்ற கோர ரயில் விபத்திலும் தற்பட மோகத்தின் கோரத் தாண்டவம் அரங்கேறியுள்ளதாகக் கூறுகின்றார்கள்.
 ரயில் தண்டவாளங்களுக்கு மிக அருகில் அமைந்த மைதானத்தில் தசரா விழாவை நடத்த ஏற்பாடு செய்தவர்கள், ரயில்வே துறையினருக்கு முன்னறிவிப்பு கொடுக்காத நிலையில், வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்வுகளை வேடிக்கை பார்த்த பொது மக்களில் பலரும் ஆபத்தை உணராமல் அருகில் இருந்த தண்டவாளங்களில் ஏறி நின்றுள்ளனர்.
 எதிர்பாராமல் அவ்வழியே விரைந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் அறுபதுக்கும் மேற்பட்டோர் ரயிலில் அடிபட்டுக் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரிழந்திருக்கின்றனர். அதிலும் பரிதாபத்துக்குரிய விஷயம் என்னவென்றால், ரயில் விரைந்து நெருங்குவதைக் கூட உணராமல் அங்கு நின்றிருந்த பலரும் தங்களது செல்லிடப்பேசிகளில் தற்படம் எடுத்துக்கொள்வதில் மும்முரமாக இருந்தார்களாம்.
 ஒருவேளை செல்லிடப்பேசியில் கவனம் செலுத்தாதிருந்தால், அவர்களில் பலரும் விரைவாகத் தண்டவாளத்தை விட்டுக் கீழிறங்கி இருக்கலாம் என்றும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்திருக்கும் என்றும் அந்த விபத்தை நேரில் பார்த்த சிலர் ஊடகங்களில் தெரிவித்திருக்கின்றார்கள்.
 அதைவிடக் கொடுமையானது என்னவென்றால், விபத்து நடந்த உடனே, விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவதில் ஈடுபடாமல், சிலர் அந்த விபத்தின் பின்னணியில் தங்களை தற்படம் எடுத்துப் பதிவிட முயற்சித்துக் கொண்டிருந்ததுதான்.
 இந்த தற்பட மோகம், உயிரைப் பறிப்பது மட்டும் அல்ல, பிறர் மரண அவஸ்தையில் இருக்கும் போது அதையும் படமெடுக்கும் அளவுக்கு மனிதாபிமானத்தையே வற்றச் செய்துவிடும் என்பது புரிகிறது.
 இதற்கு முன்னர் கூட இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
 2016- ஆம் ஆண்டு காவிரிப் பிரச்னை தொடர்பாக நடந்த கலவரங்களின்போது, பெங்களூரு நகரில் தீக்கிரையாக்கப்பட்ட வாகனம் ஒன்றின் முன்பு நின்றபடி தற்படம் எடுத்து மகிழ்ந்த இளைஞர்களின் புகைப்படம் ஒன்று ஊடகங்களில் உலா வந்தது. சாலையில் அடிபட்டுக் கிடப்பவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் தற்படம் எடுப்பவர்களைப் பற்றியும் செய்திகள் வரத்தான் செய்கின்றன.
 இது மட்டுமா?
 இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த வருபவர்களில் சிலர், இறந்தவரின் உடலை ஒட்டி நின்று கொண்டு தற்படம் எடுத்துக் கொள்வது இப்போது வழக்கமாகி வருகிறது.
 ஓரிரு வருடங்களுக்கு முன்பு, குஜராத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தன் மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, காட்டில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சிங்கம் ஒன்றின் அருகில் நின்று கொண்டு தற்படம் எடுத்து வலைதளங்களில் பதிவிட்டார். பலரது கண்டனத்திற்குப் பிறகு அதற்காக வருத்தமும் தெரிவித்துக் கொண்டார்.
 ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அந்தச் சிங்கம் சட்டென்று எழுந்துகொண்டு இவர்களைத் தாக்கியிருந்தால் என்னவாகியிருக்கும்?
 இப்போதும் கூட, ஊட்டி, கொடைக்கானல் மலைப்பாதைகளில் அவ்வப்போது குறுக்கிடும் யானைகள் உள்ளிட்ட விலங்குகளின் பின்னணியில் பலரும் தற்படம் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
 மின்சார ரயிலின் மீதேறி நின்று தற்படம் எடுத்துக் கொள்ள முயன்று, உயர் அழுத்த மின்சாரம் தாக்கிச் சிலர் பலியாகியிருக்கின்றார்கள்.
 இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?
 மது போதைக்கு ஆளானவர்கள் போன்று, இந்த தற்பட போதைக்கு நம் மக்கள் ஆளாகி இருக்கின்றார்கள். அதிலும், இளைய தலைமுறையினர் ஒருவித தற்பட வெறியுடன் உள்ளார்கள்.
 ஆபத்தான இடங்களில், "இவ்விடத்தில் தற்படம் எடுத்துக்கொள்ளக் கூடாது' என்று அரசுத் துறைகளின் சார்பில் அறிவிப்பு வைக்கத்தான் முடியும். ஆனால், சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது பொதுமக்களாகிய நம் கையில்தான் இருக்கிறது.
 ஓரிடத்தில் தற்படம் எடுத்துக் கொள்ள இயலாமல் போனால், ஆபத்தில்லாத மற்றோர் இடத்தில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஓரிடத்தில் தற்படம் எடுத்துக்கொள்ளும்போது உயிர் போய்விட்டால், இன்னோர் இடத்தில் அதனை மீட்க முடியுமா?
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT