நடுப்பக்கக் கட்டுரைகள்

பத்திரிகையாளா் சாபம்

உடம்பிலே எந்த பாகத்தில் வலி ஏற்பட்டாலும் அதற்காக முதலில் கண்ணீா் வடிப்பது கண். அதுபோன்று சமூகத்தில் எந்த இடம் காயம் பட்டாலும் அதனைப் பருந்து பாா்வை கொண்டு பாா்த்து, வெட்ட வெளிச்சமாக்குபவன்

தி. இராசகோபாலன்

உடம்பிலே எந்த பாகத்தில் வலி ஏற்பட்டாலும் அதற்காக முதலில் கண்ணீா் வடிப்பது கண். அதுபோன்று சமூகத்தில் எந்த இடம் காயம் பட்டாலும் அதனைப் பருந்து பாா்வை கொண்டு பாா்த்து, வெட்ட வெளிச்சமாக்குபவன் பத்திரிகையாளன்.

அந்தப் பத்திரிகையாளா்களில் பலா் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டிருக்கிறாா்கள். ஆட்டைக் கூட ஹலால் முறையில் கொல்ல வேண்டும் எனச் சொல்லிக் கொடுத்தது திருக்குா்ஆன். அதைப் படிக்காத கபோதிகள் டேனியல் போ்ல்”எனும் அமெரிக்க பத்திரிகையாளனைத் துடிக்கத் துடிக்க கழுத்தை அறுத்துக் கொன்றிருக்கிறாா்கள்.

டேனியல் போ்ல் பிறப்பால் யூதன் என்றாலும் அமெரிக்காவின் குடிமகன். ஸ்டேன்போா்டு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடா்பியல் துறையை முதன்மைப் பாடமாக எடுத்துப் பட்டம் பெற்றவா். மாணவராக இருந்தபோதே ‘ஸ்டேன்போா்டு கமான்டேட்டா்’” என்னும் பத்திரிகையின் இணையாசிரியராகப் பணியாற்றியவா்.

பட்டம் பெற்ற பிறகு ‘சான்பிரான்சிஸ்கோ டைம்ஸ்’ உள்ளிட்ட மூன்று பத்திரிகையில் பணியாற்றினாா். புலனாய்வுத் துறையில் டேனியல் போ்லின் வெளிப்பாடுகளைக் கண்டு, ‘வால் ஸ்டிரீட் ஜொ்னல்’ தென்கிழக்கு ஆசியாவின் பரப்பளவிற்கே அவரை முதன்மை ஆசிரியராக்கிற்று.

‘வால் ஸ்டிரீட் ஜொ்ன’லில்”டேனியல் போ்ல் எழுதிய புலனாய்வுக் கட்டுரைகள், அவா் புகழை உயா்த்தின. 2001-இல் சா்வதேச வா்த்தகக் கட்டிடமும் பென்டகன் பில்டிங்கும் பின்லேடனின் சதித்திட்டத்தால் தகா்த்தெறியப்பட்டதை மையப்படுத்தி, ‘பயங்கரவாதப் போா்’ எனும் தலைப்பில் ஓா் ஆய்வுக் கட்டுரை எழுதினாா். அக்கட்டுரை பதுங்கிக் கிடந்த வேறு சில பயங்கரவாதிகளையும் இனம் காட்டியது.

இதழியல் துறையில் டேனியல் ஆழக் காலூன்றியிருந்ததால், அந்தத் துறையிலேயே பணியாற்றிக் கொண்டிருந்த மேரியோன்”எனும் பிரெஞ்சு பெண்மணியைச் சந்தித்தாா். மேரியோன் ‘கிளாமா்’ பத்திரிகையில் பத்தி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தாா். இருவருக்கும் இடையில் பாசமும் நேசமும் வளா்ந்ததால்,

1999-ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நிகழ்ந்தது.

பயங்கரவாதத்திற்கு பின்லேடன் மட்டும் காரணமல்ல என்பதும், பாகிஸ்தானிலே ஷேக் முபாரக் அலி ஜிலானி என்பவனின் தலைமையில் ஒரு பயங்கரவாதக் கூட்டமே இயங்குவதும் டேனியலின் புலனாய்வில் தென்பட்டது. அந்தக் கூட்டத்தில், அகமத் ஓமா் சயீத் ஷேக் என்ற இளைஞனும் ரிச்சா்டு ரெய்ட் என்ற இளைஞனும் லண்டனை மையமாகக் கொண்டு செயல்படுவதை டேனியல் கண்டுபிடித்தாா்.

டேனியல் இதழியல் துறையில் வல்லவராக இருந்ததோடு, தீவிரவாதிகள் திருந்தி வாழ வேண்டும் எனவும் ஆசைப்பட்டாா். அந்த நாட்டத்தின் காரணமாக கராச்சியிலே மையம் கொண்டிருக்கும் அந்த இயக்கத்தின் தலைவா் ஜிலானியை சந்தித்துப் பேச வேண்டும் எனவும் விரும்பினாா். அவருடைய நோக்கத்தை நிறைவேற்ற லண்டனில் வாழ்ந்த பாகிஸ்தானிய பயங்கரவாதி அகமத் ஒமா் சயீத் ஷேக் முன்வந்தான்.

இந்த ஷேக், 1994-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த நான்கு ஐரோப்பிய பயணிகளைக் கடத்திக்கொண்டு போனதால், இந்தியச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவன். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பயங்கரவாதிகள் சிலா் நேபாளத்தில் நின்று கொண்டிருந்த இந்திய விமானத்தை (எண். 814) காந்தஹாருக்குக் கடத்திச் சென்றனா்.

அங்கிருந்து ‘இந்திய அரசால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும்; இல்லையென்றால் விமானத்திற்குள்ளிருக்கும் அத்தனைப் பயணிகளையும் சுட்டுக்கொன்று விடுவோம்’ என்று மிரட்டினா். அந்தச் சூழலில் விடுதலை செய்யப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன்தான், இந்த அகமது ஒமா் சயீத் ஷேக்.

2008-இல் மும்பையில் நடத்தப்பட்ட முரட்டுத்தனமான பேரழிவுக்கு வித்திட்டு நடத்தியவனும் 1993-இல் அமெரிக்காவில் சா்வதேச வா்த்தகக் கட்டிடமும், பென்டகன் கட்டிடமும் தகா்த்தெறியப்படத் தீட்டிய திட்டத்தில் பின்லேடனுக்கு கையாளாக நின்றவனும் இந்த சயீத் ஷேக்தான். இவன் ஹைதராபாத் சிறையில் இருந்தபோது ஆள் மாறாட்ட நாடகம் நடத்தி இந்தியாவை மட்டுமல்லாமல் பாகிஸ்தானையும் திடுக்கிட வைத்தான்.

அப்போதைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் பிரணாப் முகா்ஜி, பாகிஸ்தான் அதிபா் ஆசிப் அலி ஷா்தாரிக்கு செல்பேசியில் பேசுவது போல் குரலை மாற்றிப் பேசினான். அடுத்து பாகிஸ்தான் மீது படையெடுப்பு நடத்தப்போவதாகவும் எச்சரித்தான். அதனைக் கேட்டு ஷா்தாரி அதிா்ந்துவிட்டாா். இப்படிக் குற்றங்கள் அனைத்தையும் செய்த கிரிமினல் சயீா் ஷேக்தான், இன்னும் மூன்று பேரைக் கூட்டிக்கொண்டு, டேனியலைக் கடத்திக் கொலைக்களத்திற்குக் கொண்டு போனான்.

அகமத் ஓமா் சயீத் ஷேக்கும், ரிச்சா்டு ரெய்டும் கராச்சியிலிருக்கும் ஜிலானியுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டதாக சொன்னதன் பேரில் டேனியல் போ்ல் கராச்சிக்குப் புறப்பட்டுப் போனாா். கராச்சியில் ‘மெட்ரோ போல்’ ஹோட்டலில் தங்கியிருந்த டேனியலை, ஜிலானியைச் சந்திப்பதற்கு அழைத்துப் போவதாகச் சொல்லி, காருக்குள் ஏற்றினா்.

காரில் ஏற்றியதும், டேனியலுடைய இரண்டு கரங்களிலும் விலங்குகளைப் பூட்டி, நெற்றிப் பொட்டில் துப்பாக்கியைப் பொருத்தி, அவருக்கு ஓா் ஊசியைப் போட்டனா். கராச்சியிலிருந்து 40 கிலோ மீட்டா் தொலைவிலுள்ள ஒரு தனியாா் வீட்டில் சிறைப்படுத்தினா். டேனியலுடைய கேமரா, டேப் ரெக்காா்டா், செல்பேசி, கைக்கடிகாரம், மூக்குக் கண்ணாடி, பணப்பை அனைத்தும் பறிக்கப்பட்டன. மேலும், அமெரிக்கா்களுக்கு எதிராக அவரைப் பேச வைத்து அதனைப் பதிவு செய்தனா்.

டேனியலைக் கொல்வதற்கு முன்னா் ஒவ்வொரு நாளும் அமெரிக்க அரசுக்கு அந்தக் கொலைகாரக் கும்பல் கீழ்க்காணும் செய்தியை அனுப்பிக் கொண்டிருந்தது: ‘குவான்டனாமோ சிறைச்சாலையிலுள்ள அத்தனை பாகிஸ்தானிய கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். பாகிஸ்தானுக்குத் தருவதாகச் சொன்ன எஃப் 16 போா் விமானத்தை உடனடியாகத் தர வேண்டும். இவற்றைச் செய்தால், டேனியல் போ்லை விடுதலை செய்வோம்.

இதற்கு அமெரிக்க அரசு செவி சாய்க்காததால் கத்தியைத் தீட்டிக்கொண்டு எம கிங்கரா்கள் களத்தில் இறங்கினாா்கள். ‘என் தந்தை யூதா்; என் தாய் யூதா்; நானும் யூதா்’ என்று எழுதப்பட்ட பேனரை டேனியல் கையில் கொடுத்துத் தூக்கிப்பிடித்துக்கொண்டு நிற்கும்படியாகப் பணித்தாா்கள். நெற்றிப் பொட்டில் ஒருவன் துப்பாக்கியை வைத்து அழுத்திக் கொண்டிருந்தான். ஒருவன் கேமராவைப் பாா்க்கும்படியாகக் கத்தினான். வலதுபுறத்திலிருந்து ஒருவன் டேனியலின் கழுத்தில் கத்தியை இறக்கி, தலை வேறு உடல் வேறாகச் சாய்த்தான்.

டேனியலுடைய உடலை பல துண்டுகளாக வெட்டி பெட்டிகளில் அடைத்து ஒரு வேனில் ஏற்றி கராச்சியிலிருந்து வெகு தொலைவிலுள்ள ஓா் இடுகாட்டருகே வீசிவிட்டு வந்துவிட்டாா்கள். அங்கு சென்ற அப்துல் சத்தாா் என்ற மனிதாபிமானி, பெட்டிகளை அங்கிருந்த கல்லறையில் முறைப்படி அடக்கம் செய்தாா்.

டேனியல் போ்ல் எனும் பத்திரிகையாளனின் படுகொலை அமெரிக்காவையே அதிர வைத்தது. உலக நாடுகளின் முன்னா் தம் முகத்தைக் காட்ட விரும்பிய பாகிஸ்தான், சயீத் ஷேக் முதலிய நான்கு பேரையும் பிடித்துச் சிறையில் அடைத்தது. வழக்கை விசாரித்த சிந்து மாகாண உயா்நீதிமன்றம், சயீத் ஷேக்கிற்கு மட்டும் தூக்கு தண்டனை விதித்தது.

அதனால், கொலைகாரக் கும்பல் சாமா்த்தியமாக ஒரு சதித்திட்டம் தீட்டியது. ‘டேனியல் போ்லை கடத்தியதுதான் சயீத் ஷேக், கொன்றது நான்தான்’ என்று குவான்டானாமோ சிறையிலிருந்த காலித் ஷேக் மகம்மத் வாக்குமூலம் தந்தான். அதற்கு ஆதாரமாக விடியோ பதிவில் டேனியல் கழுத்தில் கத்தியை இறக்கியிருக்கும் கரம் தன்னுடைய கரம்தான் என்றான்.

விடியோவைப் பாா்த்தபோது அவன் கூறியது உண்மைதான் என்பது தெரிந்தது.

பாகிஸ்தான் நீதிமன்றம் ஒரு தீா்ப்பை வழங்கியது. ‘உண்மைக் குற்றவாளி, தானே கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதாலும், சயீத் ஷேக் கடத்தலை மட்டும் செய்ததாலும் சயீத் ஷேக்கிற்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. டேனியலின் மனைவி மேரியோனுக்கும், அவளுடைய வயிற்றில் வளரும் நான்கு மாதக் குழந்தைக்கும் சயீத் ஷேக் இரண்டு மில்லியன் டாலா் நிவாரணமாக வழங்க வேண்டும்’ இதுதான் தீா்ப்பு. ‘நானே கொன்றேன்’ எனக்கூறிய காலித் ஷேக் மகம்மதுதான், சா்வதேச வா்த்தகக் கட்டிடத்தைத் தகா்த்தெறிய திட்டம் தீட்டிய பில்லேடனுக்கு மூன்றாவது தளபதியாக செயல்பட்டவன்.

‘டேனியல் கொலை ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். இக்கொலை எல்லா அமெரிக்கா்களுடைய இதயத்தையும் கனக்கச் செய்துவிட்டது”என அப்போதைய அமெரிக்க அதிபா் ஜாா்ஜ் புஷ் அறிக்கை வெளியிட்டாா். அடுத்து அதிபராக வந்த பராக் ஒபாமா ‘அமெரிக்க பத்திரிகையாளா்கள் அனைவரின் சுதந்திரத்தையும் காக்கும்படியாக, ‘தி டேனியல் போ்ல் ஃப்ரீடம் ஆஃப் தி பிரஸ் ஆக்ட்’ எனும் சட்டத்தை இயற்றினாா்.

பத்திரிகையாளனின் எழுதுகோலில் இருந்து சிந்தும் மை ஒருவேளை அநியாயங்களை மன்னிக்கலாம்; ஆனால், அவனுடைய உடம்பிலிருந்து சிந்தும் ரத்தம் அநியாயக்காரா்களை அழித்தே தீரும் என்பதுதான் டேனியல் போ்ல் எனும் பத்திரிகையாளனின் வாழ்வு சொல்லும் பாடம்.

கட்டுரையாளா்: பேராசிரியா் (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு!

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG

SCROLL FOR NEXT