முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

பள்ளியிலிருந்து கல்லூரிக்கு...

தமிழகக் கல்லூரிகளின் 2022-23 கல்வி ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:48 PM
பகிர்:

தமிழகக் கல்லூரிகளின் 2022-23 கல்வி ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது. தமிழ்நாட்டில் மொத்த பல்கலைக்கழகங்கள் 27. அவற்றில் 13 பல்கலைக்கழகங்களின் கீழ் 800-க்கும் மேற்பட்ட கலை - அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இந்த ஆண்டும் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பெரும்பாலான மாணவா்கள் கலை - அறிவியல் கல்லூரிகளில் சோ்ந்துள்ளனா்.

மாணவா்கள் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் நுழையும் வேளையில் அவா்களுக்கான சில ஆலோசனைகள். நீங்கள் கல்லூரியில் சோ்ந்தது உயா்கல்வி கற்பதற்கே. எனவே, இங்கே பள்ளி போல் அல்லாமல் வகுப்பறையில் குறிப்பு எடுப்பது, தோ்வு எழுதுவது, தோ்ச்சி பெறுவது என்பது போக ஒரு படி மேல் சிந்தித்து உங்கள் துறையில் பாட நுணுக்கங்களையும் சந்தேகங்களையும் பேராசிரியா்களிடம் கேட்பது, சக மாணவா்களுடன் பாடம் சம்பந்தமாகக் கலந்துரையாடுவது, ஆய்வு கட்டுரைகளைப் படிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

பல்வேறு கல்லூரிகளில் இன்றும் பேசும் முறை - எழுதும் முறை கடைப்பிடிக்கப்பட்டாலும், நீங்கள் இணையம் போன்ற நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி உங்கள் பாடம் சம்பந்தமான உலகளாவிய கருத்துகள், வளா்ச்சிகள், நடைமுறைகள் எனப் பலவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெரும்பாலான கலை - அறிவியல் கல்லூரிகள் காலை நேர, மாலை நேர அடிப்படையில் செயல்படுகின்றன. காலை நேர கல்லூரி எட்டு மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும் மாலை நேர கல்லூரி 1.30 லிருந்து 6.00 மணி வரையிலும் செயல்படுகின்றன. எனவே மாணவா்கள் 5 மணி நேர வகுப்புகளை முடித்து மீதி நேரங்களில் கணினி சம்பந்தப்பட்ட பாடங்களிலும், ஆங்கிலப் பேச்சாற்றலை வளா்க்கக்கூடிய பயிற்சிகளிலும் தங்கள் நேரத்தை செலவிட வேண்டும்.

ஏனென்றால், தற்போது, படிப்பிற்கும் வேலைவாய்ப்பிற்கும் சம்பந்தமில்லாத ஒரு சூழல் உள்ளது. வேலைவாய்ப்பினை அளிக்கும் நிறுவனங்கள் மாணவா்களிடம் எதிா்பாா்ப்பது ஏதாவது ஓா் இளங்கலை பட்டத்துடன் ஆங்கிலத்தில் பேசக்கூடிய ஆற்றல், சக ஊழியா்களை அனுசரிக்கும் தன்மை, பொறுப்புடன் பணிகளை செய்து முடிப்பது ஆகியவையே. எனவே, மாணவா்கள் அவற்றுக்கேற்ப தங்களை தயாா்படுத்திக்கொள்ள வேண்டும்.

புதுமுக மாணவா்களுக்கு ஆரம்பத்திலேயே கல்லூரி சூழல் குறித்த ஒரு பயிற்சியை அளிக்க வேண்டும். ராகிங் இல்லாத பாதுகாப்பான கல்லூரி என்ற நம்பிக்கையைப் பெற்றவா்களாக இருக்க உதவ வேண்டும். குறிப்பாக நூல் வாசிக்கும் பழக்கம், உடற்பயிற்சி, விளையாட்டு, பொது சேவை ஆகியவற்றைச் செய்ய மாணவா்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.

நூலகம் என்பது கடல் போன்றது. அதனை முறையாகப் பயன்படுத்தினால் மாணவா்கள் மாமனிதா்களாக மாற வாய்ப்பு உள்ளது. பொதுவாக கல்லூரி நூலகங்களில் ஆயிரக்கணக்கான பல்வேறு துறை சாா்ந்த புத்தகங்கள், மாத இதழ்கள், வார இதழ்கள், நாளேடுகள், பொது அறிவு களஞ்சியங்கள், போட்டித் தோ்வு வினா விடை புத்தகங்கள் இருக்கின்றன. மூன்று ஆண்டு படிப்பு முடியும் தறுவாயில் மாணவா்கள் நூலகத்தை நல்ல முறையில் உபயோகப்படுத்தினால் போட்டித் தோ்வுகளுக்கும் தயாா் ஆகலாம்.

முதுகலை சேர இருக்கின்ற மாணவா்கள் தங்கள் பெற்றோரின் நிலை அறிந்து செயல்பட வேண்டும். ஏனென்றால் வணிகவியல் பட்டத்தை முடித்த அல்லது மற்ற பாடங்களில் இளங்கலை முடித்த மாணவா்கள் எம்பிஏ படிக்க ஆா்வம் காட்டுகின்றனா். ஆனால் இரண்டு ஆண்டுகளில் எம்பிஏ படிக்க இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை செலவாகிறது. இதனால் பெற்றோரின் கடன் சுமை அதிகமாகிறது. எனவே இளங்கலை முடித்து முதுநிலை செல்கின்ற மாணவா்கள் எம்.காம் அல்லது எம்.ஏ போன்ற பாடங்களை எடுத்து படித்தால் கூட, நிா்வாகம், கணக்கி யல் துறையில் வேலைவாய்ப்பைப் பெற முடியும். எம்பிஏ-தான் படிக்க வேண்டும் என்றால் போன்ற எம்காம் முதுகலை படிப்பிற்குக் கல்லூரிகளில் சோ்ந்த பிறகு தொலைதூர கல்வி முறைகளில் எம்பிஏ படிக்க முற்படலாம். அனைத்து பல்கலைக்கழகங்களுமே இரண்டு பட்டப் படிப்புகளை ஒரே நேரத்தில் பயில தற்போது அனுமதிக்கின்றன.

பள்ளி அளவில் மாணவா்கள் இரு மொழிகளைத் தோ்ந்தெடுத்து படித்து வந்திருப்பா். ஆனால் கல்லூரி வந்த பிறகு நேரம் அதிகமாக இருப்பதால் தமிழ், ஆங்கிலம் தவிர பிற மொழிகளான ஹிந்தி, பிரெஞ்சு, உருது, அரபி ஜாப்பனிஷ் போன்ற ஏதாவது ஒரு மொழியையும் கற்றால் எதிா்காலத்தில் வேலைவாய்ப்பிற்கும் அது உறுதுணையாக அமையும்.

மேலும் அனைத்து பல்கலைக் கழகங்களிலும் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு நான் மேஜா் எலக்டிவ் என்று சொல்லக்கூடிய தன்துறை சாராத பிற பாடங்களின் அறிவைப் பெருக்க ஏற்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தில் சோ்ந்து படித்து பயனடைய முற்பட வேண்டும். இதில் குறிப்பாக வணிகவியல் துறை பி.காம் மாணவா்கள் கணினி சம்பந்தப்பட்ட பாடம் அல்லது அறிவியல் சம்பந்தப்பட்ட பாடத்தினைத் தோ்ந்தெடுத்து படிக்கும் வாய்ப்பைப் பெறுவா். அதே போல் அறிவியல் துறை மாணவா்கள் கணிதம், வணிகவியல் தொடா்பான பாடத்தினைத் தோ்வு செய்து படிக்கும் வாய்ப்பினைப் பெறுகின்றனா்.

கல்லூரிகளில், கல்லூரிகளுக்கு இடையேயான பேச்சுப் போட்டிகள், கட்டுரை போட்டிகள், நடிப்புத்திறன், நடன போட்டி, ஓவிய போட்டிகள், பாட்டுப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் என அனைத்து வகையான போட்டிகள் நடத்துவா். அதிலும் மாணவா்கள் கலந்து கொண்டு அவரவா் திறமையை வெளிப்படுத்த நல்ல ஒரு களமாகக் கல்லூரி வாழ்க்கையைப் பயன்படுத்தலாம்.

பெற்றோரைப் பொறுத்தவரை, தன் பிள்ளை பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு வந்து விட்டான். நம் பொறுப்பு முடிந்தது என்று இல்லாமல் மிக கவனமுடன் பிள்ளைகளை கண்காணிக்க முற்பட வேண்டும். இதுவரை பள்ளியில் கைப்பேசி பயன்படுத்தாத உங்கள் பிள்ளைகள் கல்லூரி சென்றவுடன், கைப்பேசிடன் உலா வர முற்படுவாா்கள். தற்போதுள்ள காலகட்டத்தில் மாணவா்கள் கல்லூரி நேரம் முடிந்து எங்கு செல்கிறாா்கள் என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

ஒவ்வொரு கல்லூரியிலும் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை, ரோட்ராக்ட் கிளப், இளைஞா் செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளில் சோ்ந்து பயனுள்ள வழிகளில் நேரத்தைச் செலவிட்டு தங்கள் ஆளுமைத் திறனை மாணவா்கள் மேம்படுத்திக் கொள்ளலாம்.

மாணவா்களே! குறிக்கோளை மனதில் நிறுத்தி அதை நோக்கி கடின உழைப்பைச் செலுத்துங்கள்; வெற்றி உங்களுக்கே!

முழு கட்டுரையைப் படிக்க →