அண்மையில் ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரத்தில் மிகப்பெரிய மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. ஒடிஸாவின் வளர்ச்சி - முன்னேற்றம் 2018 என்ற தலைப்பில் அந்த மாநாட்டில் விரிவான விவாதங்கள் நடைபெற்றன. அந்த மாநாட்டை மத்திய அரசோ, மாநில அரசோ நடத்தவில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு நடத்திய மிகப்பெரிய மாநாடு அது. ஆயினும், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பல பெருநிறுவனங்கள் இதற்கான பல்வேறு உதவிகளைச் செய்திருந்தன.
அகில இந்தியாவிலிருந்தும் பல்துறை வல்லுநர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றி பேசுவதற்காக நான் அழைக்கப்பட்டிருந்தேன். அதுபோல் பல்வேறு தலைப்புக்களில் முக்கியக் கருத்தை முன் வைப்பதற்கு ஒரு கருத்தாளரும், அதன்மேல் விவாதம் செய்வதற்கு சில வல்லுநர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஒடிஸா மாநிலத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலிருந்தும் உள்ளாட்சித் தலைவர்களும், அதிகாரிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவன பிரதிநிதிகளும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் என சுமார் 1800-க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கத்தில் பத்தொன்பது தலைப்புகளில் பத்தொன்பது இடங்களில் விவாதங்கள் நடைபெற்றன. அத்தனை இடங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆடம்பரம், அமர்க்களம், அரசியல் ஆரவாரம் இன்றி இந்த மாநாட்டை நடத்தியது அனைவரையும் ஈர்ப்பதாக இருந்தது. சால்வைகள், நினைவுப்பரிசு என்று எதுவும் ஆடம்பரமாக யாருக்கும் வழங்கப்படவில்லை.
மூன்று நாள்கள் நடைபெற்ற அம்மாநாட்டின் தொடக்க விழாவில் சமூக, பொருளாதார மேம்பாட்டில் ஒடிஸா இன்று எங்கே உள்ளது என்பது குறித்த புள்ளிவிவர அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் சமூக மேம்பாட்டு நிலை பற்றியும், வாழ்வாதாரச் சூழல்கள் பற்றியும், ஆதிவாசிகள், ஏழைகள்,பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் வாழ்நிலை பற்றியும் மிகவும் விரிவாக விவரிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை ஒரு குழு தயாரித்திருந்தது. இந்தக் கருத்தரங்குகளில், பன்னாட்டு நிதி நிறுவனங்கள், மத்திய அரசின் நீதி ஆயோக் மற்றும் அமைச்சகங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகள் என அத்தனை நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து விவாதத்தில் ஈடுபட்டிருந்தன.
அந்த விவாதத்திற்கு அடிப்படையாக, விஞ்ஞானபூர்வமாக திரட்டப்பட்ட புள்ளிவிவரங்கள், அரசு கைக்கொண்டுள்ள கொள்கைகள், நடைமுறைப்படுத்தும் திட்டங்கள், அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், சவால்கள் என்பன போன்றவை இருந்தன.
யார் மீதும் குற்றம் சுமத்தாமல், இந்தச் சூழலிலிருந்து மக்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடையதாக, அடிப்படை வசதிகளைக் கொண்டதாக, மரியாதையுடையதாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்றும், அந்த செயல்பாடுகளில் அரசு எப்படி இயங்க வேண்டும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்னனென்ன பணிகள் ஆற்ற வேண்டும், கல்வி நிறுவனங்கள் என்னென்ன பணிகள் ஆற்ற வேண்டும் என்றும் விவாதித்து ஒரு அறிக்கையைத் தயார் செய்தனர்.
இந்த விழாவைத் தொடக்கி வைத்து உரையாற்றியவர் மத்திய அமைச்சர் ஒருவர். அவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவராயினும், அவர் பேசும்போது, அந்த மாநில அரசு குறித்து எந்தக் குறையையும் கூறாமல், நாம் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்துள்ளோம், ஆனால், சமூக மேம்பாட்டில் பின்தங்கியுள்ளோம் என்று கூறியதோடு, ஒருவரையொருவர் குறைகூறுவதை விடுத்து, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எவ்வளவு நிதியை மத்திய அரசு தந்தாலும், எந்தக் கொள்கையை உருவாக்கினாலும், எந்தத் திட்டத்தை கொண்டு வந்தாலும் அதன் வெற்றி என்பது மாநில அரசின் செயல்பாட்டில்தான் உள்ளது என்றும் கூறினார்.
மேலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தங்களை அரசுடன் இணைத்துக் கொண்டு செயலாக்கத்தில் ஈடுபடவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். சமூக மேம்பாட்டிற்கு மக்கள் பங்களிப்பு அரசியல் பங்களிப்பைவிட எவ்வளவு முக்கியம் என்பதனை விளக்கிப் பேசிவிட்டு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மக்களை வளர்ச்சிச் செயல்பாடுகளில் பங்கேற்க வைக்க பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திவிட்டு தனது உரையை நிறைவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து நீதி ஆயோக்கின் துணைத்தலைவர் பேசும்போது ஒடிஸா மாநிலத்தின் சிறப்பினைப் பட்டியலிட்டார். எந்த மாநிலத்திலும் நடைபெறாத ஒரு நிகழ்வு ஒடிஸாவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த மாநிலத்தில் அனைத்துத் தன்னார்வ அமைப்புகளும் ஒன்றிணைந்து இப்படிப்பட்ட மாநாட்டை நடத்துவது குறிப்பிடத்தக்கதாகும். ஏனென்றால், நம் நாட்டில் நிலவி வரும் அரசியல் கலாசாரமானது, ஒருவரையொருவர் மதித்துப் போற்றி பொதுக்கருத்தை உருவாக்கி மக்களின் மேம்பாட்டுக்குத் தேவையானவற்றைச் செய்யக்கூடிய நிலையில் இல்லை. அதனால்தான், இங்கு நடக்கும் இந்த சமூக முன்னேற்றக் கருத்தரங்கம் அனைவராலும் பாராட்டப்படுகின்றது. எதிர்க்கருத்தை கூறுவோரை நாம் நிராகரிக்கக் கூடாது. அவர்களையும் நம் அரங்குக்கு அழைத்து அவர்களின் கருத்துகளையும் பெறுவதில்தான் நம் மன முதிர்ச்சி இருக்கின்றது. விமர்சனங்கள் எங்கிருந்து வந்தாலும் அவை வரவேற்கப்பட வேண்டும். விமர்சனம் என்பது இல்லாமல் எந்த சமூகமும் முன்னேற முடியாது. ஆரோக்கியமான விமர்சனங்களை நாம் எப்போதும் வரவேற்க வேண்டும். இந்த கலாசாரத்தை இந்தியாவில் ஒடிஸா மாநிலம் முன்னெடுத்துள்ளது. ஆகையால்தான் இப்படிப்பட்ட மாநாடுகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்த முடிகிறது.
இந்த வகையில் ஒடிஸா மாநிலம் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இன்றைய சூழலில் சமூக வளர்ச்சிக்கு பலவிதமான பங்குதாரார்கள் தேவைப்படுகிறார்கள். அரசு மட்டுமே மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுவிடும் என்று எண்ணிய காலம் போய்விட்டது. அரசு, சமூகம், சந்தை எல்லாம் இணைந்தால்தான் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.
அரசியலுக்கும், ஆட்சியைப் பிடிப்பதற்கும், தேர்தலை சந்திப்பதற்கும் எப்படி கூட்டணி முக்கியமானதோ, அதேபோல் சமூக வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் கூட்டணி முக்கியமானதாகும். இது நம் தலைவர்களுக்குத் தெரிய வேண்டும். நாம் ஒருவர் மீது மற்றொருவர் பரஸ்பரம் நம்பிக்கை வைக்க வேண்டும்; ஒருவரையொருவர் சந்தேகிக்கக்கூடாது.
அது போன்றே, மத்திய அரசு, மாநில அரசின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். மாநில அரசும் மத்திய அரசின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். மத்திய-மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகளின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள் அரசின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த நம்பிக்கையை வைத்து மக்கள் மூலதனத்தைக் கூட்ட வேண்டும். அப்படி மக்கள் மூலதனம் கூடிய மாநிலமாக ஒடிஸா திகழ்கிறது.
எந்த மாநிலத்திலும் இவ்வளவு அமைப்புகள் ஒன்றுகூடி மாநில மேம்பாட்டுக்கான கருத்தரங்கை நடத்தியதில்லை. ஒடிஸா மட்டுமே நடத்துகிறது. இது பாராட்டுக்குரியது. ஒடிஸாவிடமிருந்து மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. இதைப் பிற மாநிலங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
பொருளாதார மேம்பாட்டைச் செயல்படுத்தும் பணியை சந்தையும், அரசும் சேர்ந்து செய்துவிடும். ஆனால் சமூக மேம்பாடு என்பது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஈடுபாடு இல்லாமல் சாத்தியமில்லை. அரசியல் விவாதத்தைவிட சமூக முன்னேற்றத்திற்கான விவாதங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும். இதுதான் இன்றைய முக்கிய தேவை.
இன்றைய சூழலில் சுத்தம், சுகாதாரம், ஒழுக்கம் இவற்றுடன் தரமான கல்வியை எல்லாத்தரப்பு மக்களுக்கும் கிடைக்கச் செய்து விட்டால் நமது இந்தியா உலகுக்கே வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை என்று கூறி முடித்தார். அதனைத் தொடர்ந்து நடந்த கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில், ஒடிஸாவின் மேம்பாட்டுக்காக உடனடியாகச் செய்ய வேண்டிய பணிகள், உருவாக்க வேண்டிய கொள்கைகள், செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் என எல்லாவற்றையும் குறித்து விரிவாக அலசி ஓர் அறிக்கை தயார் செய்து அரசுக்கு அளிக்க முடிவு செய்தனர்.
கருத்தரங்கில் பங்கேற்கச் சென்ற எனக்கு ஒரே வியப்பு. அந்த நிகழ்வில் யாரும் யாரையும் குறை சொல்லவில்லை, குற்றம் சாட்டவில்லை. அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும்கூடப் பேசினார்கள். ஆனால் எவரும் தரம் தாழ்ந்து எந்த நிலையிலும் பேசவில்லை. சமூக முன்னேற்றத்திற்கு, என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றித்தான் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
அங்கு வந்த கருத்தாளர்களில் சிலர் விமர்சனங்களை வைத்தார்கள். அதிலும்கூட அம்மாநில அரசையோ, மத்திய அரசையோ குற்றம் சாட்டவில்லை. அதைப்பார்த்த எனக்கு அந்த மாநிலத்தில் அரசியல் என்பதே இல்லையோ என்றுகூட ஐயம் ஏற்பட்டது. அப்போது என் ஐயத்திற்கு விடையளிப்பது போல் ஒரு கருத்தாளர் கூறினார்:
இன்றைய அரசியல் போட்டிகள் அதிகாரத்தைப் பிடிக்க நடக்கும் செயல்பாடுகள். ஒரிஸ்ஸாவில் இன்றைய முதல்வர், அவரின் தந்தை இருவருக்கு நிகராக வேறு தலைமை எதுவும் உருவாகவில்லை. மேலும், இங்கு மற்ற மாநிலங்களில் நிலவும் காழ்ப்புணர்வு அரசியல் நிகழ்வுகள் நடைபெறுவது இல்லை. ஆகையால்தான் நம்மால் சுதந்திரமாக கருத்துகளை வைக்க முடிகிறது.
அதனைக் கேட்டதும், நம் தமிழ்நாட்டிலும் இப்படி நடந்தால் எவ்வளவு பெருமையாக இருக்கும் என்று என் மனம் ஏங்கியது.
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.