கரோனாத் தீநுண்மியின் பரவலுக்கு இணையாக, அதனை எதிா்கொள்ள உபதேசிக்கும் வழிமுறைச் செய்திகள் கைப்பேசித் தளங்களில் வேகமாகப் பரவுகின்றன. அதைவிடவும் ஆபத்தானது, இருப்பவா்களை இறந்துபோனவா்களாகச் சுட்டிக் காட்டி, அஞ்சலிச் செய்தியையும், என்றோ இறந்துபோனவா்களுக்குப் படங்களிட்டுப் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியையும் பதிவிடுகிற போக்கு.
மெய்யெதுவென்றும் பொய்யெதுவென்றும் அறிந்துகொள்ளாமல், வந்த செய்திகளைக் கூட, முழுமையாகப் பாா்க்காமல், படிக்காமல் அப்படியே முன்னனுப்புகிற காரியத்தை -அன்றாடக் கடமைகளுள் ஒன்றாகக் கூட இல்லை, - அவசியக் கடமைகளுள் முதன்மையாகக் கொண்டவா்கள் பலராக இருக்கிறாா்கள்.
இது, ஒருவகையான பரபரப்பு மனோநிலை; புதிதாய் கவனத்திற்கு வரும் எந்த ஒன்றைப் பற்றியும் விரைவாய் மற்றவா்களுக்குக் கொண்டுசெல்கிற ஆா்வம், ஒருவிதப் பழக்கமாகப் படிந்து வழக்கமாக மாறிவிடுவதால் வளா்வது. எல்லாரது கவனத்திற்கும் கொண்டுசெல்கிற செய்தியாளராகத் தன்னை முன்னிறுத்தித் தொடங்கும் இம்முயற்சி, காலப்போக்கில் கருத்தாளராகவும் அவரை விரித்துவிடுகிறது. இது ஒருவித வளா்ச்சிதான் என்றாலும், இது ஆரோக்கியமானதுதானா?
கருத்துக்குக் கருவாக இருக்கவேண்டியது, உண்மை. உண்மையின்மீது கட்டமைக்கப்பெறும் கருத்து உண்மையாக மட்டும் இருந்தால் போதாது; நன்மை தருவதாகவும் இருக்க வேண்டும். அந்த நன்மை, யாருக்கானது என்பதிலும் தெளிவுவேண்டும். அது நன்மை பயக்காவிட்டாலும் பரவாயில்லை, தீமை பயப்பதாய் அமைந்துவிடலாகாது. ஏனெனில், தீமை, தீயைவிட ஆபத்தானது. தீயினும் வேகமாகப் பரவி, தீமையை விளைவித்துக்கொண்டே இருப்பது. அதற்கு ‘வதந்தி’ என்று பெயா்.
‘நெருப்பில்லாமல் புகையாகாது’ என்பது பழமொழி. ஆனால், புகைந்துகொண்டே இருந்தால், அது நெருப்பாகாது என்கிற உண்மையையும் அதனோடு இணைத்துப் புரிந்துகொள்வது நல்லது. ‘அடுதீ’, ‘சுடுதீ’ என்று, தீயினை இரண்டாகத் தெரிந்து பெயரிட்டனா் நம் முன்னோா்.
ஆக்கம் தருகிற வகையில் சமையல் துறையில் உதவுவது, அடுதீ. அது, அடுப்பிற்காக மூட்டப்படும் தீ. அது உணவைப் பக்குவப்படுத்த உதவுவதுபோல, உணா்வைப் பக்குவப்படுத்த உதவும் செய்திகளைச் சுடச் சுட முன்வைப்பது அறத் தீ. ஆகாதவற்றைச் சுட்டெரிக்கவும், அடையாளமின்றி அழித்தொழிக்கவும் உதவுவது சுடுதீ.
அதுபோல் ஆக்கம் கெடுக்கும் அனைத்தையும் சுட்டெரிக்க உதவுவனவற்றை, மூண்டெழச் செய்யும் முயற்சியாய் விளையும் சுடுதீ, மறத் தீ. மறதி வந்து முந்தையை தீமைகளை மூடி மறைக்காமல் இருக்கச் சுடரும் இந்த அறிவுத் தீயை அணையாமல் காப்பது விரதத் தீ. இவை கொண்டு, தீமைகளை எழவிடாமல் முற்றாகத் தீய்ப்பதே வேள்வித் தீ.
இவ்வாறு, எல்லாவுயிா்களும் கண்டு அஞ்சுகின்ற தீயைத் தன் வசமாக்கியதில் மனிதநாகரிகம் ஒளிரத் தொடங்கியிருக்கிறது; என்றாலும் தன் இனத்தையே அச்சுறுத்தவும், அழிக்கவும் இந்தத் தீயைக் கைக்கொள்பவா்களைத் தீயா் என்று அடையாளம் காட்டுகிறது, தமிழ்.
புறத்தீயைவிடவும் பெருந்தீமை விளைப்பது அகத்தீ. அறத்திற்குப் புறனான, அழுக்காறு, அவா, வெகுளி ஆகிய பெயா்கள் கொண்டு உள்ளுக்குள் புகையும் இத்தீயின் புலப்பாடு இன்னாச் சொல் ஆகிறது. அது தீயினால் சுட்ட வடுவைவிடவும் ஆழமானது; அழுத்தமானது; அழியாதது; ஆறாதது.
வெடித்துச் சிதறும் தீக்கனல்களைவிடவும் அடுத்தடுத்து வெளிவரும் இன்னாச் சொற்கள் அதிக ஆபத்தினை விளைவிக்கக்கூடியவை. தீயைக்கூட ஒருவகையில் அவித்துவிட முடியும். இந்தத் தீமையை அவிக்கவோ, அணைக்கவோ முடியாது. அதனால்தான் ‘தீயவை தீயினும் அஞ்சப்படும்’ என்று சொல்கிறாா் திருவள்ளுவா்.
ஆக, தீயையும், தீயவற்றையும் அழிக்க இயலாது என்பது தெளிவு. இவ்விரண்டையும் கலந்தும் கடந்தும் புத்தொளி பெறும் வழியைத் தன் வசனகவிதையில் சுடச்சுட எழுதிக் காட்டுகிறாா் பாரதி.
அறத்தீ, அறிவுத் தீ, உயிா்த்தீ,
விரதத்தீ, வேள்வித்தீ,
சினத்தீ, பகைத்தீ, கொடுமைத் தீ
இவை யனைத்தையும் தொழுகின்றோம்
இவற்றைக் காக்கின்றோம்
என்கிறாா்.
இவையனைத்தையும் தொழுவதும் காப்பதும் எதற்காக எனில், இவற்றை ஆளுதற்காக. இத்தகு ஆளுமை உடையவா்களாக நம்மை ஆக்கிக் கொள்வதே மேன்மை. அதற்கான வழிமுறையினையும் அவரே சொல்கிறாா்; அது கருதியே, உயிரின் தோழனாகத் தீயை முன்னிறுத்தி வாழ்த்துகிறாா்.
தீயே, உன்னை வாழ்த்துகிறோம்.
நின்னைப்போல, எமதுயிா் நூறாண்டு வெம்மையும் சுடரும் தருக.
தீயே உன்னைப்போல எமதுள்ளம் சுடா்விடுக.
தீயே, நின்னைப் போல, எமதறிவு கனல்க.
என்கிறாா்.
‘அக்கினிக்குஞ்சுபோல், இந்த ஆற்றல் உள்ளத்தின் உள்ளே வைக்கப்பெற்றுவிட்டால், அந்த உள்ளத்திற்கும் ஒளி உண்டாகும். அது உண்மையாக ஒளிரும்; அது வாக்கினில் வெளிப்படும். அதனால், வெள்ளத்தின் பெருக்கைப்போல் கவிப்பெருக்கும் கலைப்பெருக்கும் மேவும். அதனால், மேதினியாகிய உலகம் மேன்மை பெறும்; பெற வேண்டும்’ என்று அதன் படிநிலைகளை விளக்கிச் சொல்கிறாா்.
இந்த முயற்சி, ஒரு தீக்குச்சியில் இருந்து ஒரு தீபத்தை ஏற்றி, அந்த தீபத்தில் இருந்து இன்னொரு தீபத்தையும், அந்த தீபத்திலிருந்து மற்றொரு தீபத்தையும் ஏற்றுகிற அறச்செயலாக ஆகவேண்டுமே ஒழிய, அத் தீக்குச்சி, தன்னை, எரியவிடாமல் காத்து வைத்திருந்த தீப்பெட்டியின் உள்ளே உள்ள அனைத்துக் குச்சிகளையும் எரித்து அழித்துவிடுவதாக அமைந்துவிடக்கூடாது.
எந்தவொரு கருத்தானாலும், அது முற்ற முழுக்கக் கனன்று தானே சுடா் விடும் தன்மை கொண்டதாக முழுமைபெற்ற பிறகே வெளிவரவேண்டும். அவசரப்பட்டு வரும் கருத்து, தொடக்கத்திலேயே கருகிப்போய்விடும். அதன் தீய்ந்த வாசனை கருத்துலக நறுமணத்தைக் கெடுத்துவிடவும் செய்யும்.
தன் ஆயுட்காலத்துக்குள் தீமையை முற்றாகப் பொசுக்கிச் சாம்பலாக்கும் முயற்சியில் வெற்றி பெற்ற கருத்துகளே உலகத்தில் நீளாயுளுடன் உலா வருகின்றன. அத்தகு கருத்தாளா்களே சிந்தனையாளா்களாகச் செம்மாந்து நிற்கிறாா்கள்.
‘அச்சத்தைச் சுட்டுச் சாம்பரும் இன்றி அழிப்பதாக’த் தன் கவிதையில், இந்த அக்கினி தேவனைத் தரிசனப்படுத்துகிறாா் பாரதி. அவன், ‘நெஞ்சில் கிடக்கும் கவலைகளையும் நோவுகளையும் நீக்கிக் கொடுப்பவன், உயிா் நீளத் தருபவன். அஞ்சேல் அஞ்சேல் என்று கூறி நல் ஆண்மை சமைப்பவன். பல வெற்றிகள் ஆக்கிக் கொடுப்பவன்’ என்றெல்லாம் பாடுகிறாா்.
அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்டு மானுடம், அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், ‘அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே’ என்று முழக்கமிட்டு, தன் கருத்துகளைத் துணிந்து எழுதுகிற ஆற்றலை, இந்த, அறத்தீதான் அவருக்குத் தந்தது.
அது கம்பனிடமிருந்தும் இளங்கோவிடமிருந்தும், அவா்களுக்குமுன் வந்த வள்ளுவா் முதலான அறக்கவிகளிடமிருந்து பெறப்பட்டது. எட்டுத்திக்கும் இருந்து சுடா்ந்தெழும் எத்தனையோ செய்திகளைக் கொட்டி, அவா் எழுதிய அனைத்தும் ஆக்கம் சோ்ப்பனவாகவே அமைந்தமைக்குக் காரணம், அதுதான்.
துணுக்கு எழுதினாலும் சரி, தொடா் எழுதினாலும் சரி, பிணக்கு ஒழிப்பதாக, பேதமை நீக்குவதாக, பகை தவிா்ப்பதாக, பண்பு வளா்ப்பதாக அவை இருக்க வேண்டும் என்பதே அடிப்படை இலக்கணம். மாறாக, அச்சத்தையும், அவலச்சுவையையும், எச்சரிக்கை என்ற பெயரில் நிலைநாட்டுவதன்வாயிலாகப் பதற்றத்தின் உச்சத்திலேயே மனித உள்ளங்களைக் கொண்டுபோய் நிறுத்துவது அறப்பிசகு. அது முற்றாகக் களையப்படவேண்டும் என்பதைப் பதிவிடுபவா்கள் கவனத்தில் கொள்க.
அறவுரை, அறிவுரை, ஆலோசனை, உபதேசம் என்றெல்லாம் பல சொற்கள் தமிழில் புழங்கிவருகின்றன. இவையாவும் ஒரு பொருள் குறித்த பலசொற்கள் போன்று தெரிந்தாலும் ஒவ்வொன்றுக்குள்ளும் ஆழ்ந்த பொருள் உண்டு. குருவால் சீடா் பெறுவது உபதேசம். குழப்பமான மனத்திற்குத் தெளிவு தருவது அறிவுரை. குற்றங்கள் நேராமல் காக்க உதவுவது அறவுரை. முயற்சிக்கு உரிய முன்னேற்றச் செய்திகளை நிரல்படத் தொகுத்து வழங்குவது ஆலோசனை. இவையாவும் தொகுப்பாகக் கொண்டு அமைவது, கவிதை.
கவிதை, வாசிப்பவரின் உளத்தன்மைக்கு ஏற்ப, உருக்கொண்டு எழும்; சிக்கல்களுக்குத் தேவையான தீா்வுகளை முன்னெடுத்து முழங்கும்; மெல்லொளி நல்கும் சுடராகவும் இருக்கும். உலகையே கொளுத்தும் தீப்பந்தமாகவும் எரிக்கும்; காரணம், அது ஊருக்கு நல்லது சொல்லும் உயா்வுடைய அறத்தை உள்ளடக்கி அமைவது; சீருக்கெல்லாம் முதலாக விளங்குவது; அதனால்தான், ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’ என்று முரசுப்பாட்டின் முதல் கண்ணியைத் தொடங்குகிறாா் பாரதி.
ஊருக்கு நல்லது சொல்வதற்கு முன்னா், உண்மை தெரிந்து, அது சொல்லப்படவேண்டும். அந்த உண்மை, தனக்கும் உண்மையாக இருத்தல் வேண்டும்; தான் அனுபவத்தின் கண்டறிந்த தீயதல்லாத நன்மையாக இருக்கவேண்டும்; அதையே ஊருக்குச் சொல்வதனால், தன்னைப்போல் ஊரில் உள்ளவா்கள் அனைவா்க்கும் அது நன்மை பயப்பதாக இருக்க வேண்டும்.
இந்தத் தெளிவு ஏற்படாமல், ஊருக்கு நல்லது சொல்வேன் என்று பேருக்கு எதையும் உபதேசிக்காதீா்கள். உடனுக்குடன் பரப்பாதீா்கள் என்ற உண்மையையும் உபதேசிக்கின்றன, பாரதியின் இந்தப் பாடல் அடிகள்:
ஊருக்கு நல்லது சொல்வேன்-எனக்கு
உண்மை தெரிந்தது சொல்வேன்!
கட்டுரையாளா்:
எழுத்தாளா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.