உடற்கல்வியை ஊக்குவிப்போம்
வலிமையான மனித ஆற்றல் என்பது உடல் வளர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் உடைய மனிதர்களை உருவாக்குவது ஆகும்.
வலிமையான மனித ஆற்றல் என்பது உடல் வளர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் உடைய மனிதர்களை உருவாக்குவது ஆகும். தமிழகத்தைப் பொறுத்தவரை பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் அறிவாளியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், அவர்களது உடல் வலிமையானதாக இருக்க, சத்தான உணவுகளை அளித்தால் போதும் என்று எண்ணுகின்றனர்.
அதிக அளவில் சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு அளிப்பது அவர்களை பருமனானவர்களாக மட்டுமே மாற்றும். அவர்களை வலு உள்ளவர்களாக உருவாக்காது. உடற்பயிற்சி, விளையாட்டு இவை மட்டுமே வருங்காலத் தலைமுறையை உடல் ரீதியிலும் மன ரீதியிலும் வலுவானவர்களாக மாற்றும்.
முற்காலத்தில் குருகுலத்தில் பயின்ற பிள்ளைகள் கல்வியோடு சேர்த்து வாள்வீச்சு, சிலம்பம், மல்யுத்தம், வில்வித்தை என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தனர். இவை அனைத்தும் போர் முறைகளாக இருந்தாலும் உடலுக்கும் மனதுக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாகவும் இருந்தன.
ஆனால், தற்போது பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவதாக நினைத்துக் கொண்டு அவர்களின் விளையாட்டு உரிமையையும் மகிழ்ச்சியையும் பறித்து விடுகின்றனர். விளையாட்டு என்பது இளம் பருவத்திற்கே உரியது. முதுமை வந்த பிறகு அதற்கான நேரமும் வாய்ப்பும் இருக்காது.
மாநில அரசின் கல்விக் கொள்கை வடிவமைப்பு குறித்து பல்வேறு பள்ளிகளில் மாணவர்களிடம் கருத்து கேட்ட பொழுது அனைத்துப் பள்ளி மாணவர்களும் தவறாமல் கூறிய ஒரே கருத்து, தங்களுக்கு வாரம் ஒருமுறைதான் விளையாட்டுப் பாட வகுப்பு உள்ளது. அந்த வகுப்பிலும் தங்களை விளையாட அனுமதிப்பதில்லை. வேறு ஏதாவது ஒரு பாட வகுப்பாக அதை மாற்றிவிடுகிறார்கள் என்பதுதான். இந்தக் கருத்தை மறுப்பதற்கில்லை.
கணக்கு, அறிவியல், சமூக அறிவியல், மொழிப்பாடம் இவை எவ்வளவு அவசியமோ அந்த அளவிற்கு மாணவர்களின் உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் அவசியம். இதனை ஆசிரியர்களும் பெற்றோர்களும் நன்றாகவே உணர்ந்துள்ளனர். ஆனாலும் அதிக மதிப்பெண், தேர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்காக,
மாணவர்களை விளையாட்டு ஆர்வம் பலியாகிறது.
விளையாட்டின் உண்மையான நோக்கம், சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கம் பெறுவதோ விளையாட்டுத் திறமையை வைத்து அரசு வேலை வாய்ப்பைப் பெறுவதோ கிடையாது. மாணவர்களின் உடலும் மனமும் ஆரோக்கியமாக பேணப்பட வேண்டும் என்பதுதான் விளையாட்டின் உண்மையான நோக்கம்.
விளையாட்டையும் உடற்பயிற்சியையும் மாணவர்களிடம் பழக்கப்படுத்துவதற்கு முறையான உடற்கல்வி ஆசிரியர்கள் தேவை. ஆனால் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, தொடக்கப் பள்ளிகளில் முழு நேர உடற்கல்வி ஆசிரியர் என்ற பணியிடமே கிடையாது.
மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள சில நடுநிலைப் பள்ளிகளில் மட்டும் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வந்தால் போதுமானது. சுமார் 6,000 ஆசிரியர்கள் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த 6,000 ஆசிரியர்களில் சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் பணி பாதுகாப்பின்மை, குறைந்த ஊதியம், பணியில் திருப்தியின்மை போன்ற காரணங்களால் பணியிலிருந்து விலகி விட்டனர்.
அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை பெரும்பாலான உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வியோடு பிற அலுவலகப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றனர் என்பது எதார்த்தம். பெரும்பாலான மாணவர்கள் கூறுவது போல் உடல் கல்வி மற்றும் விளையாட்டு வகுப்புகள் நடைபெறுவது கிடையாது.
நிரந்தர பணியிடத்தில் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிப்பதால் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படப்போவது கிடையாது. ஆசிரியர் இல்லாமல் உபரியாக இருக்கும் பணியிடங்களை உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றி அமைத்தாலே போதுமானது. பி.பி.எட். எனப்படும் உடற்கல்வி பட்டப்படிப்பை முடித்து சுமார் 30,000 பேர் வேலைவாய்ப்பு இன்றி உள்ளனர்.
தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் முழுநேர நிரந்தரப் பணியிடத்தில் உடற்கல்வி ஆசிரியர்களை நியமித்தால் மாணவர்களின் உடல் நலமும் ஆரோக்கியமும் மேம்படும்.
பள்ளிக்கூடங்களில் புதிய மைதானம், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டால் மாணவர்கள் தாமாகவே ஆர்வம் கொண்டு விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள்.
அரசு பள்ளிகளில்தான் இப்படி என்றால் தனியார் பள்ளிககளைப் பொறுத்தவரை, ஒரு சில தனியார் பள்ளிகளை தவிர பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானமும் கிடையாது; மாணவர்களை விளையாட்டில் ஈடுபட சொல்லி பழக்கப்படுத்துவதும் கிடையாது.
விரிவாக்கம் செய்யப்பட்டு வளர்ந்து வரும் நகர்ப்புற குடியிருப்புப் பகுதிகளில் விளையாட்டு மைதானம் என்பதே கிடையாது. மாணவர்கள் தங்களது விடுமுறை நாட்களில் விளையாடுவதற்கு ஏற்ற சூழல் கிடையாது. தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள விளையாட்டு அரங்கங்களை மட்டுமே மாணவர்கள் பயன்படுத்த முடியும்.
தொலைக்காட்சி, கைப்பேசி, விடியோ கேம், மடிக்கணினி, ஆன்லைன் விளையாட்டு போன்ற அபாயங்கள் மாணவர்களை சூழ்ந்துள்ள இன்றைய நிலையில் மைதானங்களில் விளையாடக்கூடிய விளையாட்டுகளை விளையாட மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.
சாதி, மத ரீதியான சச்சரவுகளிலிருந்து விடுபட்டு வருங்கால சமுதாயம் ஒற்றுமையுடன் வாழ குழு விளையாட்டுகள் வழிவகுக்கும். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சகம் தமிழ்நாட்டில் தற்பொழுது முக்கிய கவனம் பெற்றுள்ளது. அது வலிமையான ஆரோக்கியமான இளைஞர் சமுதாயத்தை உருவாக்கட்டும்.