எனது நண்பர் ஒருவர் சக ஊழியரிடமிருந்து தனக்கு வந்த கட்செவி அஞ்சல் தகவலை என்னிடம் காட்டினார். அந்தப் பதிவில் பெண்களை உயர்வாகப் போற்ற வேண்டும் என்ற உபதேசம் அடங்கி இருந்தது. அதைச் சுட்டிக்காட்டிய நண்பர் "கட்டிய மனைவியைக் கொடுமைப்படுத்தித் துரத்திவிட்டு வேறொரு பெண்ணுடன் வசித்துவரும் இவர், பெண்களைப் போற்ற வேண்டும் என்று உபதேசித்திருக்கிறார்' என்று கூறி வருந்தினார்.
அந்த பெண்ணுரிமைப் போராளி அற்புதமான நடிகர்தான், சந்தேகமில்லை. யாரோ ஒருவர் ஏதோ ஒரு சமூக ஊடகத்தில் எழுதிய அந்தப் பதிவை தனது சொந்தக் கருத்துப் போல அவர் நகலெடுத்து அனுப்பியிருக்க வேண்டும். இதனைத்தான்
மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
ஒப்பார் யாம்கண்டது இல்
என்று திருவள்ளுவர் குறிப்பிட்டிருக்கிறார் போலும்.
"கயவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்தும் யாம் கண்டதில்லை' என்பதே இதன் பொருள்.
எனவேதான், எந்த ஒரு விஷயத்தையும் யார் சொல்கிறார், அந்த செய்தி உண்மையா என்பவற்றையெல்லாம் ஆராய்ந்த பிறகே அதன் உண்மைத் தன்மை குறித்த முடிவுக்கு நாம் வர வேண்டும்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
என்று திருவள்ளுவர் கூறியதன் காரணம் இதுவே.
அதேபோல, சிலரைப் பார்த்தால் சிடுசிடுவென இருப்பார்கள். நெருங்கிப் பழகும்போதுதான் அவரது இனிய குணநலன்கள் தெரியவரும். முள் செடியில் மலர்ந்த ரோஜா மலர்களைப் போன்றவர்கள் அவர்கள். ஆனால் அவர்களுக்கு நடிக்கத் தெரியாது.
பிறரிடம் பழகத் தயங்குவார்கள் சிலர். ஆனால் பழகிவிட்டால் அவர்களின் நட்புறவு நீண்ட நாள்களுக்கு நீடிக்கும்.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு
என்று இதையே திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
அதேசமயம், "தீ நட்பு', "கூடா நட்பு' குறித்தும் அவர் எச்சரித்திருக்கிறார்.
'தொழுதகை உள்ளும் படைஒடுங்கும்' நபர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும். ஒருவரிடம் முதலில் நட்பு பாராட்டிவிட்டு, பின்னர் இவரிடம் ஏன் நட்புறவு கொண்டோம் என்ற வெறுப்புணர்வை அடையும் நிலை யாருக்கும் வாய்க்கக் கூடாது.
மனித மனத்தை அவ்வளவு எளிதாக யாராலும் மதிப்பிட இயலாது. எந்த மனிதரையும் எளிதாக எடைபோட இயலாது. தவிர, யாரும் நூறு சதவீதம் தூய்மையானவராக இருக்க முடியாது.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
என்ற திருவள்ளுவரின் போதனையைப் புரிந்துகொண்டால் பல ஏமாற்றங்களைத் தவிர்க்க முடியும்.
அது மட்டுமல்ல, ஒருவர் தகுதியானவரா, தகுதியல்லாதவரா என்பது அவர்களுடனான பழக்கத்தின் தொடக்கத்தில் தெரியாது; அவர்களின் இறுதிச் செயல்பாட்டில்தான் தெரியவரும். இதனையே,
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்
என்று திருக்குறள் கூறுவதாகத் தோன்றுகிறது.
கவர்ச்சிகரமான விளம்பரங்களால் வசீகரிக்கும் நிதி நிறுவனங்கள் நிகழ்த்தும் மோசடிகள், போலி ஆன்மிகவாதிகளின் சுயரூபங்கள், மேடையில் முழங்கும் அரசியல்வாதிகளின் பொய்முகங்கள், கபட வேடமிட்டு காலை வாரும் போலிகளின் முகத்திரைகள் போன்றவை தெரியவரும்போது நாம் கடும் அதிர்ச்சி அடைகிறோம். இதற்கு பிறர் மீது குற்றம் கூறுவதில் பொருளில்லை. மனிதர்களையும் அவர்களது கருத்துகளையும் மதிப்பிடத் தெரியாத நமது இயலாமைக்கு பிறரைக் குறை கூறுவது அறியாமை.
இங்குதான் இலக்கியங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன. நமது வாழ்வில் இலக்கியத்தின் துல்லியமான மதிப்பிடத்துக்கு திருக்குறளே சான்று. வாழ்வின் அனுபவங்கள் செறிந்த இலக்கியங்களைப் பயிலும்போது, அதுவரை புலப்படாமல் நம்மை ஏய்த்து வந்த மாயைகள் அகலும். தங்கள் அனுபவ அறிவாலும், ஞான விரிவாலும் கண்டறிந்த உண்மைகளை கல்வெட்டுகள் போல இலக்கியங்களில் சான்றோர் பதித்து வைத்திருக்கிறார்கள்.
நாம் காயம் படாமல் நடைபயில பாதுகாப்பான சாலைகளை அமைத்திருக்கிறார்கள் நமது முன்னோர். நாம்தான் அந்தச் சாலைகள் இருப்பதே தெரியாமல், முள்கள் செறிந்த காட்டுப்பாதையில் சென்று அல்லலுறுகிறோம். பிறகு பாதைகளை சபிக்கிறோம்; நம்மை நாமே நொந்து கொள்கிறோம்.
தற்போதைய அவசர உலகில் இலக்கியங்களை வாசிக்கவோ நேசிக்கவோ நமக்கு நேரம் இருப்பதில்லை. தவிர, கையடக்கமான அறிதிறன்பேசிகள் நமது மதிப்பு மிகுந்த நேரத்தைக் களவாடி விடுகின்றன.
சமூக ஊடகங்களில் நிலவும் வம்புச் சண்டைகளிலும், யாரோ எழுதிய பதிவைப் படிக்காமலே பலருக்கும் அனுப்பிவைக்கும் அவசரச் செயல்பாடுகளிலும் குவிந்திருக்கும் நம் கவனம், இலக்கியங்கள் மீது திரும்புமானால் பல இன்னல்களை நாம் முன்கூட்டியே தவிர்க்க முடியும்.
எனது நண்பரின் சக ஊழியர் அனுப்பிய கட்செவி அஞ்சல் பதிவில் தாம் குறிப்பிட்ட திருக்குறளின் உண்மைப் பொருளை அறிந்திருந்தால் அவரது வாழ்க்கை தடம் புரண்டிருக்காது; அவரது மனைவியின் வாழ்வும் இருண்டிருக்காது. அந்தக் குறள் இடம்பெறும் 'வாழ்க்கைத் துணைநலம்' என்ற அதிகாரத்திலுள்ள பத்து குறட்பாக்களையும் அவர் படித்திருந்தால், குறைந்தபட்சம் தன்னெஞ்சறியப் பொய்யுரைத்திருக்க மாட்டார்.
திருக்குறளின் 'கயமை' அதிகாரத்திலுள்ள பத்து குறள்களும் இப்படிப்பட்டவர்களை அம்பலப்படுத்தவே என்பது தெளிவு. மக்களைப் போல மட்டுமல்ல, கடவுளர் போலவே நடிப்பவர்களிடமும் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும். 'தேவர் அனையர் கயவர்' என்பது வள்ளுவர் வாக்கு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.