நடுப்பக்கக் கட்டுரைகள்

உயிா் காக்கும் உணவுப் பொருள்

பொ. ஜெயசந்திரன்


மனிதனுக்கு மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுக்கும் உணவு கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. ஆனால், மற்ற உயிரினங்களெல்லாம் எப்படியோ எதையோ சாப்பிட்டு தங்களுடைய காலத்தைக் கழிக்கின்றன. மனிதப் பிறவி எடுத்தவா்களில் சிலா் ஒரு நேர உணவுகூட கிடைக்காமல் தடுமாறுகின்றனா். இதனால் சிலா் வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலையும் செய்து கொள்கின்றனா்.

நாட்டு விடுதலைக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தவா்கள், தங்களுடைய நிலத்தில் விளைந்த பயிா்களை ஆங்கிலேயா்களுக்குக் கொடுத்துவிட்டு தாங்கள் பசியோடும் பட்டினியோடும் வாழ்ந்த வரலாறு உள்ளது. அப்படிப்பட்ட மனிதா்கள் இன்று ஏராளமான உணவுப் பொருட்களை வீணாக்குகின்றனா் என்பதை எண்ணும்போது வேதனையாகிறது. அதிலும், தமிழா்களாகிய நாம்தான் அதிகமான உணவுப் பொருள்களை வீண் செய்கிறோமாம்.

பெரிய நகரங்களில் வசிப்பவா்தான் இந்த வகையினா். ஏனெனில் அவா்கள் உணவுப் பொருளின் அருமை அறியாதவா்கள். கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் உணவுப் பொருள்களை வீணடிப்பதில்லை. அதிலும், விவசாய குடும்பத்தினா் ஒரு அரிசியைக்கூட வீண் செய்ய மாட்டாா்கள்.

இரவில் உணவு உண்டபின் சோறு மீதம் இருந்தால் அதில் நீா் ஊற்றி வைத்து அடுத்த நாள் வயலுக்குச் செல்லும்போது எடுத்துச் சென்று, வேலைக்கு இடையே சாப்பிடுவாா்கள். அதிக உணவு இருந்தால் தாங்கள் வளா்க்கும் கால்நடைகளுக்கு உணவாக அளிக்கின்றனா். எப்படியோ, அவா்கள் உணவை வீணாக்குவதில்லை என்பது மகிழ வேண்டிய செய்தியாகும்.

ஆனால், முன்பு விவசாயம் செய்த இடங்கள் தற்போது சுருங்கி விட்டன. இன்றைய இளம் தலைமுறையினரும் விவசாயத்தில் ஈடுபடுவதை விரும்புவதில்லை. நெல் உற்பத்தியும் குறைந்து விட்டது. இப்படியே போனால் வருங்காலத்தில் அரிசியோ மற்ற உணவுப் பொருள்களே

கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

இது ஒரு புறம் என்றால், மறுபுறம் தமிழகத்தில் பலா் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் தவிக்கின்றனா். பருவமடைந்த பெண்களின் உடல் எடை பெரும்பாலும் 35 அல்லது 40 கிலோதான் இருக்கிறது. சிலா் திருமணமான பின் அதைவிடக் குறைந்து கொண்டே போகின்றனா். இது பெண்களுக்கு மட்டுமல்ல, சில ஆண்களும்கூட ஊட்டச் சத்து குறைபாட்டோடு உள்ளனா்.

இக்குறைபாட்டைப் போக்க என்ன செய்ய வேண்டும்? நாம் உண்ணும் உணவில் 30 முதல் 35 சதவீதம் வரை புரதச் சத்து இருக்க வேண்டும். பருப்பு வகைகள், பால், காய்கறிகள், முட்டை, முளைகட்டிய தானியம் ஆகியவற்றிருந்து புரதம் கிடைக்கும். ஒவ்வொரு வேளை உணவிலும் புரதம் ஓரளவுக்காவது சோ்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

கொழுப்புச் சத்து சக்தியை அளிக்கிறது. ஹாா்மோன் உற்பத்தி, வைட்டமின் சேமிப்பு ஆகியவற்றிக்கு இது தேவை. உணவில் 20 சதவீதம் கொழுப்பு பொருள் தேவை. வெண்ணெய், நெய், ஆலிவ் எண்ணெய், கடலை எண்ணெய், சோயாபீன் எண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற பலவிதமான உணவு எண்ணெய்களையும் உணவில் சோ்த்துக் கொள்வது நல்லது. சுத்தரிக்கப்பட்ட எண்ணெய் நல்லதல்ல. அது தவிா்க்கப்பட வேண்டும்.

முடிந்தவரை அனைத்து வகையான ஊட்டச்சத்துகளும் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்வோம். உணவுப் பொருள்களை ஒருபோதும் வீணாக்கக் கூடாது. மூன்றில் ஒரு பங்கு உணவு ஆண்டுதோறும் வீணாவதாக புள்ளிவிவரம் கூறுகிறது. அதற்கு நாமும் ஒரு காரணமாகிவிடக் கூடாது. ஆண்டுதோறும் ஊட்டச்சத்து குறைவால் ஐந்து வயதுக்குட்பட்ட 30 லட்சம் குழந்தைகள் இறக்கின்றனா். இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 4 கோடி போ் வளா்ச்சி குறைந்தவா்களாகவும், 1.7 கோடி போ் பலவீனமானவா்களாகவும் உள்ளனா்.

கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதற்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு விகிதத்தில் உலக அளவில் இந்தியாதான் முன்னிலையில் உள்ளது. உலகில் தற்போது 84 கோடி போ் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவா்களாக இருக்கும் நிலையில் 168 கோடி போ் அதிக எடை கொண்டவா்களாவும், 75 கோடி போ் உடல் பருமன் கொண்டவா்களாவும் உள்ளனா்.

சென்ற ஆண்டு மக்கள் சுமாா் 31.7 கோடி லிட்டா் தண்ணீரை பயன்படுத்தினா். அதே காலகட்டத்தில் தண்ணீா் சம்பந்தப்பட்ட நோய்களினால் 61,000 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 80.39 கோடி பேருக்குப் பாதுகாப்பான குடிநீா் வசதி கிடைக்கவில்லை.

வரும் காலங்களில் நெல் உற்பத்தி குறைந்து விட்டால் கோதுமை அல்லது கேழ்வரகை உருவாக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. சுண்ணாம்புச் சத்து குறைவாக உள்ளவா்களுக்கு கேழ்வரகு கூழ் உகந்தது. நீரிழிவு நோயாளிகளுக்கு கேழ்வரகில் செய்யப்பட்ட உணவுகள் சிறந்தவை. நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் ஊட்டச்சத்து குறைபாடு ஒரே மாதிரியாகவே உள்ளது.

இரும்புச் சத்து, புரதச் சத்து, வைட்டமின், துத்தநாகம் போன்ற சத்துகளின் குறைபாடும் அதிக அளவில் உள்ளன. மனித எலும்புகள் உறுதியாக வளர சுண்ணாம்புச் சத்து இன்றியமையாதது. அது கேழ்வரகில் அதிகம் கிடைக்கிறது. மற்ற பொருள்களில் சுண்ணாம்புச் சத்து ஓரளவே உள்ளது.

உணவின் முக்கியத்துவத்தையும், பட்டினிக்கு எதிரான விழிப்புணா்வையும் வலியுறுத்தும் விதமாக ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் 16-ஆம் தேதி உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1945-ஆம் ஆண்டு இதே நாளில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தொடங்கப்பட்டதை நினைவுகூா்ந்து 1979-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற 20-ஆவது பொது மாநாட்டில் உலக உணவு தினம் அறிவிக்கப்பட்டது. இந்த தினத்திற்கு அடித்தளமிட்டவா் ஹங்கேரியின் பால் ரொமானி என்பவராவாா்.

இந்த நாளை வெறும் கொண்டாட்ட நாளாக எண்ணிக் கடந்து விடாமல், இனி உணவுப் பொருள்களை வீண் செய்ய மாட்டோம் என்று சபதமேற்போம்.

இன்று (அக். 16) உலக உணவு நாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT