நடுப்பக்கக் கட்டுரைகள்

ஆசிரியப் பணி அறப்பணி

ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி மாணவர்களுக்கு உண்டு. அந்த மாணவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்கும் சக்தி ஆசிரியர்களுக்கே உண்டு.

ஆர். வேல்முருகன்

ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி மாணவர்களுக்கு உண்டு. அந்த மாணவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்கும் சக்தி ஆசிரியர்களுக்கே உண்டு. அதனால்தான் நமது இந்தியத் திருநாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடி மகிழ்கிறோம். வேறு எந்தப் பணிக்கும் இல்லாத சிறப்புகள் பல ஆசிரியர் பணிக்கு உண்டு.

ஒரு காலத்தில் ஆசிரியர் என்றால் ஒவ்வொரு ஊரிலும் தனி மரியாதை இருக்கும். அதுவும் கிராமப்புறங்களில் என்றால் கேட்கவே வேண்டாம். அங்கு ஆசிரியர் சொல்லுக்குத் தனி மரியாதைதான். ஒரு பிரச்னையில் ஆசிரியர் என்ன கூறுகிறார் என்பதைக் கேட்க பலர் காத்திருப்பதுண்டு. ஆசிரியர்களும் விருப்பு வெறுப்பற்று தங்கள் கருத்துகளை தைரியமாக எடுத்துக் கூறினர்.

அப்போதெல்லாம் ஒரு கிராமத்துக்குள் ஆசிரியர் நுழைகிறார் என்றால் மாணவர்கள் அவர் எதிரில் செல்லவே பயப்படும் சூழ்நிலை இருந்தது. அப்போது ஒரு சில ஆசிரியர்கள் தவறு செய்தாலும் பயந்துதான் செய்தார்கள். ஆசிரியர்களைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதினார்கள் ஊரார்.

ஆனால் இப்போது ஆசிரியர் தொழில் என்பது அதிக ஊதியம், குறைந்த உழைப்பு, எதற்கும் பொறுப்பேற்கவேண்டிய அவசியம் இல்லாதது என்றாகிவிட்டது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி கொண்டு வரப்பட்டது. 

ஒருவர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடிக்கும்போது அவருக்கு 17 வயது ஆகும். அதன்பின் அரசுப் பணிக்கு வருவதற்காக ஓராண்டு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அப்போது இவ்வளவு போட்டியில்லை. வேலையில்லாத் திண்டாட்டமும் இல்லை.

ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர் பணிக்கு வழங்குவது போல ஊதியம் வழங்கப்பட்ட பின் இப்பணிக்குக் கடுமையான போட்டி உருவானது. அதனால் பணி வாய்ப்பு பெறுவதற்கே பல லட்சம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது மத்திய - மாநில அரசுகள் நல்லாசிரியர்களாகத் தேர்வு செய்யப்படுவோருக்கு விருதுகளை வழங்கி கெளரவிக்கின்றன. மாணவர்களும் தங்கள் பங்குக்கு ஆசிரியர்களுக்கு வாழ்த்துச் சொல்வதுடன் நினைவுப் பரிசுகளையும் அளிக்கின்றனர்.

ஆசிரியர் என்பவர் தங்கள் மாணவர்களின் எதிர்காலத்தைக் கணித்து அவர்களுக்கு உதவுபவராக அமைந்தால் அது பேரின்பமே. தமிழகத்தின் தென்கோடியில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து தனது கடுமையான உழைப்பால் குடியரசுத் தலைவரானவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம். 

அவருடைய ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் என்பவர், நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக உயர்ந்து காட்ட வேண்டும் என்று கலாமை ஊக்கப்படுத்துவாராம். இதைத் தனது "அக்னிச் சிறகுகள்' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் கலாம். 

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு வீடு கட்டித் தந்த மாணவர்கள், பெங்களூரு இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் பெண் பேராசிரியை பெயரில் பல கோடி செலவில் கட்டடங்களைக் கட்டிய மாணவர்கள், சென்னை ஐஐடி உள்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்காக கோடிகளில் பணம் கொட்டித் தங்கள் வழிகாட்டிகளைப் படிக்க வைக்கும் மாணவர்கள் என ஆசிரியர்களால் உயர்ந்த மாணவர்களின் செயல்கள் மனதை நெகிழ வைக்கின்றன.

ஒவ்வொரு ஆசிரியரும் ஏதாவது ஒருவகையில் தங்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாகத்தான் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் கற்பித்தலில் மிக முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது இங்கு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. 

இந்த மாற்றத்துக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டாக வேண்டியுள்ளது. இரண்டு தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது. அவர்கள் கற்பித்தலில் தங்கள் மாணவர்களுக்குக் காட்டிய அக்கறைக்காகவும் புதுமையைப் புகுத்தியதாலும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 

இப்போதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல நூறு ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தைத் தாண்டியும் பல விஷயங்களைக் கற்றுத் தருகின்றனர். அதுவும் கடந்த ஆண்டை உலகம் முழுவதையும் கரோனா பாதித்து மறக்க முடியாத ஆண்டாக்கியது. அப்போது நல்ல உள்ளம் கொண்ட பல ஆசிரியர்கள் தங்கள் மாணவர்கள் கற்கவும் அவர்களின் குடும்பங்கள் வயிராற உண்ணவும் தங்கள் சொந்தக் காசைச் செலவு செய்தனர். 

பணம் செலவு செய்தது பெரிய விஷயமில்லை. ஆனால் மனித நேயம் மரத்துப்போகவில்லை என்பதை இது உறுதிப்படுத்தியது.  இதைப் பார்க்கும் அடுத்த தலைமுறை மாணவர்களிடம் மனித நேயம் தொடர்ந்து மலரும் என்பது உறுதி.

வல்லரசான அமெரிக்கா, கடுமையான புயலால் பாதிக்கப்படும்போதெல்லாம், இந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான் அங்குள்ளவர்களுக்கு உதவிகரமாக இருந்து வருகிறார்கள். அதற்குக் காரணமாக அவர்கள்கூறுவது, தமது ஆசிரியர்கள் கற்றுத் தந்த கலாசாரமும், மனிதாபிமான பண்பும்தான் என்கிறார்கள். இது நமது கலாசாரத்துக்கும் அதனைக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் கிடைத்த பெருமை எனலாம்.

ஆசிரியப் பணி என்பதை தொழிலாகப் பார்க்காமல் எதிர்காலத் தலைமுறைக்குச் செய்யும் சேவையாகப் பார்க்கும் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறார்கள். ஆசிரியர்கள் யாரும் வித்தியாசமானவர்களாக இல்லை. ஆனால் வித்தியாசமான செயல்களைச் செய்யும் ஆசிரியர்களே மாணவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். 

ஆசிரியர்கள்தான் சமுதாயத்தை முன்னேற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அவர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் மாணவர்களைப் பொருத்தவரையில் அந்த ஆசிரியர்கள் எப்போதும் நல்லாசிரியர்களே. 

ஆசிரியப் பணி அறப்பணி என்பதை உணர்ந்து, அதற்கே தன்னை அர்ப்பணித்து  வாழும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் நாள் வாழ்த்துகள்.

நாளை (செப். 5) ஆசிரியர் நாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை: உயா்நீதிமன்றம்

டிச.29-இல் பல்லடத்தில் திமுக மகளிரணி மாநாடு

கடும் பனிப்பொழி: ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,540-க்கு விற்பனை!

3 ஆண்டுகளில் 438 மத்திய காவல் படையினா் தற்கொலை 2014 முதல் 23,000 காவலா்கள் ராஜிநாமா

மருத்துவத் துறை காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT