நடுப்பக்கக் கட்டுரைகள்

கடைப்பிடிக்காததைக் கற்பிக்காதே!

நீ கடைபிடிக்காத எதையும் கற்பிக்காதே' என்பது தான் அண்ணல் காந்திஜியின் கற்பித்தல் கொள்கை! கல்வி என்பது கற்றுக் கொடுப்பது அல்ல, கற்றுக் கொள்வது. புத்தக அறிவு என்பது வேறு, அனுபவ அறிவு என்பது வேறு.

பாரதிபாலன்

நீ கடைபிடிக்காத எதையும் கற்பிக்காதே' என்பது தான் அண்ணல் காந்திஜியின் கற்பித்தல் கொள்கை! கல்வி என்பது கற்றுக் கொடுப்பது அல்ல, கற்றுக் கொள்வது. புத்தக அறிவு என்பது வேறு, அனுபவ அறிவு என்பது வேறு. பாடப் புத்தங்கள் தகவல்களைத் தரும்; அனுபவமே கல்வியைத் தரும் என காந்திஜி நம்பினார். ஆசிரியர் நிலையில் இருந்து பல பரிசோதனைகளையும் செய்து பார்த்தவர் அவர்.
இன்று நாம் நமது கல்வி முறையில் மாற்றமும் மறுமலர்ச்சியும் ஏற்பட வேண்டும் என விரும்புகிறோம். நவீனத் தளத்தில் நம் கல்வி பயணப்பட வேண்டும் எனச் சிந்திக்கிறோம். காந்தி முன்வைத்த கல்வியில், நம் தேவைக்கும், தேடலுக்கும் விடையும், இன்றைய சூழலுக்கு ஏற்ற நவீனத் தன்மை கொண்ட, நம் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய உயிர்ப்பினையும் காண முடியும். ஆனால் நமக்குத் தேவை அதை நுட்பமாகப் பரீசலித்துப் பார்க்கக்கூடிய கூர்மையான பார்வைதான்.
பண்டைய இந்தியாவில் வளமான கல்விமுறை இருந்தது. கல்விக்கான கட்டமைப்பு பலமாக இருந்தது. பல பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இது குறித்து எழுதியுள்ளனர். குறிப்பாக, சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த ஸர் தாமஸ் மன்றோவின் அறிக்கை இந்தியக் கல்வி முறையின் ஆழ, அகலத்தை விவரிக்கிறது.
1813-இல் நிறைவேற்றப்பட்ட சார்ட்டர் ஆக்ட்' மூலம் இந்தியக் கல்வித் திட்டங்களை உருவாக்கும் பொறுப்பினை ஏற்ற கிழக்கிந்திய கம்பெனி, நம் இந்தியக் கல்வியின் முகத்தைப் படிப்படியாகச் சிதைத்து, இறுதியில் அதனை உருக்குலைந்து விட்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியா வந்தபோது இங்கிருக்கும் முறைகளை ஏற்றுக்கொள்ளாமல், வேரறுக்கத் தொடங்கியதே இதற்குக் காரணம். மண்ணைத் தோண்டி, வேரைப்பார்க்கத் தொடங்கினர். அப்படியே விட்டுவிட்டனர். அழகிய மரம் மரித்தது' இது காந்தி, 1931-இல் லண்டனில் ஆற்றிய உருக்கமான உரையின் மையம்.
காந்தி முன்வைத்த சுதேசிக் கல்வி என்பது, ஆங்கிலக் கல்விக்கு மாற்று அல்ல, அது நமது பண்டைய இந்தியக் கல்வியின் மீட்பு. காந்தியடிகள், தான் கடைபிடிக்காத எதையுமே மற்றவர்களுக்குப் போதிப்பதில்லை. இதுதான் காந்தியக் கல்வியின் தத்துவம். தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது காந்தி, தன்னுடைய நான்கு பிள்ளைகளையும், ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பாமல், தானே அவர்களுக்குக் கற்பித்தார். பின்னர் அவர் அமைத்த டால்ஸ்டாய் பண்ணையில் இருந்த இந்தியக் குழந்தைகளோடு தாய்மொழியில் கல்வி கற்கவும், தொழிற்பயிற்சி பெறவும் செய்தார். காந்தியக் கல்வியின் முதற்படி தாய்மொழிக் கல்வியும், தொழில்கல்வியும்தான். அந்தப் பரிசோதனையை அவர் தன்னில் இருந்துதான் தொடங்குகிறார்.
தென்னாப்பிரிக்காவில் உள்ள டால்ஸ்டாய் பண்ணையில்தான், காந்தி தான் சிறையில் கற்றுக்கொண்ட தமிழ்மொழியை, குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தார். 
எண் கணிதம், வேதியியல், வானவியல் போன்ற பாடங்களில் நான்கு ஆண்டுகளில் நான் கற்றவற்றை, பயிற்றுமொழி ஆங்கிலமாக இல்லாமல் குஜராத்தியாக இருந்திருந்தால் ஒரே ஆண்டில் கற்றிருப்பேன்... இந்த ஆங்கிலப் பயிற்றுமொழி எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இடையே கடக்க முடியாத ஒரு தடையை ஏற்படுத்தியது' (ஹரிஜன்', 9.7.38) என்று வேதனையோடு குறிப்பிடுவதை நாம் கருதிப் பார்க்க வேண்டும். 
நாம் பெறுகின்ற கல்வி என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்குகிறது என்பதனை காந்தி தெளிவாகவே உணர்ந்திருந்தார். பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புகிற பெரும்பாலான பெற்றோர் உழவர்கள். இந்த இளைஞர்கள் கல்வி கற்றுத் திரும்புகின்றபோது, விவசாயத்தைப் பற்றி எதுவும் அறியாதவர்களாகவும், தம் பெற்றோரின் தொழில் குறித்து கசப்புணர்வு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இது நம் தேசத்திற்கு நல்லதல்ல' என்று காந்தி கூறுகிறார். குமாஸ்தாக்களையும், உதவியாளர்களையும் அரசாங்கத் தேவைக்காக உருவாக்கித்தரும் நமது கல்வி முறையால் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விடமுடியும்? (யங் இந்தியா' 20.3.24) எனவும் கேள்வி எழுப்புகிறார். 
இன்றளவும் அந்தக் கேள்வி தொடர்கிறது. 1993-இல் அமைந்த பேராசிரியர் யஷ்பால் கமிட்டியும் இதே கேள்வியைத்தான், வேறு வகையில் முன் வைக்கிறது. குறிப்பிட்ட பணியைச் செய்ய பயிற்றுவிப்பதாகவே நமது கல்வி முறை உள்ளதே தவிர, மாணாக்கர்களின் முழு ஆற்றலையும் வெளிக்கொண்டு வருவதற்கு நம் கல்விமுறையில் வாய்ப்பில்லை' என வருந்துகிறது.
உண்மையான கல்வி என்பது உங்களிலிருந்து சிறந்தவற்றை, உங்கள் ஆற்றலை வெளிக்கொணர்வதில்தான் உள்ளது. மனிதம் என்கிற புத்தகத்தை விடச் சிறந்த புத்தகம் வேறென்ன இருக்கமுடியும்?' (ஹரிஜன்' 30.3.34) என்பதுதான் காந்தியின் அடிப்படை வாதம்.
நம்முடைய கல்வி நிறுவனங்கள், பாடப்புத்தகங்களுக்குக் கொடுக்கப்படும் அதிகப்படியான முக்கியத்துவத்தையும் அதனால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளையும் கூட, காந்தி நுட்பமாகக் கவனித்துக் கூறுகிறார். இந்தியாவில் கல்வி பல்வேறு பாடப்புத்தகங்களைச் சார்ந்திருப்பதால், கிராமக் குழந்தைகளுக்குக் கற்கும் வழி பறிக்கப்படுகிறது. அதனால் இந்தியாவில், அதிலும் குறிப்பாக, ஆரம்பப்பள்ளிகளில் பாடநூல்கள் ஆசிரியர்களுக்கானவையாகவே இருக்க வேண்டும். மாணவர்களுக்கல்ல' (யங் இந்தியா' 16.9.26) என்கிறார் காந்தி.
விடுதலைக்குப்பின்னர் அமைக்கப்பெற்ற கல்விக் குழுக்கள் எல்லாம் புத்தகங்களின் சுமையைப் பற்றியே அதிகம் பேசின. தேசம் முழுவதும் கள ஆய்வு செய்து யஷ்பால் கமிட்டி (1993) வழங்கிய அறிக்கையின் சாரம் அன்றாட வாழ்வின் அனுபவங்களும் பாடப்புத்தகங்கள் சொல்லித் தருபவையும் வேறுவேறாக உள்ளன. பாடப் புத்தகங்கள் மாணாக்கர்களிடம் இருந்து விலகி உள்ளன' என்பதுதான். 
காந்தியின் உற்ற தோழரின் புதல்வர் ஸ்ரீமன் நாராயணன். செல்வச் செழிப்பான பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். லண்டனில் புகழ் பெற்ற பொருளியல் கல்லூரியில் பட்டம்பெற்றுப் பெரும் கனவுகளுடன் இந்தியா திரும்பியவர். காந்தியைக் கண்டு ஆசிபெற்று, இந்தியாவின் வருங்காலத்தை உருவாக்கும் திட்டங்களைச் செயல்படுத்த விரும்பினார். காந்தி அவரை தன்னுடைய ஆசிரமத்தில் சேர்த்துக்கொண்டார். அவரிடம் காந்தி கழிவறைகளைச் சுத்தம் செய்யச் சொன்னார். அவர் காந்தியின் வாக்கை மீற முடியாமல் ஏற்றுக்கொண்டார். ஒருவாரம் கழித்து பாபுஜி நான் லண்டனில் படித்து பட்டம் பெற்றவன். என்னால் மகத்தான செயல்களைச் செய்ய முடியும். எனது திறமையை இப்படி கழிவறையைச் சுத்தப்படுத்துவதிலேயே விரயம் செய்ய வேண்டுமா?' எனக் கேட்டார்.
அதற்கு காந்தி உன் திறமையை நான் நன்கு அறிவேன். தேச வளர்ச்சி, கல்வி பயிற்சியளித்தல் போன்ற பெரிய பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும் என நீ விரும்புவது புரிகிறது. ஆனால், கீழான வேலைகளைச் செய்வதற்கான மனப்பக்குவம் இல்லாது போனால் உனது தாய்நாட்டைச் சூழ்ந்திருக்கும் உண்மையான பிரச்னைகளை நீ உணராமல் போய்விடலாம்' என்றார் காந்தி. காந்தியும் தனது ஆசிரமத்தில் தினமும் கழிவறைகளைச் சுத்தம் செய்தார். ஆசிரியர்கள் செய்யாத எந்த வேலையையும் மாணவர்களைச் செய்யச் சொல்லி வற்புறுத்தக்கூடாது'என்ற சிந்தனை மிக நுட்பமானது!
மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற வள்ளுவக் கோட்பாட்டின்படி உண்மையை அறியச் செய்வதே கல்வி எனக் கருதினார். கல்வித் திட்டங்களை வகுக்கும் வல்லுநர்கள் வகுப்பறைச் சூழலை அறியாதவர்கள். இவர்கள் உருவாக்கும் பாடங்களைப் புரிந்து கொள்ளாமலே மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற முடியும்' என பேராசிரியர் யஷ்பால் கமிட்டியின் அறிக்கையை இங்கு இணைத்துப் பார்த்தால் காந்தியின் தீர்க்க தரிசனம் புலப்படும்.
கல்வியின் நோக்கமே உயர்பண்புகளைக் கொண்ட நல்ல குடிமக்களை உருவாக்குவதுதான். கல்வி என்பது மனிதனின் ஒட்டு மொத்த ஆளுமையை வளர்த்தெடுக்கக் கூடியதாகவும், அவன் செயல்திறனை மேம்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். பாடப்புத்தகங்களுக்கு அப்பால் கைத்தொழில் ஒன்றினைக் கற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கவேண்டும். அகிம்சை உணர்வினை ஏற்படுத்துவதுடன் அது தற்சார்பு கொண்டதாகவும் இருக்க வேண்டும். கல்வியின் வெளிப்பாடு சேவை மனப்பான்மையை ஏற்படுத்துவதாகவும், ஒற்றுமையைப் பேணுவதாகவும் இருக்க வேண்டும்.
ஆரம்பக்கல்வி ஏழு ஆண்டுகளுக்கு இலவசமாகவே வழங்கப்பட வேண்டும். கல்வியின் திட்டங்கள் அனைத்தும் கிராமப்புற மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டே உருவாக்கப்படவேண்டும். இவைகள்தான் காந்தி முன்வைத்த கல்வியின் சாரம்.
காந்தியக் கல்விக்கொள்கையின் மீது விமர்சனங்களும் எழாமல் இல்லை. வர்ணாசிரமக் கல்வி, குருகுலக் கல்வி என்று காங்கிரஸ்காரர்களே கூட விமர்சித்தார்கள். லண்டனைச் சேர்ந்த சர் வில்லியம் ஹர்தோக் என்பவர் காந்தியோடு முரண்பட்டு, எட்டு ஆண்டுகளுக்கு மேல் அவருடைய கல்விமுறை குறித்து அவரோடு விவாதித்துக் கொண்டிருந்தார். அந்த விவாதங்களை மையப்படுத்தி தரம்பால் அழகிய மரம் என்ற நூலினை எழுதினார். 
கல்வியின் அடித்தளம் அனுபவம்; கற்பதற்கான வழி சுதந்திரம்' என்ற டால்ஸ்டாயின் கருத்தோட்டத்தில் காந்தியக் கல்வியும் இணைந்து பயணிக்கிறது. காந்தி முன் வைக்கும் கல்வித் தீர்வுகளில் சில விவாதத்துக்கு உரியவை என்றாலும் விடுதலைக்குப்பின் தயாரித்து அளிக்கப்பட்ட கல்வி அறிக்கைகள் - கொள்கைகள் எதுவும் காந்தியைக் கடந்துவிடவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மார்டின் லூதர் கிங், ஆல்பர்ட் ஐன்ஸ்டின், பெர்னாட் ஷா, ஹோசிமின், நெல்சன் மண்டேலா, தலாய் லாமா போன்ற ஆளுமைகளும் காந்தியக் கல்விக் கொள்கைகளால் கவரப்பட்டு அவர் சிந்தனையோடு இணைந்தார்கள்.
இன்றைய எல்லோருக்கும் கல்வி' திறன் மிகு இந்தியா' தூய்மை இந்தியா' போன்றவை நவீன திட்டங்களாக முன்வைக்கப்பட்டாலும் அவை காந்தியக் கல்வியின் சாரமே. எனவே, காந்தியின் தேவை, கல்வி வணிகமயமாகிவிட்ட இன்றைய சூழலில்தான் அதிகமாக உள்ளது.

இன்று (செப்.5) ஆசிரியர் தினம்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநாட்டுத் திடலில் குவிய ஆரம்பித்த தவெக தொண்டர்கள்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Vijay | Madurai

"நீ அரியணை ஏறும் நாள் வரும்": ஷோபா சந்திரசேகர் வாழ்த்து!

இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும்: ரஷியா அறிவிப்பு

தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!

தங்கம் விலை அதிரடியாக உயர்வு! எவ்வளவு?

SCROLL FOR NEXT