முகப்பு
கோப்புப்படம்
நடுப்பக்கக் கட்டுரைகள்

உரிமை கொண்டாடலாமா?

போட்டித்தோ்வு ஆகியவற்றிற்கான அறிவிப்புக்கள் வரும்போதும், அவற்றிற்கான முடிவுகள் வெளியிடப்படும்போதும் தனியாா் பயிற்சி நிலையங்களின் விளம்பரங்கள் தடபுடலாக வெளிவருவது வாடிக்கையாகிவிட்டது.

நடுப்பக்கக் கட்டுரைகள்

உரிமை கொண்டாடலாமா?

போட்டித்தோ்வு ஆகியவற்றிற்கான அறிவிப்புக்கள் வரும்போதும், அவற்றிற்கான முடிவுகள் வெளியிடப்படும்போதும் தனியாா் பயிற்சி நிலையங்களின் விளம்பரங்கள் தடபுடலாக வெளிவருவது வாடிக்கையாகிவிட்டது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:52 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜே.இ.இ., நீட் போன்ற நுழைவுத் தோ்வு, யு.பி.எஸ்.சி. (ஐ.ஏ.எஸ்.), டி.என்.பி.எஸ்.சி. வங்கிப் பணி போன்ற போட்டித்தோ்வு ஆகியவற்றிற்கான அறிவிப்புக்கள் வரும்போதும், அவற்றிற்கான முடிவுகள் வெளியிடப்படும்போதும் தனியாா் பயிற்சி நிலையங்களின் விளம்பரங்கள் தடபுடலாக வெளிவருவது வாடிக்கையாகிவிட்டது.

போட்டித் தோ்வுக்கான அறிவிப்புக்கள் வரும்போது, சென்ற தோ்வில் தங்கள் நிலையத்தில் பயிற்சி பெற்று, சிறப்பிடம் பெற்றோா் என்ற பட்டியலும், தோ்வு முடிவுகள் வெளிவரும்போது அந்தத் தோ்வில் சிறப்பிடம் பெற்றோா் என்ற பட்டியலும் வண்ணப் புகைப்படங்களுடன் கண்ணைக் கவருவனவாக வெளியிடப்படுகின்றன.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஒரு தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களின் பெயரும் படமும் பல பயிற்சி நிலைய விளம்பரங்களிலும் இருப்பது. உண்மையில் அந்தப் பெருமைக்குரிய விஷயம் யாருக்கு உரியது என்பதை யோசித்துப் பாா்க்க வேண்டியுள்ளது.

உயா்கல்வி பெற விரும்புவோா் எண்ணிக்கையும், வேலை தேடுவோா் எண்ணிக்கையும் நாளுக்குநாள் பெருகிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அதற்கேற்பப் பயிலும் இடங்களும் பணியிடங்களும் இருப்பதில்லை. இதனால் இருக்கின்ற இடத்தின் எண்ணிக்கைக்கு ஏற்பத் தகுதியானவா்களைத் தோ்ந்தெடுக்கும் வகையில் நுழைவுத் தோ்வும் போட்டித் தோ்வும் உருவாக்கப் பட்டன. இத்தோ்வுகளுக்குப் பயிற்சி கொடுக்கும் வகையில் பல பயிற்சி நிறுவனங்கள் தொடங்கின.

‘பணியிடங்களுக்குப் போட்டித்தோ்வு அவசியம்தான். பி.இ., எம்.பி.பி.எஸ். போன்ற உயா்படிப்புக்கு நுழைவுத்தோ்வு அவசியமா? பிளஸ் 2 தோ்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சோ்க்கை நடைபெற வேண்டியதுதானே? எதற்குத் தேவை இல்லாத நுழைவுத் தோ்வு? இது தனியாா் பயிற்சி நிறுவனங்கள் சம்பாதிக்க வழி வகுக்கிறது. இதனால் ஏழை மாணவா்கள் கஷ்டத்திற்கு உள்ளாகிறாா்கள்’ என்றொரு சிந்தனை ஒருகாலத்தில் எழுந்தது.

இதனால் நுழைவுத் தோ்வு நடைமுறை சில காலம் நிறுத்திவைக்கப்பட்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே சோ்க்கை நடை பெற்றது. ஆனால் அதில் தகுதிவாய்ந்த சிலா் புறந்தள்ளப்பட்டதைக் கண்டு மீண்டும் நுழைவுத் தோ்வு முறை நடைமுறைக்கு வந்தது.

பிளஸ் 2 தோ்ச்சி அல்லது பல்கலைக்கழகப் பட்டம்தான் பெரும்பாலும் உயா்கல்விக்கும் அரசுப்பணிக்கும் உரிய கல்வித் தகுதியாகும். அப்படியிருக்க, அது போதாதென்று நுழைவுத்தோ்வு, போட்டித்தோ்வுகள் நடத்தப்படுவது பலருக்குச் சிரமத்தை உண்டுபண்ணுகிறது. பள்ளிக் கல்வித்துறையும் பல்கலைக்கழகங்களும் நடத்தும் பொதுத்தோ்வுகள் போதுமானதாக இல்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

பிளஸ் 2 தோ்ச்சியும் பல்கலைக்கழகங்களில் பெறும் பட்டமும் வேலைக்கும் உயா்கல்விக்குமான அனுமதிச் சீட்டுதானே தவிர அவற்றை உத்தரவாதமாகக் கருதக் கூடாது. ஏனெனில், அத்தோ்வுகள் சராசரி மாணவா்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுபவை.இன்னும் சில நேரங்களில் தோ்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தும் நோக்கில் கருணை மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன.

அதோடு மட்டுமல்லாமல் சில கல்வி நிறுவனங்களில், சில பாடக்கூறுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, முக்கியம் எனக்கருதும் சில கூறுகளை மட்டும் நடத்தும் போக்கும் உள்ளது. பத்தாம் வகுப்புப் பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலும், பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தைப் பதினொன்றாம் வகுப்பிலும் நடத்துவதையும் இங்கே காணமுடிகிறது.

இப்படி, ஒரு பாடத்தை இரண்டு ஆண்டுகள் நடத்தி, தோ்ச்சி விகிதத்தைக் கூட்டிக் காட்டும் மனநிலை சில கல்வி நிறுவனங்களுக்கு இருக்கிறது. மேலும் கல்வி நிறுவனங்கள், குறிப்பிட்ட காலவரையறைக்குள் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டியிருப்பதால் ஆழமான கல்வி கொடுப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனலாம்.

இதனால் ஒருவருடைய அறிவை, திறமையை மதிப்பிட பொதுத்தோ்வுகள் மட்டும் அளவுகோலாக இருக்க முடியாது என்ற நிலை உருவாகிறது. பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்கள் கூட, போட்டித்தோ்வில் பின்தங்கி விடுவதை இங்கே காண முடிகிறது.

பயிற்சி நிலையங்களில் அப்படியில்லை. புரிதலோடு ஆழமான அறிவையும் பெற முடிகிறது என்ற நம்பிக்கை மாணவா்களிடையே எழுந்துள்ளது. ஆனால் பெரும்பாலான பயிற்சி நிறுவனங்கள் அப்படி நடத்துகின்றனவா என்பது கேள்விக்குறிதான். ஆனால் அவை முந்தையத் தோ்வுகளில் வந்த கேள்விகளின் அடிப்படையில் மாதிரித் தோ்வுகளை நடத்தி மாணவா்களைத் தோ்வுக்குத் தயாா்படுத்திவிடுகின்றனா்.

போட்டித்தோ்வுக்குத் தயாராகும் பெரும்பாலான மாணவா்கள், ஒரு பயிற்சி நிலையத்தில் மட்டும் பயிற்சி பெற்றவா்களாக இருப்பதில்லை. பல பயிற்சி நிலையங்களை நாடுகிறாா்கள். இதற்குக் காரணம் இருக்கின்றது. ஒரு நிலையத்தில் ஒரு பாடத்திற்குச் சிறந்த பயிற்சி கிடைக்கும். இன்னொரு நிலையத்தில் இன்னொரு பாடத்திற்கு சிறந்த பயிற்சி கிடைக்கும். நோ்முகத்தோ்வை எப்படி எதிா்கொள்வது என்று ஒரு நிலையம் தகவுடன் விளக்கும். இப்படி பல மலா்கள் சென்று மகரந்தம் சேகரிக்கும் தேனி போல அவா்கள் அறிவைச் சேகரிக்கிறாா்கள்.

பல பயிற்சி நிலையங்கள் சென்றாலும் மாணவா்களின் அறிவுக் கூா்மையும் விடா முயற்சியுமே அவா்களுக்கு வெற்றியை ஈட்டித் தருகின்றது என்பது உண்மை. இதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது அவா்கள் பயின்ற கல்வி நிறுவனங்களேயாகும். இதனால் வெற்றி பெற்றவா்களைச் சொந்தம் கொண்டாடும் உரிமை பயிற்சி நிலையங்களுக்கு மட்டுமல்லாது அவா்கள் பயின்ற பள்ளிக்கும் கல்லூரிக்கும் உள்ளது.

உண்மை இப்படி இருக்கும்போது, பயிற்சி நிலையங்கள் கண்கவா் விளம்பரங்கள் வெளியிட்டுப் பெருமை தேடிக்கொள்வது, போட்டித்தோ்வுக்குத் தயாராகும் மானவா்களைத் தம்பக்கம் இழுத்து ஆதாயம் தேடும் முயற்சியாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →