நச்சு வார்த்தை வேண்டாமே!
கடந்த 11 ஆண்டுகளாக அந்தந்த ஆண்டின் சிறந்த வார்த்தையை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அகராதி வெளியிட்டு வருகிறது.
கடந்த 11 ஆண்டுகளாக அந்தந்த ஆண்டின் சிறந்த வார்த்தையை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அகராதி வெளியிட்டு வருகிறது. 2018-ஆம் ஆண்டில் உலக மக்கள் அதிகமாகப் பயன்படுத்திய, விவாதித்த வார்த்தையாக, சர்வதேச வார்த்தையாக டாக்ஸிக் (Toxic), , அதாவது விஷம் என்ற வார்த்தையை சிறந்த வார்த்தையாகத் தேர்வு செய்துள்ளதை லண்டனில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக அகராதி தெரிவித்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டில் சிறந்த வார்த்தையாக "Youth quake', அதாவது இளைஞர்களின் செயல்களில், செல்வாக்குகளில் எழுந்த ஒரு குறிப்பிடத்தக்க கலாசார, அரசியல் அல்லது சமூக மாற்றங்களைக் குறிப்பிடும் வார்த்தையைத் தேர்வு செய்தது.
டாக்ஸிக் என்ற சொல்லை, ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியில் எப்போதும் தேடுவதைவிட 2018-ஆம் ஆண்டு தேடியவர்களின் எண்ணிக்கை 45 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. விஷயங்கள், சூழ்நிலைகள், கவலைகள் மற்றும் சம்பவங்களை விவரிக்க அதிக அளவில் பணிபுரியும் இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், உறவு முறைகளில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சொல்லுடன் சுற்றுச்சூழல், உறவு முறை, கலாசாரம் போன்ற சொற்களும் இணைந்தே இந்த ஆண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சொல்லின் தெளிவான நோக்கமே, அதன் தனித்துவமான தேர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது என ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக அகராதி பதிப்பகத்தின் தலைவர் காஸ்பெர் க்ராத்அவுல் தெரிவித்துள்ளார்.
பெயருரிச் சொல் டாக்ஸிக் என்றால் விஷம் அல்லது விஷத்துடன் ஊடுருவி என்று பொருள். இது லத்தீன் மொழியில் டாக்ஸியஸ் என்ற சொல்லில் இருந்து உருவானது. 17-ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இந்த வார்த்தை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
மக்களின் சமூக நலம் சார்ந்த விஷயங்கள், ஆரோக்கியம், சுற்றுச்சூழல் போன்ற விவாதங்களில் இந்த டாக்ஸிக் என்ற வார்த்தை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆக்ஸ்ஃபோர்ட் சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது, நெகிழிப் பொருள்களை அதிக அளவில் பயன்படுத்தினாலோ, எரித்தாலோ நச்சு காற்றிலும், தண்ணீரிலும் கலந்து உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்ற அளவில் இந்த வார்த்தை மிகப் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நம் அன்றாடப் புழக்கத்திலுள்ள 15 கோடி ஆங்கில வார்த்தைகளில் இந்த ஆண்டு எந்த வார்த்தை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு மாதமும் உலக நாடுகளிலிருந்து வெளியாகும் செய்தித் தாள்களிலிருந்தும், புத்தகங்களிலிருந்தும், வலைப்பதிவுகளிலிருந்தும், ஆங்கில மொழியாக்கங்களிலிருந்தும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக மொழி ஆராய்ச்சிக் குழு சேகரிக்கிறது. அதிநவீன மென்பொருளைப் பயன்படுத்தி, சொற்களஞ்சியங்கள் தொகுப்போர்களின் உதவியுடன் புதிய மற்றும் எழுச்சியூட்டும் வார்த்தைகளை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக அகராதி அடையாளம் கண்டு வெளியிட்டு வருகிறது.
டாக்ஸிக் வார்த்தை முதல் இடம் பிடித்ததற்கான காரணம் குறித்து ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2018-ஆம் ஆண்டில் எழுந்த மி டூ இயக்கம்; அதாவது, ஆண் ஆதிக்கம் நிரம்பிய இந்த உலகில் நச்சு நிரம்பிய ஆண்களால் நானும்கூட பாதிக்கப்பட்டேன் என பெண்கள் அதிக அளவில் வலைப்பதிவுகள் பதிவிட்டது; இது குறித்து சர்வதேச விவாதத்தைத் தூண்டும் பிரட் கேவனோ செனட் நீதித்துறைக் குழு விசாரணை போன்றவை சர்வதேச அளவில் இந்த டாக்ஸிக் வார்த்தையை முக்கியத்துவமாக்கி விட்டது; இதே போன்று, உயிருக்குத் தீங்காக அமையும் நச்சுப் பொருள், நச்சுக் கழிவுகள், நச்சுப் புகை ஆகியவற்றை வெளியேற்றுவதில் உலக நாடுகளிடையே நடைபெறும் போட்டி; குறிப்பாக அடிக்கடி ஏற்படும் கடும் புயல், சூறாவளியால் ஏற்படும் நச்சு கழிவுகளால் அமெரிக்கா சமாளிக்க முடியாமல் திணறி வருவது;
2018-ஆம் ஆண்டு அக்டோபரில் பொது சுகாதாரத்தை கேள்விகுறியாக்கி வளர்ந்து வரும் காற்று மாசுபாடு. சுற்றுச்சூழலை சீரழிக்கும் சிகரத்தை எட்டியுள்ளது கவலையளிக்கும் விஷயம்; உலக சுகாதார அமைப்பு இந்தக் காற்று மாசுபாட்டால் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் அசுத்தக் காற்றை சுவாசிக்கும் குழந்தைகள்தான் எனத் தெரிவித்துள்ளது; தொழிற்சாலைகள் நச்சுக் கழிவுகளை எரித்தல்தான் காற்று மாசடைவதற்கு முக்கியக் காரணம்; இன்று நச்சு சுற்றுச்சூழல் என்பது, தீங்கு விளைவிக்கக் கூடிய பணியிடச் சூழல், பணிச் சுமை ஆகியவற்றையும் குறிக்கும்; இது தொழிலாளர்களின் மன ஆரோக்கியத்தையும் கெடுக்கும்; பணியிடங்களில் காணப்படும் பாலியல் தொல்லை எனப்படும் நச்சுக் கலாசாரம் காரணமாக கூகுள் உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் பலரை பணி நீக்கம் செய்துள்ளது; மேலும், பணியிடங்கள் மட்டுமல்லாமல் குடும்பங்களுக்குள்ளும் காணப்படும் சில தகாத விஷமத்தனமான உறவுகளாலும் நச்சு உறவுகள், நச்சு மனங்கள் பெருகி வருகிறது என ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனவே, வரும் ஆண்டுகளிலாவது இந்த உலகைச் சீரழிக்கும் விஷம் என்ற வார்த்தையை அகராதியில் மட்டுமின்றி நம் மனங்களிலும் நீக்கும் வகையில் கர்ஸ்ங் (அன்பு) என்று பொருள்படும் வார்த்தையை அதிக அளவில் பயன்படுத்துவோம். வாழ்வை இனிதாக்குவது அன்பு; துயரங்களை மீளச் செய்வது அன்பு; குடும்ப வாழ்க்கையை மேன்மைப்படுத்துவது அன்பு; உலக வாழ்க்கையை சுவைக்கச் செய்வது அன்பு; அன்பு உள்ள இடம் சொர்க்கம்; அன்பு மறையுமிடம் நரகம்!