பிரச்னையில் பிரான்ஸ் தேசம்
உலகிலுள்ள சூப்பர் பவர் நாடுகளில் ஒன்றாகவும், ஐரோப்பிய யூனியனின் முக்கியப் பங்குதாரராகவும் உள்ள பிரான்ஸ் தேசம் பொதுமக்களின் தன்னெழுச்சியான கிளர்ச்சிகளால் தற்பொழுது தடுமாறி வருகின்றது.
உலகிலுள்ள சூப்பர் பவர் நாடுகளில் ஒன்றாகவும், ஐரோப்பிய யூனியனின் முக்கியப் பங்குதாரராகவும் உள்ள பிரான்ஸ் தேசம் பொதுமக்களின் தன்னெழுச்சியான கிளர்ச்சிகளால் தற்பொழுது தடுமாறி வருகின்றது. அந்நாட்டின் அதிபரான இமானுவல் மேக்ரான் கொண்டு வந்த ஓய்வூதியச் சீர்திருத்தச் சட்டமே இக்கிளர்ச்சிகளுக்கு முக்கியமான காரணமாகும்.
பிரான்ஸ் நாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை அறுபத்திரண்டில் இருந்து அறுபத்து நான்காக உயர்த்திய மேக்ரானின் முடிவுக்கு நாடெங்கிலும் உள்ள தொழிலாளர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பி, கடந்த ஜனவரி முதலே ஆங்காங்கு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வந்தன.
பிரான்ஸின் எதிர்க்கட்சிகளும் இம்முடிவை எதிர்த்து வந்துள்ள நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்த சீர்த்திருத்தத்திற்கு ஆதரவு கிடைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்பதை மேக்ரான் அறிந்தே இருந்தார்.
எனவே, அந்நாட்டு அரசியல் சட்டத்தில் தமக்குக் கொடுக்கப்பட்டுள்ள விசேஷ அதிகாரத்தினைப் பயன்படுத்தி, அந்த சீர்த்திருத்தத்தை நாடாளுமன்ற விவாதத்திற்கே உட்படுத்தாமல் அவசரச் சட்டம் மூலம் அமல்படுத்தி உள்ளார் அதிபர். அதிபரின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னிலும் வீரியத்துடன் நடைபெறத் தொடங்கியுள்ளன.
கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்ற போராட்டங்களில் அந்நாடு முழுவதிலுமிருந்து சுமார் பதினொரு லட்சம் ஊழியர்கள் பங்கேற்றதாக செய்திகள் கூறுகின்றன. பிரான்ஸ் தேசத்தின் மொத்த வருவாயில் பதினான்கு சதவீதத்திற்கும் மேலான தொகை ஓய்வூதியத்திற்கென்று செலவிடப்படுவதாகக் கூறப்படுகின்றது. இந்த ஓய்வூதியத்துக்கான பங்களிப்பு, பணியில் உள்ள தொழிலாளர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுகின்றது.
பிரான்ஸ் தேசத்திலுள்ள மூத்த குடிமக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கின்ற நிலையில் ஓய்வூதியத்துக்காக செலவிடப்பட வேண்டிய தொகை பணியாளர்களின் பங்களிப்பை விட அதிகமாகச் செல்லக் கூடும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் அந்நாட்டு அதிபர் இந்தப் புதிய சீர்திருத்தத்தினை அறிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இது வரையில் ஓய்வு பெறும் வயது அறுபத்திரண்டாக இருந்தது. இனி வரும் காலங்களில், அறுபத்து நான்கு வயதை எட்டுவது மட்டுமின்றி, நாற்பத்து மூன்று வருடங்கள் பணிபுரிந்து முடித்திருந்தால் மட்டுமே அந்நாட்டின் ஊழியர்கள் முழு அளவு ஓய்வூதியம் பெற முடியும் என்று மேக்ரான் கொண்டு வந்த புதிய சீர்த்திருத்தம் கூறுகின்றது.
மேலும், தங்கள் பணிக்காலத்தில் குழந்தைப் பேறு, பராமரிப்பு ஆகியவற்றிற்காக நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்ட பெண் ஊழியர்கள் அந்த விடுப்புகளை ஈடுகட்டும் வகையில் தங்களின் அறுபத்தேழாவது வயது வரை பணிபுரிந்தால் மட்டுமே முழு ஓய்வூதியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
இக்காரணங்களால் பிரான்ஸ் தேசத்தின் குடிமக்கள் அனைவரையுமே ஏதோ ஒருவிதத்தில் இந்த சீர்த்திருத்தம் பாதித்திருக்கின்றது. எனவேதான், பொதுமக்களின் அனைத்துப் பிரிவினரும் இதனை எதிர்த்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக பெரும்பாலும் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்ற பிரான்ஸ் தேசத்து தெருக்கள் தற்பொழுது வன்முறைக் களங்களாக மாறியிருப்பதாக பிரான்ஸ் நாட்டிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
ஆங்காங்கே தீவைத்தல், சூறையாடல் போன்ற சம்பவங்களும் நடைபெறத் தொடங்கியுள்ளன. பாரீஸ் நகரில் குப்பைகள் அகற்றப் படவில்லை என்ற செய்தி மிகவும் வியப்பை அளிக்கின்றது.
இவற்றுக்கெல்லாம் மேலாக, அந்நாட்டிற்கு சென்ற வார இறுதியில் வருகை தரவிருந்த பிரிட்டன் மன்னர் சார்லஸின் விஜயம் இப்போராட்டங்களின் காரணமாக ரத்து செய்யப்பட்டிருப்பது இவ்விஷயத்தின் தீவிரத்தை உணர்த்தியிருக்கிறது.
வெளிநாட்டிலிருந்து வருகை தரும் முக்கியத் தலைவர் ஒருவருக்குப் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் இருக்கிறது என்பதிலிருந்தே பிரான்ஸ் அதிபர் மேக்ரான் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை உணர முடிகின்றது.
விமானம் உள்ளிட்ட அனைத்து விதமான போக்குவரத்துகளும் முழுமையாக இல்லாவிடினும், குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால், பொதுமக்களும், பிரான்ஸூக்கு சுற்றுலா செல்லும் பயணிகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடரும் போராட்டங்களால் பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரம் ஓரளவுக்கேனும் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், போராடும் எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் ஆகியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரான்ஸ் நாட்டின் பிரதமர் எலிசபெத் பார்ன் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயினும், ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டிருப்பதைப் பற்றி இனி பேசுவதற்கு இல்லை எனவும், உடனடியாக நாட்டில் அமைதி திரும்புவதைப் பற்றி மட்டுமே பேச முடியும் எனவும் கூறியுள்ளார்.
போராடும் தலைவர்களும் பொதுமக்களும் இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்வார்களா என்பது கேள்விக்குறியே.
வரும் ஏப்ரல் ஆறாம் தேதியன்று தீவிரமான போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக எதிர்த்தரப்பினர் அறிவித்துள்ள நிலையில், பிரான்ஸில் மீண்டும் அமைதி திரும்பும் நாளை உலகமே எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில், பிரான்ஸ் தேசத்து மக்களிடையே தமது செல்வாக்கு பாதிக்கப்படும் என்பதை அறிந்துள்ள நிலையிலும் அந்நாட்டு அதிபர் மேக்ரான் இத்தகைய கடுமையான முடிவை எடுத்திருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.
பொருளாதார நெருக்கடிகளை சந்திக்காத நாடு எதுவுமே இல்லை என்கின்ற சூழ்நிலையில், தங்கள் நாட்டின் மூத்த குடிமக்களை பாதிக்கக் கூடிய இம்முடிவினை பிரானஸ் அதிபர் மேக்ரான் விரைவில் தளர்த்திக் கொண்டால், அது பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகள் அனைத்திற்குமே நிம்மதியை அளிக்கும்.
மலும், அமெரிக்கா, கானடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைப் போலவே, கல்வி, வேலைவாய்ப்பு, சுற்றுலா ஆகிய துறைகளில் உலக நாடுகளின் இளைஞர்களை ஈர்த்து வரும் பிரான்ஸ் தேசத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டங்கள் விரைவில் முடிவுக்கு வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.