உடல்நலம் கெடுக்கும் உணவுகள்
முன்பெல்லாம் வாரம் ஒரு முறை அல்லது மாதம் இருமுறை என்று தான் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை உண்டு வந்தனர். ஆனால்,
முன்பெல்லாம் வாரம் ஒரு முறை அல்லது மாதம் இருமுறை என்று தான் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை உண்டு வந்தனர். ஆனால், இன்றோ தினமும் சுகாதார முறையில் தயாரிக்கப்பபடாத தெருவோரக் கடைகளின் அசைவ உணவு வகைகளை உண்டு பல விதமான நோய்களுக்கு இரையாகி வருகின்றனர்.
மக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையங்கள் அருகில் அசைவ உணவுக் கடைகள் பெருகி வருவது சமுதாயத்திற்கு பெரும் தீங்காக அமையும்.
அக்கடைகளிலிருந்து தூக்கி எறியப்படும் மாமிசக் கழிவுகளால் துர்நாற்றம் எங்கும் பரவி சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதோடு, அக்கழிவுகளைச் சுற்றி ஈக்களும், கொசுக்களும் மொய்த்து அவை மனிதர்களைக் கடிக்கும்போது நோய்த் தொற்று கிருமிகளைப் பரப்புகின்றன.
சிலர் சுகாதாரமற்ற அசைவ உணவு வகைகளை இட்டு தங்கள் வயிற்றைக் குப்பைக் கூடையாக மாற்றி வருகிறார்கள். புரதம், வைட்டமின், கனிமச் சத்து அறவே இல்லாமல், உப்பும், கொழுப்பும் கொண்ட உணவுகளை துரித உணவுகள் என வரையறுத்துள்ளது தேசிய உணவுக் கழகம். இந்த ஃபாஸ்ட்புட் எனப்படும் துரித உணவு காலசாரம் நகரப்பகுதிகளில் கிட்டத்தட்ட 80 சதவீதம் ஆக்கிரமித்து விட்டது. துரித உணவுக் கடைகளில் அசைவ உணவு உண்பது என்பது இளைஞர்களிடையே ஒரு நவீன கலாசாரமாக மாறி விட்டது.
ஒரு கிலோ மாமிசம் உற்பத்தி செய்ய 10 கிலோ தானியம் தேவைப்படுகிறது. கால்நடைகளை அதிக அளவில் பண்ணைகளில் அடைத்து வைக்கும் போது, அவை உண்ணும் உணவு செரிக்கும் போது உலக அளவில் சுமார் 37 சதவீதம் மீத்தேன் வாயு வெளி வருகிறது. இந்த வாயு கார்பன்-டை ஆக்ûஸடு வாயுவை விட 23 மடங்கு அதிகமாக புவி வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது.
இந்த துரித உணவு காலாசாரத்தால், பெருகி வரும் அசைவ உணவுக் கடைகளில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் பெரும்பாலும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதில்லை என்பதால், இதை உண்பவர்களை பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. இந்த துரித உணவுகளில் சுவைதான் அதிகமாக இருக்குமே தவிர உடல் நலத்திற்கு தேவையான சத்துகள் இருப்பதில்லை.
உணவுக் குழாய், வயிற்றுப் பகுதி, குடல் பகுதிகளில் ஏற்படும் புற்று நோய் நமது உணவின் தன்மைக்கு ஏற்ப அமைகிறது. அசைவ உணவுகளில் அதிக அளவில் நைட்ரோ அமினோ அமிலச் சத்துகள் இருப்பதால் உணவுக் குழாய், இரைப்பை பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட ஏதுவாகிறது.
இத்தகைய அசைவ உணவுக் கடைகளில் தயாரிக்கப்படும் உணவு சுவையாக இருக்க வேண்டும் என்பதற்காக சேர்க்கப்படும் ரசாயனப் பொருள்களினால் உடல் நலத்திற்கு தீமையே விளையும். இக்கால இளைஞர்கள் இத்தகைய சுகாதாரமற்ற உணவுகளை உண்டு, கொழுப்பு அடைக்கப்பட்ட ஊளைச் சதையர்களாக உலா வருகின்றனர்.
இளம்தலைமுறையினர் தொடர்ந்து இத்தகைய கடைகளில் தயாரிக்கப்படும் சுகாதாரமற்ற அசைவ உணவுவகைகளை சாப்பிட்டு வந்தால் 50 வயதில் கண்டிப்பாக அவர்கள் புற்றுநோய் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மேலும், தொற்றுநோய் அல்லாத நீரிழிவு, மாரடைப்பு, இதயம் சம்பந்தமான நோய்கள், புற்றுநோய், பல் நோய்கள், எலும்பு மற்றும் மூட்டுகளில் வரும் நோய்கள், நாளமில்லாச் சுரப்பிகளில் வரும் நோய்கள் (முன்கழுத்துக் கழலை, தைராய்டு), உடல் பருமன், சரும நோய்கள், ஒவ்வாமை, பக்கவாதம் போன்ற நோய்கள் ஆரோக்கியமற்ற அசைவ உணவுகளை உண்பதால் தான் வருகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், பல நாடுகளில் நடத்தப்பட்ட 60-க்கும் மேற்பட்ட மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளிலும் இதய நோய் மற்றும் புற்றுநோய் குழந்தைகளைத் தாக்குவதற்கு காரணம் இத்தகைய கடைகளிலிருந்து உண்ணப்படும் அசைவ உணவுகள்தான் என உணவியல் மற்றும் உணவு அறிவியல் கழகம் தெரிவிக்கிறது.
ஆடுகள், கோழிகளை நோய் தாக்காமலிருப்பதற்கும், அவற்றின் எடையை அதிகரிக்கவும் ஸ்டீராய்டு மற்றும் டெட்ராசைக்ளின், ஃப்ளுரோகுயினோலின், அமினோகிளைகோûஸட் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை ஊசி வழியாக அவற்றுக்குச் செலுத்தி, அவற்றைக் கொன்று உணவுகளைத் தயாரிப்பதால் இத்தகைய உயிர்க்கொல்லி மருந்துகள் கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலுக்குள் ஊடுருவி பல நோய்களை நமக்குத் தருகின்றன.
சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் அசைவ உணவுகள், சிறுநீரக பாதிப்பு, கால்சியம் குறைபாடு, ஜீரண சக்தி குறைபாடு போன்றவற்றையும் ஏற்படுத்தும்.
வள்ளுவர் முதல் வள்ளலார் வரை எத்தனையோ ஞானிகள் உயிர்க் கொலை கூடாது, மாமிச உணவு தீது, உயிர்கள் மீது கருணை காட்ட வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளனர்.
அண்மைக்காலமாக மேலைநாடுகளில் அசைவ உணவைத் தவிர்த்து சைவ உணவையே உட்கொள்ளுமாறு தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. சைவ உணவின் சிறப்பை உணர்ந்து தான் திருவள்ளுவரும் புலால் உணவை விலக்கும்படி வலியுறுத்தியிருக்கிறார். அவர், கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் என்று கூறுகிறார்.
சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்? அதுபோல, உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் வாழ்வும் சிறப்பாக இருக்கும்.எனவே, நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்றால் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் அசைவ உணவுகளைத் தவிர்ப்போம்.