நடுப்பக்கக் கட்டுரைகள்

தயக்கம் தவிர்ப்போம்

முனைவர் என். பத்ரி

நாம் சொல்வதில் ஏதாவது தவறு ஏற்பட்டால், எல்லோரும் நகைப்பார்களே என்ற எண்ணத்தில் பலரும் தம் மனதில் உள்ள கருத்துகளை வெளியே சொல்லத் தயங் முன்வருவதில்லை.

பிறவியில் யாருக்கும் தயக்க குணம் அமைவதில்லை. அவரவர் வாழும் சூழ்நிலையைப் பொறுத்தே இந்த தயக்கம் உருவாகிறது. பெற்றோர், ஆசிரியர், நண்பர்,உறவினர் போன்று நம்மைச் சுற்றி இருப்பவர்கள்தான் இதை நம்மனதில் உருவாக்குகிறார்கள்.

தயக்கம் நம் செயல் சரியாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தையும், தவறாக இருந்துவிடுமோ என்னும் பயத்தையும் பிரதிபலிக்கிறது. நமது அன்றாட செயல்பாடுகளில் குறைபாடுகளை எதிர்கொள்ள நாம் பயப்படுவதே இதன் அடிப்படை காரணமாகும்.

தயக்கம் உளவியலுடன் தொடர்புடையது. சிலர் புதிதாக ஒரு செயலைச் செய்தால், பிறரது அங்கீகாரம் கிடைக்காதோ என்ற ஐயத்திலேயே அச்செயலை செய்யாமல் இருப்பதும் உண்டு. எல்லோரும் அறிந்த ஒரு விஷயத்தை "எனக்குப் தெரியவில்லை' என்று சொன்னால் அறிவு குறைந்தவன் என நினைப்பார்களே என்றெல்லாம் எண்ணுபவர்களும் உண்டு.

நம்மில் மூன்றில் ஒரு பங்கினருக்கு இந்தத் தயக்க மனப்பான்மை உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள், அடிப்படையில் வாழ்வில் அளவற்ற ஆசைகளையும், குறிக்கோள்களையும் கொண்டவர்கள். தம்முடைய தயக்க சுபாவத்தினால் அத்தனையையும் கட்டிப் போடுகிறார்கள்.

பிறர் முன்னிலையில் நம் தவறு சுட்டிக் காட்டப்படும் போது, நாம் பெறும் அவமான உணர்வு இந்த தயக்க உணர்வை அதிகரிக்கிறது. ஒரு நிலையில் நாம் ஊக்கமுடன் செயலாற்றுவதைத் தடுக்கிறது. இறுதியில் தாழ்வு மனப்பான்மையில் கொண்டுபோய் விடுகிறது.

வகுப்பறையில் அளிக்கும் தவறான பதிலின் விளைவாக தரக்குறைவாக மதிப்பிடப்படுவோம் என்று மாணவன் பதிலளிக்க தயங்குகிறான். நாம் பார்வையாளர்களாக இருக்கும் இடத்தில் உண்மையை அறிந்திருந்தாலும், அதைத் தெரிவிக்கத் தயங்கி அமைதியாக இருப்பதுண்டு. நமது கருத்தைத் சொல்வதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அஞ்சுகிறோம். அதனால் செயல்படத் தயங்குகிறோம்.

பெற்றோர் "வாயை திறக்காமல் சமர்த்தான பிள்ளையாக இருந்தால்தான் நாளைக்கு நல்ல பிள்ளையாக வருவாய்' என்ற ஒரு சான்றிதழை குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். எதுவும் பேசாமல் இருப்பதே நல்லது போலிருக்கிறது என்ற எண்ணம் குழந்தை மனதில் வலுக்கிறது. பின்னாளில் எதைப் பேசுவதற்கும் தயக்கம் உண்டாகி விடுகிறது. ஏதாவது பேசிவிட்டால், ஏதாவது தப்பு செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற அச்சம் குழந்தைகளிடம் ஏற்படுகிறது. பெற்றோர்களிடமிருந்தும், ஆசிரியர்களிடமிருந்தும் வரும் இந்த பயத்தால் ஏற்படும் தயக்கம் மேலும் வளர்கிறது.

வெளித்தோற்றத்தில் அமைதியாகக் காட்சியளிக்கும் இவர்கள், மனத்திற்குள் போராடுகிறார்கள். பிறர் முன்னிலையில் பதற்றமடைகிறார்கள். பொதுவிடங்களில் பேச நினைத்ததை பேச முடியாமல் நாக்குழறுகிறார்கள். இதனால், பெரும்பாலும் தனித்து வாழ்வதை விரும்புகிறார்கள். இவர்களால் சிறுசிறு விஷயங்களை கூட சமாளிக்க முடிவதில்லை. திறமை இருந்தும் தோல்வியடைகிறார்கள்.

தயக்க நிலையிலிருந்து விரைந்து வெளியே வர முனைப்பு மிகவும் தேவை. எந்தெந்தச் சூழ்நிலைகளில் தயக்க எண்ணங்கள் உண்டாகிறது என்பதை ஆராய வேண்டும். மீண்டும் அதே சூழ்நிலை வந்தால், எப்படித் தயக்கமின்றி செயல்படுவது என்பதை திட்டமிட்டு ஒத்திகை செய்து கொள்ள வேண்டும். தயக்கமுண்டாக்கும் சூழ்நிலைகளைத் தவிர்க்காமல் அதை அடிக்கடி அணுகினால் தயக்கம் குறையும். உதாரணத்திற்கு, உயர் அதிகாரி ஒருவரைப் பார்க்கப் போவதில் தயக்கம் இருந்தால், அவரைப் பார்க்க வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் சந்தித்து விடவேண்டும். பயத்தினாலும், தயக்கத்தினாலும் பார்ப்பதை தவிர்க்கக் கூடாது.

பிறருடன் உரையாடும்போது புன்னகைத்தல், கை குலுக்குதல், கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுதல், தலையசைத்து ஆமோதிப்பினைக் காட்டுதல் போன்ற பழக்கங்கள் நமது தயக்கத்தின் அளவைக் குறைக்கும்.

பிறர் பேசும்போது ஆவலுடன் கவனித்தல், பணியிடத்திலும், பொதுக்கூட்டங்களிலும் முக்கிய பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயலாற்றுதல், மற்றவர்களுடன் உரையாடுதலுக்குக் காரணமே இல்லாவிட்டாலும், பொது விஷயங்களைப் பேசுதல் நமது தயக்கத்தை குறைக்கும்.

தயக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், செயல்பட முடியாத அளவிற்கு மனச்சோர்வடையும் போது, தேவையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளுதல் அவசியம். எந்தச் செயலைச் செய்யும்போது தயக்கம் வருகிறதோ, அந்தச் செயலை திரும்ப திரும்பச் செய்யும் பயிற்சி ஒன்றுதான் நமது தயக்கத்தை விரட்டும்.

ஒரு சிக்கலான சூழ்நிலையை தைரியமாக எதிர்கொண்டு அதைக் முறையாக கையாளும் திறமையிருந்தால், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளக் கற்றுக் கொள்கிறோம். விமர்சனங்களை நேர்மறையாக எதிர்கொள்ளவும், அதைச் சமாளித்து அதிலிருந்து சிறந்ததை எடுத்துக் கொண்டு நம்மை வடிவமைத்துக் கொள்ளவும் கற்றுக்கொள்கிறோம்.

பயத்தையும், தயக்கத்தையும் புறக்கணிக்கும் ஒரு நொடி நம் வாழ்க்கையை மாற்றும் தருணமாக அமையலாம். வாழ்க்கையில் பல்வேறு சூழ்நிலைகளை நாம் தினமும் வெற்றிகரமாக கடக்க வேண்டியிருக்கிறது. அவற்றிலிருந்து நேர்மறைகளைப் பிரித்தெடுத்து, எதிர்மறைகளை சமநிலைப்படுத்துவதன் மூலம் நம் வாழ்க்கையை அழகாக மாற்றமுடியும்.

இதற்கு தடைக்கல்லாக உள்ள தயக்கம் ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை நீக்கிப் பயணிப்பதின் மூலம் நம் வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.எஸ்.தோனி வெறும் பெயரல்ல... ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட சிறப்பு விடியோ!

பார்க்கிங் - 5 மொழிகளில் ரீமேக்!

5ஆம் கட்டத் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 56% வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல்: 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

பிரியாவின் சேட்டைகள்!

SCROLL FOR NEXT