நடுப்பக்கக் கட்டுரைகள்

உறவுகளை அறியாக் குழந்தைகள்

பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விட்டு விட்டால் பெற்றோர்களுக்குக் கவலை வந்து விடுகிறது.

வெ. இன்சுவை

பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விட்டு விட்டால் பெற்றோர்களுக்குக் கவலை வந்து விடுகிறது. ஏறக்குறைய ஒன்றரை மாதங்கள் யாரிடம் குழந்தைகளை விட்டு விட்டு வேலைக்குச் செல்வது? பெரும்பாலும் கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகிறார்கள். வீட்டில் பெரியவர்கள் உடன் இல்லாத போது தவித்துப் போகிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு வரை இத்தகைய சிக்கல் இல்லை. அம்மாக்கள் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தார்கள். குழந்தைகளுக்கு விடுமுறை என்றால் குதூகலம்தான். பின்னர் சிலர் வேலைக்குப் போக ஆரம்பித்தார்கள். அதே சமயம் தாத்தா, பாட்டி இருந்தார்கள். அவர்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வீட்டிலும் மூன்றுக்குக் குறையாமல் குழந்தைகள் இருந்தார்கள். 

விடுமுறை விட்டு விட்டால் தாயம், பல்லாங்குழி, பாண்டி என்று பெண்களும், கில்லி, பம்பரம், கிரிக்கெட் என்று பையன்களும் விளையாடுவார்கள். வெயிலுக்கு பயந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க மாட்டார்கள். வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு முதலில் குரங்குப் பெடல் பழகி, பின் மேல் ஏறி உட்கார்ந்து ஓட்ட முயன்று, பலமுறை கீழே விழுந்து காயம் பட்டு... சில நாட்களில் ஓட்டக் கற்றுக் கொள்வார்கள். 

பின்னர் அத்தை வீட்டுக்குப் பயணம். அதுவும் கிராமமாக இருந்தால் வயல்களில் சுற்றி, வரப்புகளில் நடந்து, குளங்களில் மீன் பிடித்து, இளநீர் குடித்து, நுங்கு சாப்பிட்டு, கிணற்றில் குதித்து குதூகலிப்பார்கள். அது ஓர் அழகான காலம். பத்து நாட்கள் அத்தை வீட்டில் இருந்து விட்டு புறப்படும்போது அவர்கள் நம் பிள்ளைகளுக்குப் புத்தாடை  எடுத்துத் தந்து அனுப்பும் போது அவர்கள் பிள்ளைகளை நம் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள்.  நாம் ஏக்கத்துடன் ஊர் திரும்புவோம்.

இக்காலக் குழந்தைகளுக்கு இதெல்லாம் வாய்க்கவில்லை. இயந்திரத்தனமான வாழ்க்கை; அதிக உறவுகள் இல்லாத வாழ்க்கை. பல வீடுகளில் ஒரே ஒரு குழந்தைதான் உள்ளது. உடன் விளையாடவோ, சண்டை போடவோ, பகிர்ந்து உண்ணவோ உடன்பிறப்பு இல்லை. தனியாக எத்துணை நேரம் விளையாட முடியும்? 

உறவினர் வீடுகளுக்குக் குழந்தைகளை அனுப்பும் பழக்கம் அடியோடு நின்று போய் விட்டது. காரணம், அங்கும் கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகிறார்கள். ஊரில் உள்ள பாட்டி வீட்டிற்குப் பிள்ளைகள் போக விரும்புவதில்லை. அவர்களுக்கு இணையத் தொடர்பு வேண்டும். தங்கள் வீட்டின் வசதியை அவர்கள் தாங்கள் செல்லும் வீடுகளிலும் எதிர்பார்க்கிறார்கள்.

நகரத்து வாழ்க்கைக்குப் பழகிய பிள்ளைகளால் எங்கேயும் அனுசரித்துப் போக முடியவில்லை. உணவுப் பழக்கத்திலும் அவர்கள் தங்களை மாற்றிக் கொள்வதில்லை. பெற்றவர்களும் குழந்தைகளைத் தனியாக எவர் வீட்டிற்கும் அனுப்ப விரும்புவதில்லை. உறவுகள் சுருங்கிப் போய் விட்ட நிலையில் உரிமை எடுத்துக் கொள்ள தயக்கமாகவே இருக்கிறது.

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குக்கூட திருமண மண்டபத்திற்கு நேராக வந்து விட்டு திரும்பி விடுகிறார்கள். எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும் வாழ்க்கையில் விருந்தினர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்க எவரும் தயாராக இல்லை.

தற்போது எல்லா இடங்களிலும் கோடை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நீச்சல், ஓவியம், சதுரங்கம், சிலம்பம், கைவேலை, பேச்சு ஆங்கிலம், இசை என அத்தனைகளுக்கும் வகுப்புகள் ஆரம்பித்து விட்டார்கள். பதினைந்து நாள் பயிற்சிக்கு சில ஆயிரம் ரூபாய் கட்டணம் வாங்குகிறார்கள். அதுவும் ஒன்று அல்லது இரண்டு மணி நேர வகுப்புதான். வீட்டில் இருக்கும் அம்மாக்கள், இரண்டு, மூன்று வகுப்புகளில் குழந்தைகளை சேர்த்து விட்டு நாள் முழுதும் இருசக்கர வாகனத்தில் அவர்களை ஏற்றிக் கொண்டு அலைகிறார்கள். கொளுத்தும் வெயிலைவிட இலக்கு முக்கியமல்லவா? 

பள்ளி நாள்களில்கூட குழந்தைகள் காலை ஏழு மணிக்கு எழுந்தால் போதும். இப்போதோ நீச்சல், யோகா போன்ற வகுப்புகள் காலை ஆறு மணிக்கே தொடங்குகின்றன. எனவே குழந்தைகளை ஐந்து மணிக்கே எழுப்பிவிட வேண்டிய நிலை. குழந்தையை எத்தனை வகுப்புகள் இருக்கிறதோ அத்தனை வகுப்புகளிலும் சேர்த்து விடுகிறார்கள். இதற்குப் பெயர் விடுமுறையா?

வீட்டில் இருந்தால் எந்நேரமும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள், அல்லது கைப்பேசியில் மூழ்குகிறார்கள். அதற்கு பதில் எதையாவது உருப்படியாக கற்றுக் கொள்ளட்டுமே என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.

தக்காளி விலை ஐந்து ரூபாய் கூடினால் புலம்புகிறார்கள். ஆனால், பதினைந்து நாள் வகுப்புக்குப் பல ஆயிரம் கட்டுகிறார்கள். குழந்தையை வகுப்பில் சேர்த்து விட்டு, உடனே அச்செய்தியை சமூக ஊடகத்தில் பதிவிட்டு விடுகிறார்கள். 
அதைப் பார்க்கும் அவருடைய உறவுகள், "ஐயோ, என் குழந்தையை நான் இந்த வகுப்புகளில் சேர்க்கவில்லையே. அவள் நான்கு வகுப்புகளுக்கு அனுப்புகிறாள்; நான் இரண்டு வகுப்புகளுக்கு மட்டுமே அனுப்புகிறேன்' என்று பொறாமைப்பட்டு தங்கள் குழந்தைகளை இன்னும் மூன்று வகுப்புகளில் சேர்த்து விடுகிறார்கள். இப்படி ஒரு போட்டியே நடந்து கொண்டிருக்கிறது. 

ஒவ்வொரு வகுப்புக்கும் அழைத்துக் கொண்டு போக வீட்டில் ஆள் இருப்பது அவசியம். அம்மாக்கள் வேலைக்குப் போகாமால் வீட்டில் இருப்பவர்களாக இருக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிய வேண்டும். வேலைக்குப் போவதாக இருந்தால் வீட்டில் தாத்தா, பாட்டி, உடன் இருந்தால் அவர்கள் குழந்தைகளை ஒவ்வொரு வகுப்புக்கும் கொண்டு விட்டு பின்னர் திரும்ப அழைத்து வர வேண்டும். 

வேகாத வெயிலில் அவர்கள் அலைகிறார்கள். வீட்டில் பெரியவர்கள் இல்லாத நிலையில், வேலைக்குப் போகும் பெண்கள் தங்கள் பிள்ளைகளை கோடை வகுப்புகளில் சேர்க்க முடியாது. அதனால் அவர்களுக்கென பகல் நேரக் காப்பகங்கள் உள்ளன. விடுமுறை காலங்களில் குழந்தைகளை அங்கே விட்டுவிட்டால் அவர்கள் அங்கே பாதுகாப்பாக இருப்பார்கள்.

கோடை வகுப்புகளில் குழந்தைகள் பல புதிய திறன்களைக் கற்றுக் கொள்கிறார்கள். கையெழுத்துப் பயிற்சி வகுப்பு அவர்களின் கையெழுத்தை மேம்படுத்தும். விளையாட்டுத் தொடர்பான வகுப்புகள் அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும். இருபது நாளில் ஒரு குழந்தை நீச்சல் கற்றுக் கொள்கிறது. அந்தந்த குழந்தையின் வயதுக்கும், கற்கும் திறனுக்கும் ஏற்றாற்போல் பயிற்சி கொடுக்கிறார்கள்.

எந்த ஒரு கலையையும் கற்றுக் கொண்டால், அது ஏதோ ஒரு சமயம் நமக்குக் கை கொடுக்கும். நீச்சல், யோகா, கராத்தே, ஆங்கிலம் சரளமாகப் பேச, ஓவியம் வரைய - இப்படி தினுசு தினுசாக யோசித்து வகுப்பு நடத்துகிறார்கள். ஆனால் "தமிழ் மொழிப் பயிற்சி' வகுப்பை எங்கும் காணோம்.

உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குக்கூட தமிழில் பிழை இன்றி எழுதத் தெரியவில்லை. "ழ', "ல', "ள' உச்சரிப்பு சரியாகத் தெரியாது. ஆகவே தமிழைப் பிழையின்றி எழுதவும், உச்சரிக்கவும் கற்றுக் கொடுக்க வகுப்புகள் தொடங்கலாம். குழந்தைகளுக்குப் புரியும் வகையில் திருக்குறள், பாரதியார் பாடல்கள், ஒளவையார் பாடல்கள் என சொல்லிக் கொடுத்து மனப்பாடம் செய்ய வைக்கலாம். நம் இதிகாசங்களை அவர்களுக்குப் புரியும் வண்ணம் எளிமையாகக் கூறலாம். 

அதற்காக மொத்த விடுமுறையையும் கோடை வகுப்புகளிலேயே கழித்து விட வேண்டும் என்று கூறவில்லை. குழந்தைகள் களைத்துப் போய் விடுவார்கள். ஒரு மாற்றம் அவசியம். ஒரு வார காலமாவது அவர்களை உறவினர் இல்லங்களுக்கு அழைத்துப் போவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். 
ஒரே குழந்தையாக, செல்லமாக வளர்க்கப்படும் குழந்தைகள் அதிகம் குறும்பு செய்கிறார்கள்; பிடிவாதமும் அதிகம். அதனால் அவர்களைத் தனியாக அனுப்பினால் உறவினரால் அவர்களை சமாளிக்க முடியாது.

குழந்தைகளுக்கு விடுமுறை விட்டு விடுகிறார்கள். ஆனால் அலுவலகங்களுக்கு? பேறுகாலத்தின் போது, பிரசவித்த பெண்களுக்கு ஒன்பது மாதம் பேறுகால விடுப்பு கொடுக்கப்படுவதைப் போல, பத்து வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் ஒரு வாரம் விடுமுறை அளிக்கலாம். 

இந்த ஒரு வார விடுப்பை, வேறு நாட்களில் வேலை செய்து ஈடு கட்டிக் கொள்ள வகை செய்யலாம். அவ்வாறு செய்தால் அனைவரும் சேர்ந்து உறவினர் இல்லங்களுக்குப் போகலாம். அவர்களைத் தங்கள் இல்லத்திற்கு அழைத்து உபசரித்து மகிழலாம். 

தற்போது குழந்தைகள் உறவினர்களுடன் ஒட்டாமல் வளர்கிறார்கள். என்றோ ஒரு நாள் பார்க்கும் சொந்தங்களுடன் எப்படி ஒட்டுதல் ஏற்படும்? பதின்பருவப் பிள்ளைகள், தங்கள் வீட்டிற்கு வரும் உறவினர்களிடம் சரியாகப் பேசுவது கிடையாது. நம் கட்டாயத்தின் பேரில் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு சட்டென உள்ளே போய் விடுகிறார்கள். அதனால் சிறு வயதில் இருந்தே சுற்றத்தாரோடு பழகவிட வேண்டும்.

உறவினர் வீடுகளுக்கு அனுப்ப இயலாத நிலையில் கோடை வகுப்புகள் கை கொடுக்கின்றன. குழந்தைகளின் திறன்களை அடையாளம் கண்டு, அவர்களை அத்துறையில் ஊக்குவிக்கின்றன. ஆனாலும், குழந்தைகள் தங்களுக்கே உரித்தான குழந்தைப் பருவ மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்களா?  
பிள்ளைகள் பல கலைகளையும் கற்றுக் கொள்வது நல்லதுதான். ஆனாலும் உறவுகளோடு பழகவும் பெற்றோர் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். பார்க்காத பயிர் பாழாவதைப் போல், பழகாத உறவும் விட்டுப் போகும். கொஞ்சம் விளையாட்டு, கொஞ்சம் கற்றல், கொஞ்சம் சுற்றுலா, கொஞ்சம் உறவுகளோடு பழகுதல் என விடுமுறையை இனிமையாக்கிக்கொள்ள வேண்டும். 

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT