நடுப்பக்கக் கட்டுரைகள்

காசோலைக்கு கட்டுப்பாடு தேவை

எஸ் கல்யாணசுந்தரம்

 வங்கிக் கணக்குகளில் பணம் இல்லாமை காரணமாக காசோலைகள் திரும்பி வந்தது தொடர்பாக 33 லட்சத்துக்கும் அதிகமான கிரிமினல் வழக்குகள் நாட்டில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் நீதித்துறையின் செயல்பாடுகளை சிதறடித்துள்ள நிலையில், உச்சநீதி மன்றம் சென்ற மாதம் மத்திய அரசுக்கு சில கேள்விகளை எழுப்பியது. காசோலையில் தொகை குறைவாக இருக்கும் வழக்குகளில் தற்போது வங்கிகளில் கடன் தள்ளுபடிக்கு வழி உள்ளதுபோன்ற ஒரு திட்டத்தை வகுக்க முடியுமா என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டது.
 இதற்கு முன்பு இதுபோன்ற வழக்குகளை விரைவில் முடிக்க மாலைநேர நீதிமன்றம் நிறுவியது போன்ற சில முயற்சிகள் செய்தும் அதனால் பெரிய பலன் விளையவில்லையென்றும் தொடர்ந்து இந்த வழக்குகளின் எண்ணிக்கை கூடி வருவதாகவும் நீதியரசர்கள் தெரிவித்தனர்.
 தற்போது இதுபோன்ற வழக்குகளை கையாள்வதற்கு, ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரிகள் தலைமையில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் யோசனையை பரிசோதிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிரம், தில்லி, குஜராத், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் அதிக அளவில் இருப்பதால், இந்த மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன.
 சிறப்பு நீதிமன்றங்கள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு செயல்படும் என்றும், அவற்றின் ஓராண்டு செயல்திறனை மதிப்பிட்டு, பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 ஓய்வுபெற்ற நீதிபதிகளின் சேவையைப் பெற்று, உரிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு சிறப்பு நீதிமன்றங்களை நிறுவுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஐந்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு மாநில நீதித்துறையால் நான்கு வார பயிற்சி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 1989-ஆம் ஆண்டு வரை காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்தால் அது ஒரு சிவில் வழக்காக மட்டுமே பார்க்கப்பட்டது. காசோலை வழங்கியவர் மீது காசோலை மூலமாக பணம் பெற வேண்டியவர், சிவில் வழக்கு மட்டுமே தொடுக்க முடியும். 1989-ஆம் ஆண்டு, பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தால் அது ஒரு தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாக மாற்றப்பட்டது. இது சில நிபந்தனைகளை உள்ளடக்கியதே.
 ஒன்று, கணக்கில் பணம் இல்லாத காரணத்தினால் காசோலை திரும்பி வரவேண்டும். இரண்டு, காசோலை ஏதோ ஒரு கடனிற்காகவோ பொறுப்பிற்காகவோ கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் (அன்பளிப்பு, இனாம் போன்றவற்றிற்காக கொடுத்திருந்தால் இந்த பிரிவில் வராது). மூன்று, குறிப்பிட்ட காலத்திற்குள் காசோலையை வங்கியில் கொடுத்து பணம் கேட்டிருக்கவேண்டும்.
 நான்கு, காசோலை திரும்பி வந்த நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள் பணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். ஐந்து, அவ்வாறு நோட்டீஸ் பெற்றவருக்கு பணம் செலுத்த பதினைந்து நாட்கள் அவகாசம் உண்டு. ஆறு, அவ்வாறு செலுத்தாதபோது ஒரு மாதத்திற்குள் கிரிமினல் வழக்கு தொடரலாம்.
 ஒரு காலத்தில் இச்சட்டத்திற்கு அவசியம் இருந்தது. அந்த காலகட்டத்தில் கணக்கில் போதுமான அளவு பணம் இல்லாமலே காசோலைகளை சகட்டுமேனிக்கு வழங்கும் நடைமுறை இருந்தது. இதனால் அதிக அளவு காசோலைகள் திரும்பி வருவதும், காசோலைக்கு பணம் கிடைக்கும் என்ற உத்தரவாதமும் இல்லாத நிலை உருவானது. பணம் கொடுக்கவேண்டியவர்களுக்கு தற்போது காசோலையை கொடுத்துவிடுவோம், பின்பு காசோலை வங்கிக்கு வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலையில் பலரும், குறிப்பாக வர்த்தகர்கள் செயல்பட்டனர்.
 மேலும் ஒருவர் மற்றவர்க்கு பணம் செலுத்தும் முறை பெரும்பாலும் காசோலை மூலமாகவும் சில சமயங்களில் டிமாண்ட் டிராப்ட் மூலமாகவும் மட்டுமே செய்யப்பட்டது.
 தற்போது வங்கி சேவைகளில் பலவித மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது காசோலைக்கான தேவையே கிடையாது. ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணம் மாற்றுவதற்கு ஐஎம்பிஎஸ், என்ஈஎப்டி, ஆர்டிஜிஎஸ் போன்ற பல வழிமுறைகள் வந்துள்ளன. இந்த சேவைகள் அனைத்தும் சில நிமிடங்களிலிருந்து சில மணி நேரங்களுக்குள் பணத்தை ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்றி விடுகின்றன.
 ஒருகாலத்தில் ஆயிரம் பேருக்கு பட்டுவாடா செய்யவேண்டும் என்றால் அந்த ஆயிரம் பேருக்கும் தனித்தனியாக காசோலை வழங்கும் நடைமுறை இருந்தது. தற்போது ஒரே கணக்கிலிருந்து அந்த ஆயிரம் பேருக்கும் ஆன்லைன் மூலம் உடனடியாக பணமாற்றம் செய்ய தொழில்நுட்பம் உண்டு. இத்தகைய சூழ்நிலையில் காசோலையின் பயன்பாடு குறைந்துள்ளது.
 இருந்தும் சில தனி நபர்களும் நிறுவனங்களும் காசோலையைப் பயன்படுத்துவதும் அதன் காரணமாக காசோலை திரும்பி வந்தால் கிரிமினல் வழக்கு தொடர்வதும் நடக்கின்றன.
 இந்த வழக்குகளை அறவே நீக்குவதற்கான வழி, காசோலை வழியாக பணம் செலுத்தும் முறையினை கட்டுப்படுத்துவதே. ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் மட்டுமே காசோலையை அனுமதிக்கலாம், அல்லது முழுவதுமாகவே காசோலையை தடை செய்யலாம், அல்லது காசோலை பரிவர்த்தனைகளுக்கு அதிக அளவு கட்டணம் வசூலிக்கலாம்.
 பல மின்னணு சேவைகளின் மூலம் உடனடியாக பணம் பெற வசதி இருக்கும்போது ஒருவர் ஏன் காசோலையை பெற சம்மதிக்கவேண்டும்? எனவே 1989-க்கு முன்பு இருந்ததுபோல் காசோலை திரும்பி வருவதை கிரிமினல் குற்றமாக இல்லாமல் மாற்றி விடலாம்.
 இந்த வழிமுறைகளை விட்டுவிட்டு லட்சக்கணக்கான கிரிமினல் வழக்குகளை கையாள்வது நீதித்துறையின் நேர விரயமாகும். நாட்டில் பல முக்கியமான வழக்குகள் விசாரணைக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலையில் இதுபோன்ற சில்லறை வழக்குகளை வரவிடாமல் நிறுத்துவதே நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT