ஊழலின் நிறம் கருப்பு
அக்டோபர் 29 முதல் நவம்பர் 3-ஆம் தேதி வரை ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. ஊழலை ஒழிப்போம் புதிய பாரதம் படைப்போம்
அக்டோபர் 29 முதல் நவம்பர் 3-ஆம் தேதி வரை ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. ஊழலை ஒழிப்போம் புதிய பாரதம் படைப்போம் என்பதுதான் இந்த வருட மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் மையக் கருத்து. என்னதான் செய்தாலும் கொசுவையும் கரப்பான் பூச்சியையும் ஒழிக்க முடியவில்லை. அதுபோலத்தான் ஊழலும். ஊழலை ஒழிக்க புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டிய சிபிஐ வரலாறு காணாத குழப்பத்தில் மூழ்கியுள்ளது. தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் ஒருவர் மீது ஒருவர் பழி சொல்லிக்கொண்டு சண்டையிடுவது நாட்டையே உலுக்கியுள்ளது.
மாநில காவல்துறை சரியாக புலன் விசாரணை மேற்கொள்ளவில்லை என்றால் மத்திய புலன் விசாரணைக்கு உத்தரவிடப்படும். நீதிமன்றம் மூலமாகவோ மாநில அரசின் வேண்டுதலின் பேரிலோ, வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும். பாரபட்சமின்றி விசாரணை நடக்கும் என்ற நம்பிக்கையை சிபிஐ நிரூபித்துள்ளது. இதுதான் சிபிஐ-யின் வலிமை.
சிபிஐ 1963-இல் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை பல ஊழல் வழக்குகளை திறமையாக கையாண்டிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் சிபிஐ இன்னும் தனக்கென்று ஒரு சட்ட அமைப்பை உருவாக்கிகொள்ளாமல், 1946-இல் இயற்றப்பட்ட தில்லி ஸ்பெஷல் போலீஸ் எஸ்டாப்ளிஷ்மென்ட் சட்டத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது.
உலக போரின்போது போர் சாதனங்களையும் வேறு பல பொருள்களையும் கொள்முதல் செய்து, போர்க்களத்திற்கு அனுப்ப வேண்டும். அதில் பல ஊழல்கள் நடைபெற்றது கவனத்திற்கு வந்ததால், தில்லி ஸ்பெஷல் போலீஸ் எஸ்டாப்ளிஷ்மென்ட் சட்டம் அமலுக்கு வந்தது. அந்தச் சட்டத்தின்படிதான் இன்றுவரை சிபிஐ புலன் விசாரணை மேற்கொள்கிறது. இது மாற்றப்படாததற்கு முக்கியக் காரணம், மத்திய அரசு சிபிஐ மீது தனது ஆதிக்கம் குறைந்து விடக்கூடாது என்று எண்ணுவதே.
இயக்குநராக இருந்த பலரும் தமது ஆளுமை மூலம் பெருமை சேர்த்துள்ளனர். 1963-இல் முதல் இயக்குநர் கோஹ்லி, அடுத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த அருள், தொடர்ந்து சென் ஆகியோரின் தலைமையில் சிபிஐ பல சாதனைகளைப் படைத்தது.
1977 வரை ஆறு வருடங்கள் சென் இயக்குநராக இருந்தார். அதிகாரிகள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் அவர் கண்டிப்பாக இருப்பார். ஐபிஎஸ் அதிகாரிகள் அரசு வாகனத்தைப் பயன்படுத்தக்ககூடாது என்று சென் கட்டளையிட்டதால் அவர்கள் மூச்சிரைக்க பேருந்தில் பயணித்து அலுவலகம் வருவார்கள். சில அதிகாரிகள் தாம் முன்பு உள்ளூர் காவலில் பணிபுரிந்த இடத்திலிருந்து அலுவலகம் செல்வதற்கு ரகசியமாக காவல் ஜீப்புகளைப் பயன்படுத்துவார்கள்.
அதிகாரிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. அவர்கள், தொழிலதிபர்கள், பணக்காரர்கள் - முக்கியமாக அரசியல்வாதிகளோடு தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது. யாரிடமிருந்தும் எந்தவிதச் சலுகையோபரிசுப் பொருளோ பெறக்கூடாது. ஒரு சமயம் டிஐஜி அந்தஸ்தில் இருந்த ஒரு அதிகாரி, இசை நிகழ்ச்சிக்கு சீசன் டிக்கெட் பெற்றார் என்பதற்காகப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு மாநிலப் பணிக்கு திருப்பி அனுப்பபட்டார். அந்த அளவிற்கு சிபிஐ மேலிடம் கட்டுப்பாட்டுடன் இருந்தது. சிபிஐ அதிகாரிகள் எதற்கும் வளைந்து கொடுக்க மாட்டார்கள் என்ற பெயரும் காப்பாற்றப்பட்டது. அது ஒரு கால கட்டம்.
இப்போது சுய கட்டுப்பாடு என்ற லக்ஷ்மணக்கோடு கடக்கப்பட்டு விட்டது. சமூக விரோதிகளோடும், வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களோடும் பழகுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உயரதிகாரிகள் மீது வந்து விட்டது. இப்போது கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள சிபிஐ உயர் அதிகாரி அஸ்தானா, தனது மகளின் திருமணத்தை நட்சத்திர ஹோட்டலில் நடத்த, தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிபிஐ போன்ற துறைகளில் உயர் பதவிகளில் உள்ளவர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அதுவே நான் என்ற ஆணவப் போராக மாறிவிடக்கூடாது. அதுவும் முதல் இரண்டு உயர்பதவிகளை வகிப்பவர்களுக்கிடையே பனிப்போர் நடப்பதும், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி மனு அனுப்புவதும் சிபிஐ இதுவரைகட்டி காத்த கட்டமைப்பையே உருகுலைப்பதாகும்.
இருவரும் சிவிசி என்ற மத்திய விழிப்புணர்வு ஆணையத்திற்கு மாறி மாறி புகார் மனு அனுப்புவது கடந்த ஓராண்டு காலமாக நடந்து வந்தது. சிவிசி உடனே தலையிட்டு பிரச்னையை முடிவிற்கு கொண்டு வந்திருக்கலாம். சிபிஐ விசாரிக்கும் ஊழல் வழக்குகளை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்ற சிவிசி, தனது பணியைச் செய்ய தவறியது எனலாம்.
தலைக்குமேல் வெள்ளம் போன பிறகு, உயரதிகாரிகள் இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டு, நாகேசுவர ராவை இடைக்கால இயக்குநராக நியமித்திருக்கிறது. உச்சநீதிமன்றம், விடுப்பில் சென்ற இரு உயரதிகாரிகள் மீதான விசாரணையை இரு வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும், அதுவரை இடைக்கால இயக்குனர் எந்தவொரு முக்கிய முடிவையும் எடுக்க கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது. இது ஒரு அசாதாரண நிலை. இந்த நிலையில் இத்தகைய முடிவுதான் எடுத்திருக்க முடியும் என்று சமூக ஆர்வலர் வினீத் நாராயணன் கூறியுள்ளார்.
1997-ஆம் வருடம் வினீத் நாராயணன் தொடுத்த பொது நல வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே. எஸ். வர்மா, உயர் அதிகாரிகள் மீது விசாரணை நடத்த சிபிஐ மத்திய அரசின் அனுமதியைப் பெற வகை செய்யும் ஒற்றை வழிகாட்டல் (சிங்கிள் டைரக்டிவ்)ஆணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார். அதன்படி சிபிஐ சுதந்திரமாக செயல்படுவதற்கு சில ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. இணைச்செயலர் மற்றும் உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பதற்கு அரசின் ஆணை தேவையில்லை என்றும் சிவிசி, சிபிஐ அமைப்பு
களுக்குத் தலைவரை நியமிக்க வெளிப்படையான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது. அந்த தீர்ப்பைத் தொடர்ந்தே 2003-இல் மத்திய விழிப்புணர்வு ஆணையச் சட்டம் இயற்றப்பட்டது.
சிபிஐ தலைவரை, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர்அடங்கிய குழு தேர்வு செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குநர் பதவிக் காலம் குறைந்த பட்சம் இரண்டு வருடம் இருக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும், ஊழல் வழக்குகளில் சிபிஐ மேற்கொள்ளும் விசாரணையையை மேற்பார்வையிடும் அதிகாரம் சிவிசி-க்கு வழங்கப்பட்டடது. இதன் மூலம் அரசு தலையீடு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டடது.
ஆனால், மத்திய அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என்பது (சிங்கிள் டைரக்டிவ்) மீண்டும் அமலுக்கு வந்தது. 2006 முதல் 2014 வரையான காலகட்டத்தில் 2 ஜி முறைகேடு, நிலக்கரி பங்கீட்டு முறைகேடு, ஏர் இந்தியா விமானங்கள் வாங்கியதில் ஊழல் போன்ற பல இமாலய ஊழல்கள் பரபரப்பாகப் பேசப்பட்டன. அவற்றில் அப்போதைய சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுத்தது நாட்டின் கவனத்திற்கு வந்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது சிபிஐ சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். கூண்டுக்கிளியாக இருக்ககூடாது என்று உச்சநீதிமன்றம் கூறிய கருத்து மக்களின் கவனத்தை ஈர்த்தது. 2014-இல் ஒரு பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் ஒற்றை வழிகாட்டலை மீண்டும் ரத்து செய்து, சிபிஐ முதல் கட்ட விசாரணையை மத்திய அரசின் அனுமதி பெறாமல் நடத்தலாம் என்று ஆணை பிறப்பித்தது.
அதாவது, குற்ற நடைமுறைச் சட்டம் எண் 197 மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசு ஆணை தேவை. ஆனால் முதல் கட்ட விசாரணைக்கு அனுமதி தேவையில்லை.
1984-ஆம் ஆண்டு, ஜகதீஷ் டைட்லர் மீதான ஊழல் குற்றச்சாட்டு மேல் நடவடிக்கையின்றி முடிவுக்கு வந்தபோது சிபிஐ பாரபட்சமற்ற அமைப்பு என்ற கவசத்தில் ஓட்டை விழுந்தது. அதன் பிறகு அவ்வப்போது அரசியல் தலைவர்கள் மீது வழக்கு தொடர்வது, தங்கள் வசதிக்கு ஏற்றாற்போல் விட்டு விடுவது என்பதெல்லாம் தொடர்கதையாகின. உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒருவரின் கருத்துப்படி, அரசியல் குறுக்கீடுகள்தான் பல வழக்குகளின் பின்னடைவுக்குக் காரணம்.
சிபிஐ சட்ட வடிவம் நிறைவேற்றப்படவேண்டும் என்ற 1978-ஆம் வருட எல்.பி சிங் பரிந்துரை, நாடாளுமன்ற நிலைக்குழுவின் 2007-இல் கொடுக்கப்பட்ட 19-ஆவது அறிக்கை, 2008-இல் நாடாளுமன்ற நிலைக்குழுவின் 24-ஆவது அறிக்கை போன்ற சிபிஐ அமைப்பிற்கு சுயமாக செயல்பட சட்ட வடிவம் கொடுக்க வேண்டும் என்ற பரிந்துரைகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக மேனாள் டிஜிபி பிரகாஷ் சிங் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.
உலகத்திலேயே உயரமான 597 அடி வானுயரச் சிலை இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேலுக்கு, குஜராத் மாநிலம் ஆமதாபாத் நர்மதை நதிக்கரையில் நிறுவப்பட்டுள்ளது. இரும்புக் கவசம் போல் அரசாளுமை இருக்க வேண்டும் என்ற வகையில் இந்தியா வானுயரப் பாடுபட்டார். அவர் இறக்கும்போது அவரது வங்கி கணக்கில் இருந்தது ரூ. 257 மட்டுமே. ஆனால் இன்றைய இந்தியாவில் தொழில் என்று வந்துவிட்டால் கருப்பும் வெள்ளையுமாக வாங்குகிறார்கள்.
இந்த நிலை மாற வேண்டும். ஊழல் விழிப்புணர்வு ஒரு வாரத்தோடு முடிந்து விடாமல் நமது ஒவ்வொரு செயலிலும் நேர்மையைக் கடைப்பிடிக்கும் ஒழுங்கு முறை வரவேண்டும்.
அந்த நாளும் வந்திடாதோ?
கட்டுரையாளர்:
சட்டப்பேரவை உறுப்பினர்.