நமது வாழ்க்கைப் பாதை மிகவும் கரடுமுரடானது. அது எங்கே தொடங்கி எங்கே முடியும் என்பது யாருக்கும் தெரியாது. வாழும் காலத்தில் சகமனிதர்களை அவர்களின் நல்ல குணங்களுக்களுக்காக நேசிப்பது நமது இயல்பாக மாறவேண்டும். நல்லதும், கெட்டதும் கலந்ததுதான் மனித குணம்.
ஒருவரின் குணத்தை நாம் விரும்பவில்லையானால், அதனை உடனே கூறி விடுகிறோம். ஆனால், ஒருவரின் குணத்தை நாம் விரும்பினால் அதனை ஏனோ அவரிடம் கூறி அவரைப் பாராட்டத் தவறுகிறோம். பாராட்டக் கூடாது என்பதல்ல, பாராட்டின் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை. சாம்பாரில் உப்பு சற்று அதிகமாக இருந்தால், உடனடியாக மனைவியிடம் கோபத்தைக் காட்டும் கணவன், சமையல் நன்றாக இருக்கும்போது, மனைவியைப் பாராட்டுவதில்லை.
அனைத்து மனிதர்களுமே பாராட்டை எதிர்பார்ப்பவர்கள்தான்.
வெளிப்படையான பாராட்டுதல் ஒருவருக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்து, அவருடைய நல்ல குணங்கள் மேம்பட உதவுகிறது. நட்புணர்வு அதிகமாகி, மனிதர்களை மேலும் நல்லவர்களாக்க பாராட்டுகள் உதவுகின்றன. பாராட்டுபவர், பாராட்டப்படுபவர் இருவரின் நிலையையும் பாராட்டு உயர்த்தும். பாராட்டுரை சிறந்த 'கிரியா ஊக்கி' என உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.
பாராட்டுவதற்குப் பணம் தேவையில்லை, விசாலமான மனம் இருந்தால் போதும். ஒருவர் செய்த செயலை ஒரு சிறிய புன்னகை மூலம் அங்கீகரிப்பது, முதுகில் தட்டிக் கொடுப்பது, கைகளைப் பிடித்துக் குலுக்குவது, வார்த்தைகளால் மெச்சுவது போன்ற எல்லாமே பாராட்டின் பல்வேறு பரிமாணங்கள்தான். குழந்தைகள் செய்யும் நல்ல செயல்களை கண்டும் காணாதது போல் சிலர் இருந்து விடுவது தவறான அணுகுமுறையாகும். குழந்தைகள் ஒரு நல்ல செயலை செய்யும்போதோ, செய்ய முயலும்போதோ அவர்களை மனம்விட்டுப் பாராட்ட வேண்டும்.
குழந்தைப் பருவத்தில் தொடங்கும் இந்த உற்சாகம், அவர்களின் வாழ்வின் இயல்பாக மாறி அதிசயங்களை நிகழ்த்தும். ஒரு கனமான பையை தூக்குவதற்கு நமக்கு உதவி செய்யும் சிறுவனை மற்றவர்களுக்கு முன்னால் பாராட்ட வேண்டும். அதன் விளைவாக அச்சிறுவன் தொடர்ந்து பிறருக்கு உதவுவான்.
குழந்தைகளை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாராட்ட வேண்டும். உங்களால்தான் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் எனக் கூறுதல், குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகளில் அவர்கள் கருத்தைக் கேட்டல் போன்றவை குழந்தைகளுக்கு பெருமகிழ்வைத் தரும். தமது முடிவுகளுக்கும் பெற்றோர் மதிப்பளிக்கின்றனர் என்ற உணர்வை இவை குழந்தைகளிடையே ஏற்படுத்தும். அவர்கள் தோல்வியை சந்திக்க நேரிடும்போது, அதிலிருந்து மீண்டு வர பாராட்டுகள் அவர்களுக்கு கைகொடுக்கும்.
பாராட்டி வளர்க்கப்படும் குழந்தைகள் அறிவாளிகளாகவும், தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் வளர்கிறார்கள். குறை கூறி குறை கூறியே வளர்க்கப்படும் குழந்தைகள் குற்ற மனப்பான்மையுடனும், தாழ்வு மனப்பான்மையுடனும் வளர்கின்றனர். பெற்றோர், பிள்ளைகளை எப்போதும் திட்டிக் கொண்டும், குறை கூறிக் கொண்டும் இருந்தால் அப்பிள்ளைகளின் அறிவும், திறமையும் மழுங்கிப் போய்விடும். அவர்களின் தாழ்வு மனப்பான்மை சில நேரங்களில் அவர்களை விரக்தியடையவும் செய்துவிடும்.
பிள்ளைகளை தட்டிக் கொடுத்து, அவர்களின் திறமைகளைப் பாராட்ட வேண்டும். அந்தப் பாராட்டுகள் சாதனை செய்திட அவர்களுக்குத் தூண்டுகோலாய் அமையும். பாராட்டு மனித உறவுகளைத் தழைத்தோங்கச் செய்யும். பிறருடைய நிறைகளைப் பலர் முன்னிலையில் கூறிப் பாராட்ட வேண்டும். அவர்களின் குறைகளை தனிமையில் சுட்டிக்காட்ட வேண்டும்.
படிப்பில் பின்தங்கும் மாணவன், பின்னர் முயன்று முதல் இடத்தைப் பிடிப்பதும், சோம்பல் கொண்ட ஊழியர் சுறுசுறுப்படைந்து பணியை சிறப்பாக செய்வதும் பாராட்டுகளின் விளைவுகளேயாகும். வெற்றியாளர்கள், எவரைப் பார்த்தாலும் தானாக முன்சென்று மனமுவந்து அவர்களின் சாதாரண செயல்பாடுகளைக் கூட மனம் திறந்து பாராட்டுவார்கள். இந்தப் பாராட்டினை பெறுபவர்கள் வாழ்வில்பல விந்தைகளைச் செய்வார்கள்.
சமூகத்தால் அங்கீகரிக்கப்படுகிறோம் என்ற உணர்வு பாராட்டப்படுபவரின் மனதில் ஊக்கத்தை விதைத்து விடுகிறது. அதன் விளைவாக அவரது ஆற்றலும், திறமையும் மென்மேலும் மெருகேறுகின்றன. இதற்காகத்தான் சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம், உழைப்பாளர் தினம் போன்ற சிறப்பு தினங்கள் கொண்டாடப்படுகின்றன. பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க பாராட்டையே பயன்படுத்துகின்றன.
பாராட்டப்படாதவரின் அறிவும், ஆற்றலும் சுருங்கிப் போய், அவர்களுக்கு மனச்சோர்வை உண்டாக்குகின்றன. மனிதர்களுக்கு, குறிப்பாக முதியவர்களுக்குத் தேவை, பாராட்டும், கனிவான பேச்சுடன் கூடிய அன்பும், அரவணைப்பும் மட்டுமே. இதனை உணர்ந்து செயல்படும் மனிதர்கள் போற்றுதலுக்குரியவர்கள். இன்றைய இளைஞர்கள் முதியோர்களை மதித்து அவர்கள் மீது கனிவோடு கூடிய அன்பு செலுத்தினால் சமூகத்தில் முதியோர் இல்லங்கள் குறையும்.
ஒருவரின் சிறிய சிறிய செயல்களைப் பாராட்டுவதன் மூலம், அவரை பெரிய பெரிய செயல்களைச் செய்ய ஊக்கப்படுத்த முடியும். ஒருவரைப் பாராட்ட நினைத்தால், காலம் கடத்தாமல், தயக்கம் காட்டாமல் உடனே பாராட்டிவிட வேண்டும். பாராட்டப்பட வேண்டியவர்களை, பிறர் பாராட்டத் தவறினால் நற்செயல்களில் ஈடுபடுபவர்கள் அவற்றிலிருந்து விலகிவிடுவார்கள்.
எனவே, சமுதாயத்தில் நற்செயல் செய்பவர்களை உடனடியாகப் பாராட்ட வேண்டும். பணம் செய்யாததைப் பாராட்டு செய்யும் என்பதை உணர வேண்டும். பாராட்டுகளைப் பெற்றவர்கள் மீண்டும் மீண்டும் பாராட்டைப் பெற வேண்டும் என்ற உந்துதலால் தங்கள் பணிகளை மேலும் சிறப்பாக ஆற்றுவார்கள். இதனை நிர்வாக மேலாண்மைத் துறையில் நாம் காணலாம்.
குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள், நண்பர்கள், உடன் பணிபுரிவோர் என அனைத்துத் தரப்பினரின் நற்செயல்களையும் பாராட்டி ஊக்குவிப்போம். அதன் விளைவுகள் அற்புதாமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.